பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215


(இ)அத்தகைய தேர்தல்களில் வாக்களிப்பதற்கான தகுதிப்பாடுகள்; அந்தத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல்;
(ஈ)அத்தகைய தேர்தல்களில் அந்த மன்றங்களின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பெறுவதற்கான தகுதிப்பாடுகள்;
(உ)வட்டார மன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம்;
(ஊ) அத்தகைய மன்றங்களுக்கான தேர்தல்கள் அல்லது நியமனங்கள் தொடர்பான அல்லது அவை குறித்த பிற பொருட்பாடுகள்;
(எ) மாவட்ட மற்றும் வட்டார மன்றங்களின் (காலியிடம் எதுவும் இருப்பினும் செயலுறுவதற்கான அதிகாரம் உள்ளடங்கலாக) நெறிமுறையும் அலுவல் நடத்துமுறையும்;
(ஏ) மாவட்ட மற்றும் வட்டார மன்றங்களின் அலுவலர்களையும் பணியாளர் தொகுதியினரையும் அமர்த்துதல்.

(6அ). மாவட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பெறும் உறுப்பினர்கள், அந்த மன்றத்திற்கான பொதுத் தேர்தல்களுக்குப் பின்பு அந்த மன்றத்தின் முதல் கூட்டத்திற்கெனக் குறித்திட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுக் காலத்திற்கு, அந்த மாவட்ட மன்றம் 16ஆம் பத்தியின்படி அதற்கு முன்னரே கலைக்கப்பட்டாலன்றி, பதவி வகிப்பவர்கள்; மேலும், நியமனம் செய்யப்பெற்ற ஓர் உறுப்பினர், ஆளுநர் விழையுமளவும் பதவி வகிப்பார்:

வரம்புரையாக: நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால் அல்லது ஆளுநரின் கருத்தின்படி தேர்தல்கள் நடத்துவதை நடைமுறையில் இயலாததாக்கும் சூழ்நிலைகள் நிலவுமாயின், ஒரு தடவையில் ஓராண்டுக்கு மேற்படாத காலஅளவுக்கும் ஒரு நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டிலிருக்குமிடத்து எந்நேர்விலும், அச்சாற்றாணை செயற்படுவது அற்றுப்போன பின்பு ஆறுமாதக் காலஅளவுக்கு மேற்படாத ஒரு காலஅளவுக்கும், மேற்சொன்ன ஐந்தாண்டுக் காலஅளவு ஆளுநரால் நீட்டிக்கப்படலாம்; மேலும் வரம்புரையாக: இடையெழும் காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பெறும் ஓர் உறுப்பினர், எந்த உறுப்பினரின் இடத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பெறுகிறாரோ அந்த உறுப்பினரின் பதவிக் காலத்தில் எஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகிப்பார்.

(7) மாவட்ட அல்லது வட்டார மன்றம், அது முதன்முறையாக அமைக்கப்பட்ட பின்பு, ஆளுநரின் ஒப்பேற்புடன், இந்தப் பத்தியின் (6)ஆம் உள்பத்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகள் குறித்து விதிகளை வகுக்கலாம்; மேலும், அத்தகைய ஒப்பேற்புடன், பின்வருவனவற்றை ஒழுங்குறுத்துவதற்கான விதிகளை வகுக்கலாம்:-

(அ) கீழுமை உள்வரை மன்றங்களையோ வாரியங்களையோ உருவாக்குதல்; அவற்றின் நெறிமுறையும் அவற்றின் அலுவல் நடத்துமுறையும்; மற்றும்
(ஆ)பொதுவாக, மாவட்டத்தின் அல்லது, நேர்வுக்கேற்ப, வட்டாரத்தின் நிருவாகம் சார்ந்த அலுவல்களை நடத்துவது பற்றியபொருட்பாடுகள் அனைத்தும் :

வரம்புரையாக: இந்த உள்பத்தியன்படி மாவட்ட அல்லது வட்டார மன்றத்தினால் விதிகள் வகுக்கப்படும் வரையில், அத்தகைய மன்றம் ஒவ்வொன்றுக்குமான தேர்தல்கள், அதன் அலுவலர்கள், பணியாளர் தொகுதி, நெறிமுறை, அலுவல் நடத்துமுறை ஆகியவற்றைப் பொறுத்து இந்தப் பத்தியின் (6) ஆம் உள்பத்தியின்படி ஆளுநரால் வகுக்கப்பட்ட விதிகள் செல்திறம் உடையன ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/241&oldid=1467221" இலிருந்து மீள்விக்கப்பட்டது