உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/007-028

விக்கிமூலம் இலிருந்து

7

கைலாசமுதலியார் கோயில் தர்மகர்த்தாவானபிறகு லோகநாயகி அம்மனுக்குயோககாலம் தொடங்கிவிட்டது.

ஏனெனில், மைனர் முதலியார்வாளின் காலத்தில் அம்மனுடைய நிலைமை பரிதாபகரமாயிருந்தது. அந்தக்காலத்தில், லோகநாயகி என்று அருமையான பெயர் படைத்த அந்தக்காவல் தெய்வத்துக்குக்கட்டிக்கொள்ள ஒரு நல்ல துணிகூடக் கிடையாது. உடுத்திய துணியைத் தவிர வேறு மாற்றுத் துணிக்குக்கூட அவளுக்கு விதியில்லை.  எண்ணெய்ப் பிசுக்கும் எண்ணற்ற கிழிசல்களும் நிறைந்த அந்த ஒற்றைத் துணி, கர்ணனோடு உடன் பிறந்த கவசம்போல், கழற்றவோ மாற்றவோ முடியாத நிலையில், அம்மனுக்கு மான சம்ரக்ஷணியாக உதவி வந்தது.இதுபோலவே, வருஷா வருஷம் மான்யம் வாங்கித் தொலைக்கும் கடனுக்காக, ஓதுவார் மூர்த்திகொண்டுவந்து. இவற்றும் வாய்க்கால் தண்ணீர் அபிஷேகத்தைத் தவிர, ஒரு எண்ணெய் முழுக்கு, பன்னீர் ஸ்நானம், சந்தனக் காப்பு என்ற விசேட சம்பிரமங்களும் அம்மனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஓதுவார் மூர்த்தியும் தம் வீட்டுச் செலவுக்காக நித்த நித்தம் கோயில் மடைப் பள்ளியில் சமைத்தெடுத்துச் செல்லும் வெள்ளைப் பொங்கலில் நாலைந்து பருக்கைகளுக்குக் குறைச்சலில்லாமல் அம்மனுக்குத் தூபம் காட்டி நிவேதனம் செய்து வந்ததால், தன்னைப் பட்டினி போடும் பாவத்தை ஊரார்மீதோ ஓதுவார் மூர்த்தி மீதோ சுமத்துவதற்கும் லோகநாயகிக்கு வழியில்லை. இந்தப் பருக்கைச் சோற்றைத் தவிர, அம்மனுக்குக்கொடைகூத்து என்ற கொண்டாட்டங்களோ படைப்புச்சோறு என்னும் புலால்விருந்தோ, பொங்கலோ, பூசையோ லபிக்கவில்லை. "சோறுகண்டமூளியார்சொல்?" என்ற கேட்காதகுறையாகத்தான் அம்மன் இருந்துவந்தாள். எனினும் காரில் எப்போதாவது காலரா, பெரிய அம்மை முதலிய தொத்து வியாதிகள் கொஞ்சம் தன்னிச்சையாக வேட்டையாடத் தொடங்கிவிட்டால், அம்மன் பாடும் வேட்டைதான், தெய்வகுத்தத்'துக்குப் பயந்து அம்மனைச் சாந்தி செய்வதற்காக ஊர் மக்கள் தலைக்கட்டுவரி வசூல்) செய்து பூப்படைப்பார்கள்; கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள்; விசேட மரியாதைகள் செய்வார்கள்.

கைலாச முதலியார் காலத்தில் இந்த நிலைமை மாறிவிட்டது

கைலாச முதலியார் தமது சொந்த நன்கொடையாக, அம்மனுக்கு நாலைந்து சேலைகளை வழங்கி, அவள்  மானத்தைக் காத்தார். அத்துடன் மாதாமாதம் கடைசிக் செவ்வாயன்று அம்மனுக்கு விசேட, அலங்காரங்களும் நைவேத்தியங்களும் பூசையும் பண்ணுவதற்கான ஏற்பாட்டைச் செய்து முடித்தார். கடைசி செவ்வாய்க் கிழமையன்று ஓதுவார் மூர்த்தியின் கைவண்ணத்தால் அம்மன் இனிமை ததும்பும் பேரழகு பெற்று விளங்குவாள். சந்தனக் காப்பிட்ட திருமுகத்தில் வெள்ளிக் கண்மலர்கள் ஒளிசிதற, நெற்றிக் குங்குமம் தகதகக்க, குருத்தோலை போல் விரிந்து அழகோடு இலங்கும் அரக்குச் சிவப்புச்சேலை அணி செய்ய லோகநாயகி வீற்றிருக்கும் திருக்கோலம், பக்தர்கள் கண்களுக்கு ஒரு பெரு விருந்து. மேலும், கைலாச முதலியார் தமது சொந்தக் கைங்கரியமாக, அம்மன் சந்நிதிக்கு மின்சார விளக்குகளும், போட்டு ஒளிபெறச் செய்திருந்தார். கோயிலின் முன் முகப்பிலே நிலவுக்குளுமை பரப்பும் நீண்ட குழல் மின் விளக்கில், 'திரு. கைலாச முதலியார் உபயம்' என்ற எழுத்துக்கள் ஒளிசெய்தன;அந்த விலாசத்தைகூட, அவர் வடிவேலு முதலியார் போன்ற தறிகாரர்களின் வற்புறுத்தலுக்காகத் தான் போட்டுக்கொள்ள அனுமதித்தாரே தவிர, மைனர் முதலியார் சொல்வது மாதிரி தற்பெருமைக்காகச் செய்து கொண்ட சுயவிளம்பரம் அல்ல. கைலாச முதலியார் பதவியேற்ற ஆறுமாச காலத்துக்குள்ளாகவே அவர் ஊரை ஒன்று திரட்டி அம்மனுக்கு மூன்றுநாள், கொடையையும் மேளதாளத்தோடு நடத்தி வைத்தார். அத்துடன் கொடையின் போது, வில்லுப்பாட்டு, கும்ப விளையாட்டு, கணியன்கூத்து முதலிய களியாட்டங்களையும் நடத்தி, அம்மனையும் ஊரையும் ஒருங்கே திருப்தி செய்து வைத்தார்.

கைலாச முதலியார் தர்மகர்த்தாவான பின்பு அம்மனுடைய நிலையில் மாறுதல் ஏற்பட்டது போலவே, அவரது நிலைமையிலும் மாறுதல் ஏற்பட்டது. ஆனால் அம்மனுக்கு ஏற்பட்டதோ ஏறுதசையில்; கைலாச முதலியாருக்கோ இறங்கு தசையில்... 

அதற்குக் காரணம்? அது ஒரு வரியில் சொல்லி முடிக்கக்கூடியதல்ல!

'என்னமோ அம்மன் சோதிக்கிறாள்!" என்று, 'கிரக சாரம் சரியில்லை, எட்டாமிடத்தை விட்டு சனி பகவான் இடம்பெயருகிறவரை இந்த இழுபறிதான்' என்றும், அவ்வப்போது கைலாச முதலியார் தமக்குத் தாமே கூறி ஆறுதல் தேட்டிக் கொண்ட போதிலும், அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு லோகநாயகி அம்மனையோ, செந்தூர் முருகனையோ, அட்டமத்துச்சனீசுவரனையோகுற்றம் கூற வழியில்லை. ஏனெனில், அந்தச் சிரமம் கைலாச முதலியாருக்கு மட்டும் வந்த சிரமம் அல்ல; கைத்தறித் தொழிலை நடத்தியும் நம்பியும் வந்த லட்சோப லட்ச மக்களுக்கும் ஏற்பட்ட பொது நெருக்கடி அது. ஆகஸ்ட் சுதந்திரம் தந்த 'சுயராஜ்யப் பரிசு'அது.

ஆனால், ஆகஸ்ட் சுதந்திரத்தின் அபிநவ கலி புருஷர்களின் 'அருமை பெருமைகளை' யெல்லாம் கைலாச முதலியாரோ, அவரைப் போன்ற சிறு வியாபாரிகளோ, வடிவேலு முதலியார் போன்ற தறிகாரர்களோ தெரிந்துகொள்ளவில்லை. எனவே தான் அவர்களுக்குத் தமது சிரமங்களுக்குரிய காரணம் புரியாத புதிராக இருந்தது. "என்னமோசுயராச்சியம் வந்துவிட்டது என்றார்கள். நம்ம நேருதான் பிரதம மந்திரி, நம்ம கொடிதான் பறக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், சுயராச்சியம் வந்த பிறகு மனுஷனுக்கு உள்ள சுகத்துக்கும்கூட அல்லவா கொள்ளை வந்துவிட்டது. இதுதான் சுயராச்சியமா? நல்ல சுயராச்சியம்!" என்றுதான் அவர்கள் அதிசயப்பட்டார்கள்; சலித்துக் கொண்டார்கள்...

'அமெரிக்கப் பஞ்சின் விலையேற்றம் என் மென்னியைப் பிடிக்கிறது! நான் மில்லை மூடிவிடப் போகிறேன்' என்று பம்மாத்துப் பண்ணிய விக்கிரமசிங்கபுர வெள்ளையனைக் காங்கிரஸ் ஆட்சியின் கருணாமூர்த்திகள்  தாங்கித் தடுத்து, ஒரு கோடி ரூபாயை மானியமாகத் தஷிணை வைத்து வாழி பாடி வாழ்த்திய விவரத்தையும் அந்த அப்பாவி மக்கள் தெரிந்து கொள்ளவில்லை.

"என்னமோயுத்தகாலத்தில் ஒருதட்டுத்தட்டினோம் யுத்தம் முடிந்த பிறகும் அதே நிலைமை இருக்குமா?" என்று ஒரு சிலர் புத்திக்குத் தட்டுப்பட்ட அளவில் சமாதானம் தேடிக்கொண்ட போதிலும்கூட, பிரத்தியட்சமான வியாபார நிலைமை அந்தச் சமாதானத்தையும் கூடத் தகர்த்து வந்தது. 'யுத்த காலத்தில் உள்ள நிலைமைதான் இல்லாது போகட்டும் யுத்தத்துக்கு முந்திய நிலைமையாவது இருக்க வேண்டாமா? இப்போது நிலைமை படுகேவலமாகவல்லா இருக்கிறது?" என்று சிந்திக்கும் வேளையில்தான் அவர்கள் எந்தவிதச் சமாதானமும் காணமுடியாமல் தவித்தார்கள்.

யுத்தத்துக்கு முன்போ? யுத்தத்துக்கு முன்பு இந்த நாட்டின் கைத்தறித் துணியில் கிட்டத்தட்டப் பேர்பாதி அளவு அக்கரைச் சீமைகளுக்கு ஏற்றுமதியாகி வந்தது. அக்கரைச்சீமைகளானரங்கனிலும் சிங்கப்பூரிலும் இந்திய நாட்டுக் கைத்தறித் துணிக்கு நல்ல கிராக்கி யுத்த காலத்தில் இந்தச் சீமைகளுக்கு ஏற்றுமதி அதிகரித்ததோடு மட்டுமல்ல, உள் நாட்டிலும் கைத்தறித் துணிக்கு நல்ல கிராக்கி; நல்ல விலை. கைத்தறி நெசவாளருக்கும் வியாபாரிகளுக்கும் இதனால் சக்கைப்போடு; கவலையே கிடையாது. ஆனால், காருண்யம் மிகுந்த காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு, வெளிநாட்டு ஏற்றுமதிக்கு 'அட்டமத்துச் சனி' பிடித்தது; ஏற்றுமதி தடை செய்யப்பட்டது; கொஞ்ச நஞ்சம் ஏற்றுமதியாகும் துணிக்கும் ஸ்பெஷல் வரி விதிக்கப்பட்டது. உள் நாட்டிலோ? உள் நாட்டில் நாளுக்கு நாள் மக்களுடையவரும்படிசுருங்கியது; யுத்தகாலத்தைப்போல் முரமுரக்கும் புது நோட்டுக்கள் காணப்படவில்லை. ஆனால், பொருள்களின் விலைவாசிகள் மட்டும் கொம்பேறி மூக்கனைப்போல் உச்சிக்கொம்பை விட்டு இறங்கவே யில்லை. எட்டாத பழத்துக்குச் கொட்டாவி விடுவதுதான் நாட்டு மக்களின் நிலைமையாகி விட்டது.

அமெரிக்க நாட்டிலிருந்து அதிக விலைக்குப் பஞ்சு வாங்குவதால் நூல் விலை ஏற்றம்; நூல் விலை ஏற்றத்தால் கைத்தறித் துணிகளின் அடக்க விலை ஏற்றம்; விலை ஏற்றத்தை எட்டிப் பிடிக்க முடியாத நாட்டு மக்களின் பொருளாதார நெருக்கடி பொருளாதார நெருக்கடியால் வியாபார மந்தம்; வியாபார மந்தத்தால் கைத்தறித் துணித் தேக்கம்; கைத்தறி துணித்தேக்கத்தால் உற்பத்தி முடக்கம்; உற்பத்திமுடக்கத்தால், நெசவாளர் பிழைப்புக்கு ஆபத்து;பிழைப்பற்றுப் போனால்...

இப்படியெல்லாம் தர்க்கஞானத்தோடு உண்மையைத் தெரிந்து தெளிவு பெற இயலாத காரணத்தால், கைலாச முதலியார் முருகப் பெருமானின் திருவருளையும், லோகநாயகியம்மையின் கருணா கடாட்சத்தையும் நம்பி, விடிவுகாலத்தின் உதயரேகையை எதிர்பார்த்துக்காலத்தை ஓட்டி வந்தார். சிரமங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரது தெய்வபக்தியும் மேன்மேலும் உரம் பெற்றுவைரம்பாய்ந்து வளரத் தொடங்கியது. சுருங்கச் சொன்னால் கவலையை மறக்க உதவும் கஞ்சா போதையைப்போல் முருக நாமஸ்மரணை அவருக்கு உதவிவந்தது. .

அன்று காலையில் கைலாச முதலியார் தமது பூஜை அறையில் வழக்கத்துக்கு மீறி, அதிக நேரமாகப் பூஜையில் ஈடுபட்டிருந்தார், அவரது தர்மபத்தினி தங்கம்மாள். தோசையையெல்லாம் சுட்டெடுத்து வைத்துவிட்டு, புருஷனுடைய வரவு நோக்கி வெளியே காத்திருந்தாள். ஆறுமுகம் வெளிப்புறத்திலுள்ள நடைகூடத்தில் அமர்ந்து, அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு' என்ற குறளைக் குறுகத் குறித்துப் பதம் பிரித்துப் பொருள் கூறி வாய்வலிக்க மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.  பூஜை அறையை விட்டு வெளியே வந்த கைலாச முதலியார் வந்ததும் வராததுமாய் ஆறு முகத்தை நோக்கித் திரும்பினார்.

"ஏண்டா ஆறுமுகம், கொஞ்சம் மெள்ளப் படிச்சா என்னடா? நீ படிக்கிறது எட்டு வீட்டுக்குக் கேக்கணுமா?" என்று கண்டிப்பும் அன்பும் கலந்த குரலில் கடிந்து கொண்டார். ஒரு வேளை அவன் போட்ட சத்தம் பூஜையிலே அமர்ந்திருந்த கைலாச முதலியாரின் காதில் அசரீரி மாதிரி ஒலித்ததோ, என்னவோ?

கைலாச முதலியாரின் சண்டனத்துக்குப் பின் ஆறுமுகம் பாட்டை மனத்துக்குள்ளேயே படிக்கத் தொடங்கிவிட்டான். கைலாச முதலியார் நடையிலிருந்த திருநீற்றுக் கப்பரையிலிருந்து ஒரு விரல் திருநீற்றை எடுத்து நெற்றியிலும் உச்சியிலும் வாயிலும் இட்டுவிட்டு, 'முருகா' என்று இலைமுன் உட்கார்ந்தார். சாப்பிட்டுவிட்டுக் கையைக் கழுவும்போது, "இருளப்பன் கோனாரை எங்கே? இன்னம் வரலியா?"என்று மனைவியை நோக்கிக் கேட்டார்.

"நீங்கதானே எங்கேயோ போயிட்டு வரச்சொன்னீக"' என்றாள் தங்கம்,

கைலாசமுதலியாருக்கு அப்போதுதான் தமதுஞாபக மறதியைப் பற்றிய உணர்வு வந்தது. "ஆமா ஆமா. மறந்தே போச்சு” என்று தமக்குத்தாமே கூறிக்கொண்டு கூடத்துக்கு வந்தார்.

தன் புருஷனிடம் இதுநாள்வரை இல்லாத ஞாபக மறதியை உணர்ந்த தங்கம்மாள், 'என்ன கவலையோ? எல்லாம் அவுஹளுக்கு வரவர அயர்த்து மறந்து போவுது. கேட்டாலும் சொல்லுவாஹளா?” என்று மனத்துக்குள்ளாகவே சிந்தித்து, அந்தச் சிந்தனையின் பாரத்தை ஒரு நீண்ட பெருமூச்சின் மூலம் இறக்கி வைத்தாள். 

வெற்றிலையைச் சுகமாக மென்று கொண்டு, உள்ளங்கையில் காய்ந்து உலர்ந்துபோன தூள் புகையிலையை வைத்துக் கசக்கியவாறே, கைலாச முதலியார் முன் கட்டிலுள்ள கடைக்கு வந்து பட்டறைப்பலகையில் உட்கார்ந்தார்; புகையிலையை அண்ணாந்து வாயிலிட்டு அதுக்கிக் கொண்டார்.

'என்ன கணக்குப்பிள்ளே தறிகாரங்கள்ளாம் வந்திருந்தாங்களே, கொள் முதல் சரக்கையெல்லாம் சரிபார்த்து, சிட்டையிலே பதிஞ்சாச்சா?"என்று கேட்டார்.

"பதிஞ்சாச்சு. முதலாளி" என்று பவ்வியத்தோடு கூறினார் கடைக்கணக்கப்பிள்ளை.

"சரி, விற்பனை வரி ஆபீசிலேயிருந்து கணக்கு வகை தொகையோட வரச்சொல்லி நோட்டீசு வந்துதே. போக வேண்டாமா?"

"போகணும், முதலாளி"

கைலாச முதலியார் பெருமூச்சுவிட்டார்.

"விற்பனை குறைஞ்சி போச்சுன்னு உண்மையைச் சொன்னா நம்புறாங்களா? கணக்கைக் கொண்டாடான்னு கழுத்தை அறுக்கிறது. பணக்காரன் ஆயிரமாயிரமாச் சுருட்டி மடக்கிக்கிட்டு, கள்ளக் கணக்குக் காட்டினாலும், அவன் முன்னால் ஆமாஞ்சாமி'போட்டுட்டு கையெழுத்து போட்டுப்பிடுதாங்க.. ஹும். இது நல்லவனுக்குக் காலமில்லை!"

அவர் மீண்டும் ஒருமுறை பெருமூச்செறிந்தார்.

"ஆமா முதலாளி, பணமின்னா பிணமும் வாய் திறக்கும்னு நம் பெரியவங்க நல்லாச் சொல்லி வச்சாங்க. பணக்காரன்னா_"

கணக்கப்பிள்ளையின் பேச்சை இடமறித்து வெட்டித் தொலைத்தது வாசலில் வந்து நின்ற கார் சப்தம், கார் நின்றதைத் தொடர்ந்து கதவைத் திறந்து மூடும் சப்தமும் கேட்டது.

தாதுலிங்கமுதலியார் உள்ளேவந்தார்,

தாதுலிங்க முதலியாரைக் கண்டதும், கணக்கப் பிள்ளை மரியாதையோடு எழுந்து நின்று கும்பிடு போட்டார், கைலாச முதலியாரும் இருப்பிடத்தை விட்டு இறங்கியவாறே, அவரை வரவேற்றார்.

"வாங்க, வாங்க, ஏது திடீருன்னு என்று கேட்டு விட்டு, கணக்கப்பிள்ளையிடம் திரும்பி, "என்ன கணக்கப்பிள்ளே, அந்த வெத்திலைப் பெட்டியை எடுத்துக்கிட்டு வாரும்" என்று உத்தரவிட்டார்.

தாதுலிங்கமுதலியார்கூடத்தில் கிடந்தநாற்காலியில் அமர்ந்து கொண்டார்; உள்ளே சென்ற கணக்கப்பிள்ளை வெற்றிலைப் பெட்டியை ஒருபெஞ்சை இழுத்துப்போட்டு அருகில் வைத்தார்.

தகவல் அறிந்து வெளியே வந்த தங்கம்மாள் வாசல் நடையின் நிலையை ஒட்டி நின்றவாறே, அண்ணாச்சி வாங்க" என்று வரவேற்றாள்.

"ஆமம்மா" என்று மெல்லிய குரலில் பதிலளித்தார் பெரிய முதலாளி.

"ஏளா, தங்கம் அவுகளுக்குக் காப்பி கொண்டு வந்து கொடு" என்று மனைவியிடம் உத்தரவிட்டார் கைலாச முதலியார்.

"காப்பியா?" பெரிய முதலாளி வாயெல்லாம் பல்லாய்த் தெரிய லேசாகச் சிரித்தார். "காப்பி கீப்பி ஒண்ணும் வேண்டாம். காப்பியே சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் உத்தரவு, 'ஸுகரே' சேத்துக்கிடக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்" என்று சொன்னார். தாதுலிங்க முதலியாரின் பெரிய மனுஷத்துவத்தை அவரது பியூக் காரும், பணமும் மனுஷத்தனத்துக்குக்குரியதான் 'டயபெட்டீஸ்' என்னும் அதிநீரிழிவு வியாதியும் ஊர்ஜிதப்படுத்தியது. எனவேதான் 'ஸுகரே' கூடாது என்ற டாக்டரின் உத்தரவைக் கூறிக் கொள்வதில் அவர் உள்ளூரப் பெருமைப்பட்டுக் கொண்டார்,

வாசல் நடையில் நின்ற தங்கம்மாள் இந்த ரகசியங்களையெல்லாம் அறியாதவளாய், "வாசல் தேடி வந்துட்டிய தொண்டையை நனைக்காமல் போறதாவது? பால் சுடவச்சிக் கொண்டாறேன்"

என்று கூறியவாறு பதிலை எதிர்பாராமலே உள்ளே சென்றாள்,

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்" என்றார் முதலாளி

"அப்படிச் சொல்லப்படுமா? இது உங்க வீடு; உங்க சொத்து" என்றார் கைலாச முதலியார்.

தாதுலிங்க முதலியார் சில விநாடிகள் ஒன்றும் பேசாதிருந்தார். பிறகு கைலாச முதலியாரைப் பார்த்து, "உங்கள்ட்டெ ஒருவிசயமாப் பேசணும்னுவந்தேன்" என்று கூறியவாறே கணக்கப்பிள்ளையைப் பார்த்தார்.

குறிப்பறிந்த கைலாச முதலியார் கணக்கப்பிள்ளை நோக்கி, கணக்கப்புள்ளே, கொஞ்சம் வெளியே போயிட்டு வாரும்" என்றார். கணக்கப்பிள்ளையும் பலகையை விட்டு எழுந்து வெளியே சென்றார்.

தாதுலிங்க முதலியார் தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்டார்.

"உங்கள்ட்ட அந்தப் பழைய பாக்கி விசயமா ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன் மாசமும் தான் என்ன ஆச்சு?"

"அதுக்கென்ன? என். பணம் ஓடியா போவுது?" என்பார் கைலாச முதலியார்.  "அதுக்குச் சொல்லலே. நாள் ஆக ஆக அசலும் வட்டியும் ஏறிக்கிட்டேதானே போகுது. உங்களுக்கே தெரியாதா? ஒரு வழியா அதை அடைச்சிட்டா ரெண்டு பேருக்கும் நல்லது."

"அடைக்காமலா இருக்கப் போறேன், இப்போ . நிலவரம் நீங்க தெரியாததா? கொஞ்சம் போகட்டும்."

"நிலவரத்தைப்பார்த்தாமுடியுமா? அலை எப்பஓயும், தலை எப்பமுழுகன்ன கதைதான்.உங்கள்ட்டேகண்டிச்சும் சொல்லக்கூடாது. தாய் பிள்ளையானாலும் வாய் வயிறு வேறெதானே. அப்படியில்லாட்டா, வியாபாரம் நடக்குமா. நீங்க எப்படியும் இந்த மாசக் கடேசிக்குள்ளே ஒரு வழி பண்ணித்தான் ஆகணும்"

"நீங்களே இப்படிச் சொன்னா? எல்லாம் இந்தமாசம் பொறுத்துக்கிடுங்க அப்புறம் நானே வந்து தகவல் சொல்கிறேன்."

"தகவல் என்ன, பணத்தோடே வர்ரதுக்குப் பாருங்க: அப்புறம் என்னைக் குறை சொல்லிப் புண்ணியமில்லே."

இதற்குள் தங்கம்மாள் ஒரு வெள்ளித் தம்ளரில் பசும்பாலைக் கொண்டுவந்து தாதுலிங்க முதலியாரின் எதிரே வைத்தாள்.

"சீனி போடலியே?" என்று கேட்டுக் கொண்டே பாலைக் குடித்து முடித்தார், தாதுலிங்க முதலியார். பிறகு இடத்தைவிட்டுஎழுந்திருந்தவாறே, கைலாசமுதலியாரைப் பார்த்து "அப்ப நான் வரட்டுமா? நான் சொன்னதை மறந்துடாதீங்க" என்று கூறிவிட்டு, தங்கம்மாளை நோக்கி "வரட்டுமாம்மா"என்றார்.

"சரி, அண்ணாச்சி' என்றாள் தங்கம்.

சில விநாடிகளில் வாசலில் நின்ற பியூக் கார் பயங்கரமாக ஹூங்காரமிட்டு உறுமி எச்சரித்து விட்டுப் பறந்து சென்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/007-028&oldid=1684043" இலிருந்து மீள்விக்கப்பட்டது