பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


119. நாடாளுமன்றத்தில் நிதி அலுவல்கள் பற்றிய நெறி முறையைச் சட்டத்தினால் ஒழுங்குறுத்துதல் :

நாடாளுமன்றத்தில், நிதி அலுவல்களை உரிய காலத்தில் முடிக்கும் பொருட்டு, நிதிபற்றிய பொருட்பாடு எதன் தொடர்பாகவும் அல்லது இந்தியத் திரள்நிதியத்தினின்றும் பண ஒதுக்களிப்பிற்கான சட்டமுன்வடிவு எதன் தொடர்பாகவும் நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றின் நெறிமுறையையும் அலுவல் நடத்துமுறையையும் சட்டத்தினால் ஒழுங்குறுத்தலாம்; அவ்வாறு இயற்றப்பட்ட சட்டத்தின் வகையம் எதற்கும் 118 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின் படி நாடாளுமன்றம் அவை ஒன்றினால் வகுக்கப்பட்ட விதி எதுவும் அல்லது அந்த உறுப்பின் (2) ஆம் கூறின்படி நாடாளுமன்றம் தொடர்பாகச் செல்திறம் உடைய விதி அல்லது நிலையாணை எதுவும் முரணாக இருப்பின் அவ்வாறு முரணாக இருக்கும் அளவிற்கு, அந்த வகையமே மேலோங்கி நிற்கும்.

120. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படவேண்டிய மொழி :

(1) XVII ஆம் பகுதியில் எது எவ்வாறிருப்பினும், நாடாளுமன்ற அலுவல்கள், 348 ஆம் உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் நடத்தப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக: இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் தம் கருத்தைத் தக்கவாறு எடுத்தியம்ப இயலாத உறுப்பினர் எவரையும், அவருடைய தாய் மொழியிலேயே அவையில் உரையாற்றுவதற்கு, மாநிலங்களைத் தலைவர் அல்லது மக்களவைத்தலைவர் அல்லது அத்தகையவராகச் செயலுறுகின்றவர் அனுமதிக்கலாம்.

(2) நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்தாலன்றி, இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து பதினைந்து ஆண்டுக் காலஅளவு கழிவுறுவதன்பின்பு, இந்த உறுப்பிலிருந்து, “அல்லது ஆங்கிலத்தில்" என்னும் சொற்கள் நீக்கப்பட்டிருந்தால் எப்படியோ அப்படியே இந்த உறுப்பு செல்திறம் உடையது ஆகும்.

121. நாடாளுமன்றத்தில் விவாதத்தின்மீது வரையறை :

உச்சநீதிமன்றத்தின் அல்லது ஓர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், தம் கடமைகளை ஆற்றுகையில் அவர் நடந்துகொண்ட விதம் குறித்து விவாதம் எதுவும், அந்த நீதிபதியைப் பதவிநீக்கம் செய்வதற்காக, இதன்பின்பு வகைசெய்துள்ளவாறு, குடியரசுத்தலைவரிடம் வேண்டுதலுரை முன்னிடுவதற்கான தீர்மானத்தின் மீதல்லாமல், நாடாளுமன்றத்தில் நடைபெறுதல் ஆகாது.

122. நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரித்தல் ஆகாது :

(1) நெறிமுறையைப் பின்பற்றுவதில் முறைகேடு இருப்பதாகக் காரணம் காட்டி நாடாளுமன்றம் நடவடிக்கைகள் எவற்றின் செல்லுந்தன்மையையும் எதிர்த்து வாதிடுதல் ஆகாது.

(2) நாடாளுமன்றப் பதவியாளர் அல்லது உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்ற நெறிமுறையையோ அலுவல் நடத்துமுறையையோ ஒழுங்குறுத்துவதற்காக அல்லது ஒழுங்கமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ அவருக்கு உற்றமைந்துள்ள அதிகாரங்களைச் செலுத்துவது பொறுத்து நீதிமன்றம் எதனின் அதிகாரவரம்பிற்கும் உட்பட்டவர் ஆகார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/72&oldid=1467651" இலிருந்து மீள்விக்கப்பட்டது