பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


(2) ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செலவினத்திற்கான மானியத்தை அளித்தல், அச்செலவினத்திற்காக இந்தியத் திரள்நிதியத்திலிருந்து பண ஒதுக்களிப்பிற்கு அதிகாரம் வழங்கி இயற்றப்படவேண்டிய சட்டம் இவற்றைப் பொறுத்து 113, 114 ஆகிய உறுப்புகளின் வகையங்கள் எவ்வாறு செல்திறம் கொண்டனவோ, அவ்வாறே (1) ஆம் கூறின்படி மானியம் எதனையும் அளித்தல், அக்கூறின்படி இயற்றப்படவேண்டிய சட்டம் இவற்றைப் பொறுத்தும் செல்திறம் கொண்டன ஆகும்.

117. நிதிச் சட்டமுன்வடிவுகள் பற்றிய தனியுறு வகையங்கள் :

(1) 110 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின் (அ) முதல் (ஊ) வரையுள்ள ஊட்கூறுகளில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளில் எதற்கும் வகைசெய்யும் சட்டமுன்வடிவு அல்லது திருத்தம் எதனையும், குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் மீதல்லாமல், அறிமுகப்படுத்துதலோ கொண்டுவருதலோ ஆகாது; அவ்வாறு வகைசெய்யும் சட்டமுன்வடிவு எதனையும் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்துதலும் ஆகாது:

வரம்புரையாக : வரி எதனையும் குறைப்பதற்காக அல்லது நீக்குவதற்காக வகைசெய்யும் ஒரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு இந்தக் கூறின்படியான பரிந்துரை எதுவும் வேண்டுவதில்லை.

(2) சட்டமுன்வடிவு அல்லது திருத்தம் எதுவும், அபராதங்கள் அல்லது பிற பணத் தண்டங்கள் விதிப்பதற்கு அல்லது உரிமங்களுக்கான கட்டணங்களையோ செய்யப்பட்ட பணிகளுக்கான கட்டணங்களையோ கோருவதற்கும் செலுத்துவதற்கும் அது வகைசெய்கிறது என்ற காரணத்தால் மட்டுமோ உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது குழுமம் ஒன்று உள்ளாட்சி நோக்கங்களுக்காக வரி எதனையும் விதிப்பதற்கு, நீக்குவதற்கு, குறைப்பதற்கு, மாற்றுவதற்கு அல்லது ஒழுங்குறுத்துவதற்கு அது வகை செய்கிறது என்ற காரணத்தாலோ, மேலே கூறப்பட்ட பொருட்பாடுகளில் எதற்கும் வகைசெய்வதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

(3) ஒரு சட்டமுன்வடிவு, சட்டமாக இயற்றப்பட்டுச் செயற்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டால் இந்தியத் திரள்நிதியத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய நிலையை அது ஏற்படுத்துமாயின், அதனை ஓர்வு செய்யுமாறு நாடாளுமன்ற ஈரவைகளில் ஒவ்வொன்றுக்கும் குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்திருந்தாலன்றி, அந்த அவை அதனை நிறைவேற்றுதல் ஆகாது.

பொதுவியலான நெறிமுறை

118. நெறிமுறை விதிகள் :

(1) நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றும், இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, அதற்குரிய நெறிமுறையையும் அலுவல் நடத்துமுறையையும் ஒழுங்குறுத்துவதற்கான விதிகளை வகுத்துக் கொள்ளலாம்.

(2) (1) ஆம் கூறின்படி விதிகளை வகுத்துக்கொள்ளும் வரையில் இந்தியத் தன்னாட்சியத்தின் சட்டமன்றத்தைப் பொறுத்து, இந்த அரசமைப்பின் தொடக்க நிலையை ஒட்டிமுன்பு செல்லாற்றலிலிருந்து நெறிமுறை விதிகளும், நிலையாணைகளும், நாடாளுமன்றத்தைப் பொறுத்து மாநிலங்களவைத் தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, மக்களவைத் தழுவமைவுகளுக்கும் உட்பட்டு, தலைவர் அவற்றில் செய்யும் மாற்றமைவுகளுக்கும் செல்திறம் உடையன ஆகும்.

(3) குடியரசுத் தலைவர், மாநிலங்களவைத் தலைவருடனும் மக்களவைத் தலைவருடனும் கலந்தாய்வு செய்தபின்பு, ஈரவைகளின் கூட்டு அமர்வுகளையும், அவற்றுக்கிடையேயான செய்தித்தொடர்புகளையும் பற்றிய நெறிமுறை விதிகளை வகுக்கலாம்.

(4) ஈரவைகளின் கூட்டமர்வில், மக்களவைத் தலைவர் அல்லது அவர் இல்லாதபோது, (3) ஆம் கூறின்படி வகுக்கப்பட்ட நெறிமுறை விதிகளால் தீர்மானிக்கப்பெறும் ஒருவர் தலைமை வகிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/71&oldid=1467650" இலிருந்து மீள்விக்கப்பட்டது