உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/002-028

விக்கிமூலம் இலிருந்து

2

அம்பாசமுத்திரம் திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரபருணி நதியின் தலைப் பகுதியிலுள்ள ஊர், ஊருக்குத் தெற்கே, அம்பாசமுத்திரத்துக்கும் கல்லிடைக் குறிச்சிக்கும் எல்லை கிழித்தமாதிரி, ஸ்படிகத் தெளிவு கொண்ட தாமிரபருணி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஊருக்கு மேற்கே ஐந்தாறு மைல் தொலைவில், மேற்குத் தொடர்ச்சிமலை மஞ்சு தவழும் முகடுகளோடு, அரண் வகுத்துக் கோட்டைச் சுவர் மாதிரி வானளாவி நிற்கிறது. மலைத்தொடரின் அடிவாரத்தில்,தமிழ் பிறந்த தென்னன் பொதிகைச் சாரலில், வெள்ளைக்காரப் பெரு முதலாளியானஹார்வியின் பஞ்சாலைகொடிகட்டி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆகஸ்டுச் சுதந்திரத்தின் அபிநவபாண்டிய குமாரனாக, ஹார்விதென் பாண்டிநாடு முழுவதிலும் கால் பரப்பி, அந்தப் பகுதியின் பொருளாதாரத்தின்மீதுபேராதிக்கம் செலுத்திவருகிறான். - ஹார்லி மில்லுக்கு பேட்லே மலைமீது முண்டந்துறை என்ற கீழணைப் பிராந்தியத்தில் பாபநாச ஜல மின்சார உற்பத்தி நிலையம் கொலுவீற்றிருக்கிறது. தாமிரபருணித்தாய் வாரி வழங்கும்மகாசக்தியான மின்சாரத்தைக்கூட, அவளுடைய மக்களான நெல்லை ஜில்லாவாசிகளுக்கு ஒருவெள்ளையன் தான் தரகுக்காரனாக இருந்து வினியோகித்து வருகிறான். மின்சார நிலையத்துக்கு மேலாக, பழைய நீலகண்டன் கசம் இருந்த இடத்தில், 'அப்பர் டாம்' என்ற காரையார் அணைக்கட்டும், அணைக்கட்டினால் ஏற்பட்ட 'ஆர்தர் ஹோ ஏரி'யும் இருக்கின்றன மலையடிவாரத்தில் குடியேறிவிட்ட யந்திர வளர்ச்சியின் காரணமாக, அம்பாசமுத்திரத்திலிருந்து காரையாருக்குச் செல்லும் ரோட்டிலும், மலைப் பாதையிலும் சதா சர்வகாலமும் லாரிகளும், பிளஷர் கார்களும், பஸ்களும் பறந்தோடிய வண்ணமாய் இருக்கும் அம்பாசமுத்திரத்துக்குக் கிழக்கே ஐந்தாறு மைல் தூரத்தில் வீரவநல்லூர் என்ற இடைகழி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில், அந்த வட்டாரத்துக்குப் பெருமுதலாளிகளான, இந்தியாவின் சிறு முதலாளிகளின் பகிரத முயற்சியினால் தொடங்கப் பெற்ற புதிய டெக்ஸ்டைல் மில் ஒன்றும் இருக்கிறது.மலைவிழுங்கி மகா தேவனாக விளங்கும் விக்கிரமசிங்கபுரத்து ஹார்வி மில்லுக்கு எதிராக, அந்த மில் அமைந்திருப்பது விஸ்வரூப ராட்சதனுக்கு எதிரே, நாபிக் கொடி காய்ந்து விழாத பச்சிளங் குழந்தை தவழ்ந்து விளையாடத் துணிவது மாதிரித்தோற்றம் அளித்துக்கொண்டிருந்தது.

தாமிரபருணித் "தாயிடமிருந்து முதல் பாசன் ஊட்டத்தைப்பெறும்பாக்கியம் பெற்றது அம்பாசமுத்திரம். எனவே, எந்தக் காலத்திலும் அந்த வட்டாரத்தில் தீய்வோ, தண்ணீர்த்தட்டோ இருந்ததில்லை. ஊரைச் சுற்றிலும் பல மைல் விஸ்தீரணத்துக்கு பச்சைப் பசிய நெல்வயல்கள் மரகத மைதானமாக விரிந்து கிடக்கும். திருநெல்வேலி ஜில்லா ஒரு பற்றாக்குறைப் பிரதேசம்தான்; என்றாலும் அம்பாசமுத்திரத்தைப் பொறுத்த வரை அது ஒரு பற்றாக்குறைப்பிரதேசம் அல்ல. எனினும் இந்தியாவெங்கும் உள்ளது போலவே, அங்கிருந்த நிலங்களில் பெரும்பகுதி நேரடியாகவிவசாயம் செய்யும் விவசாயப் பெருமக்களுக்குச் சொந்தமானதல்ல. பெருவாரி நிலங்கள் கல்லிடைக்குறிச்சி பெரிய ஐயன்மார்கள் என்ற பார்ப்பன நிலப்பிரபுக் களுக்கும், சைவ ஆதீன மடங்களுக்கும், ஒருசில பண்ணையார்களுக்கும், பற்பல சிறு நிலச் சொந்தக்காரர் களுக்கும் உடைமையாயிருந்தன. விவசாயிகள் பெரும் பாலும் நிலச்சுவான்தார்களிடம் நேரடிப் பாட்டத்துக்கு எடுத்தோ, அல்லது ஆதீன மடங்களைச் சேர்ந்த தரகுப் பிள்ளைமார்களிடம் குத்தகைக்கு எழுதி வாங்கியோ பயிர் செய்வதுதான் நடைமுறை வழக்கமாய் இருந்து வருகிறது. 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது' என்றபழமொழிக்கு இலக்கணமாக, நாளுக்குநாள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவின் சூழ்நிலையில் எங்குமுள்ளது போலவே அங்குமுள்ள விவசாயிகளின் வாழ்க்கைசீரழிந்து வருகிறது. '

அம்பாசமுத்திரம் ஊரைப் பொறுத்தவரையிலும் அது தாலுகாக் கச்சேரியும் பஞ்சாயத்து போர்டு ஆபீசும் அடுத்தடுதுள்ள இரண்டுங் கெட்டான் நகரம்; அதாவது வளர்ச்சியுற்ற கிராமம், சர்க்கார் கச்சேரிகள், பஸ், ரயில் போக்குவரத்து முதலிய நிலைமைகளால், அந்த ஊர் வளர்ந்து வரும் சிறு நகரப்புறம் போல் காட்சியளித்துக் கொண்டிருக்கும். ஊரில் பெரும்பான்மையான மக்கள் விவசாயப் பெருங்குடி மக்கள், அன்றாடக் கூலிகள், சிறு தொழிற்காரர்கள் முதலியோர்தாம் சர்க்கார் உத்தியோகம், சிறு வியாபாரம், கமிஷன் ஏஜண்ட், பள்ளி ஆசிரியர் முதலியவர் போன்ற மத்தியதர வர்க்கத் தொழில் புரியும் மக்களும் ஏதோவசதியாய்உட்கார்ந்து சாப்பிடவழியுள்ள நிலச்சுவான்தார்களும் ஊரின் பிரதான குடிமக்கள். இவர்களைத் தவிர, ஊரின் ஒரு பகுதி முழுவதும் பரம்பரை: பரம்பரையாகத் தறி நெய்து ஜீவனோபாயம் தேடி அதில் வாழ்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமானகைத்தறிநெசவாளர் சமூகமும் அங்குண்டு. கைத்தறி நெசவாளர்களில் பெரும்பாலோர் வெள்ளை வேட்டிப் பண்டாரங்களான கடைத் தட்டுமத்தியதர வர்க்கத்தார் தாம். ஒருசிலர் மட்டும் ஜவுளிக்கடை நடத்தும் முதலாளிமார்களாகவும், மாஸ்டர் வீவர்களாகவும் நூல் வியாபாரிகளாகவும் இருந்து வந்தனர்.

சுருங்கச்சொன்னால், அம்பாசமுத்திரம் விட்டகுறை தொட்ட குறையாகவுள்ள அரைகுறை அடிமை நாட்டின் அனுபவ சித்திரமாக விளங்கி வருகிறது. ஒரு புறம் வர்க்க போதம் பெற்று, பற்பல போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி கண்ட ஹார்வி மில் தொழிலாளி வர்க்கம்; இன்னொரு புறம், அகழியில் விழுந்த முதலையைப்போல் தன்னுள்தானே வாழ்ந்து கொண்டு, என்றோ ஒருநாள் எதிர்பாராத அதிர்ஷ்டம் பொத்துக்கொண்டு வரத்தான் போகிறது என்ற அசட்டு நம்பிக்கையின் அஸ்திவாரத் திலேயே நாட்களைக் கடத்தும் நெல்லிக்காய் மூட்டை போன்ற, ஊசலாட்ட மனப்பான்மை கொண்ட சிறு முதலாளிகள், கைத்தறி நெசவாளிகள், சிப்பந்திகள் முதலியோர் கூட்டம் ஒரு புறம் பகாசுரப்பசியோடு இரவும் பகலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் ஹார்வியின் பஞ்சாலை; மறு புறத்தில் முக்கித் தக்கி வளர முயலும் உள்நாட்டுச் சிறு முதலாளிகளின் யந்திரத்தொழில் முயற்சி, ஒரு புறம் அசுரவேகத்தில் பறந்து செல்லும் லாரிகள், பஸ்கள்; இன்னொரு புறத்திலோ, தெற்கு மலையிலுள்ள சொரிமுத்தைய்யன் கோயிலில் பொங்கலிட்டுப் பூசை போடுவதற்காக, மலைக்காட்டுப் பாதையில் ஆமை வேகத்தில் செல்லும் கூண்டு வண்டிகள். ஒரு புறம் யந்திர சாதனமும் மின்சார உற்பத்தியும் நிறைந்த தொழிற்சாலைகள்; மறுபுறத்தில் ஆதீன அடியார்க்கு நல்லார்களின், தரகுப் பிள்ளைமார் என்ற தடியடித் தம்பிரான்களின் நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் பிற்போக்கான விவசாயச் சமூகம். ஒருபுறம் அன்னிய முதலாளித்துவம்; மறுபுறம் உள்நாட்டு நிலப்பிரபுத்துவம்.

நிலப்பிரபுத்துவச் சீரழிவுக்கும், முதலாளித்துவ வளர்ச்சிக்குமான சரித்திர கதியின் பிரசவ காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவின் ஒரு பகுதியான அம்பாசமுத்திரம் தென் பிராந்திய ரயில்வேயில் ஒரு முக்கிய ஸ்டேஷன். ரயில்வே ஸ்டேஷன், ஊர் ஜனங்களின் வசதியை உத்தேசித்துக் கட்டப்பட்டதா, அல்லது ஹார்வி மில்லின் சௌகரியத்தைக் கருதிக் கட்டப்பட்டதா என்ற சந்தேகம் ஸ்டேஷனில் வந்திறங்கும் எவருக்கும் ஏற்படலாம். ஏனெனில் ஸ்டேஷனுக்கும் ஊரின் கேந்திர பாகத்துக்கும் ஒன்றரை மைல் தூரமிருக்கும்; அதே சமயத்தில் ரயில்வே ஸ்டேஷனை அடுத்து, அம்பா சமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் ரோட்டோரத்தில் ஹார்வி மில்லுக்குச் சொந்தமான கிட்டங்கி இருக்கிறது, ஸ்டேஷனிலிருந்து காலாறக் கிட்டத்தட்ட ஒருமைல் தூரம் நடந்து வந்தால், ஊரும் கடை கண்ணிகளும் கண்ணில் தட்டுப்படும். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஊரை நோக்கி வரும் பீடர் ரஸ்தாவில் சிறிது தூரம் வந்தபிறகு, இடது புறமாகவும், வலது புறமாகவும் செல்லும் தெருக்கள் முதலிமார் என்றழைக்கப் பெறும் கைநெசவுத் தொழிவாளர்கள் வாழும் பிரதேசத்தைப் புலப்படுத்தும். ரோட்டின் இடது புறமாகச் செல்லும் தெருவின் மத்தியில் தான் லோகநாயகி அம்மன் கோயில் இருக்கிறது.

அம்மன் கோயிலுக்கு எதிரிலும், பக்கத்திலுமுள்ள தெருக்களில் அருணோதய காலங்களில் சூரிய தேவனுக்கு வானவில்லை நெளிசல் எடுத்து நடை பாவாடையாக விரித்துப் போட்டது போல், பாவு தோய்க்கும் கோலாகலக் காட்சி தெரு நிறைந்து ஒளி செய்யும். அம்மன் கோயிலுக்கு எதிராகச் செல்லும் சந்நிதித் தெருவின் கடை கோடி யிலுள்ள காரை வீடுதான் மைனர் முதலியார்வாளின் வீடு. மேலத் தெருவின் மத்தியில் எடுத்துக் கட்டிய புதிய மாடியோடு உள்ளது கைலாசம் முதலியாரின் வீடு அதற்கும் அப்பால், தன்னந் தனியாக, தெரு ரோட்டோடு கலக்கும் சங்கம முகத்தில், காம்பவுண்டு சுவர் வளைந்து, காடியானாவும், கார்ஷெட்டும். பூஞ்செடிகளும் உள்ள பங்களா வீடுதான் பெரிய முதலாளி என்று மதிக்கப்படும் தாதுலிங்க முதலியாரின் 'மங்கள பவனம்'.

சந்நிதித் தெருவின் கடைகோடி வீட்டு முன் வாசலில் ஒரு கறுப்பு நாய் தூங்காமல் தூங்கிச் சுகம் கண்டு கொண்டிருந்தது.

சுப்பையா முதலியார் அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டு, "அண்ணாச்சி, அண்ணாச்சி" என்று பவ்வியத்தோடு குரல் கொடுத்தார். குரலைக் கேட்டதும், வாசலில் படுத்திருந்த நாய் எழுந்து நின்று வறட்டுக்குரலில் குலைக்கத்தொடங்கியது.

நாயின் சத்தத்தைக் கேட்டு வெளிவந்த மைனர் முதலியார் "அடடே! சுப்பையாவா?. வாப்பா.. உள்ளே " என்று அருமையோடு அழைத்தார். நாயின் உறுமலைக் காண்டு ஒதுங்கி நின்ற சுப்பையாவைக் கண்டு, மைனர். லேசாகச் சிரித்து விட்டு, நாயைச் சொடுக்கு விட்டு அருகே அழைத்து, "என்ன வெள்ளை! உனக்கு ஆள்கூட இனம் தெரியிலியா? இவனும் நம்மளவந்தான்!" என்று கூறிக்கொண்டே நாயைத் தட்டிக் கொடுத்தார். நாயும் எதையோ புரிந்து கொண்டது போல், தலையை ஆட்டிவிட்டு மீண்டும் தன்னிடத்தில் போய்ப் படுத்துக் கொண்டது.

மைனர் முதலியாரைத் தொடர்ந்து சுப்பையா முதலியாரும் உள்கட்டுக்குச் சென்று கூடத்திலிருந்த கருங்கல்திண்ணைமீது உட்கார்ந்தார்.

மைனர் முதலியார்வாளின் மிடுக்கு பெயருக்குத் தக்கவாறு படாடோபமாகத்தான் இருந்தது. எனினும் இளமையில் இரவு பகல் என்று பாராமல் வண்டி போட்டுக் கொண்டு வைப்பாட்டிமார்களின் வீடுகளுக்குச் சென்று விளையாடி விட்டு வந்ததால், உடம்பில் தாது விழுந்து போய், கனமாய் தோன்றிய போதிலும் எடுப்பும் மினுமினுப்பும் இல்லாதிருந்தது. எனினும் கையிலே டாலடிக்கும் வெள்ளைக்கல் மோதிரங்கள்; நெற்றியிலே அளவெடுத்து வட்டமிட்டது போல் விளங்கும் அழகிய சந்தனப் பொட்டு, வழுக்கை விழுந்த தலையேயாயினும் மிஞ்சி நின்ற ஓரிரு ரோமங்களையும் வாளிப்பாக வாரி விடப்பட்ட கிராப், கழுத்திலே கிடந்து ஒளி சிதறும் நவரத்னக்கற்கள் கோத்தமெல்லிய சங்கிலி, வெற்றிலையும் புகையிலையும் கலந்து லக்ஷ்மிகரமாய் விளங்கும் திருவாய் முதலிய சம்பிரமங்கள் மைனர்வாளின் தளர்ந்து போன உடற்கோலத்துக்குக்காயகல்பம் செய்து ஈடுகட்டமுயன்று கொண்டிருந்தன. மைனர் முதலியார் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே எதிரே கிடந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

மைனர் முதலியார்வாளின் - குடும்பம் பல தலைமுறைகளாக வியாபாரத்திலும், லேவாதேவியிலும் ஈடுபட்டு ஏராளமான நிலபுலன்களையும் சொத்துச் சுகங்களையும் தேடிவைத்திருந்தது.மைனரின் தந்தை தமது ஆயுட்காலம் முழுவதையும் அநேகமாகக் கோர்ட்டு வாசலிலேயே கழித்து விட்டார். 'கோடேறியவன் வீடு ஈடேறாது' என்ற நாட்டுப் பழமொழிக்கு எதிர்மறை இலக்கணமாகத்தான் அவரது கோர்ட்டு வாழ்க்கை கழிந்தது. அதாவது அவர் கோர்ட்டுக்குச் சென்று கைமுதல் எதையும் இழக்கவில்லை. அதற்குப் பதிலாகக் குடியானவர்களிடமும் ஏழை எளியவர்களிடமும் கண்ட கண்ட வட்டிக்கும் பணத்துக்கும் நோட்டும் அடமானமும் எழுதி வாங்கி வாங்கி அவர்களிடமுள்ள சொத்துக்களைச் சட்டத்தின் பேரால் அபகரிக்கும் திருப்பணிக்காகவே அவர் கோர்ட் வாசலுக்கு மாதாமாதம் சென்று வந்தார். மைனர் முதலியார் சுயாதீனத்துக்கு அந்தச் சொத்துக்கள் வந்தபோது கண்மூக்குத் தெரியாமல் டம்பாச்சாரி வாழ்க்கைவாழ்வதற்கும் விளையாடுவதற்கும் நிறைந்தவசதி இருந்தது. எனினும் மைனர் முதலியார் அந்த வாழ்க்கை யிலேயே ஒரேயடியாய் முங்கி முழுகி நொடித்துப் போய்விடவில்லை. முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே அந்த வாழ்க்கை இரும்புப் பெட்டியை மட்டும் பிடிக்காமல், உடம்பையும் பிடிக்கத் தொடங்கிவிட்டதால், மைனர் முதலியார் உயிராசையின் காரணமாக, சீக்கிரமே ஏலாப் பதிவிரதா இச்சா பத்திய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார். அதன் பின்னர் அவரும் மற்றவர்களைப் போலவே வியாபாரத்தைக் கவனிக்கவும், நூல் ஜவுளிக் கொள்முதல் செய்யவும், வீடு தேடி வந்து விடாப்பிடியாகக் கடன் கேட்கும் சுயஜாதிக்காரரிடத்திலும் பிறரிடமும் ஒன்றரை வட்டி இரண்டு வட்டிக்குச் சொத்தின் பேரிலும் நகை நட்டுக்களின் பேரிலும் கடன் கொடுக்கவும் தொடங்கி, தம் தந்தையின் பிதுர்க்கைங்கரியத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அவரது சமூகத்தினரிடையே பலரும் அவரிடம் கடன் பட்டவர்களாதலால், அவர் தமது பொருளாதாரப் பிடிப்பின் மூலம் அந்த மக்களின் தெய்வ பக்தியிலிருந்து சகல சுப அசுப காரியங்களிலும் ஏகபோக ஆட்சி செலுத்தி வந்தார், எனவே அவர் அம்மன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து, ஏதேதோ காரியங்கள் செய்தும் ஊர்க்காரர்கள் அவரைத் தட்டிக் கேட்கப் பயந்து விட்டு விதி என்றிருந்தார்கள். ஈஸிச்சேரில் சாய்ந்தவாறே பக்கத்திலிருந்த எச்சில் படிகத்தில் காறித் துப்பிவிட்டு, நிமிர்ந் மைனர் முதலியார், "என்ன சுப்பையா, எங்கே? காலம் காத்தாலே" என்று கேட்டார்.

சுப்பையா தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசினார்.

“நேத்து ராத்திரியே வந்தேன் அண்ணாச்சி, உங்களைக் காணம். அதுதான் காலையிலேயே வந்துட்டுப் போயிறலாம்னுவந்தேன்."

"சரி, என்ன விசயம்?"

"எல்லாம் நம்மவங்க விசயம்தான். நம்ம வடிவேலு முதலியாரும் ரெண்டொருத்தரும் சேந்துக்கிட்டு என்னமோ தறிக்கூலியை உசத்திக் கேக்கணும்னு பேசிக்கிடுதாக.நேத்து நானே கேட்டேன்" என்று தொடங்கினார் சுப்பையா,

"இவனுகளுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் புடிக்கிருக்கா? காலம் கிடக்கிற கிடையிலே கூலியை உசத்துறதாவது? கட்டுபடியாக வேண்டாமா?" என்று செல்லச் சிரிப்புடன் பதிலளித்தார் மைனர்.

"சொன்னாக் கேக்காங்களா, அண்ணாச்சி, பாருங்க, அந்தவடிவேலு இத்தனையையும் அந்தக் கைலாசமுதலியார் தைரியத்திலேதான் பேசுறாரு. கைலாச முதலியார் கிட்டே கலத்துக்கிட்டு ஊர்க்கூட்டம் போடப் போறதாகச் சொன்னாரு."

"என்னது? கைலாச முதலியாரா? அவர் மின்னேயும் ஒருதரம் இப்படித்தான் பெரிய தாராளப் பிரபு மாதிரிக் கூலியை உசத்திக் குடுக்கணும்னு, இவனுகளோட சேர்ந்துக் கிட்டுத் தாளம் போட்டாரு. இதிலே அவருக்கென்ன லாபமோ தெரியலே?" என்று சலித்தாற்போல் சொன்னார் மைனர். “லாபம் இல்லாமலா, அண்ணாச்சி" என்று பொடி வைத்துச் சிரித்தார் சுப்பையா.

“என்ன, என்ன சொன்னே?" மைனர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“அண்ணாச்சி, அவர் இப்படித் தறிகாரர்களுக் கெல்லாம் சாதகமா நடந்து அவங்களையெல்லாம் கைக்குள்ளே போடப் பார்க்கிறாரு. எல்லாம் உங்களுக்கு எதிரிடையாத்தான்!"

"எனக்கு எதிராகவா? அப்படின்னா ?" என்று வியந்தார் மைனர்.

"ஒண்ணுமில்லே. நீங்க அம்மன் கோயில் தர்மகர்த்தாவா இருக்கது அவரு கண்ணை உறுத்துது போலிருக்கு. அவரே இந்த வருசம் தர்மகர்த்தா ஆகணும்னு கொடி கட்டிக்கிட்டுத் திரியிறாரு.அதுதான் அவர் இப்படிப் படை திரட்ட ஆரம்பிச்சிருக்காரு."

"ஊஹும்" என்று இளங்கோபத்தோடு உறுமிக் கொண்டார் மைனர். .

“அண்ணாச்சி, பரம்பரையா வியாபாரம் பண்ணிப் பணக்காரனாயிருந்தா இந்த அற்ப ஆசையெல்லாம் தோணுமா?சண்டைக்கிமின்னாலே அவரும் தறிக்குழியிலே கிடந்து லொக்கடி லொக்கடின்னு நெஞ்சவர்தானே அண்ணாச்சி.”

"சரிதான்" என்று ஒருவார்த்தையைப் போட்டுவிட்டு ஏதோ யோசித்தார் மைனர்.

"அண்ணாச்சி, நீங்க எவ்வளவு காலமாகத் தர்மகர்த்தாவா இருக்கீஹ. இப்ப உங்களைத் தள்ளிட்டு அவர் வாரதுன்னா, அது நல்லாருக்கா? நம்ம குடும்ப கௌரவம் என்னாகிறது?”

"சுப்பையா!” என்று அடக்கமாகக் கூப்பிட்டார் . மைனர்; சுப்பையா ஆர்வத்தோடு கழுத்தை நீட்டினார்.

"இந்தா பாரு ஒண்ணும் நம்ம கையைவிட்டு மிஞ்சிப் போயிராது. இப்பவும் கைலாசத்துக்கு நம்ம தாதுலிங்க முதலியார்வாள் கிட்டேதான் லேவாதேவி. 'ஆசாமியை அந்தப் பக்கமா ஒரு இறுக்கு இறுக்கினாப் போச்சி!" என்றார் மைனர்.

"அதென்னமோ அண்ணாச்சி லேசிலே இதை விட்டுறக்கூடாது."

"உன்னைமாதிரி நாலுபேர் சொல்றாகளேன்னுதான் பார்க்க வேண்டியிருக்கு. இல்லேன்னா, இதிலே என்ன காசாபணமா? என்னமோதெய்வகாரியமேன்னுபார்த்தா, ஊர்க்காரன் சும்மா இருக்கானா?. எடுத்ததுக்கெல்லாம் பொல்லாப்பு இருந்தாலும் இந்த அருணாசலமுதலியாரை அப்படி ஒண்ணும் மடக்கிற முடியாது. ஆமா" என்று ஆணித்தரமாக அறைந்தார், மைனர் முதலியார்.

"நல்லாச் சொன்னிய, அண்ணாச்சி. பூடம் தெரியாம, சாமி ஆடுதானுக" என்று மைனரின் வஞ்சின மொழியைப் பாராட்டினார் சுப்பையா. பிறகு அவர் தமது இடத்தை விட்டு எழுந்திருந்தவாறே, "அப்ப நான் வரட்டுமா, அண்ணாச்சி?" என்று கேட்டார்.

"சரி" என்று நிர்விசாரமாகப் பதில் வந்தது. எனினும் சுப்பையா அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

"என்ன சுப்பையா?" என்று அர்த்த பாவத்தோடு கேட்டார் மைனர்.

"ஒண்ணுமில்லே அண்ணாச்சி நம்ம சின்னப் பயலுக்கு உடம்புக்கு முடியலெ. டாக்டர்கிட்டெ காட்டணும். கையிலெ ஒத்தச் சல்லி இல்லெ. அஞ்சு ரூவா இருந்தாக்கிடைக்குமா?" என்றுமென்றுவிழுங்கிக் கூறினார் சுப்பையா. மைனா முதலியார் மோவாயைத் தடவியவாறே முகட்டைப் பார்த்தார். பிறகு இரண்டு ரூபாய் நோட்டைப் பையிலிருந்து எடுத்து நீட்டியவாறே, "இந்தா, இதை வச்சிக்க" என்று கூறினார்.

சுப்பையாவின் வாயெல்லாம் பல்லாய்த் தெரிந்தது. கிடைத்தவரையில் லாபம் என்ற ஆத்ம திருப்தியோடு அந்த நோட்டை வாங்கிஇடுப்பில் சொருகிக்கொண்டு வாசலுக்கு வந்தார். வாசலில் கிடக்கும் நாய்க்குப் பயந்து அரவ மில்லாமல் நடை இறங்கினார்.

நல்ல வேளையாக வெள்ளை நிச்சிந்தையாகத் துங்கிக் கொண்டிருந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/002-028&oldid=1684057" இலிருந்து மீள்விக்கப்பட்டது