பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216


3. சட்டங்களியற்றுவதற்கு மாவட்ட மன்றங்களுக்கும் வட்டார மன்றங்களுக்கும் உள்ள அதிகாரங்கள் :

(1) ஒரு தன்னாட்சி வட்டாரத்திற்கான வட்டார மன்றம், அத்தகைய வட்டாரத்திற்குள் உள்ள அனைத்து வரையிடங்களைப் பொறுத்தும், ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கான மாவட்ட மன்றம், அந்த மாவட்டத்திற்குள் வட்டார மன்றங்கள், எவையேனுமிருப்பின், அவற்றின் அதிகாரத்தின் கீழுள்ள வரையிடங்கள் நீங்கலாக, அந்த மாவட்டத்திற்குள் உள்ள அனைத்து வரையிடங்களைப் பொறுத்தும், பின்வருவன குறித்துச் சட்டங்களியற்ற அதிகாரம் உடையன ஆகும்:—

(அ) வேளாண்மை அல்லது மேய்ச்சல் அல்லது குடியிருப்பு நோக்கங்களுக்காகவோ வேளாண்மையல்லாத பிற நோக்கங்களுக்காகவோ, ஊர் அல்லது நகரம் எதிலும் வாழ்வோரின் நலன்களை மேம்படுத்தக்கூடிய பிற நோக்கம் எதற்காகவோ, ஒதுக்குறுத்தப்பட்ட காட்டுநிலமில்லாத பிற நிலம் எதனையும் பகிர்ந்தொதுக்குதல், கையடைவு கொள்ளுதல் அல்லது பயன்படுத்துதல் அல்லது ஒதுக்கிவைத்தல்:
வரம்புரையாக: அத்தகைய சட்டங்களிலுள்ள எதுவும், கையடைவிலுள்ளதாகவோ கையடைவிலில்லாததாகவோ உள்ள நிலம் எதனையும், பொது நோக்கங்களுக்கெனக் கட்டாயமாகக் கையகப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கும் அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டத்திற்கு இணங்கத் தொடர்புடைய மாநில அரசாங்கம் அவ்வாறு கையகப்படுத்துவதற்குத் தடையூறு ஆவதில்லை;
(ஆ) ஒதுக்குறுத்தப்பட்ட காடாக இல்லாத காடு எதனின் மேலாண்மை;
(இ) வேளாண்மைக்காகக் கால்வாய் அல்லது நீரோடை எதனின் பயன்பாடு;
(ஈ) ஜூம் அல்லது பிற வகை மாற்றுமுறை பயிரிடும் பழக்கத்தை முறைப்படுத்துதல்;
(உ)ஊராட்சி அல்லது நகராட்சிக் குழுக்களையோ மன்றங்களையோ நிறுவுதல், அவற்றின் அதிகாரங்கள்;
(ஊ)ஊர் அல்லது நகரக் காவல் துறை, மக்கள் நல்வாழ்வு, துப்புரவு ஆகியவை உள்ளடங்கலாக, ஊர் அல்லது நகர நிருவாகம் தொடர்பான பிற பொருட்பாடுகள்;
(எ)குடித்தலைவர்களை அல்லது நாட்டாண்மைக்காரர்களை அமர்த்துதல், அவர்கள் வாரிசுரிமை;
(ஏ)சொத்திற்கான மரபுரிமை;
(ஐ)திருமணம் மற்றும் மணமுறிவு;
(ஒ)சமுதாய வழக்கங்கள்.

(2) இந்தப் பத்தியில், ஓர் "ஒதுக்குறுத்தப்பட்ட காடு" என்பது, 1891 ஆம் ஆண்டு அசாம் காடு ஒழுகுறுத்தும்விதிகளின்படியோ அல்லது தொடர்புள்ள வரையிடத்தில் அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதனின்படியோ ஓர் ஒதுக்குறுத்தப்பட்ட காடாக இருக்கிற வரையிடம் என பொருள்படும்.

[1][(3) 3அ பத்தியின் (2)ஆம் உள்பத்தியில் அல்லது 3ஆ பத்தியின் (2)ஆம் உள்பத்தியில் பிறவாறு வகைசெய்யப்பட்டிருப்பது நீங்கலாக இந்தப் பத்தியின் அல்லது 3அ பத்தியின் (1)ஆம் உள்பத்தியின் அல்லது 3ஆ பத்தியின் (1)ஆம் உள்பத்தியின்படி வகுக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஆளுநருக்கு உடனடியாகப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும். மேலும், அவரால் இசைவளிக்கப்படும் வரை செல்திறம் இல்லாததாகும்.]


  1. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பின் ஆறாம் இணைப்புப்பட்டியல் (திருத்தம்) சட்டத்தால் (44/2003) மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/242&oldid=1467223" இலிருந்து மீள்விக்கப்பட்டது