பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


(ஆ) ஒன்றியத்து அலுவல் நடவடி க்கைகளை நிருவகித்தல் மற்றும் சட்டமியற்றுவதற்கான செயற்குறிப்புகள் தொடர்பாக குடியரசுத்தலைவர் கேட்டனுப்பும் தகவலைத் தருதல்; மற்றும்
(இ) ஓர் அமைச்சரால் முடிபு எடுக்கப்பட்டு, ஆனால் அமைச்சரவையால் ஓர்வுசெய்யப்பட்டிராத பொருட்பாடு எதனையும், ஓர்வுக்காக அமைச்சரவையின் முன்வைக்குமாறு குடியரசுத்தலைவர் வேண்டுறுத்துவாராயின், அவ்வாறு செய்தல்.

அத்தியாயம் II-நாடாளுமன்றம்

பொதுவியல்

79. நாடாளுமன்றத்தின் அமைப்பு :

ஒன்றியத்திற்கென நாடாளுமன்றம் ஒன்று இருக்கும்; அது, குடியரசுத்தலைவரையும் மாநிலங்களவை, மக்களவை எனப்படும் இரண்டு அவைகளையும் கொண்டதாக இருக்கும்.

80. மாநிலங்களவையின் கட்டமைப்பு :

(1) மாநிலங்களவை

(அ) (3) ஆம் கூறின் வகையங்களுக்கு இணங்க, குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பெறும் உறுப்பினர்கள் பன்னிருவரையும்,
(ஆ) மாநிலங்கள், ஒன்றியத்து ஆட்சிநிலவரைகள் இவற்றின் சார்பாற்றுநர்களாக இருநூற்று முப்பத்தெட்டுக்கு மேற்படாதவர்களையும்
கொண்டதாக இருக்கும்.

(2) மாநிலங்கள், ஒன்றியத்து ஆட்சிநிலவரைகள் இவற்றின் சார்பாற்றுநர்களால் மாநிலங்களவையில் நிரப்பப்பட வேண்டிய பதவியிடங்களைப் பகிர்ந்தொதுக்குதல், நான்காம் இணைப்புப்பட்டியலில் இதற்கென வகை செய்யப்பட்டுள்ளவாறு இருக்கும்.

(3). (1) ஆம் கூறின் (அ) உட்கூறின்படி குடியரசுத்தலைவரால் நியமனம்செய்யப்பெறும் உறுப்பினர்கள், பின்வருவன போன்ற பொருட்பாடுகளைப் பொறுத்துச் சிறந்த தனியறிவோ செயலுறுபட்டறிவோ உடையவர்களாக இருத்தல் வேண்டும்:-

இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமுதாயப் பணி.

(4) மாநிலங்களவையிலுள்ள ஒவ்வொரு மாநிலத்தின் சார்பாற்றுநர்களும், அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களால் ஒற்றைமாற்று வாக்குவழியிலான வீதச்சார்பாற்ற முறைக்கிணங்கத் தேர்ந்தெடுக்கப்பெறுவர்.

(5) மாநிலங்களவையிலுள்ள ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளின் சார்பாற்றுநர்கள், நாடாளுமன்றம் சட்டத்தினால் வகுத்துரைக்கும் முறையில் தெரிந்தெடுக்கப்பெறுவர்.

81. மக்களவையின் கட்டமைப்பு :

(1) 331ஆம் உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, மக்களவை

(அ) மாநிலங்களிலுள்ள நிலவரைத்தேர்தல் தொகுதிகளிலிருந்து நேரடித் தேர்தல் வாயிலாகத் தெரிந்தெடுக்கப்பெறும் ஐந்நூற்று முப்பதுக்கு மேற்படாத உறுப்பினர்களையும்,
(ஆ) ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளின் சார்பாற்றத்திற்காக நாடாளுமன்றம், சட்டத்தின் வழி, வகைசெய்யும் முறையில் தெரிந்தெடுக்கப்பெறும் இருபதுக்கு மேற்படாத உறுப்பினர்களையும்

கொண்டதாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/55&oldid=1469183" இலிருந்து மீள்விக்கப்பட்டது