பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269


7. நீதிமன்றங்களின் அதிகாரவரம்பிற்குத் தடை :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், இந்த இணைப்புப்பட்டியலின்படி அவையின் உறுப்பினர் ஒருவரது தகுதிக்கேடு தொடர்பான பொருட்பாடு எதனையும் பொறுத்து, நீதிமன்றம் எதுவும் அதிகாரவரம்பு உடையது ஆகாது.

8. விதிகள் :

(1) இந்தப் பத்தியின் (2) ஆம் உள்பத்தியின் வகையங்களுக்கு உட்பட்டு, மேலவைத் தலைவர் அல்லது பேரவைத் தலைவர், இந்த இணைப்புப்பட்டியலின் வகையங்களைச் செல்திறப்படுத்துவதற்காக விதிகளை வகுக்கலாம்; மேலும், மேலே கண்டவற்றின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றி, அத்தகைய விதிகள் குறிப்பாகப் பின்வருவனவற்றிற்கு வகை செய்யலாம்.

(அ) அவையின் வெவ்வேறு உறுப்பினர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் இருப்பின் அவை குறித்த பதிவேடுகளை அல்லது பிற பதிவணங்களைப் பேணி வருதல்:
(ஆ) அவையின் உறுப்பினர் ஒருவர் தொடர்பாக, சட்டமன்றக் கட்சித் தலைவர், அந்த உறுப்பினரைப் பொறுத்து 2ஆம் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின் (ஆ) கூறில் சுட்டப்பட்டுள்ள தன்மையதான மன்னிப்பு பற்றி அளிக்கவேண்டியதான அறிக்கை; மற்றும், அந்த அறிக்கை எந்தக்காலத்திற்குள், எந்த அதிகாரஅமைப்பிற்கு அளிக்கப்படவேண்டும் என்பது;
(இ)அவையின் உறுப்பினர்கள் எவரையும் அரசியல் கட்சி ஒன்றில் சேர்த்துக்கொள்வது பற்றி அந்த அரசியல்கட்சி அளிக்கவேண்டியதான அறிக்கைகள்; மேலும், அத்தகைய அறிக்கைகளை அவைப் பதவியாளர் எவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது; மற்றும்
(ஈ) 6ஆம் பத்தியின் (1) ஆம் உள்பத்தியில் சுட்டப்பட்டுள்ள பிரச்சினை எதனையும் முடிபு செய்வதற்காக நடத்தப்படும் விசாரணைக்கான நெறிமுறை உள்ளடங்கலாக, அத்தகைய பிரச்சினையை முடிபு செய்வதற்கான நெறிமுறை.

(2) இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின்படி மேலவைத்தலைவரால் அல்லது பேரவைத் தலைவரால் விதிகள் வகுக்கப்பட்ட பின்பு, கூடியவிரைவில், ஒரு கூட்டத்தொடரிலோ அல்லது இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட அடுத்தடுத்தக் கூட்டத்தொடர்களிலோ மொத்தம் முப்பது நாட்களுக்கு அவையின்முன் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அந்த விதிகள் அந்த அவையால் மாற்றமைவுகளுடனோ மாற்றமைவுகளின்றியோ, முன்பே ஒப்பேற்பளிக்கப்படவோ அல்லது ஒப்பேற்பு மறுக்கப்படவோ இல்லையெனில், மேற்சொன்ன முப்பது நாட்கள் காலஅளவு கழிவுற்றதும், அவ்விதிகள் செல்திறம் பெறும்; மேலும், அவற்றிற்கு அவ்வாறு ஒப்பேற்பளிக்கப்படுகிறவிடத்து, அந்த அவையின் முன்பு வைக்கப்பட்ட வடிவத்தில் அல்லது, நேர்வுக்கேற்ப, மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்தில் செல்திறம் பெறும்; அந்த விதிகளுக்கு ஒப்பேற்பு மறுக்கப்படுகிறவிடத்து, அவை செல்திறம் இல்லாது போகும்.

(3) 105ஆம் உறுப்பின் அல்லது, நேர்வுக்கேற்ப, 194ஆம் உறுப்பின் வகையங்களுக்கும், இந்த அரசமைப்பின்படி தாம் கொண்டிருக்கும் பிற அதிகாரம் எதற்கும் குந்தகமின்றி, மேலவைத் தலைவர் அல்லது பேரவைத் தலைவர், இந்தப் பத்தியின்படி வகுக்கப்பட்டுள்ள விதிகளை ஒரு நபர் வேண்டுமென்றே மீறுகிறார் எனில், அவர், அவையின் மதிப்புரிமையினை மீறுபவர் மீது எடுக்கப்படும் அதே நடவடிக்கைக்கு உள்ளாவார் என்று பணிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/295&oldid=1465451" இலிருந்து மீள்விக்கப்பட்டது