பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


(2) குடியரசுத்தலைவர், தம் இருத்தலின்மை, நோய் அல்லது பிற காரணம் எதனாலும் தம் பதவிப்பணிகளை ஆற்ற இயலாதபோது, அவர் தம் கடமைகளை மீண்டும் மேற்கொள்ளும் தேதி வரையிலும், அவருடைய பதவிப்பணிகளைக் குடியரசுத் துணைத்தலைவர் ஆற்றி வருவார்.

(3) அவ்வாறு குடியரசுத்தலைவராகச் செயலுறும்போதும், குடியரசுத்தலைவருடைய பதவிப்பணிகளை ஆற்றிவரும்போதும், அக்கால அளவைப் பொறுத்தும், குடியரசுத்தலைவருக்குள்ள அனைத்து அதிகாரங்களையும் காப்புரிமைகளையும் குடியரசுத் துணைத்தலைவர் உடையவர் ஆவார்; மேலும், நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கும் பதவியூதியங்கள்; படித்தொகைகள், மதிப்புரிமைகள் ஆகியவற்றிற்கு உரிமைகொண்டவர் ஆவார்; அவ்வாறு அதன்பொருட்டு வகைசெய்யப்படும் வரையிலும், இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள பதவியூதியங்கள், படித்தொகைகள், மதிப்புரிமைகள் ஆகியவற்றிற்கு அவர் உரிமைகொண்டவர் ஆவார்.

66. குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் :

(1) குடியரசுத் துணைத்தலைவர், நாடாளுமன்ற ஈரவைகளிலுமுள்ள உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர் குழாத்தின் உறுப்பினர்களால் ஒற்றை மாற்று வாக்கு வழியிலான வீதச்சார்பாற்ற முறைக்கிணங்க தேர்ந்தெடுக்கப் பெறுவார்; மேலும், அத்தகைய தேர்தலில் வாக்களித்தல், மறைவான வாக்களிப்பு என்ற முறையில் இருத்தல் வேண்டும்.

(2) குடியரசுத் துணைத்தலைவர் நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலுமோ மாநிலம் ஒன்றின் சட்டமன்ற அவை ஒன்றிலோ உறுப்பினராக இருத்தல் ஆகாது; மேலும், நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றன் அல்லது மாநிலச் சட்டமன்ற அவை ஒன்றன் உறுப்பினராகவுள்ள ஒருவர் குடியரசுத் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறுவாராயின், அவர் குடியரசுத் துணைத்தலைவராகப் பதவி ஏற்கும் தேதியன்று அந்த அவையிலுள்ள தம் பதவியிடத்தை விட்டகன்றவராகக் கொள்ளப்பெறுவார்.

(3) ஒருவர் -

(அ) இந்தியாவின் குடிமகனாகவும்,
(ஆ) முப்பத்தைந்து வயது முடிந்தவராகவும்,
(இ)மாநிலங்களவையின் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கான தகுதிப்பாடுடையவராகவும்

இருந்தாலன்றி, அவர் குடியரசுத் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கான தகுமையுடையவர் ஆகார்.

(4) ஒருவர், இந்திய அரசாங்கத்தின் அல்லது மாநில அரசாங்கம் ஒன்றின் கீழோ அவற்றில் ஒன்றின் கட்டாள்கைக்கு உட்பட்டிருக்கிற உள்ளாட்சி அல்லது பிறவகை அதிகாரஅமைப்பின் கீழோ ஊதியப்பதவி எதனையும் வகிப்பாராயின், அவர் குடியரசுத் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கான தகுமையுடையவர் ஆகார்.

விளக்கம்.- இந்த உறுப்பினைப் பொறுத்தவரை, ஒருவர் ஒன்றியத்தின் குடியரசுத்தலைவராகவோ துணைத்தலைவராகவோ மாநிலம் ஒன்றின் ஆளுநராகவோ ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் அமைச்சராகவோ இருக்கிறார் என்னும் காரணத்தினால் மட்டுமே அவர் ஊதியப்பதவி ஒன்றை வகிப்பவராகக் கொள்ளப்பெறுதல் ஆகாது.

67. குடியரசுத் துணைத்தலைவரின் பதவிக்காலம் :

குடியரசுத் துணைத்தலைவர், தாம் பதவி ஏற்கும் தேதியிலிருந்து ஐந்தாண்டு காலத்திற்குப் பதவி வகிப்பார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/50&oldid=1469188" இலிருந்து மீள்விக்கப்பட்டது