பக்கம்:Tamil varalaru.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதிராத நாட்டில் வழங்கிய பல மொழிகள் ஒளிபெறாது மழுங்கி யொழிந்தன. அறிவும், நாகரிகமும், செல்வவளமும் முதிர்ந்த நாட்டினர் வழங்கிய சில பண்டைமொழிகளும், அந்நாட்டினர் தம் செல்வாக்கிழந்து குறைந்த காலத்துத் தம் பெருமை குன்றிப் பேச்சு வழக்கற்று, நூல் வழக்கின் மட்டும் நிலவி வருகின்றன. பண்டைக்காலந்தொட்டே பல்வகை நலனுங்கொண்டு இறவாது மக்களால் வழங்கப்பட்டுவரு மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் தமிழ்மொழியும் ஒன்றென்பது தமிழ் நாட்டுப் பண்டைச் சரித்திரவாராய்ச்சியானும், இம்மொழியிற் றொன்றுதொட்டே எண்ணிறந்து பரந்து விளங்கிய இலக்கிய விலக்கண நூலறிவானும் இனிது விளங்கும். இம்மொழி எத்துணைப் பெருமை வாய்ந்த தென்பதும், இதனை வழங்கிய பண்டையோர் எவ்வளவு நாகரிகத்தால் மேம்பட்டனரென்பதும், இதனை வளர்த்த புலவர் பெருமக்கள் செய்யுட்டிறத்தில் எவ்வளவு திட்பநுட்பஞ் செறிந்து விளங்கினரென்பதும், இவரைப் போற்றிய வள்ளல்கள் இவர் என்பதும் உள்ளவாறறிந்து இனியது இஃதென்று உள்ளம் பருகி மகிழவும் அப்பெருமக்கள்போல நன்னெறியிலொழுகவும் வேண்டி இத்தமிழ் வரலாறு தொடங்கப் பெறுகின்றது.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/11&oldid=1228479" இலிருந்து மீள்விக்கப்பட்டது