பக்கம்:Siva Temple Architecture etc..pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பட்ட கோயில்களிலும் கட்டப்பட்ட கோயில்களிலும் விமானங்கள் உண்டு. இந்த விமானங்கள் பௌத்த மதத்தைக் சார்ந்த விஹாரங்களைப் போன்றவை என்று சிற்ப சாஸ்திரிகள் கூறுகின்றனர். இந்த "விஹாரங்கள்" ஒன்றின் மேல் ஒன்றாய் ஆதியில் மரத்தில் கட்டப்பட்ட மாடங்கள் உடையவைகளா யிருந்தன. இதைப்போலவே கருங்கற்களில் முதலில் சிவாலயங்கள் வெட்டப்பட்டன; பிறகு கட்டப்பட்டன. வெட்டப்பட்ட கோயில்களில் பெரும்பாலும் பிராகாரங்கள் கிடையா; கட்டப்பட்ட கோயில்களில் முதலில் கர்ப்பக்கிரஹமும் அதைச் சுற்றி ஒரு பிராகாரமும் தானிருந்தது. பிராகாரத்தின் உட்புறத்து சுவரில் சிறு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன ; இதற்கு உதாரணமாக ஸ்ரீ காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயில் பிராகாரத்தி லிருக்கிற சிறு அறைகளைக் கூறலாம் ; இவ்வறைகளில் பரமசிவம் பார்வதியின் பல கோலங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பல்லவ கோயில்களுக்கு கோபுரங்கள் கிடையா என்றே கூறலாம். விமானங்களில் சாதாரணமாக வெளியில் சிலையுருவங்கள் கிடையா "கோஷ்டங்களும்" மகா தோரணங்களும் உண்டு. 'கூடு'களின் மத்தியில், மண் வெட்டிபோன்ற உருவங்கள் இருக்கின்றன. இவைகள் எதைக் குறிக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. பல்லவ சில்பத்தூண்களை சாதாரணமாகக் கண்டுபிடித்துவிடலாம் ; மிகவும் புராதனமான தூண்கள் சிங்கங்களின்மீது வைக்கப்பட்டனபோலிருக்கும். பிற்காலத்திய தூண்களில் இந்த சிங்கங்கள் விடப்பட்டன. பல்லவ தூண்களின் "போதிகைகள்" வளர்ந்திருக்கும்; மிகவும் சாதாரணமானவை; ஆதிகாலத்துப் பல்லவ தூண்கள் இரண்டு பிரிவினை உடையவை, பிற்காலத்துத் தூண்கள் மூன்று பிரிவினை உடையவை; பல்லவ தூண்களில் " நாகபந்தம்" கிடையாது. பல்லவ கோயில்களில், துவார பாலகர்கள் உருவங்களுக்கு ஆதியில் இரண்டு கைகள்தானிருந்தன. இந்த துவாரபாலகர்களுக்கும் மற்ற மனிதர்களுடைய உருவங்களுக்கும் நீண்ட துளைக்கப்பட்ட காதுகள் உண்டு ; அவைகளில் பெரிய குண்டலங்களும் உண்டு ; தலையில் கேசம் நிகளமா யிருக்கும், தலையணிகள் உயர்ந்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/24&oldid=1293913" இலிருந்து மீள்விக்கப்பட்டது