பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


54. குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் :

குடியரசுத்தலைவர்-

(அ) நாடாளுமன்ற ஈரவைகளிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களையும்,
(ஆ) மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளிலுள்ள தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களையும்

கொண்ட வாக்காளர் குழாத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெறுவார்.

[1][விளக்கம்.--இந்த உறுப்பிலும் 55ஆம் உறுப்பிலும் "மாநிலம்" என்பது, தில்லி தேசியத்தலைநகர் ஆட்சிநிலவரையையும் பாண்டிச்சேரி ஒன்றியத்து ஆட்சி நிலவரையையும் உள்ளடக்கும்.]

55. குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை :

(1) குடியரசுத்தலைவர் தேர்தலில் பல்வேறு மாநிலங்களுக்குள்ள சார்பாற்றத்தின் விகிதப்பாடு இயலுமளவு ஒருபடித்தாக இருத்தல் வேண்டும்.

(2) மாநிலங்களுக்கு இடையே அத்தகைய ஒருபடித்தான நிலை, அத்துடன் மாநிலங்கள் அனைத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையே சரிசமநிலை என்ற இவற்றை எய்திடும் பொருட்டு, நாடாளுமன்றத்திற்கும் மாநிலம் ஒவ்வொன்றின் சட்டமன்றப் பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் ஒவ்வொருவரும், அத்தேர்தலில் எத்தனை வாக்குகள் அளிப்பதற்கு உரிமை கொண்டவர் என்பதைப் பின்வரும் முறையில் தீர்மானித்தல் வேண்டும்:

(அ) ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்
ஒவ்வொருவருக்கும், அந்த மாநிலத்தின் மக்கள் தொகையை அச்சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்திட வரும் ஈவுஎண்ணில் எத்தனை ஆயிரங்கள் உள்ளனவோ அத்தனை வாக்குகள் உண்டு;
(ஆ) மேற்சொன்ன அத்தனை ஆயிரங்கள் போக, எஞ்சிய எண்ணிக்கை ஐந்நூற்றுக்குக் குறையாமல் இருக்குமாயின், அப்போது (அ) உட்கூறில் கட்டப்பட்டுள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்குமுள்ள வாக்கு எண்ணிக்கையுடன் மேலும் ஓரெண்ணைச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்;
(இ)நாடாளுமன்ற ஈரவைகள் ஒவ்வொன்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், (அ), (ஆ) ஆகிய உட்கூறுகளின்படி மாநிலச் சட்டமன்றப் பேரவைகளின் உறுப்பினர்களுக்குக் குறித்தளிக்கப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை, நாடாளுமன்ற அவைகள் இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்து, அதில் அரைக்கு மேற்பட்ட பின்னங்களை ஒன்று எனக் கொண்டும், பிற பின்னங்களைத் தள்ளியும் கணக்கிட்டால் எத்தனை வாக்குகள் வருமோ அத்தனை வாக்குகள் உண்டு.

(3) குடியரசுத்தலைவரின் தேர்தல், ஒற்றை மாற்று வாக்கு வழியிலான வீதச்சார்பாற்ற முறைக்கிணங்க நடத்தப்படுதல் வேண்டும்; மேலும், அத்தகைய தேர்தலில் வாக்களித்தல், மறைவான வாக்களிப்பு என்ற முறையில் இருத்தல் வேண்டும்.

விளக்கம்.--இந்த உறுப்பில் "மக்கள்தொகை” என்னும் சொல், தொகைவிவரங்கள் கண்டறிந்து வெளியிடப்பட்டுள்ள கடைசிமுறை மக்கள் கணக்கெடுப்பின்படியாகும் மக்கள்தொகை என்று பொருள்படும்:


  1. 1992ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபதாம் திருத்தச்) சட்டத்தின் 2ஆம் பிரிவினால் (1-6-1995 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/46&oldid=1469185" இலிருந்து மீள்விக்கப்பட்டது