பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


மேலும் வரம்புரையாக: அத்தகைய மறுநேரமைவு, குடியரசுத்தலைவர் ஆணையின்வழி, குறித்துரைக்கும் தேதியிலிருந்து செல்திறம் பெறும், அத்தகைய மறுநேரமைவு செல்திறம் பெறும் வரையில், அந்த அவைக்கான தேர்தல் எதுவும், அத்தகைய மறுநேரமைவுக்கு முன்பு நிலவிய நிலவரைத் தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் நடத்தப்படலாம்.

இன்னும் வரம்புரையாக: [1][2026] ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதலாவதாக எடுக்கப்படும் மக்கள் கணக்கெடுப்பின்படியாகும்.

மக்கள் தொகை விவரங்கள் வெளியிடப்படும் வரையில்—

[1][(i) 1971ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி மறுநேரமைவு செய்யப்பட்டவாறு, மாநிலங்களுக்கு மக்களவையில் பதவியிடங்கள் பகிர்ந்தொதுக்குவதையும்,
(ii) [2][2001] ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி மறுநேரமைவு செய்யப்படலாகிறவாறு, மாநிலம் ஒவ்வொன்றையும் நிலவரைத்தேர்தல் தொகுதிகளாகப் பிரிப்பதையும்

இந்த உறுப்பின்படி மறுநேரமைவு செய்யவேண்டிய தேவையில்லை.]

83. நாடாளுமன்ற அவைகளின் காலவரை :

(1) மாநிலங்களவை கலைப்புக்கு உள்ளாவதில்லை; ஆனால், நாடாளுமன்றம் சட்டத்தினால் இதன்பொருட்டு வகுக்கும் வகையங்களுக்கு இணங்க ஒவ்வோர் இரண்டாம் ஆண்டும் கழிவுறுவதன் மேல், கூடியவிரைவில், அந்த அவையின் உறுப்பினர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் விலகிவிடுதல் வேண்டும்.

(2) மக்களவை, அது முன்னதாகவே கலைக்கப்பட்டாலன்றி, அதன் முதல்கூட்டத்திற்காகக் குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து இருக்கும்; அதற்குமேல் நீடித்தல் ஆகாது. மேற்சொன்ன ஐந்தாண்டுக் காலஅளவு கழிவுறுங்கால், அந்த அவை கலைக்கப்பட்டதாக ஆகிவிடும்:

வரம்புரையாக: நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால், மேற்சொன்ன காலஅளவை, ஒரு தடவையில் ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும், எந்நேர்விலும், அந்தச் சாற்றாணை செயற்பாடு அற்றுப்போன பின்பு ஆறுமாதக் காலஅளவிற்கு மேற்படாமலும், நாடாளுமன்றம் சட்டத்தினால் நீட்டிக்கலாம்.

84. நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு :

ஒருவர்-

(அ) இந்தியாவின் குடிமகனாக இருக்கிறார் என்பதுடன், தேர்தல் ஆணையத்தால் அதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பெற்றுள்ள ஒருவர் முன்னிலையில், மூன்றாம் இணைப்புப்பட்டியலில் உள்ள சொன்முறைக்கிணங்க ஓர் ஆணைமொழியை அல்லது உறுதிமொழியை ஏற்றுக் கையொப்பமிட்டவராகவும், (ஆ) மாநிலங்களவையிலுள்ள பதவியிடமாக இருப்பின் முப்பது வயதிற்குக் குறையாதவராகவும், மக்களவையிலுள்ள பதவியிடமாக இருப்பின் இருபத்தைந்து வயதிற்குக் குறையாதவராகவும்,
(இ) நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தாலோ அதன் வழியாலோ அதன்பொருட்டு வகுத்துரைக்கப்படும் பிற தகுதிப்பாடுகளை உடையவராகவும் இருந்தாலன்றி, அவர் நாடாளுமன்றப் பதவியிடம் ஒன்றில் அமர்வதற்கெனத் தெரிந்தெடுக்கப் பெறுவதற்குத் தகுதிப்பாடு உடையவர் ஆகார்.


  1. 1.0 1.1 2001 ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து நான்காம் திருத்தச்) சட்டத்தால் 21-2-2002 முதல் செல்திறம் பெறுமாறு மாற்றாக அமைக்கப்பட்டது.
  2. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஏழாம் திருத்தச்) சட்டத்தால் 22-6-2003 முதல் செல்திறம் பெறுமாறு மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/57&oldid=1469121" இலிருந்து மீள்விக்கப்பட்டது