பக்கம்:Tamil varalaru.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




தமிழென்னும் பெயர்

இனிமை என்னும் பொருள்படும் தமிழ் என்னுஞ் சொல்லே நம் நாட்டு மொழிகளுள், தொன்மையும் முதன்மையும் பெற்ற இத்தென்னாட்டுத் தாய்மொழிக்குப் பெயராய்ப் பண்டைக்காலந் தொடங்கி வழங்கிவந்ததென்பதற்கு, அகச்சான்றுகளும் புறச் சான்றுகளும் பலவுள்ளன. தமிழ் என்னுஞ்சொல் இம்மொழிக்கு வழங்கி வந்ததைக் குறித்த வரலாறுகள் இனி ஆராயப்படும்.

தமிழ் என்னும் இயற்சொல்லான் வழங்கும் இம்மொழியின் பெயர்க் காரணத்தைப் பலர் பலவாறாக வெளியிட்டு வருகின்றனர். தமிழரல்லாத வடமொழியாளரும், பிறநாட்டுக் கல்வி வல்லார் சிலரும் தமிழ் என்னுஞ்சொல், "த்ரமிளம்" என்னும் வடமொழியின் சிதைவெனக்கொண்டு தம் கொள்கையை நிறுத்தப் பல காரணங்காட்டுவர். முந்நூறாண்டுகட்கு முன் றோன்றிய சுப்பிரமணிய தீக்‌ஷிதர், தாமியற்றிய தமிழ்ப்பிரயோக விவேக நூலிலே முதன்முதல் இக்கருத்தைப் புகவிட்டனர். இவ்வாறு அவர் துணிதற்குத் தலையாய காரணம் தமிழரையும் தமிழையும் த்ரமிள சப்தத்தால் வடநூல்கள் வழங்கிக் காட்ட லேயாகும். த்ரவிடம் என்னுஞ் சொல் த்ரமிடம், த்ரமிளம், தமிளம் எனச் சிறிதுசிறிதாக மாறி முடிவிலே, தமிழ் என வழங் கலாயிற்றென்பது இக்கொள்கையோர் கருத்தாகும். இதன் உண்மையை இனி ஆராய்வாம்.

வடமொழியாளர், த்ரமிளர் எனத் தமிழ்மொழியாளரையும், த்ரமிளம், த்ராவிடம் என அவர் நாட்டினையும், மொழியையுங் குறித்தனர் என்பது உண்மை. இக்குறியீடுகளால் தமிழரையும் தமிழையும் அவர் வழங்கியதன் காரணமின்னதென்று தெளிய வேண்டுவது சண்டைக்கின்றியமையாததாம். வடநூலார் பெய ரிடுவதற்குமுன் தமிழர்க்கும், தமிழுக்கும் பெயரேயில்லை யெனல் சிறிதும் பொருந்தாது. வடமொழியாளர் தமிழரையும், தமிழையுங் கண்டு அவருடன் பயின்று, அவர் மொழிப்பெயரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/12&oldid=1228480" இலிருந்து மீள்விக்கப்பட்டது