பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


(2) குடியரசுத்தலைவராகவோ குடியரசுத் துணைத்தலைவராகவோ ஒருவரைத் தேர்ந்தெடுத்தது இல்லாநிலையது ஆகும் என உச்ச நீதிமன்றம் விளம்புமாயின், உச்ச நீதிமன்றம் அவ்வாறு முடிபு கூறிய தேதியன்றோ அதற்கு முன்போ, குடியரசுத்தலைவரின் அல்லது குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்குற்ற அதிகாரங்களைச் செலுத்தும் வகையிலும் கடமைகளைப் புரியும் வகையிலும் அவர் செய்த செயல்கள், அந்த விளம்புகையினால் செல்லாதவை ஆவதில்லை.

(3) இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, குடியரசுத்தலைவரையோ குடியரசுத் துணைத்தலைவரையோ தேர்ந்தெடுத்தல் பற்றிய அல்லது அதன் தொடர்பான பொருட்பாடு எதனையும், நாடாளுமன்றம் சட்டத்தினால் ஒழுங்குறுத்தலாம்.

(4) குடியரசுத்தலைவராகவோ குடியரசுத் துணைத்தலைவராகவோ ஒருவர் தேர்ந்தெடுக்கப்பெற்றதை, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர் குழாத்து உறுப்பினர்களிடையே ஏதோ ஒரு காரணத்தால் காலியிடம் எதுவும் இருந்தது என்பதை ஆதாரமாகக் கொண்டு எதிர்த்து வாதிடுதல் ஆகாது.

72. குறித்தசில நேர்வுகளில் குற்றமன்னிப்புகள் முதலியன அளிப்பதற்கும் மற்றும் தீர்ப்புத்தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு, இறுத்தல்செய்வதற்கு அல்லது மாற்றிக்குறைப்பதற்கும் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம் :

(1)

(அ) படைத்துறையாட்சி நீதிமன்றத்தால் தண்டனை அல்லது தீர்ப்புத்தண்டனை விதிக்கப்படுகிற அனைத்து நேர்வுகளிலும்
(ஆ) ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரம் அளாவும் ஒரு பொருட்பாடு பற்றிய சட்டத்திற்கு எதிரான ஒரு குற்றச்செயலுக்காகத் தண்டனை அல்லது தீர்ப்புத்தண்டனை விதிக்கப்படுகிற அனைத்து நேர்வுகளிலும்,
(இ)தீர்ப்புத்தண்டனை, மரணதண்டனையாகவுள்ள அனைத்து நேர்வுகளிலும்

ஒரு குற்றச்செயலுக்காகக் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் தண்டனை பொறுத்து குற்றமன்னிப்புகள் அளிக்கவும், தண்டனையை நிறுத்திவைக்கவும் அதை நிறைவேற்றுவதைத் தள்ளிவைக்கவும் அல்லது எஞ்சிய தண்டனையை இறுத்தல் செய்யும் அல்லது தீர்ப்புத்தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க, இறுத்தல்செய்ய அல்லது மாற்றிக்குறைக்கவும் குடியரசுத்தலைவர் அதிகாரம் உடையவர் ஆவார்.

(2). (1)ஆம் கூறின் (அ) உட்கூறிலுள்ள எதுவும், படைத்துறையாட்சி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஒரு தீர்ப்புத்தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கோ இறுத்தல்செய்வதற்கோ மாற்றிக் குறைப்பதற்கோ ஒன்றியத்தின் ஆயுதப்படைகளின் அலுவலர் எவருக்கும் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பாதிப்பதில்லை.

(3). (1)ஆம் கூறின் (இ) உட்கூறிலுள்ள எதுவும், அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதன்படியும் ஒரு மரணதண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க, இறுத்தல்செய்ய அல்லது மாற்றிக்குறைக்க மாநில ஆளுநர் ஒருவர் செலுத்தத்தக்க அதிகாரத்தைப் பாதிப்பதில்லை.

73. ஒன்றியத்து ஆட்சி அதிகாரத்தின் அளாவுகை :

(1) இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு—

(அ) சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றம் அதிகாரம் கொண்டுள்ள பொருட்பாடுகளையும்,
(ஆ) உடன்படிக்கை அல்லது உடன்பாடு ஒன்றன் காரணமாக இந்திய அரசாங்கம் செலுத்துவதாகும் உரிமைகள், பெற்ற அதிகாரம், உற்ற அதிகாரம் ஆகியவற்றைச் செலுத்துவதையும் ஒன்றியத்து ஆட்சி அதிகாரம் அளாவி நிற்கும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/52&oldid=1469191" இலிருந்து மீள்விக்கப்பட்டது