பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268


(2) இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியினைப் பொறுத்தவரை, அவை உறுப்பினர் ஒருவருடைய முதல்சார்பு அரசியல் கட்சியின் இணைப்பை, அந்தச் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக் குறையாதவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே அக்கட்சி இணைப்பு ஏற்பட்டிருப்பதாகக் கொள்ளப்படும்.

5. விலக்கு :

இந்த இணைப்புப்பட்டியலில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், மக்களவைத் தலைவராகவோ துணைத் தலைவராகவோ அல்லது மாநிலங்களவைத் துணைத் தலைவராகவோ அல்லது ஒரு மாநிலச் சட்டமன்ற மேலவைத் தலைவராகவோ துணைத் தலைவராகவோ அல்லது ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவோ துணைத் தலைவராகவோ பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஒருவர்

(அ) அத்தகைய பதவிக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பெற்றதன் காரணமாக, அவ்வாறு தேர்தெடுக்கப்பெற்றதை ஒட்டிமுன்பு தாம் சார்ந்திருந்த அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியைத் தம்விருப்பாக விட்டிருந்து அதன்பின்பு அப்பதவியைத் தாம் தொடர்ந்து வகித்துவரும் காலத்தில் அதே அரசியல் கட்சியில் மீண்டும் சேராதிருந்தாலும் அல்லது பிறிதோர் அரசியல் கட்சியின் உறுப்பினராக ஆகாதிருந்தாலும், அல்லது
(ஆ) அப்பதவிக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பெற்றதன் காரணமாக, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பெற்றதை ஒட்டிமுன்பு தாம் சார்ந்திருந்த அரசியல் கட்சியின் உறுப்பினராக இருப்பதை விட்டதன்பின், அவ்வாறு தாம் பதவி வகிப்பது அற்றுப்போன நிலையில் அதே அரசியல் கட்சியில் மீண்டும் சேர்ந்தாலும்

இந்த இணைப்புப்பட்டியலின்படி தகுதிகேடுற்றவர் ஆவதில்லை.

6. கட்சிமாறுதல் காரணமாக விளையும் தகுதிக்கேடுகள் குறித்த பிரச்சினைகளின் மீது முடிவு செய்தல் :

(1) அவை உறுப்பினர் ஒருவர், இந்த இணைப்புப்பட்டியலின்படி தகுதிக்கேடுற்றவராகிவிட்டாரா என்பது பற்றிய பிரச்சினை எதுவும் எழுமாயின், அப்பிரச்சினை, மேலவைத் தலைவரின் அல்லது, நேர்வுக்கேற்ப, பேரவைத் தலைவரின் முடிபிற்காக வைக்கப்படவேண்டும்; அவரது முடிபே அறுதியானது ஆகும்:

வரம்புரையாக: மேலவைத்தலைவர் அல்லது பேரவைத்தலைவர் அத்தகைய தகுதிக்கேடுற்றவராகிவிட்டாரா என்ற பிரச்சினை எழுமிடத்து, இதன் பொருட்டு அந்த அவையின் உறுப்பினர் ஒருவரை அவை தேர்ந்தெடுத்து அவரின் முடிபிற்காக அந்தப் பிரச்சினை வைக்கப்படுதல் வேண்டும்; அவரது முடிபே அறுதியானது ஆகும்.

(2) இந்த இணைப்புப்பட்டியலின்படி அவை உறுப்பினர் ஒருவரின் தகுதிக்கேடு குறித்த பிரச்சினை எதன் தொடர்பாகவும், இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின்படியான நடவடிக்கைகள் அனைத்தும், 122 ஆம் உறுப்பில் குறிக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளாக அல்லது, நேர்வுக்கேற்ப, 212 ஆம் உறுப்பில் குறிக்கப்பட்ட ஒரு மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளாகக் கொள்ளப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/294&oldid=1465012" இலிருந்து மீள்விக்கப்பட்டது