பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


(iii) இந்திய ஆட்சிநிலவரைக்குள் அடங்கிய ஒரு வரையிடத்தைப் பொறுத்து அதிகாரத்தைச் செலுத்துகிற அல்லது இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு எச்சமயத்திலேனும் இந்தியத் தன்னாட்சியத்தின் ஆளுநர் மாகாணம் ஒன்றில் உள்ளடங்கியிருந்த ஒரு வரையிடத்தைப் பொறுத்து அதிகாரம் செலுத்திவந்த ஓர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கும், அவர்கள் தொடர்பாகவும் வழங்கத்தக்க ஓய்வூதியங்கள்;

(உ) இந்தியக் கணக்காய்வர் தலைமைத் தணிக்கையருக்கும், அவர் தொடர்பாகவும் வழங்கத்தக்க வரையூதியம், படித்தொகைகள் மற்றும் ஓய்வூதியம்;
(ஊ) நீதிமன்றம் அல்லது பொதுவர் தீர்ப்பாயம் ஒன்றன் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது தீர்வம் எதன்படியும் செலுத்தித் தீர்ப்பதற்குத் தேவைப்படும் பணத்தொகைகள்;
(எ) இவ்வாறு சார்த்தப்படவேண்டுமென இந்த அரசமைப்போ சட்டத்தினால் நாடாளுமன்றமோ விளம்புகிற பிற செலவினங்கள்.

113. மதிப்பீடுகள் பற்றிய நாடாளுமன்ற நெறிமுறை :

(1) இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினங்கள் தொடர்பான மதிப்பீடுகளை நாடாளுமன்றத்தின் வாக்களிப்பிற்கு வைத்திடுதல் ஆகாது; ஆனால், நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலும், அந்த மதிப்பீடுகளில் எதனையும் பற்றி விவாதிப்பதை இந்தக் கூறிலுள்ள எதுவும் தடையூறு செய்வதாகப் பொருள்கொள்ளப்படுதல் ஆகாது.

(2) மேற்சொன்னவற்றில் பிற செலவினங்கள் தொடர்பான மதிப்பீடுகளை, பானியக்கோரிக்கைகளாக மக்களவையின் முன் வைத்தல் வேண்டும்; மற்றும் கோரிக்கை எதற்கும் ஏற்பிசைவு அளிக்கவோ ஏற்பிசைவு அளிக்க மறுக்கவோ அக்கோரிக்கையில் குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையைக் குறைத்து ஏற்பிசைவு அளிக்கவோ மக்களவை அதிகாரம் உடையது ஆகும்.

(3) மானியம் எதுவும், குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் மீதல்லாமல், கோரப்படுதல் ஆகாது.

114. நிதிஒதுக்களிப்புச் சட்டமுன்வடிவுகள் : (1) மக்களவை 113 ஆம் உறுப்பின்படி மானியங்களை வழங்கியபின்பு, கூடியவிரைவில்

(அ) மக்களவையால் அவ்வாறு வழங்கப்பட்ட மானியங்களுக்கும்,
(ஆ) நாடாளுமன்றத்தில் முன்னரே வைக்கப்பட்ட விவரஅறிக்கையில் கண்ட தொகைக்கு எவ்வகையிலும் மேற்படாமல் இந்தியத் திரள் நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினங்களுக்கும்

தேவைப்படும் பணம் அனைத்தையும் இந்தியத் திரள்நிதியத்தினின்றும் ஒதுக்களிப்பதற்கு வகைசெய்யும் சட்டமுன்வடிவு ஒன்று அறிமுகப்படுத்தப்படுதல் வேண்டும்.

(2) அத்தகைய சட்டமுன்வடிவு எதற்கும், அவ்வாறு வழங்கப்பட்ட மானியம் ஒன்றன் தொகையில் மாறுதலையோ அத்தொகை எதற்கெனக் கோரப்பட்டதோ அதில் மாற்றத்தையோ இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினத் தொகையில் மாறுதலையோ விளைவிப்பதான திருத்தம் எதுவும், நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலும் முன்மொழியப்படுதல் ஆகாது: அத்தகைய திருத்தம் எதுவும், இந்தக் கூறின்படி ஏற்றுக்கொள்ளத்தகாததா என்பது பற்றி அவையில் தலைமை வகிப்பவரின் முடிபே அறுதியானது ஆகும்.

(3) 115, 116 ஆகிய உறுப்புகளின் வகையங்களுக்கு உட்பட்டு, இந்த உறுப்பின் வகையங்களுக்கு இணங்க நிறைவேற்றப்பட்ட சட்டத்தினால் செய்யப்பட்ட நிதி ஒதுக்களிப்பின்படியல்லாமல், இந்தியத் திரள்நிதியத்திலிருந்து பணம் எதுவும் எடுக்கப்படுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/69&oldid=1469106" இலிருந்து மீள்விக்கப்பட்டது