பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


(3) நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றினால் ஒரு குற்றச்சார்த்து அவ்வாறு கொணரப்பட்டிருக்குமாயின், மறு அவை அந்தக் குற்றச்சார்த்தினை ஆய்வு செய்தலோ செய்வித்தலோ வேண்டும்; மேலும், அத்தகைய ஆய்வின்போது, குடியரசுத்தலைவர் தாமே நேரில் வருவதற்கும் சார்பாற்றுநரை வைத்துக்கொள்வதற்கும் உரிமையுடையவர் ஆவார்.

(4) அந்த ஆய்வின் விளைவாக, குடியரசுத்தலைவர்மீது கொணரப்பட்ட அக்குற்றச்சார்த்து மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என விளம்பும் தீர்மானம் ஒன்றை, அக்குற்றச்சார்த்தினை ஆய்வு செய்த அல்லது செய்வித்த அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையினர் நிறைவேற்றினால், அத்தீர்மானம் அவ்வாறு நிறைவேற்றப்படும் தேதியிலிருந்து குடியரசுத்தலைவரை அவர்தம் பதவியிலிருந்து அகற்றிய செல்திறம் உடையது ஆகும்.

62. குடியரசுத்தலைவரின் பதவி காலியிடமாகும் போது அதை நிரப்புவதற்காகத் தேர்தல் நடத்த வேண்டிய காலமும் இடைநேர்வான காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பெறுபவரின் பதவிக்காலமும் :

(1) குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் கழிவுறுவதால் ஏற்படும் காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை, அந்தக் காலம் கழிவுறுவதற்கு முன்பே நடத்தி முடித்தல் வேண்டும்.

(2) குடியரசுத்தலைவரின் இறப்பு, பதவிவிலகல் அல்லது பதவியகற்றுகை காரணத்தினாலோ பிறவாறாகவோ அவருடைய பதவி காலியிடமாகுமானால், அதை நிரப்புவதற்கான தேர்தல், அது காலியான தேதிக்குப் பின்பு, இயன்ற அளவு விரைவிலும், எந்நேர்விலும் அந்தத் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிற்படாமலும் நடத்தப்படுதல் வேண்டும்; மேலும், அந்தக் காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பெறுபவர், 56ஆம் உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, அவர் பதவி ஏற்கும் தேதியிலிருந்து முழுப் பதவிக்காலமாகிய ஐந்தாண்டுகள் பதவி வகிப்பதற்கு உரிமைகொண்டவர் ஆவார்.

63. இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் :

இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் என்று ஒருவர் இருப்பார்.

64. குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவைக்குப் பதவிவழித் தலைவராக இருப்பார் :

குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவைக்குப் பதவிவழித் தலைவராக இருப்பார்; அவர் பிற ஊதியப்பதவி எதனையும் வகித்தல் ஆகாது:

வரம்புரையாக: குடியரசுத் துணைத்தலைவர் 65 ஆம் உறுப்பின்படி குடியரசுத்தலைவராகச் செயலுறும்போதும், குடியரசுத்தலைவரின் பதவிப் பணிகளை ஆற்றிவரும்போதும் மாநிலங்களவையின் தலைவர் பதவிக்குற்ற கடமைகளைப் புரிதல் ஆகாது; மேலும், 97 ஆம் உறுப்பின்படி மாநிலங்களவையின் தலைவருக்கு வழங்கத்தக்க வரையூதியம் அல்லது படித்தொகை எதற்கும் அவர் உரிமை கொண்டவர் ஆகார்.

65. குடியரசுத்தலைவரின் பதவி இடைநேர்வாகக் காலியிடமாகும்போது அல்லது அவர் இல்லாதபோது குடியரசுத் துணைத்தலைவர், குடியரசுத்தலைவராகச் செயலுறுவார் அல்லது அவருடைய பதவிப் பணிகளை ஆற்றி வருவார் :

(1) குடியரசுத்தலைவரின் இறப்பு, பதவிவிலகல் அல்லது பதவியகற்றுகை காரணத்தினாலோ பிறவாறாகவோ அவருடைய பதவி காலியிடமாகுமானால், இந்த அத்தியாயத்தின் வகையங்களுக்கு இணங்க, அத்தகைய காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பெறும் ஒரு புதிய குடியரசுத்தலைவர் தம் பதவியை ஏற்கும் தேதி வரையிலும், குடியரசுத் துணைத்தலைவர், குடியரசுத்தலைவராகச் செயலுறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/49&oldid=1469187" இலிருந்து மீள்விக்கப்பட்டது