பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


வரம்புரையாக: இந்த விளக்கத்தில், தொகை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள கடைசிமுறை மக்கள்கணக்கெடுப்பு என்பது, [1][2026]ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதலாவதாக எடுக்கப்படும் மக்கள் கணக்கெடுப்பின்படியாகும் தொகை விவரங்கள் வெளியிடப்படும் வரையில், 1971ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பைச் சுட்டுவதாகவே பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.

56. குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் :

(1) குடியரசுத்தலைவர், தாம் பதவி ஏற்கும் தேதியிலிருந்து ஐந்தாண்டுக் காலத்திற்குப் பதவி வகிப்பார்:

வரம்புரையாக:

(அ) குடியரசுத்தலைவர், தம் கையொப்பமிட்டு குடியரசுத் துணைத்தலைவருக்கு எழுத்துவழித் தெரிவித்துத் தம் பதவியைவிட்டு விலகிக் கொள்ளலாம்;
(ஆ) இந்த அரசமைப்பை மீறிய நடத்தைக்காக, 61ஆம் உறுப்பில் வகைசெய்யப்பட்டுள்ள முறைப்படி குடியரசுத்தலைவர், அவையில் பழிசாட்டப்பட்டுப் பதவியிலிருந்து அகற்றப்படலாம்;
(இ)குடியரசுத்தலைவர், தம் பதவிக்காலம் கழிவுற்றாலுங்கூட, அவருக்கு அடுத்துவருபவர் பதவி ஏற்கும்வரையில் தொடர்ந்து பதவி வகித்துவருவார்.

(2). (1) ஆம் கூறின் வரம்புரையின் (அ) கூறின்படி, தமக்குத் தெரிவிக்கப்பட்ட பதவிவிலகலைக் குறித்து, குடியரசுத்துணைத்தலைவர், மக்களவைத் தலைவருக்கு உடனடியாகச் செய்தியனுப்புதல் வேண்டும்.

57. மீண்டும் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கான தகுமை :

குடியரசுத்தலைவராகப் பதவி வகிக்கும் அல்லது வகித்திருந்த ஒருவர், இந்த அரசமைப்பின் பிற வகையங்களுக்கு உட்பட்டு, மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்குத் தகுமையுடையவர் ஆவார்.

58.குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கான தகுதிப்பாடுகள் :

(1) ஒருவர்

(அ) இந்தியாவின் குடிமகனாகவும்,
(ஆ) முப்பத்தைந்து வயது முடிந்தவராகவும்,
(இ) மக்களவையின் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெறுவதற்கான தகுதிப்பாடுடையவராகவும்

இருந்தாலன்றி, அவர் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறுவதற்கான தகுமையுடையவர் ஆகார்.

(2) ஒருவர், இந்திய அரசாங்கத்தின் அல்லது மாநில அரசாங்கம் ஒன்றன் கீழோ அவற்றில் ஒன்றன் கட்டாள்கைக்கு உட்பட்டிருக்கிற உள்ளாட்சி அல்லது பிறவகை அதிகாரஅமைப்பின்கீழோ ஊதியப்பதவி எதனையும் வகிப்பாராயின், அவர் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கான தகுமையுடையவர் ஆகார்.

விளக்கம்.- இந்த உறுப்பினைப் பொறுத்தவரை, ஒருவர் ஒன்றியத்தின் குடியரசுத்தலைவராகவோ துணைத்தலைவராகவோ மாநிலம் ஒன்றன் ஆளுநராகவோ ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றன் அமைச்சராகவோ இருக்கிறார் என்னும் காரணத்தினால் மட்டுமே, அவர் ஊதியப்பதவி ஒன்றை வகிப்பவராகக் கொள்ளப்பெறுதல் ஆகாது.


  1. 2001ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து நான்காம் திருத்தம்)ச் சட்டத்தால் (21-2-2002 முதல் செல்திறம் பெறுமாறு) மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/47&oldid=1469190" இலிருந்து மீள்விக்கப்பட்டது