பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


(5) அமைச்சர் ஒருவர், நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலும் தொடர்ச்சியான ஏதேனுமோர் ஆறுமாதக் காலஅளவிற்கு உறுப்பினராக இல்லாவிடில், அந்தக் காலஅளவு கழிவுற்றதும் தம் அமைச்சர் பதவியை இழந்தவர் ஆவார்.

(6) அமைச்சர்களின் வரையூதியங்களும் படித்தொகைகளும் நாடாளுமன்றம் அவ்வப்போது சட்டத்தினால் தீர்மானிக்கிறவாறு இருக்கும்; நாடாளுமன்றம் அவ்வாறு தீர்மானிக்கிற வரையில், அவை இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு இருந்துவரும்.

இந்தியாவின் தலைமை வழக்கறிஞர்

76. இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் :

(1) குடியரசுத்தலைவர், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக அமர்த்தப் பெறுவதற்குத் தகுதிப்பாடுடைய ஒருவரை இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக அமர்த்துவார்.

(2) குடியரசுத்தலைவரால், அவ்வப்போது குறித்தனுப்பப்படும் சட்டப்பொருட்பாடுகளைப் பொறுத்து இந்திய அரசாங்கத்திற்கு ஆய்வுரை அளிப்பதும், அவரால் தமக்குக் குறித்தளிக்கப்படும் சட்டப்பாங்குடைய பிற கடமைகளைப் புரிவதும், இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ அல்லது நிகழுறுகாலத்தில் செல்லாற்றலிலுள்ள பிற சட்டத்தாலோ அதன் வழியாலோ தமக்கு வழங்கப்படும் பதவிப்பணிகளை ஆற்றுவதும் தலைமை வழக்கறிஞரின் கடமை ஆகும்.

(3) தலைமை வழக்கறிஞர், தம் கடமைகளைப் புரிகையில், இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வாதிடும் உரிமை உடையவர் ஆவார்.

(4) தலைமை வழக்கறிஞர், குடியரசுத்தலைவர் விழையுமளவும் பதவி வகிப்பார்; குடியரசுத்தலைவர் தீர்மானிக்கும் பணியூதியத்தைப் பெறுவார்.

அரசாங்க அலுவல் நடத்துமுறை

77. இந்திய அரசாங்கத்தின் அலுவல் நடத்துமுறை :

(1) இந்திய அரசாங்கத்தின் ஆட்சித்துறை நடவடிக்கைகள் அனைத்தும், குடியரசுத்தலைவரின் பதவிப்பெயரால் எடுக்கப்படுவதாக இயம்பப்பெறுதல் வேண்டும்.

(2) குடியரசுத்தலைவரின் பதவிப்பெயரால் பிறப்பிக்கப்படும் ஆணைகளும் ஆக்கப்படும் முறையாவணங்களும், குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளில் குறித்துரைக்கப்படும் முறையில் உறுதிச்சான்றிடப்படுதல் வேண்டும்; அவ்வாறு உறுதிச்சான்றிடப்பட்ட ஆணை அல்லது முறையாவணம் குடியரசுத்தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது ஆக்கப்பட்ட முறையாவணம் அன்று என்னும் காரணங்காட்டி, அதன் செல்லுந்தன்மையை எதிர்த்து வாதிடுதல் ஆகாது.

(3) குடியரசுத்தலைவர், இந்திய அரசாங்கத்தின் அலுவல்கள் மேலும் இசைவுற நடைபெறுவதற்காகவும், அந்த அலுவல்களை அமைச்சர்களிடையே பகிர்ந்தொதுக்குவதற்காகவும் விதிகளை வகுப்பார்.

78. குடியரசுத்தலைவருக்குத் தகவல் தருவது முதலியவை பொறுத்து தலைமை அமைச்சருக்குள்ள கடமைகள் :

பின்வருவன தலைமை அமைச்சரின் கடமைகள் ஆகும்—

(அ)ஒன்றியத்து அலுவல் நடவடிக்கைகளை நிருவகித்தல் தொடர்பாக அமைச்சரவையின் முடிபுகள் மற்றும் சட்டமியற்றுவதற்கான செயற் குறிப்புகள் அனைத்தையும் குடியரசுத்தலைவருக்குத் தெரிவித்தல்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/54&oldid=1469180" இலிருந்து மீள்விக்கப்பட்டது