பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


115. துணை, கூடுதல் அல்லது மிகை மானியங்கள் :

(1) குடியரசுத்தலைவர்

(அ) நடப்பு நிதியாண்டில் ஒரு குறிப்பிட்ட பணிக்கெனச் செலவிடுவதற்கு 114 ஆம் உறுப்பின் வகையங்களுக்கு இணங்க இயற்றப்பட்ட சட்டம் ஒன்றினால் அதிகார அளிப்புப்பெற்ற பணத்தொகை, அந்த ஆண்டிற்குரிய பணிக்குப் போதுமானதன்று எனக் காணப்படுமாயின் அல்லது நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கருதப்படாத புதியதொரு பணியினைப் பொறுத்து குறைநிறைவு செய்வதான அல்லது கூடுதலான செலவினத் தேவை ஒன்று அந்த ஆண்டில் எழுமாயின், அல்லது

(ஆ) ஒரு நிதியாண்டில் பணி ஒன்றிற்கு வழங்கப்பட்ட தொகைக்கு மிகையாகப் பணம் எதுவும் அந்த ஆண்டின்போது அந்தப் பணிக்குச் செலவழிக்கப்பட்டிருக்குமாயின்,

அச்செலவினங்களின் மதிப்பீட்டுத் தொகையைக் காட்டும் பிறிதொரு விவரஅறிக்கையை நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்கும்படி செய்யவோ அல்லது, நேர்வுக்கேற்ப, அத்தகைய மிகைத்தொகைக்கான ஒரு கோரிக்கையை மக்களவையில் முன்னிடும்படி செய்யவோ வேண்டும்.

(2) ஆண்டு நிதிநிலை அறிக்கை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள செலவினங்கள், ஒரு மானியத்திற்கான கோரிக்கை, மற்றும் அந்தச் செலவினங்கள் அல்லது மானியத்திற்காக இந்தியத் திரள்நிதியத்தினின்றும் பணத்தை ஒதுக்களிப்பதற்கு அதிகாரம் வழங்கி இயற்றப்படவேண்டிய சட்டம் இவற்றைப் பொறுத்து 112, 113, 114 ஆகிய உறுப்புகளின் வகையங்கள் எவ்வாறு செல்திறம் கொண்டனவோ, அவ்வாறே இதில் கூறப்பட்டுள்ள அறிக்கை, செலவினங்கள், கோரிக்கை, மற்றும் அச்செலவினங்கள் அல்லது அக்கோரிக்கை பற்றிய மானியத்திற்காக இந்தியத் திரள்நிதியத்தினின்றும் பணத்தை ஒதுக்களிப்பதற்கு அதிகாரம் வழங்கி இயற்றப்படவேண்டிய சட்டம் இவற்றைப் பொறுத்தும் செல்திறம் கொண்டன ஆகும்.

116. முன்னளிப்பு மானியம், முன்பற்றுத் தொகை மானியம், குறித்ததனி மானியம் இவற்றின் மீதான வாக்களிப்பு :

(i) இந்த அத்தியாயத்தின் மேலேகண்ட வகையங்களில் எது எவ்வாறிருப்பினும், மக்களவை-

(அ) மானியத்தின்மீது வாக்களிப்பதற்கு 113 ஆம் உறுப்பில் வகுத்துரைக்கப்பட்டுள்ள நெறிமுறை முடிவடையாமலும், மதிப்பீட்டுச் செலவினங்களுக்காக 114 ஆம் உறுப்பின் வகையங்களின்படி சட்டம் நிறைவேற்றப்படாமலும் உள்ள நிலையில், நிதியாண்டின் ஒரு பகுதிக்குரிய அச்செலவினத்திற்கான மானியத்தை முன்னதாக அளிப்பதற்கும்,

(ஆ) பணியின் அளப்பருந்தன்மை அல்லது திட்டவட்டமற்ற தன்மை காரணமாக ஒரு கோரிக்கையைப்பற்றி ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழக்கமாகக் கொடுக்கப்படும் விவரங்களுடன் கூற இயலாதபோது, எதிர்பார்க்க முடியாத அக்கோரிக்கைக்காக இந்தியாவின் வருவாய் ஆதாரங்களின்மீது மானியம் அளிப்பதற்கும்,

(இ) ஒரு நிதியாண்டின் நடப்புப் பணியின் ஒரு பகுதியாக அமையாத குறித்ததனி மானியம் ஒன்றை அளிப்பதற்கும்,

அதிகாரம் உடையது ஆகும்; மேலும், மேற்சொன்ன மானியங்கள் பொருட்டு இந்தியத் திரள்நிதியத்திலிருந்து பணம் எடுப்பதற்கும் சட்டத்தினால் அதிகாரமளிக்க நாடாளுமன்றம் அதிகாரம் உடையது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/70&oldid=1467649" இலிருந்து மீள்விக்கப்பட்டது