பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267


(ii)பிற நேர்வு எதிலும், 99ஆம் உறுப்பின் அல்லது, நேர்வுக்கேற்ப, 188ஆம் உறுப்பின் வேண்டுறுத்தங்களுக்கு இணங்கத் தம் பதவியினை ஏற்று அமர்கிற தேதியிலிருந்து ஆறு மாதங்கள் கழிவுறுவதற்கு முன்பு, அவர் உறுப்பினராகச் சேர்கிற அல்லது, நேர்வுக்கேற்ப, முதற்கண் உறுப்பினராகச் சேர்கிற அரசியல் கட்சி எதுவோ அதைச் சார்ந்தவர் எனக் கொள்ளப்பெறுவார்.

(2) அரசியல் கட்சி எதன்சார்பாகவும் நிறுத்திவைக்கப்பெற்ற வேட்பாளராக இல்லாமைலேயே ஓர் அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற எவரும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பெற்ற பின்பு அரசியல் கட்சி எதிலும் சேர்வாராயின், அந்த அவையின் உறுப்பினராக இருந்து வருவதற்கு அவர் தகுதிக்கேடுற்றவர் ஆவார்.

(3) நியமனம் செய்யப்பெற்ற அவை உறுப்பினர் ஒருவர், 99ஆம் உறுப்பின் அல்லது, நேர்வுக்கேற்ப, 188ஆம் உறுப்பின் வேண்டுறுத்தங்களுக்கு இணங்கத் தம் பதவியினை ஏற்று அமர்கிற தேதியிலிருந்து ஆறு மாதங்கள் கழிவுற்ற பின்பு, அரசியல் கட்சி எதிலும் சேருவாராயின், அந்த அவையின் உறுப்பினராக இருந்து வருவதற்கு அவர் தகுதிக்கேடுற்றவர் ஆவார்.

(4) இந்தப் பத்தியின் மேலே கண்ட வகையங்களில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 1985ஆம் ஆண்டு அரசமைப்பு (ஐம்பத்திரண்டாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலையில் ஓர் அவையின் (தேர்ந்தெடுக்கப்பெற்ற அல்லது நியமனம் செய்யப்பெற்ற) உறுப்பினராக இருக்கும் ஒருவர்,-

(i)அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினராக அவர் இருந்திருப்பாராயின், இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியினைப் பொறுத்தவரை, அத்தகைய அரசியல் கட்சியால் வேட்பாளராக நிறுத்தி வைக்கப்பெற்று அந்த அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றவர் எனக் கொள்ளப்பெறுவார்;
(ii)பிற நேர்வு எதிலும், இந்தப் பத்தியின் (2)ஆம் உள்பத்தியினைப் பொறுத்தவரை, அரசியல் கட்சி எதனாலும் நிறுத்தி வைக்கப்பெற்ற ஒரு வேட்பாளராக இல்லாமலேயே அந்த அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் எனக் கொள்ளப்பெறுவார் அல்லது, நேர்வுக்கேற்ப, இந்தப் பத்தியின் (3) ஆம் உள்பத்தியினைப் பொறுத்தவரை, அந்த அவையின் ஓர் நியமன உறுப்பினர் எனக் கொள்ளப்பெறுவார்.

3. [1][★★]

4. கட்சிமாறுதல் காரணமாக விளையும் தகுதிக்கேடு, கட்சிகளின் இணைப்பு ஏற்படும் நேர்வில் பொருந்துறாது :

(1) அவை உறுப்பினர் ஒருவர் தம் முதல்சார்பு அரசியல் கட்சி பிறிதோர் அரசியல் கட்சியுடன் இணையுங்கால், தாமும் தம் முதல்சார்பு அரசியல் கட்சியின் பிற உறுப்பினர்கள் எவரும்-

(அ) அந்தப் பிறிதோர் அரசியல் கட்சியின் அல்லது, நேர்வுக்கேற்ப, அவ்வாறு இணைந்ததால் உருவான புதிய அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்களாக ஆகியிருப்பதாகவோ,
(ஆ) அக்கட்சி இணைப்பை ஏற்றுக்கொள்ளாது தனித்ததொரு குழுவமாகச் செயலுறுவதை விரும்பியேற்றுள்ளதாகவோ

கோருகின்றவிடத்து, 2ஆம் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின்படி தகுதிக் கேடுற்றவர் ஆகார்; மேலும், 2 ஆம் பத்தியின் (1) ஆம் உள்பத்தியினைப் பொறுத்தவரை அத்தகைய பிறிதோர் அரசியல் கட்சி அல்லது, நேர்வுக்கேற்ப, புதிய அரசியல் கட்சி அல்லது குழுவம், அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியாகவும், இந்த உள்பத்தியினைப் பொறுத்தவரை அவருடைய முதல்சார்பு அரசியல் கட்சியாகவும் அவ்வாறு கட்சிகளின் இணைப்பு ஏற்பட்ட காலத்திலிருந்து கொள்ளப்படும்.


  1. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று ஒன்றாம் திருத்தம்) சட்டத்தினால் விட்டுவிடப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/293&oldid=1466502" இலிருந்து மீள்விக்கப்பட்டது