பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238


ஏழாம் இணைப்புப்பட்டியல்
[246 ஆம் உறுப்பு]
பட்டியல் ஒன்றியத்துப்பட்டியல்

1. இந்தியாவிற்கும் அதன் ஒவ்வொரு பகுதிக்குமான புறக்காப்பு புறக்காப்பிற்கான முன்னேற்பாடும், போர்க்காலங்களில் போரை நடத்துவதற்கும் போர் முடிவுற்ற பின்பு திறமான படைக்கலைப்பிற்கும் உதவுகின்ற செயல்கள் அனைத்தும் உள்ளடங்கலாக.
2. கடல், தரை மற்றும் வான் படைகள்; ஒன்றியத்தின் பிற ஆயுதப்படைகள்.
2அ. மாநிலம் எதிலும் குடியியல் அதிகாரத்திற்கு உதவும் வகையில், ஒன்றியத்து ஆயுதப்படை எதனையுமோ ஒன்றியத்தின் கட்டாள்கைக்கு உட்பட்ட பிற படை எதனையுமோ அதன் படைப்பிரிவு அல்லது உறுப்பு எதனையுமோ செலுத்துதல்; அவ்வாறு செலுத்தப்பட்டிருக்குங்கால், அத்தகைய படைகளின் உறுப்பினர்களுக்குள்ள அதிகாரங்கள், அதிகாரவரம்பு, சிறப்புரிமைகள் மற்றும் பொறுப்புடைவுகள்.
3. பாளைய வரையிடங்களை வரையறுத்தல், அத்தகைய வரையிடங்களில் உள்வரைத் தன்னாட்சியையும், அத்தகைய வரையிடங்களுக்குள்ளே பாளைய அதிகாரஅமைப்புகளையும் அமைத்தல்; அவற்றின் அதிகாரங்கள்; மற்றும் அத்தகைய வரையிடங்களில் (வாடகைக் கட்டுப்பாடு உள்ளடங்கலாக) வீட்டுவசதியினை ஒழுங்குறுத்தல்.
4. கடல், தரை மற்றும் வான் படைகள் தொடர்பான பணிமங்கள்.
5. ஆயுதங்கள், சுடுகருவிகள், படைத்தளவாடங்கள் மற்றும் வெடிபொருள்கள்.
6. அணுவாற்றல் மற்றும் அதனை உண்டாக்குவதற்குத் தேவையான கனிம வள ஆதாரங்கள்.
7. நாட்டின் புறக்காப்பிற்கு அல்லது போர் நடத்துவதற்குத் தேவையானவை என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்பும் விசைத்தொழில்கள்.
8. வேவுச்செய்தி மற்றும் புலனாய்வுக்கான மையத் துறையகம்.
9. நாட்டின் புறக்காப்பு, அயல்நாட்டு அலுவற்பாடுகள் அல்லது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காகத் தடுப்புக் காவலில் வைத்தல்; அத்தகைய காவலில்
வைக்கப்பட்டவர்கள்.
10. அயல்நாட்டு அலுவற்பாடுகள்; அயல்நாடு எதனுடனும் ஒன்றியத்தைத் தொடர்புறுத்தும் பொருட்பாடுகள் அனைத்தும்.
11. அரசுத் தூதக, குடிவணிக நலத் தூதக மற்றும் வணிகச்சார்பாற்றம்.
12. ஐக்கிய நாடுகள் அமைவனம்.
13. பன்னாட்டிடை மாநாடுகள், கழகங்கள், பிற குழுமங்கள் ஆகியவற்றில் பங்குகொள்ளுதல்; மேலும், அவற்றில் எடுக்கப்படும் முடிபுகளைச் செயல்முறைப்படுத்துதல்.
14. அயல்நாடுகளுடன் உடன்படிக்கைகளையும் உடன்பாடுகளையும் செய்துகொள்ளுதல்; மேலும், அயல்நாடுகளுடனான உடன்படிக்கைகள், உடன்பாடுகள், இணங்காறுகள் ஆகியவற்றைச் செயல்முறைப்படுத்துதல்.
15. போரும் போர்நிறுத்தமும்.
16. அயல்நாட்டு அதிகாரவரம்பு.
17. குடிமை, குடிமையாக்கம் மற்றும் அயலவர்கள்.
18. அயல்நாட்டிடம் ஒப்படைப்பு.
19. இந்தியாவிற்குள் வர அனுமதித்தல் இந்தியாவிலிருந்து குடிபெயர்தல் மற்றும் வெளியேற்றுதல்; கடவுச்சீட்டுகள் மற்றும் அயலக நுழைவிசைவு.
20. இந்தியாவிற்கு வெளியேயுள்ள இடங்களுக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணங்கள்.
21. ஆழ்கடலிலோ வானிலோ இழைக்கப்படும் கொள்ளைகளும் குற்றங்களும்; நாட்டிடைச் சட்டத்திற்கு எதிராக நிலத்திலோ ஆழ்கடலிலோ வானிலோ இழைக்கப்படும் குற்றச்செயல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/264&oldid=1466533" இலிருந்து மீள்விக்கப்பட்டது