பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


வரம்புரையாக: (அ) உட்கூறில் சுட்டப்பட்ட ஆட்சி அதிகாரமானது, இந்த அரசமைப்பிலோ நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றிலோ தெரிநிலையாக வகைசெய்யப்பட்டிருந்தால் அன்றி, சட்டங்கள் இயற்றுவதற்கு ஒரு மாநிலச் சட்டமன்றமும் அதிகாரம் கொண்டுள்ள பொருட்பாடுகளைப் பொறுத்து, அந்த மாநிலத்தில் அளாவி நிற்றல் ஆகாது.

(2) இந்த உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றத்தால் பிறவாறு வகை செய்யப்படும் வரையில் ஒரு மாநிலமும் அந்த மாநிலத்தின் அலுவலர் எவரும் அல்லது அதிகாரஅமைப்பு எதுவும் அந்த மாநிலத்திற்காகச் சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றம் அதிகாரம் கொண்டுள்ள பொருட்பாடுகளைப் பொறுத்து இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு செலுத்தக்கூடியதாக இருந்த ஆட்சி அதிகாரத்தையோ பதவிப்பணிகளையோ அந்த மாநிலம் அல்லது அதன் அலுவலர் அல்லது அதிகாரஅமைப்பு தொடர்ந்து செலுத்தி வரலாம்.

அமைச்சரவை

74. குடியரசுத்தலைவருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருத்தலும் தேர்வுரை வழங்குதலும் :

(1) குடியரசுத்தலைவருக்கு உறுதுணையாக இருப்பதற்கும் தேர்வுரை வழங்குவதற்கும் தலைமை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஒன்று இருத்தல் வேண்டும்; குடியரசுத்தலைவர் தம் பதவிப்பணிகளை ஆற்றுகையில் அத்தகைய தேர்வுரைக்கு இணங்கச் செயலுறுதல் வேண்டும்: வரம்புரையாக: குடியரசுத்தலைவர் அத்தகைய தேர்வுரையைப் பொதுவாக அல்லது பிறவாறு மறுபடியும் ஓர்வுசெய்யுமாறு அமைச்சரவையை வேண்டுறுத்தலாம்; அத்தகைய மறுஓர்வுக்குப் பின்பு வழங்கப்படும் தேர்வுரைக்கு இணங்கக் குடியரசுத்தலைவர் செயலுறுதல் வேண்டும்.

(2) குடியரசுத்தலைவருக்கு அமைச்சர்கள் தேர்வுரை எதுவும் வழங்கினார்களா, அவ்வாறாயின் அது யாது என்பது பற்றி நீதிமன்றம் எதிலும் விசாரிக்கப்படுதல் ஆகாது.

75. அமைச்சர்களைப் பற்றிய பிற வகையங்கள் :

(1) தலைமை அமைச்சர், குடியரசுத்தலைவரால் பதவியில் அமர்த்தப்பெறுவார்; பிற அமைச்சர்கள், தலைமை அமைச்சரின் தேர்வுரையின்படி குடியரசுத்தலைவரால் பதவியில் அமர்த்தப்பெறுவர்.

[1][(1அ) அமைச்சரவையில் தலைமை அமைச்சர் உள்ளடங்கலான அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை, மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் பதினைந்து விழுக்காட்டிற்கு மேற்படுதல் ஆகாது.

(1ஆ) பத்தாம் இணைப்புப்பட்டியலின் 2ஆம் பத்தியின்படி நாடாளுமன்ற அவையின் ஓர் உறுப்பினராக இருப்பதற்குத் தகுதிக்கேடுற்றவராக இருக்கிற அரசியல் கட்சி எதனையும் சார்ந்த அந்த அவை ஏதொன்றின் உறுப்பினர் ஒருவர் அவர் அவ்வாறு தகுதிக்கேடுற்ற தேதியிலிருந்து தொடங்கி, அத்தகைய உறுப்பினராக அவரது பதவிக் காலஅளவு முடிவடைகிற தேதி வரையுள்ள காலஅளவு வரையில் அல்லது அந்தக் காலஅளவு முடிவடைவதற்கு முன்பு நாடாளுமன்ற அவைகளில் ஏதாவது ஒன்றின் தேர்தல் எதிலும் அவர் போட்டியிடுகிறவிடத்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக விளம்பப்படுகிற தேதி வரையில், இவற்றில் எது முந்தியதோ அதுவரையில், (1)ஆம் கூறின்படி அமைச்சராக அமர்த்தப்படுவதற்கும் தகுதிக்கேடுற்றவர் ஆவார்.]

(2) அமைச்சர்கள், குடியரசுத்தலைவர் விழையுமளவும் பதவி வகிப்பர்.

(3) அமைச்சரவை, மக்களவைக்குக் கூட்டுப் பொறுப்புடையதாக இருக்கும்.

(4) அமைச்சர் ஒருவர் தம் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு,

குடியரசுத்தலைவர், அவரைப் பதவியும் மறைகாப்பும் பற்றிய ஆணைமொழிகளை மூன்றாம் இணைப்புப்பட்டியலில் அதற்கென உள்ள சொன்முறைகளுக்கு இணங்க ஏற்கச்செய்தல் வேண்டும்.


  1. 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று ஒன்றாம் திருத்தம்)ச் சட்டத்தின் 2ஆம் பிரிவால் (1-1-2004 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/53&oldid=1469182" இலிருந்து மீள்விக்கப்பட்டது