உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/012-028

விக்கிமூலம் இலிருந்து

12

"கைத்தறித் துணியை ஆதரியுங்கள்!"

கைத்தறித் துணியை மக்கள் ஆதரிக்க முன்வந்தால் கலி நீங்கி விடும் என்று 'கனம் பிரமுகர்கள்' பல்லவி பாடினார்கள்; மகாத்மா காந்தியடிகளின் பொன்மொழி களைத் தேடிப் பிடித்துச் சொல்லி மகாத்மியங்கள் பாடி னார்கள்; 'ஆதரவு அளியுங்கள்!' என்று கோஷ்டிகான வர்ஷட, பொழிந்தார்கள். பத்திரிகைகள் இந்த ஞானோப தேச தத்துவ நுட்பத்தை விளக்கி, தலையங்கங்கள் எழுதின; 'வள்ளுவர் வழிவந்த தொழிலை வாட விடலாமோ' என்று வக்கணைகள் பேசின; மக்களின் சுதேசிய பக்தியைத் தட்டி எழுப்ப முயன்றன. ஒரு சில திடீர் அபிமானிகள் கைத்தறித் துணி மீது தமக்கு ஏற்பட்ட புதிய மோகத்தைப் புலப்படுத்துவதற்காக, அத்தாட்சிபெற்றகதரைக்கூடத் துறந்துவிட்டு, கைத்தறி உடைகள் தரித்து மினுக்கித் திரிந்தார்கள்; சினிமாக் கொட்டகைகளில் சிலைடுகள் போடப்பட்டன; கலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன; தேசியப் பொருட்காட்சிக்களிலும் மாநாட்டுப்பந்தல்களிலும்கைத்தறி 'எம்போரிய'ங் களைத்திறந்துவைத்துச் சொற்பொழிவாற்றினார்கள்; அந்த எம்போரியங்களின் முன்னால் எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்துக் கையேந்தி நிற்கும் ஒரு கைத்தறி நெச வாளியின் குடும்பத்தை வர்ண சித்திரமாகத் தீட்டி வைத்து. இவர்களை ஆதரியுங்கள்' என்று ஜிகினா தூவிய பொன்னெழுத்துக்களைப் பொறித்து வைத்து, பொது மக்களின் அனுதாபத்தைக் கவர முயன்றார்கள்; மத்திய சர்க்கார் மந்திரியும், மாகாண சர்க்கார் மந்திரியும் கரைபோட்ட வேட்டிகளைக் கைத்தறிக்கு ஒதுக்குவதா வேண்டாமா என்று காரசாரமான வாதப்பிரதிவாதங்களை நடத்தி, கைத்தறி பிரச்னை மீது தமக்குள்ள அக்கறையை நாட்டு மக்கள் அறிய நாடகமாடிக்காட்டினார்கள்_

ஆனால்.?

இந்தத் திருப்பணிகளால் நிலைமை. மாறி விடவில்லை; இவற்றால் உறங்கிக் கொண்டிருந்த கைத்தறி களெல்லாம் உசும்பியெழுந்து இராப்பகலாய் கடகடத்து வேலை செய்யவில்லை. இதற்குப் பிறகும், கைத்தறி நெசவாளர்கள் பிழைத்துக் கிடந்தார்கள் என்றால், வேலை செய்து கூலி பெற்றுப் பிழைக்கவில்லை. ஆனால் வீடு வாசலை, நிலபுலத்தைவிற்றுத்தான் பிழைத்தார்கள்; பண்ட பாத்திரங்களை, நகை நட்டுக்களை அடகுவைத்தும், விற்றும் பிழைத்தார்கள்; தாலியை விற்றுப் பிழைத்தார்கள்; பிள்ளைகளை விலைகூவிப் பிழைத்தார்கள்; பிச்சை யெடுத்துப் பிழைத்தார்கள்: 'மானத்தை மரியாதையை, கற்பை, கண்ணியத்தை விற்றுத்தான் பிழைத்தார்கள்....

இதனால், நாளாரம்பத்தில் சைத்தறிப் பிரச்னை மூன்றுலகையும் ஈரடியால் அளந்து முடித்த வாமன அவதாரியைப் போல், விஸ்வரூபம் கொண்டு கைத்தறி நெசவாளிகளை, அவர்களைச் சார்ந்து வாழும் சிறு வியாபாரிகளை, இந்த நாட்டு மக்களின் பரம்பரை நலன்களை, உயிர்களைப் பலி கேட்டு நின்றது...

"ஏன், ஏன்?" என்று நெசவாளர்கள் ஏங்கினார்கள்; வியாபாரிகள் கவலை கொண்டார்கள்; பொதுமக்கள் சிந்தித்துப் பார்த்தார்கள்....

கைலாச முதலியாரும் சிந்தித்தார்; கவலை கொண்டார்.

ஆனால், தமது கஷ்டத்தின் காரணத்தைப் பற்றிய சிந்தனையோ அவருக்கு மரத்துத்தடித்துப்போய்விட்டது, இப்போது அவருக்கு இருந்தது ஒரே ஒரு கவலைதான். தொழில் நெருக்கடியிலிருந்து எப்படி மீளுவது என்பதல்ல அந்தக் கவலை; கடன்காரர் தொல்லையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதுதான் அவரது கவலை; சிந்தனை. இந்தக் கவலையால், அவருக்கு இரவெல்லாம் சிவராத்திரி ஆயிற்று; தூக்கத்துக்குக் கூட அவர்மீது கருணை இல்லை. இரவு கழிந்து பகற்பொழுது வந்துவிட்டாலோ, ‘கடன்காரர்கள் வந்து நிற்பார்களே' என்ற கவலை ஒவ்வொரு கணமும் நச்சரித்துப் பயமுறுத்திப் பிடுங்கிக் கொண்டிருந்தது.

அன்றிரவு கைலாச முதலியாருக்குக் கண்ணே அயர வில்லை; படுக்கையில் கிடந்து நிலை கொள்ளாமல் அப்படியும் இப்படியும் புரண்டுப் புரண்டு புழுங்கித் தவித்துக்கொண்டிருந்தார்.அவரதுமனத்திலோஎண்ணற்ற சிந்தனைகள் முள்வாங்கிகளைப்போல் குத்திக் குடைந்தன; துன்புறுத்தின.

"பாவி! இந்தத் தாதுலிங்க முதலி என் குடியையே கெடுத்து விட்டானே.சண்டைக் காலத்திலே, இவன் கள்ள மார்க்கெட்டில் லட்ச லட்சமாய்ச் சம்பாதிக்கிறதுக்கு நான் தானே ஒத்தாசையா இருந்தேன்.அந்த நன்றி விசுவாசத்தைக் கூட மறந்துட்டானே. வியாபாரம் மந்தமாயிருக்கிற நேரம் பார்த்து மென்னியைப் பிடிச்சுட்டானே. . ரொக்கக் கடனுக்கும் நூல் வகை பாக்கிக்கும் ஒத்தைத் தேதியிலே பணத்தைக் குடுன்னு உயிரை எடுத்துட்டானே. துரோகி! நன்றி கெட்ட துரோகி_!"

அவரையும் அறியாமல் அவர் வாய் துரோகி' என்று முனகி ஓய்ந்தது.

தூரத்திலுள்ள போலீஸ் சாவடியில் இரவு மணி இரண்டு அடிக்கும் சேகண்டியோசை உள்வாங்கி மங்கி ஒலித்தது.

"பாவி! அவன் செய்த வஞ்சகத்தை நினைத்தால்? அன்னிக்கி அவன் எழவுக்கு ரூபாய் மூவாயிரத்தையும் நகைகளையும் அழுது தொலைச்சேன். அத்தோடு விட்டானா? ஜவுளி நூல்கட்டுப் பாக்கி ஆறாயிரத்துச் சொச்சத்துக்கும் வக்கீலை வச்சி நோட்டீஸ் வேறே குடுத்து, என் மானத்தை வாங்கினான். அந்த ஈவிரக்கமற்றவனுக்கு என் ஜவுளியையெல்லாம் குறைஞ்ச விலைக்கு வித்து அடைச்சேன் அவன் விளங்குவானா? .

தூக்கத்தில் அவரது மகன் ஆறுமுகம் ஏதோ முனகிய புலம்புவது காதில் விழுந்தது; அவரது மனைவி, "என்னடா ஆறுமுகம்? தூங்கு" என்று தூக்கக் கலக்கத்தில் கூறிவிட்டு அவனைத்தட்டிக் கொடுப்பதும் காதில் விழுந்தது.

கைலாச முதலியார் கண்களை இறுக மூடிப் பார்த்தார். ஆனால் அந்தக் கண்களோ மறுகணமே கொட்டக் கொட்டத்திறந்து கொண்டன. .

"அவனோடே போச்சா? ஒண்ணா, 'ரெண்டா_? அந்தத் தாதுலிங்க முதலிதான் இத்த மைனரைத் தூண்டிவிட்டானா? இல்லை. இந்த மைனர் தான் அவனைத் தூண்டிவிட்டானா? இவனுமில்லா சமயம் பார்த்து நெருக்குறான்; இவன் பாக்கிக்கு வீட்டை அடமானம் எழுதிக் கொடுத்தும், கொஞ்சம்கூட இரக்கம் காட்ட மாட்டேன்கிறானே. இந்தக் கிராதகன் கிட்டேயா நான் மாட்டிக்கிடணும்".

கைலாச முதலியாரின் சிந்தனை வேறு திசையில் திரிந்தது.

"தாதுலிங்க முதலியார் பாக்கியை அடைச்சதில்லா, தப்பாப் போச்சி? அதைக் கண்டுக்கிட்டு அத்தனை பேருமில்லா சுத்தி வளையுதான். இந்தக் தொல்லை யிலிருந்து எப்படி மீளப் போகிறேன்? அந்தக் கல்லிடைக் குறிச்சிவியாபாரி செஞ்ச மாதிரி, நாமும் கோர்ட்டிலே ஐபி. போட்டுட்டா என்ன? ஆனா, அவன் சொத்தையெல்லாம் பெண்டாட்டி பேருக்கு மாத்தி வச்சிட்டுல்லே அப்படிச் செய்தான். எனக்கு அதுக்குக்கூட நாதியில்லையே, வீடு, நிலம், நகை எல்லாம் போச்சி, பெருங்காயம் இருந்தடப்பா மாதிரி, வெளி வேசத்திலே காலம் தள்ளுதேன் அப்படியும் செய்யப்போமா? சேச்சே? அப்புறம் மானஸ்தனா வாழ வேண்டாம்? வாரானுக்கு நாமத்தை சாத்திட்டு மான வெட்கம் இல்லாமல் தலை நிமிர்ந்து திரியுறதா_? ஆனால், இந்த உலகத்திலே எந்தப் பணக்காரன் இந்த மாதிரி மானாபிமானத்துக்கு அஞ்சுதான்? இந்தத் தாதுலிங்க முதலிமட்டும் என்னவாம்? தேயிலைத் தோட்டத்திலே இவன் அந்த ஏழை சனங்களின் வாயிலே வயத்திலே அடிச்சித்தானே சம்பாதிக்கிறான்....!"

கைவாச முதலியார். மீண்டும் புரண்டு படுத்தார். ஒரு ஆழ்ந்த பெருமூச்சு அவரது மனப்பாரத்தைக் குறைக்க முயன்று தோல்வி கண்டது. எங்கோ ஒரு பல்லி இடைவிடாது சப்தித்துக் கொண்டிருந்தது.

சேகண்டி மணியோசை நான்கு முறை ஒலித்து அடங்கியது. பக்கத்து வண்டிப் பேட்டைகளிலிருந்து அயலூருக்குப் புறப்பட்டுச் செல்லும் பார வண்டிகளின் மணியோசை இருளினூடே கலகலத்துத் தேய்ந்தது.

கைலாச முதலியார் எழுந்து சென்று ஒரு மடக்குத் தண்ணீர் குடித்து விட்டு வந்து படுத்தார்.

'என் பெண்டு பிள்ளைகளை யெல்லாம் நான் எப்படிக் காப்பாற்றப் போகிறேன்? என் வாழ்வில் தோன்றிய பாக்கிய சுகங்களெல்லாம் இப்படி மின்னல் மாதிரியாகவா வெட்டி மறைய வேண்டும்? முருகா! நான் மேல்நிலைக்கு வராமல், பழைய பஞ்சைப் பரதேசியாகவே இருந்திருக்கக் கூடாதா? இவ்வளவு நாளும் கௌரவமாய் வாழ்த்துவிட்டு, இனிமேலா இந்த அவக்கேடு. எங்காவது ஓடிப்போய்விடலாமா? எங்கே ஓடுவது? என் குழந்தைகளை நிராதரவாய் விட்டுவிட்டா?_ வேறு வழி?_முருகா!_ லோகநாயகி என்னை ஏனம்மா சோதிக்கிறாய்? உனக்கு நான் என்ன குறை செய்தேன்?_செந்தில் ஆண்டவா! உன் திருவிளையாடலையெல்லாம் தாங்க, இந்த ஏழையிடம் சக்தி கிடையாது. என்னை விட்டுவிடு. தயை செய்து என்னைக் காப்பாற்று முருகா_!"

கைலாச முதலியார் தம்மை மறந்தவராய் 'முருகா முருகா!' என்று வாய்விட்டுப் புலம்பிக் கொண்டார். பிறகு அந்த முருகனின் திருவுருவத்தையே மனக்கண் முன்னால் கற்பனை சொரூபமாக நிலை நிறுத்தி, முருக நாம் ஸ்மரணையின் மூலம் மனத்தை ஒருநிலைப்படுத்தித் தூங்க முயன்றார்; ஆனால், அந்த முருகனுடைய சன்னிதியிலும் ஏகாம்பர முதலியாரின் இனம் தெரியாத உருவம்தான் அடிக்கொருதரம் இடையிட்டு மறித்துக் கொண்டிருந்தது.

அருணோதப்பொழுதில் எங்கோபக்கத்து வீட்டில் தெருவாசல் பெருக்கி, தண்ணீர் தெளிக்கும் சப்தம் கேட்கும் சமயத்தில்தான் அவருக்குக் கண்கள் லேசாகக் கிறங்கின; சிறிது தேரத்தில் அவர் தூங்கிவிட்டார்.

காலை எட்டு மணி சுமாருக்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கைலாச முதலியாரை, அவரது மனைவி தங்கம்மாள் உசுப்பி எழுப்பினாள்.

"உங்களைத்தானே!"

எதிர்பாராதவிதமாக, வழக்கத்துக்கு விரோதமாக, தம் மனைவிதம்மைத்தட்டி எழுப்புவதை உணர்ந்த அவர் திடுக்கிட்டு விழித்தெழுந்தார். கண்களைக் கசக்கிக் கொண்டே, ”எவனாவது வந்திருக்கானா?"என்று படபடத்துக் கேட்டார்.

"ஒண்ணுமில்லே. நம்ம் ஆறுமுகத்துக்கு உடம்புக்குச் சரியில்லே. காப்பித் தண்ணிகூட வேண்டாமின்னுட்டான் காய்ச்சலானா பொரிச்சுத் தட்டுது. கிடையாகக் கிடக்கிறான். ராத்திரியே அவனுக்கு மேல் காஞ்சிது; உங்களை எழுப்பிக் காட்டலாமின்னு நினைச்சேன். தூக்கத்திலே எழுப்ப வேண்டாமின்னு இருந்திட்டேன்" என்று சொல்லி முடித்தாள் தங்கம்.

'ராத்திரி தூங்கவா செய்தேன்?' என்று உள்ளூர முனகிக் கொண்டது கைலாச முதலியாரின் மனம். -

"சரி, மணியை அனுப்பி, உடனே டாக்டரைக் கூட்டிக் கொண்டாந்து காட்டச் சொல்லு. ஆறுமுகம் எங்கே?" என்று கேட்டவாறே கட்டிலைவிட்டு இறங்கி வந்தார் கைலாச முதலியார்,

ஆறுமுகத்திடம் போய் அவனது மார்பைத் தொட்டுப் பார்த்தார். தங்கம் சொன்னது போல் நெஞ்சில் தீப்பொறி பறக்காத குறையாகத்தான் சுட்டுக் கொண்டிருந்தது. கைலாச முதலியார் “முருகா' என்று முனகியவாறே எழுந்திருந்தார். புறவாசலுக்குச் செல்லுமுன் மணியைக் கூப்பிட்டு, டாக்டரை அழைத்துவரச் சொல்லி அனுப்பி வைத்தார்.

மணிடாக்டரை அழைத்துவந்தான்.

"டாக்டர். இவர்தான் என் தந்தை" என்று கைலாச முதலியாரை' டாக்டர் நடராஜனிடம் அறிமுகப்படுத்தி வைத்தான் மணி.

டாக்டர் வணக்கத்தோடு மரியாதை காட்டிக் கொண்டார். பிறகு ஆறுமுகத்தைப் பரிசோதித்துப் பார்த்தார்; வழக்கமான கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். கைலாசமுதலியாரும் தங்கம்மாளும் டாக்டர் என்ன சொல்லப் போகிறாரோ என்று ஆவலுடனும், ஆதங்கத்துடனும் நின்று கொண்டிருந்தனர்.

ஸ்டெத்தாஸ்கோப்பையும், தெர்மாமீட்டரையும் தமது தோல் பைக்குள் வைத்து மூடியவாறே டாக்டர் மணியை நோக்கி ஆங்கிலத்தில் சொன்னார்:

"மிஸ்டர் மணி, இது டைபாய்ட் ஜுரம் என்றே நான் நம்புகிறேன். ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும். டிஸ்பென்சரிக்கு ஆள் அனுப்புங்கள், மருந்து தருகிறேன்." பிறகு அவர் கைலாசமுதலியாரிடம் திரும்பி, "ஒன்றும் பயமில்லை. ஆரஞ்சுப்பழச் சாறும், குளுகோசும்கொடுத்து வாருங்கள். நான் சாயந்திரம் வந்து பார்க்கிறேன். வரட்டுமா?" என்று கூறி வணங்கி விடைபெற்றுக் கொண்டு வெளியேறினார் டாக்டர்.

மணி அவரைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பி வந்தான்.

"என்னப்பா மணி, டாக்டர் உங்கிட்டே என்ன சொன்னார்?"என்று ஆவலோடு கேட்டாள் தங்கம்மாள்.

மணிவிஷயத்தைச் சொன்னான்,

"என்ன டைபாய்டா?.."

கைலாச முதலியார் அப்படியே தாக்குண்டு நின்றார், அவர் கண்களிலே அவரையும் அறியாமல் கண்ணீர் துளித்தது; அந்தக் கண்ணீர்த் திரைக்கு அப்பால் அந்த இனம் தெரியாத ஏகாம்பர முதலியாரின் உருவெளித் தோற்றம் பயமுறுத்துவது போல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/012-028&oldid=1684120" இலிருந்து மீள்விக்கப்பட்டது