பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


அத்தியாயம் III
குடியரசுத்தலைவருக்குள்ள சட்டமியற்றும் அதிகாரங்கள்.


123. நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின்போது அவசரச்சட்டங்களைச் சாற்றம் செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம் : (1) நாடாளுமன்ற ஈரவைகளின் கூட்டத் தொடர்களும் தொடர்நிலையிலுள்ள காலம் தவிர, வேறு எச்சமயத்திலும், குடியரசுத்தலைவர், தாம் அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டியதை அவசியமாக்கும் சூழ்நிலைகள் உள்ளன என்று தெளிவுறக் காண்பாராயின், அச்சூழ்நிலைகளுக்கேற்பத் தேவையென்று தாம் கருதும் அவசரச்சட்டங்களைச் சாற்றம் செய்யலாம்.

(2) இந்த உறுப்பின்படி சாற்றம் செய்யப்பட்ட ஓர் அவசரச் சட்டம், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்திற்குள்ள அதே செல்லாற்றலும் செல்திறமும் உடையது ஆகும்:

ஆனால், அத்தகைய அவசரச் சட்டம் ஒவ்வொன்றும்—

(அ) நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும், நாடாளுமன்றம் மீண்டும் கூடியதிலிருந்து ஆறு வாரங்கள் கழிவுற்றவுடன் அல்லது அக்கால அளவு கழிவுறுவதற்கு முன்பே அதற்கு ஒப்பேற்பு அளிக்க மறுக்கும் தீர்மானங்களை ஈரவைகளும் நிறைவேற்றுமாயின், அவற்றில் இரண்டாம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், செயற்பாடு அற்றுப்போகும்; மேலும்,
(ஆ) குடியரசுத் தலைவரால் எச்சமயத்திலும் விலக்கிக் கொள்ளப்படலாம்.

விளக்கம் நாடாளுமன்ற அவைகள் வெவ்வேறு தேதிகளில் மீண்டும் கூடுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்குமிடத்து, இந்தக் கூறினைப் பொறுத்தவரை, அந்த ஆறு வாரக் காலஅளவு அத்தேதிகளில் பிந்திய தேதியிலிருந்து கணக்கிடப்படுதல் வேண்டும்.

(3) இந்த அரசமைப்பின்படி நாடாளுமன்றம் சட்டமாக இயற்றத் தகுதிறமில்லாத வகையம் எதனையும் இந்த உறுப்பின்படியான ஓர் அவசரச் சட்டம் கொண்டிருப்பின், அந்த அளவிற்கு அது இல்லாநிலையது ஆகும்.

அத்தியாயம் IV
ஒன்றியத்து நீதித்துறை


124. உச்ச நீதிமன்றத்தை நிறுவுதலும் அதன் அமைப்பும்:

(1) இந்திய உச்ச நீதிமன்றம் என ஒன்று இருக்கும்: இந்தியத் தலைமை நீதிபதியையும், நாடாளுமன்றம் சட்டத்தினால் அதிக அளவு எண்ணிக்கையை வகுத்துரைக்கும் வரையில், [1]எழுவருக்கு மேற்படாத பிற நீதிபதிகளையும், அது கொண்டதாக இருக்கும்.

(2) உச்ச நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரையும், உச்ச நீதிமன்றத்திலும் மாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றங்களிலுமுள்ள நீதிபதிகளில் எவரொருவரைக் கலந்தாய்வு செய்வது அவசியமெனக் குடியரசுத்தலைவர் கருதுகின்றாரோ அந்நீதிபதிகளுடன் கலந்தாய்வு செய்த பின்பு, தம் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையினால் குடியரசுத்தலைவர் அமர்த்துவார்; மற்றும், அவர் அறுபத்தைந்து வயது நிறைவேய்தும் வரையில் பதவி வகிப்பார்.

வரம்பரையாக: தலைமை நீதிபதி அல்லாத பிற நீதிபதியின் அமர்த்துகையைப் பொறுத்தவரை, இந்தியத் தலைமை நீதிபதியுடன் தவறாது கலந்தாய்வு செய்யப்படுதல் வேண்டும்:


  1. தற்போது இருபத்து ஐந்து 22/1986 சட்டத்தைப் பார்க்கவும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/73&oldid=1467658" இலிருந்து மீள்விக்கப்பட்டது