பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


(2). (1) ஆம் கூறின் (அ) உட்கூறினைப் பொறுத்தவரை—

(அ) ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவையில் பகிர்ந்தொதுக்கப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும் அந்தந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கும் உள்ள விகிதம், இயலுமளவு, மாநிலங்கள் அனைத்திற்கும் ஒருபடித்தாய் இருக்கும் வண்ணம், மாநிலம் ஒவ்வொன்றுக்கும் மக்களவையில் பதவியிடங்கள் பகிர்ந்தொதுக்கப்படுதல் வேண்டும்; மற்றும்
(ஆ) மாநிலத்தின் தேர்தல்தொகுதி ஒவ்வொன்றின் மக்கள்தொகைக்கும், அதற்குப் பகிர்ந்தொதுக்கப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம், இயலுமளவு, மாநிலம் எங்கணும் ஒருபடித்தாய் இருக்கும் வண்ணம், மாநிலம் ஒவ்வொன்றும் நிலவரைத்தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்படுதல் வேண்டும்: வரம்புரையாக: மக்களவையில் எந்த மாநிலத்திற்கும், பதவியிடங்களைப் பகிர்ந்தொதுக்குதல் பொருட்டு அந்த மாநிலத்தின் மக்கள் தொகை அறுபது இலட்சத்துக்கு மேற்படாதிருக்கும் வரையில், இந்தக் கூறின் (அ) உட்கூறின் வகையங்கள் பொருந்துறுதல் ஆகாது.

(3) இந்த உறுப்பில், "மக்கள்தொகை" என்னும் சொல், தொகை விவரங்கள் கண்டறிந்து வெளியிடப்பட்டுள்ள கடைசிமுறை மக்கள் கணக்கெடுப்பின்படியாகும் மக்கள்தொகை என்று பொருள்படும்:

வரம்புரையாக: இந்தக் கூறில், தொகை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள கடைசிமுறை மக்கள் கணக்கெடுப்பு என்பது 1[2026] ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதலாவதாக எடுக்கப்படும் மக்கள் கணக்கெடுப்பின்படியாகும் தொகைவிவரங்கள், வெளியிடப்படும் வரையில்,

[1][(i) (2) ஆம் கூறின் (அ) உட்கூறின் நோக்கங்களுக்காகவும், அந்தக் கூறின் வரம்புரையின் நோக்கத்திற்காகவும், 1971ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பைச் சுட்டுவதாகப் பொருள்கொள்ளப்படும், மற்றும்
(ii) (2) ஆம் கூறின் (ஆ) உட்கூறின் நோக்கங்களுக்காக [2][2001] ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பைச் சுட்டுவதாகப் பொருள்கொள்ளப்படும்.]

82. ஒவ்வொரு முறையும் மக்கள் கணக்கெடுப்பிற்குப் பின்பு மறுநேரமைவு செய்தல் :

ஒவ்வொரு முறையும் மக்கள் கணக்கெடுப்பு முடிவடைவதன் மேல், மக்களவையில், மாநிலங்களுக்குப் பதவியிடங்களைப் பகிர்ந்தொதுக்குதலும், மாநிலம் ஒவ்வொன்றையும் நிலவரைத் தேர்தல் தொகுதிகளாகப் பிரித்தலும் நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கும் அதிகார அமைப்பாலும் முறையிலும் மறுநேரமைவு செய்யப்படுதல்வேண்டும்.

வரம்புரையாக: அத்தகைய மறுநேரமைவு, அப்போது நிலவுறும் மக்களவை கலைக்கப்படும் வரையில், மக்களவையிலுள்ள சார்பாற்றத்தைப் பாதிக்காது:


  1. 2001ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து நான்காம் திருத்தச்) சட்டத்தால் (21-2-2002 முதல் செல்திறம் பெறுமாறு மாற்றாக அமைக்கப்பட்டது.
  2. 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஏழாம் திருத்தச்) சட்டத்தால் (22-6-2003 முதல் செல்திறம் பெறுமாறு மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/56&oldid=1469184" இலிருந்து மீள்விக்கப்பட்டது