உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/020-028

விக்கிமூலம் இலிருந்து

20

செங்கோட்டைக்குச் செல்லும் பாஸஞ்சர் ரயில் அம்பாசமுத்திரம் ஸ்டேஷனில் தாகம் தீரத் தண்ணீர் குடித்துவிட்டு அப்போதுதான் கிளம்பிச்சென்றது.

ரயில் கிளம்பிச் செல்லுமுன்னரே பொழுது சாய்ந்து விட்டது. மேல் வானக் கோடியில் மலைக்கும் வானத்துக்கும் எல்லை காணாதவாறு இருள் கவிழ்ந்து மூடி விட்டது.ஸ்டேஷனுக்கு அப்பால் தூரத்தில் தெரியும் அம்பாசமுத்திர நகருக்குள், அப்போதுதான் ஏற்றப்பட்ட மின்சார விளக்குகள் கோலத்துக்குப் புள்ளி வைத்தது போல் பொட்டுப் பொட்டாசுத் தெரிந்தன. ஆளரவம் குறைந்து தூங்கிக் கொண்டிருந்த ரயில்வே பீடர்சாலை ரயிலின் வரவால் உயிர்ப்புப் பெற்று விளங்கியது. சளசளத்துப் பேசம் மனிதர்களும், கலகல வென்று மணியோசை யெழுப்பும் இரட்டைமாட்டுவண்டிகளும் செல்லும் அந்தச் சாலை அந்தி நேரத்தின் சவ அமைதியை இழந்து குதூ கலித்தது.

சங்கர் ரயிலை விட்டு இறங்கி ஊரை நோக்கிச் சாவதானமாக நடந்து வந்தான்.

முந்திய நாள் மாலையில் பாளையங்கோட்டையில் 'பெர்லின் வீழ்ச்சி' என்ற ருஷ்யப் படம் காட்டப்பட்டது. அதைப் பார்ப்பதற்காகத்தான் சங்கர் திருநெல்வேலி சென்றிருந்தான்.ரயில்வே பீடர் சாலையில் காலாற நடந்து வரும் போது அவன் மனத் திரையில் அந்தப் படத்தின் காட்சிகள் மீண்டும் ஓடிச் செல்வது போலிருந்தன. சங்கர் அந்தப் படத்தை எண்ணியெண்ணி வியந்தவாறே வந்து கொண்டிருந்தான்.

ஐவனோவ் ஒரு இரும்பாலையிலுள்ள திறமைமிக்க தொழிலாளி. ஆனால் நாஜி வெறியன் ஹிட்லரின்

படையெடுப்பு அவனை ஒரு போர் வீரனாக்குகிறது. காதல் வாழ்வின் முதற்படியிலே காலை வைத்த அந்த இளைஞன் தன் காதலி நடாஷாவுடன் இன்பகரமாக வாழ இயலவில்லை. நடாஷா நாஜி கெஸ்டபோக்களின் கையில் சிக்குகிறாள். ஐவனோவ் போர்முனை செல்கிறான். மூர்க்கத்தனமான நாஜியரை எதிர்த்துத் தாக்கிப் பின்வாங்கச் செய்கின்றனர். சோவியத் வீரர்கள் முன்னேறி வரும் சோவியத்செஞ்சேனை ஐவனோவின் சொந்த ஊரை மீட்கிறது. அந்தப் படையிலிருந்த ஐவனோவ் தான் ஆடிப்பாடித் தவழ்ந்து திரிந்த தனது பிறந்த வீட்டை வெறும் குட்டிச்சுவராகத்தான் காண்கிறான்.கிழிந்து தும்பு தும்பாய்ப்போன தன் தாயின் துணிமணிகளின் மிச்ச சொச்சங்களை அந்த இடிபாடுகளுக்கிடையே கண்டு மனம் வெதுப்பி விக்கி விக்கி அழுகிறான். அவனுக்குத் தெரிந்த உள்ளூர் நண்பர்கள் ஐவனோவைத் தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார்கள்; நடாஷாவுக்கு நேர்ந்த கதியையும் சொல்கிறார்கள்.ஆனால் ஐவனோவோ அதைக் கேட்டு ஒப்பாரி வைக்கவில்லை; நாஜியரின் மீது அவனுக்குள்ள ஆத்திரம்தான் அதிகரிக்கிறது "நான் உங்களோடு தங்க மாட்டேன் நான் இன்னும் முன்னேறிச் செல்லவேண்டும்!"என்று உறுதியோடு தன் நண்பர்களிடம் சொல்லி விட்டு படையினரோடு சேர்ந்து கொள்கிறான்...

சங்கரின் மனத்தில் ஐவனோவின் அந்த உறுதி கணீரென ஒலித்துக் கொண்டிருந்தது. காதலி சிறைப் படுத்தப்பட்டான் என்று கேட்ட போதும் ஐவனோவ் சித்தம் கலங்கவில்லை; காதலையும்விட, பெரிதான கடமைதான் அவன் மனத்தில் மேலோங்கி நின்றது...

"ஆமாம். மனிதனுக்குக் காதல் ஒன்றுதானா வாழ்க்கை ? காதல் வாழ்க்கையின் ஒரு அம்சம். அதற்குப் பங்கம் நேர்ந்தால்வாழ்க்கையே அத்தோடு முடிந்துவிட்டது என்று அர்த்தமா? மனிதனுக்கு வாழ்க்கை தான் லட்சியம்...”

காதலைப் பற்றிய இந்த எண்ணம் தோன்றியவுடனேயே சங்கருக்குக் களலாவின் ஞாபகம் வந்தது.

மணி காணாமல் போனதிலிருந்து கமலாவிடம் உற்சாகமும் உவகையும் குடியோடிப் போய்விட்டன. தனிமையிலும், சமயங்களில் தன் தாயின் முன்னிலையிலும், சங்கரின் முன்னிலையிலும் அவள் ஆற்றாமை தாங்க மாட்டாமல் கண்ணீர் பெருக்கி விடுவாள்; படிப்பிலும் அவள் மனம் ஈடுபடவில்லை. எந்நேரம் பார்த்தாலும் பித்துப் பிடித்தவள் மாதிரி அவள் தோற்றமளித்தாள். "மணியை எப்படியாவது தேடிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று சங்கர் அடிக்கடி கூறும் ஆதரவு மொழி. ஒன்றே. அவள் உயிரை தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பது போலிருந்தது.

கமலாவைப்பற்றிநினைத்ததும், சங்கருக்கு அவள் மீது பரிதாபவுனர்ச்சி பிறந்தது. அவள் நாளுக்கு நாள் ஒளியிழந்து களையிழந்து மெலிந்து வருவதை எண்ணி அவன் பெருமூச்சுவிட்டான். அவளுக்காகவேனும் மணியை எப்படியாவது விரைவில் தேடிப் பிடிக்கவேண்டும் என்று அவன் உள்ளம் எண்ணியது. ஆனால், அதே சமயத்தில் அவன் மனத்தில் அந்த சோவியத் வீரன் ஐவனோவின் லட்சியமும் கமலாவின் நிலைமையும் மாறித் தோற்றமளித்தன.

'கமலாவுக்கு மணியின் காதல் ஒன்றுதான் பிரதானமா? அவள் இவ்வளவு தூரம் உணர்ச்சி வசப்பட்டிருப்பாள் என்று நான் எண்ணவேயில்லையே. அவளை நான் ஒரு லட்சிய வேட்கை கொண்ட பெண்ணாக ஆக்க வேண்டும் என்றல்லவா திட்டமிட்டேன்! என் ஆசையையெல்லாம் அவள் பாழாக்கி விடுவாளா? அவள் என்ன இவ்வளவு உறுதியற்றவளாக இருக்கிறாள்!...

'காதல்தானா பெரிது? அதுவா. மனித லட்சியம்? அப்படியானால், காதல் கைகூடி விட்ட பிறகு, வாழ்க்கை லட்சிய குன்யமாகவா போய் விடும்? வாழ்வின் கடைசி

மூச்சு விடைபெறும் வரை, நல்வாழ்வு வாழத் துடிப்பதும், அதற்காகப் போராடுவதும் தான் சிறந்த லட்சியம், மனித லட்சியம்!.

சங்கரின் மனத்தில் மீண்டும் அந்தப் படக்காட்சி திரை விரித்தது.

சோவியத் சேனை பெர்லின் நகருக்குள்ளே பிரவேசித்து விட்டது.ரீச்ஸ்டாக் மாளிகையிலே சோவியத் செங்கொடியைப் பறக்க விடுவதற்காக, மூன்று போர் வீரர்கள் முன்னேறிச் செல்கிறார்கள், இடிபாடுகளுக் கிடையே, செங்கொடியைப் புனித உணர்வோடும் புளகாங்கிதத்தோடும் சுமந்து கொண்டு முன்னேறுகிறார்கள். கண்மூடித்தனமாகப் பாய்ந்து வரும் துப்பாக்கிக் குண்டுகளையும், நாஜிகளின் அந்திமதசைத்தாக்குதலையும் சமாளித்துமாளிகைப்படிகளில் ஏறுகிறார்கள். திடீரென்று ஒரு துப்பாக்கிக் குண்டு, அந்த வீரர்களில் ஒருவனைக் கீழே சாய்த்து விட்டது; எனினும் செங்கொடி சாயவில்லை. மரணத் தறுவாயிலுள்ள அந்த செஞ்சேனை வீரன் ரத்தம் தோய்ந்து கசியும் தனது கைக்குட்டையை எடுத்து, தன் தோழனிடம் கொடுத்து, 'இதோ இந்தக் கொடியையும் ஏற்றுங்கள்' என்று கூறியவாறே உயிர் துறக்கிறான். ரீச்ஸ்டாக்கில் பட்டொளி வீசிப் பறக்கும் செங்கொடியின் நிழலிலே, அந்த வீரன் கொடுத்த ரத்தப் பதாகையும் பறக்கிறது!'

சங்கர் அந்த சோவியத் வீரனின் தியாகத்தை நினைத்து நினைத்து வியந்தான்.

"ஆம் அவன் கடைசி மூச்சுவரை தன் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடினான். அதுதான் அவன் லட்சியம்! யுத்தம் ஒழிந்து, சமாதானம் நிலவி, மீண்டும் புதுவாழ்வு மலரப்போகும் சந்தர்ப்பம் கையெட்டும் தூரத்தில் வந்து விட்டது என்று தெரிந்த அந்த நிமிஷத்திலும், அவன் மகிழ்ச்சியோடு உயிர் விடுகிறான்! அது அல்லவா வீரம்?"

சங்கரின் மனத்தில் அந்த வீரனின் தணியாத தேச பத்தியும் வீரமும் அழியாத இடம் பெற்றன.

"அந்த வீரனைப்போல், நானும் வாழ்ந்தால்? அதைவிட மனிதனுக்கு வேறென்ன வட்சியம் வேண்டும்” சங்கரின் மனம் அந்த வீரனைத் தன் லட்சிய புருஷனாக ஸ்வீகரித்தது. ஆனால் அதே நேரத்தில், அவன் மனம் காணாமற் போன மணியைப் பற்றியும் சிந்தித்தது:

'சே! மணி என்ன இப்படி ஓடிப்போய் விட்டான்! எதிர்பாராது நேர்ந்த துர்ச்சம்பவங்கள் தாம். எனினும் இப்படியா மனம் ஒடிந்து போவது? தந்தையும் தம்பியும் இறந்து விட்டால் என்ன? தாய் இருக்கிறாளே! தாயைத் தவிக்க விட்டு விட்டா ஒடுவான்? தூ! கோழை!'

சங்கரின் மனத்தில் அந்த எண்ணத்தால், மணியின் மீது திடீரென்று அசூ யையும் அருவருப்புணர்ச்சியும் மேலோங்கின.எனினும் மறுகணமே அவன் எல்லோருக்கும் தைரியம் லகுவில் வந்துவிடுமா?' என்று எண்ணியவனாக, மணியின் நிலைமைக்காகப் பரிதாப உணர்ச்சியும் கொண்டான்.

மணியையும் அவன் தாயையும் பற்றிச் சிந்தித்தவாறே வந்த சங்கரை, அவன் கால்கள் அவனையுமறியாமல் இருளப்பக் கோனாரின் குடிசைக்கு இழுத்துச் சென்றன. இருளப்ப கோனாரின் குடிசை இருள் மண்டிக் கிடந்தது. மாடக் குழியிலிருந்த தகர விளக்கு மின்மினிப் பூச்சிபோல் ஒளிசிந்தித் தவித்துக் கொண்டிருந்தது; இருட்டில் குடிசை மூலையில் கிடக்கும் ஆட்டுரலில் மாரி பருத்திவிதை ஆட்டும் சத்தம் இருளின் அமைதியிலே கடலலைபோல் கும்மென்று ஒலித்தது.

குடிசையின் வெளியே நின்றவாறே சங்கர் குரல் கொடுத்தான்.

"கோனார்!கோனார்!"

ஆட்டுரல் ஆட்டும் சப்தம் நின்றது.

"யாரது?"

"நான்தான் சங்கர்."

"சங்கரையாவா?வாங்கய்யா, கட்டில்லெ உட்காருங்க என்று கூறியவாறே மாரி எழுந்து வந்து சுவரோடு சாத்தி வைத்திருந்த கட்டிலை எடுத்துப் போட்டாள்.

சங்கர் கட்டிலில் உட்கார்ந்தவாறே, 'கோனார் வீட்டிலே இல்லையா?" என்று கேட்டான்.

"அவஹ சந்தைக்குப்போனாக நேரமும் ஆச்சி. இப்ப வந்திடுவாக" என்று சொன்னாள் மாரி.

இதற்குள் குடிசைக்குள்ளிருந்து ஒருவெள்ளிய உருவம் வெளிவந்தது.

"சங்கரா?வாப்பாவா.உன்னை என்னரெண்டு நாளா இந்தப்பக்கம்காணம்?" என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தாள் தங்கம்.

"திருநெல்வேலிக்குப் போயிருந்தேன், அத்தை. அது தான் வரலே."

"ஏதாவது தகவல் கிடைச்சிதா?"

சங்கர் பேசாதிருந்தான், தங்கம் அந்த மௌனத்தைப் புரிந்து கொண்டவளாக ஆழ்ந்த நெடுமூச்செறிந்தாள்.

தங்கம் சென்ற இரண்டு மாத காலத்துக்குள் மிகவும் உருமாறிப் போயிருந்தாள். தள தள வென்றிருந்த அவள் உடல் மினுமினுப்பு இழந்து, வாடிக் கறுத்து, வதங்கிப் போய்விட்டது; முகமும் உடம்பும் வற்றி மெலிந்து விகாரமாயிருந்தன; அத்துடன் அவள் உடுத்தியிருந்த வெள்ளைச் சேலையும், சிக்குப்பிடித்த தலைமயிரும், தாலிச்சரடு இழந்த அமங்கலக் கழுத்தும் அந்த விகாரத் தன்மையை மிகைப் படுத்திக் காட்டின, அவள் சொல்லில் உயிரும் உணர்வும் அற்று, குரல் கரகரத்து உடைந்து போயிருந்தது.

குடும்பத்தில் எதிர்பாராது நேர்ந்த சோக நிகழ்ச்சிகள் அவளைப் பெரிதும்பாதித்துவிட்டன.திடீரென்று ஒற்றைத் தனிமரமான அவள் வாழ்வில், மணி ஓடிப்போன சம்பவம், கணவனின் மரணத்தையும் ஆறுமுகத்தின் மரணத்தையும் விட, அதிகப்படியான வருத்தத்தையும் கவலையையும் தருவதாக அமைந்து விட்டது. 'அவன் ஒருத்தன்தான் ஆறுதல் என்றிருந்தேன். அவனும் இந்தக் காரியம் செஞ்சுப்புட்டானே!' என்று அவள் அங்கலாய்க்காத நாள் கிடையாது. மணி உயிரோடாவது . இருக்கிறானா, இல்லை என்று அறிய முடியாது, அவள் மனம் தினம் தினம் என்னென்னவோ எண்ணிக் குமைந்தது.

மணி காணாமற் போன ஒரு வார காலத்துக்குள்ளேயே, கைலாச முதலியார் தம் குடும்பத்திற்கு விட்டுச் சென்றிருந்த கடன்களையும் வில்லங்கங்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு தங்கத்தின் மீது சார்ந்து விட்டது. மிஞ்சியிருந்த ஜவுளிகளையும், நகை நட்டுகளையும் விற்று, கடன்காரர்களுக்கு ஒன்றும் அரையுமாகக் கொடுத்துத் தீர்த்தாள். வீட்டை மட்டுமேனும் கை நழுவ விடாது காப்பாற்ற வேண்டும் என்றுதான் அவள் கவலைப் பட்டாள். எனினும் மைனர் முதலியாரோ தமது வஞ்சத்தைக் கைலாச முதலியாரோடு நிறுத்திக் கொள்ளவில்லை: மேலும் ஓடிப்போன மணி திரும்ப வந்து விட்டால், வீடு பிதிரார்ஜித சொத்தானதால் நிலைமை எப்படியெப் படியோ என்று எண்ணியவராக, அவரும் தமது பாக்கிக்காகக் கிட்டி போட்டு நெருக்காத குறையாய்,தங்கம்மாளை விரட்டி வந்தார். எனவே தங்கத்துக்கு வீட்டை அவரிடம் விட்டுவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை வீட்டை விட்டு வெளியேறிய அன்று, இருளப்ப கோனாரும் மாரியும் அவளருகில் இல்லாது போயிருந்தால், அவளும் தன் கதையை எங்காவது ஆற்றிலோ, குளத்திலோ முடித் திருப்பாள். இருளப்பக் கோனார்தான் தங்கத்தை அழாக்குறையாகவேண்டி, தமது குடிசையில்வந்து தங்கச்சொன்னார்.

"நடந்தது நடந்து போச்சி, அதை யெண்ணி ஆவுறது எனன? இப்போ நாங்களும் எங்க புள்ளையை உசிரோட தூக்கி விட்டுட்டுத்தான் இருக்கோம். என்னமோ எல்லாம் அவங்கவுங்க தலைவிதிபோலத்தானே நடக்கும் கடவுளுக்கு இன்னிக்கி இல்லாட்டி என்னிக்காவது கண்ணு திறக்காமலா போகும்? இந்த உடம்பிலே உசிரு உள்ளவரை உங்களை என் தாய்போல வச்சிக் காப்பாத்துறது என் பொறுப்பு உங்க வீட்டு உப்பைத் தின்னதுக்கு, நான் இதுகூடச் செய்ய வேண்டாமா? என் குடிசை உங்க குடிசைதானே. வித்தியாசமா நினைக்கிறதுக்கு என்ன இருக்கு?” என்றெல்லாம் இருளப்பக் கோனார் பன்னிப் பன்னி எடுத்துரைத்ததைக் கேட்டுத் தங்கமும் அவரது குடிசையிலேயே வந்து தங்கி, பகலில் வெளியே தலை காட்டாத ஆந்தை மாதிரி கூனிக்குறுகி வாழ்ந்து வந்தாள்.

சங்கருக்கும் தங்கத்துக்கும் இடையே நிலவிய அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை.

"யாரது?சின்ன ஐயாவா?"என்று கேட்டுக் கொண்டே இருளப்பக்கோனார்வந்து சேர்ந்தார்; இருளப்பக்கோனார் வந்ததும், தங்கம் தன் சேலை முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

கோனார் வாங்கி வந்த சாமானை மாரியிடம் கொடுத்து விட்டு, சங்கரின் அருகில் வந்து உட்கார்ந்தார்.

"என்ன தம்பி, தகவல் எதுவும் தெரியுமா?"

சங்கர் உள்ளடங்கிய குரலில் பதிலளித்தான்; "இல்லை !"

கோனார் பெருமூச்செறிந்தார். சங்கர் மீண்டும் பேசினான்.

"நானும் எழுதாத இடம் இல்லை; விசாரிக்காத ஆள் இல்லை பத்திரிகையில் கூட விளம்பரம் பண்ணியாச்சு. கமலாவோ நாளுக்கு நாள் குறுகிக் குன்னிக்கிட்டுவர்ரா..."

"என்ன தம்பி, ஒரு கடுதாசி கூடவா போடப் பிடாது? அதை நினைச்சாத்தான் தப்புத் தண்டாவா எதுவும் நடந்திட்டுதோன்னு பயமாயிருக்கு!" என்றார் கோனார். அவர் குரல் உள்வாங்கிக்கம்மி ஒலித்தது.

'அப்படியெல்லாம் ஒண்ணும் நினைக்காதிங்க அவன் மனம் என்னமாட் புண்பட்டிருக்கோ? மனசு சரிப்பட்டா, தானே வந்து சேருவான்" என்று ஆறுதல் கூறினான் சங்கர்,

"எம் புள்ளெயைப் பறி கொடுத்திட்டு, இத்தனை வருசமா நான் பட்டபாடு போதாதுன்னு, கடவுள் இப்போ மணி ஐயாவையும் பிடுங்கிட்டுப் போயிட்டாரு தம்பி, எம் மனசே சரியில்லை; இந்த மாசக் கடைசிக்குள்ளே ஒரு தகவலும் கிடைக்கலேன்னா, நானே ஊர் ஊரா நாய்மாதிரி திரிஞ்சாவது, மணி ஐயாவைத் தேடிப் பிடிக்கிறதுன்னு இருக்கேன். இங்கே அவுக அம்மா படுகிற பாடு பார்க்க முடியலெ" என்று நொந்துபோன உள்ளத்தோடு குமைந்து பேசினார் கோனார்.

சங்கர் அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் மௌனமாயிருந்தான்.

இதற்குள் குடிசைக்குள்ளிருந்து, "ஏ, எம் பிறவி ராசையா!" என்று ஓலமிட்டு ஒப்பாரி வைத்து அழும் தங்கத்தின் அழுகுரல் இருளின் அமைதியைக் கிழித்துக் கொண்டு மேலோங்கியது.

தங்கத்தின் அழுகுரலைக் கேட்டதும், சங்கருக்கு அவனையும் மீறி, கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், முகத்தைத் துடைக்கும் பாவனையாய், கைக் குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஆனால் உலக அனுபவம் மிகுந்த இருளப்பக் கோனார் அந்த இருளிலும் சங்கரின் நிலைமையைப் புரிந்து கொண்டார். எனவே திடீரென்று பேச்சை மாற்றினார்.

"தம்பி, ஒண்ணு சொல்ல மறந்து போச்சே! வர்ர வழியிலே அம்மன் கோயில் மண்டபத்துப்பக்கம் வடிவேலு முதலியார்வாளைச் சந்திச்சேன். அவுக உங்களை எதிர் பார்த்துக் காத்துக்கிட்டு நிக்காக. நீங்க போங்க"

சங்கரும் அதை ஏற்றுக் கொண்டவனாக இடத்தை விட்டு எழுந்திருந்தான்.

"நான் வாரேன், பெரியவரே"

"சரி தம்பி"

இருளப்பக் கோனார் சொன்னபடியே வடிவேலு முதலியார் அம்மன் கோயில் மண்டபத்தில்தான் இருந்தார்;அவரைச் சுற்றிலும் வேறு பல நெசவாளிகளும் கூடியிருந்தனர்.

கைலாச முதலியாரின் மரணத்துக்குப் பின்னர், அம்மன் கோயில் மண்டபம் அதற்கு முன் இல்லாத கலகலப்போடு விளங்கியது. மாலை நேரங்களில் அங்கு குறைந்த பட்சம் இருபது நெசவாளிகளாவது ஒன்று கூடி விடுவார்கள். அவர்கள் அனைவரும் வடிவேலு முதலியாரின் தலைமையில் உலக விவகாரங்களையும் கைத்தறித் தொழில் நெருக்கடியைப் பற்றியும் தத்தம் அபிப்பிராயங்களைப் பரிமாறி விவாதித்தார்கள். சங்கரிடமிருந்து அவ்வப்போது தாம் வாங்கி வரும் சில அரசியல் பத்திரிகைகளை, வடிவேலு முதலியார் அந்த நெசவாளிகளுக்கு வாசித்துக் காட்டுவார். அந்தப் பத்திரிகைகளில் தொழிவாளிகள், விவசாயிகள், நெசவாளிகள் முதலிய மக்களின் போராட்டங்களையும், இயக்கங்களையும்பற்றிய செய்திகள் வெளிவந்தன. கூலி வெட்டு, ஆள் குறைப்பு: கதவடைப்பு முதலியவற்றை எதிர்த்துப் பற்பல தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்கள், வரிவஜா கோரி, கஞ்சித் தொட்டி கேட்டு, பஞ்சப் பிரதேசத்திலுள்ள விவசாயக் குடிபடைகள் நடத்தும் இயக்கங்கள்,

ஊர்வலங்கள் இப்படி எத்தனையெத்தனையோசெய்திகள் பற்றிய விவரங்கள் அந்தப் பத்திரிகைகளில் காணப்பட்டன. வடிவேலு முதலியார் அந்தப் போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தொண்டையைக் கனைத்து உற்சாக் மூட்டியவராக, சாங்கோபாங்கமாகவாசித்துக் காட்டுவார் அத்துடன் சங்கம் வைப்பதால் உண்டாகும் நன்மைகளை எடுத்துச்சொல்லி அந்தநெசவாளிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவார்.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற உண்மையை அந்த நெசவாளிகள் சில தினங்களுக்கு முன்னர் நிதர்சனமாகக் கண்டுணர்ந்திருந்தார்கள். சென்ற மாத இறுதியில் உள்ளூர் ஜவுளி வியாபாரிகள் நெசவாளிகளுக்குக் கிடைத்து வந்த பாவக் கூலியைக் குறைக்க முயன்றார்கள்; குறைந்த கூலிக்கு வேலை செய்யச் சம்மதிக்காவிட்டால், நூல் தரமாட்டோம் என்றும் சிலர் பயமுறுத்தினார்கள். ஏற்கெனவே அந்த நெசவாளிகளுக்கு பாவுக்குப் பதினைந்து ரூபாய்க்கூடக் கூலி கிடைக்கவில்லை. எனவே அந்தப் பஞ்சக் கூலிக்கும் வினை பிடித்து விட்டது. என்றறிந்தவுடன் நெசவாளிகள் பதைபதைத்தார்கள். வடிவேலு முதலியாரோ அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டி, கூலிக் குறைப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துவதென்று தீர்மானித்தார். அதன் பின் அவர் சங்கரிடம் கலந்தாலோசித்துக் கொண்டு, தமது தலைமையில் சுமார் முப்பது தொழிலாளரை ஒன்று திரட்டி ஊர்வலமாகச் சென்று, அம்பாசமுத்திரம் தாசில்தாரைச் சந்தித்தார்; நெசவாளிகள் தத்தம் கஷ்ட நஷ்டங்களைத் தாசில்தாரிடம் எடுத்துச் சொன்னார்கள். அதன்பின் தாசில்தாரின் தலையீட்டின் பேரில், அவர்களுக்குக் கிடைத்து வந்த பஞ்சக் கூலி தப்பிப் பிழைத்தது. இந்தச் சம்பவம் நெசவாளிகள் பலருக்கும் சங்க உணர்வையும் தன்னம்பிக்கையையும் ஊட்டியது; வடிவேலு முதலியாரும் முன்னை விட உற்சாகத்தோடு வேலை செய்தார்.

வடிவேலு முதலியாரின் உற்சாகத்துக்கு இது மட்டும் காரணம் அல்ல.

சென்ற மாதம் சங்கர் அவரை ராமநாதபுரம் ஜில்லாவில் நடந்தவிவசாயிகள் மகாநாட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தான். அந்த மகாநாட்டில் வடிவேலு முதலியார் கண்ட காட்சிகள் அவர் மனத்தில் பசுமையோடும் புதுமையோடும் பதிந்து விட்டன. தம்மைப் போன்றவர்கள் தொட்டுப்பழகவேகூசும் இனத்தவரான அந்தவிவசாயிகள், 'சின்னச் சாதிச்சனங்களான அந்த ஹரிஜனங்கள், தங்கள் சங்கத்தின் மீதும் 'தலைவர்கள் மீதும் எவ்வளவு நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், எவ்வளவு ஒற்றுமையோடு, தியாக புத்தியோடு வீரத்தோடு விளங்குகிறார்கள் என்பதையும் அவர் நேரில் கண்டுணர்ந்தார்.

மேலும், அந்த ஹரிஜனங்களோடு, மேல் ஜாதி விவசாயிகளும் தோளோடுதோன் நின்று ஒத்துழைப்பதைக் கண்டு அவர் வியப்படைந்தார். அடக்குமுறைக் காலத்தில் தன்னை அலங்கோலமாக்கி அவமானப்படுத்திய போதும் தலைமறைவாக இருந்த தங்கள் தலைவனைக் காட்டிக் கொடுக்காத வீராங்கனையை அவர் அங்கு கண்டார் அதுபோல், துப்பாக்கிக் குண்டுக்குத் தனது ஒரே மகனை இரை கொடுத்தும், உறுதி குலையாது சபதமேற்று நிற்கும் ஒரு கிழத்தாயை, அனு அணுவாகச் சித்திரவதைக்கு ஆளாகி, காலே ஊனமாகி முடமானபோதும், கொள்கைப் பிடிப்பில் நொண்டியடிக்காத ஒரு வீரமகனை அவர் கண்டார். கதைகளில் கேள்விப்பட்ட வீரர்களையெல்லாம் கண்ணால் காண்பது போலிருந்தது அவருக்கு

அந்த விவசாயிகளின் உறுதியும் ஊக்கமும் வடிவேலு முதலியாரின் மனத்துக்குத் தெம்பளித்தன. மேலும், அந்த விவசாயிகள் கைத்தறி நெசவாளர்களின் குறைகளை நீக்குவதற்காகப் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியதைக்

கண்டு, அவர் உள்ளம் புளகித்தது; அவரையும் அறியாமல் அவர் உள்ளம் அந்த விவசாயிகளோடு சகோதரத்துவம் கொண்டாடியது. 'இப்படிப்பட்ட வீரர்களின் ஆணையை எந்தச் சர்க்கார்தான் புறக்கணிக்க முடியும்?' என்ற ஒரு தைரியம். அவருக்கு ஏற்பட்டது.

மகாநாட்டிலிருந்து திரும்பி‌ ஊர் வந்ததிலிருந்து அவர் மேலும் உற்சாகமும் ஊக்கமும் பெற்றவராக விளங்கினார். அந்தவிவசாயிகள் மகாநாட்டைப் போல் ஒருநெசவாளிகள் மகா நாட்டைக் கூட்டவேண்டுமென்றும் அல்லது குறைந்த பட்சம் ஒரு பெரிய அரசியல் தலைவரையேனும் வரவழைத்துப் பிரசங்கம் செய்ய வைக்கவேண்டுமென்றும் அவர் நேரம் கிடைத்தவேளையெல்லாம் சங்கரைநச்சரித்து வந்தார். நெசவாளிகளிடம் பேசும்போதெல்லாம், "நான் போயிருந்தேனே, அந்தமகாநாட்டிலே." என்று நித்தம் ஒரு முறையேனும் சொல்ல அவர் மறக்க மாட்டார்.

அன்று மாலை அவர்கள் முந்திய நாள் இரவில் அம்பாசமுத்திரத்தில் பிரசங்கம் செய்த ஒரு தேசபக்தரின் பேச்சைப் பற்றித் தங்கள் அபிப்பிராயத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

"அவரு பேச்சைக் கொண்டு உடைப்பிலே போடுங்க. என்னமோ நாட்டிலே பாலும் தேனும் வெள்ளமா ஓடுற மாதிரிதான் பேசுதாங்க. இவங்க இல்லேன்னா, இந்த நாடே குட்டிச்சுவராப் போயிடும் போலேதான்! இப்ப மட்டும். என்ன வாழுதாம்? நம்மையெல்லாம் பைத்தியக்காரப் பயல்கன்னு நினைச்சிக்கிட்டாங்களா?" என்று ஆத்திரப் பட்டுக் குமைந்தது ஒரு குரல்.

"பின்னே என்ன, மாப்பிளே! தெய்வ பக்தி குறைஞ்சதினாலேதான் ஊரிலேபஞ்சம் அப்படிங்கிறானே. நமக்கெல்லாம் தெய்வ பக்தி குறைஞ்சா போச்சி? இவங்க தான் தெய்வத்துக்குக்கூட அஞ்சாமல், பொய்யும் புளுகும் அள்ளி விடுதாங்க. தெய்வம் நின்னு கேக்கும்; கேக்காமப் போவாது!" என்று பேசினார் ஒரு முதியவர்

"தெய்வக் கேக்குதோ, இல்லியோ?நாமதான் முதல்லெ கேக்கணும். நான் போயிருந்தேனே, அந்த விவசாயிகள் மகாநாட்டிலே." என்று குறுக்கிட்டு ஏதோ சொல்ல முனைந்தார் வடிவேலு முதலியார்.

அதற்குள் "என்ன அண்ணாச்சி, என்ன நடக்குது?" என்று சௌஜன்யத்தோடு கேட்டுக்கொண்டே அங்குவந்து சேர்ந்தான் சங்கர்.

சங்கர் வந்தவுடன் மண்டபத் திண்ணையிலிருந்த நெசவாளிகள் அவனுக்கு இடம் விட்டு ஒதுங்கி உட்கார்ந்தனர்; சங்கரும் அவர்களோடு சென்று அமர்ந்து கொண்டான்.

"வாப்பா சங்கரா. உன்னைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். நல்ல சமயத்திலே வந்தே. நேத்து நம்ம பஞ்சாயத்து யூனியன் மைதானத்திலே பொதுக் கூட்டம் நடந்ததே. நீ போனியா?" என்று ஆவலோடு கேட்டார் வடிவேலு முதலியார்,

"நேத்து நான் ஊரிலேயே இல்லையே?" என்றார் சங்கர்.

"கேளு தம்பி. பெரிய தலைவர்னாங்க, பேச்சு என்னமோ சின்னத்தனமாகத்தான் இருந்தது. நடு ரோட்டிலே சண்டை போடுகிறவன் கூட, கொஞ்சம் நாசூக்காகப் போவான் இவரானா." என்று சொல்லில் பாவம் தொனிக்கத் தம் பேச்சுக்கு மேளம் கட்டினார் வடிவேலு முதலியார்.

"சரி‌ என்ன சொன்னார்?"என்றான் சங்கர்

"என்ன எழவெல்லாமோ சொன்னார். நெசவாளிகள் கஷ்டத்தைப் போக்குறதுக்கு சர்க்கார் ஆன மட்டும் உதவி செஞ்சிக்கிட்டுத்தான் வருதாம். இன்னம் கொஞ்ச நாள் பெறுத்திருந்தா நிலைமை சீர்ப்பட்டுப் போகுமாம். நம்ம ஊரிலே நெசவாளிகள்ளாம் சின்னப் புள்ளைக பேச்சைக்

கேட்டுக்கிட்டு சங்கம் கிங்கம்னு வச்சிக் கெட்டுப் போகக் கூடாதாம். எல்லாம் நம்ம மைனர்வாள் துரண்டு தல்லெதான், இத்தனையும் பேசியிருக்கார். அப்புறம் கேளு சங்கரா. கஞ்சித் தொட்டி வைக்கணும்னு கேக்கிறதே தப்பாம். உழைத்துச் சாப்பிடும் மானஸ்தர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் சதி வேலையாம், அது! எப்படி இருக்கு?

சங்கருக்குநெஞ்சுக்குள் கோபம்குமுறியெழுந்தது.

"பிச்சைக்காரர்களா? பிழைப்புக்கு வேலை கொடுக்கவும் இவர்களுக்கு விதியில்லை; பசித்த மக்களுக்குச் சோறு கொடுக்கவும் துப்பு இல்லை. யார் பிச்சைக்காரர்கள்?" என்று ஆத்திரத்தோடு பேசினான் சங்கர்.

"அதுதான் தம்பி, நாமும் பெரிய தலைவரை யெல்லாம் வரவழைச்சி, இவங்களுக்குச் சுடச் சுடப் பதில் கொடுக்கணும், அப்பதான். இவங்க சரியா வருவாங்க!” என்று தமது ஆசையை வெளியிட்டுக் கொண்டார் வடிவேலு முதலியார்.

"பெரிய தலைவர் வந்தால் மட்டும்போதுமா? முதலில் உங்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துங்கள். பிறகு உங்கள் உறுதியும் ஒற்றுமையுமே உங்களுக்குத் தலைமை தாங்கும்" என்றான் சங்கர். நெசவாளிகளோடு சிறிது நேரம் அளவளாவி விட்டு, வீட்டுக்குத் திரும்பினான் சங்கர்; வடிவேலு முதலியார் சங்கரை மங்கள பவனத்தின் கேட்வரையிலும் சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பினார்.

சங்கர் வீட்டுக்குள் நுழையும்போது மணி பத்தரை ஆகிவிட்டது. முன் கட்டிலுள்ள தந்தையின் அறையில் வெளிச்சமில்லாததைக் கண்டு, தந்தை வீட்டிலில்லை என்பதை ஊகித்தறிந்து கொண்டான். உள்ளே சென்றதும், சங்கரின் தாய் அவனைவரவேற்றாள்.

"வாடாப்பாசங்கர்.காலையிலேயே வர்ரவனா நீ?"

"வரமுடியலேம்மா."

"நீ பாட்டுக்கு வெளியே தங்கிட்டேன்னா, உங்க அப்பாவுக்கு என்னாலே பதில் சொல்லிமாளலை. எல்லாம் நீ குடுக்கிற இளக்காரம்தான்னு என்னைக் கோவிச்சிக்கிடுதாங்க" என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் தர்மாம்பாள்.

"சரி, அப்பா எங்கே?"

"அப்பாவா? அவுக நேத்தே எஸ்டேட்டுக்குப் போனாக. இன்னம் வரலெ"

சங்கர் தன் தாயின் வெகுளித் தன்மையை எண்ணி, மெல்லச் சிரித்துக் கொண்டான்.

"ஏம்மா? அப்பாதான் வீட்டிலேயே இல்லியே. அப்புறம் அப்பா கோவிச்சிக்கிட்டாகன்னு பொய்தானே சொன்னே?"

தர்மாம்பாளின் முகத்தில் அசடு வழிந்தது; அவள் இன்னது சொல்வதெனத் தெரியாமல் பல்லைக் காட்டினாள்.

"பின்ன என்னடாப்பா? நீ இப்படி ராப்பகலா கண்முழிச்சி, கண்ட இடத்திலே சாப்பிட்டா, உடம்பு என்னத்துக்கு ஆகும் ? பெத்தவளுக்குக்கவலை இருக்காதா?" என்று கூறிச் சமாளித்தாள்.

"சரியம்மா, வா சாப்பிடலாம்" என்று கூறிக் - கொண்டே உள்ளே நடந்தான் சங்கர்,

சாப்பிட உட்காரும்போது சங்கர் தாயைப்பார்த்துக் கேட்டான்.

"ஏம்மா,கமலா தூங்கிட்டாளா?"

"இத்தனை நேரமும் உன்னைத்தான் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தா இப்போதான் ஒரு வாய்ச் சோத்தைத் தின்னுட்டுப் படுத்துத் தூங்கினா நீயும் இருந்தா, அவள் ரெண்டு உருண்டைச் சாதமாவது கூடச்சாப்பிடுவா. இப்போ எனக்கு அவ கவலையே

பெரிசாப் போச்சி, நீயாவது அவளிடம் சொல்லக் கூடாதா?" என்று கூறிக் கொண்டே சாதத்தைப் பரிமாறினாள் தர்மாம்பாள்.

சாப்பிட்டு முடிந்ததும், சங்கர் மாடிக்குச் சென்று தன் அறையில் விளக்கேற்றிவிட்டு, மேஜைமீது கிடந்த பத்திரிகையை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.

அந்தப் பத்திரிகையில் கோவை ஜில்லாவில் நிலவி வரும் பஞ்சு நிலைமை பற்றிய விவரங்கள் வெளியாகி பிருந்தா, ஒட்டி உலர்ந்த வயிற்றோடு, பெற்ற குழந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுக்கக்கூட வகையற்றுத் தவிக்கும் ஒரு ஏழைப் பெண்ணின் பரிதாபகரமான சித்திரமும் அதில் வெளியாகியிருந்தது. மக்கள் புளியம் விதையையும், கற்றாழைக் கிழங்கையும் தின்று உயிர் பிழைத்தார்கள்; அதுவும்கூடக்கிடைக்காமல் பலர்பட்டினி கிடந்தார்கள்; கண்ட கண்ட கிழங்குகளையும் பூண்டு களையும் தின்று அஜீரணம் கண்டு செத்தார்கள்; பெண்களின் கற்புக்கு விலை மலிந்து விட்டது; பிள்ளைகளின் விலை சரசமாயிற்று; பட்டினிச் சாவு அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது; ஒரு வேளை அன்னம் பட்டும் குதிரைக் கொம்பாய் விட்டது...

சங்கர் அந்தச் செய்திகளைக் கூர்ந்து படிக்க நினைத் தான் எனினும் அவன் மனம் வேறுபலசிந்தனைகளை வலிய இழுத்துக் குவித்தது. அந்தச் சிந்தனைகளிலிருந்து மீள முடியாமல், பத்திரிகையை மூடி வைத்துவிட்டு விளக்கை அனைத்தான்; அப்படியே நாற்காலியில் சாய்ந்து படுத்தவாறு, சிந்தனையைத் தன்னிச்சையாகத் திரிய விட்டான்.

மணி அவன் ஒரு கோழை! வாழ்க்கையில் துன்பாங்கள் நேரும்போது அதன் காரண காரியத்தை அறிந்து அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். அதை விட்டுவிட்டு, பயந்தாங்கொள்ளி போல ஓடிவிட்டான்!

எங்கே ஓடினாலும் இந்த உலகத்தை விட்டு ஓடிவிட முடியுமா?

ஆனால், வடிவேலு முதலியார்! அவர் எவ்வளவு உற்சாகத்தோடும் உறுதியோடு இருக்கிறார் சங்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது!

'மணி காணாமல் போனதோடு, தங்கம் அத்தைக்குச் சொத்துச்சுகங்களும் போய்விட்டன. இருளப்பக் கோனார் மட்டும் அருகிலிருந்து ஆறுதல் சொல்வாவிட்டால், அவளும் தன் கணவன் வழியையே பின்பற்றியிருப்பாள்!

அவளுக்கு மட்டும்தானா. துன்பங்கள்! நாடெங்கிலும் மக்கள் வறுமையாலும் பஞ்சத்தாலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்த மக்களுக்கெல்லாம் என்று தான் விமோசனம் ஏற்படப் போகிறதோ?

கமலா, அவளும் நாளுக்கு நாள் மெலிந்து தான் வருகிறாள், மணியின் பிரிவு அவள் உற்சாகத்தையும் உடலையுமே. பாதித்து விட்டது.

ஆனால் சுமலாவுக்கு என்ன கவலை? அவள் என்ன தங்கம் அத்தையைப் போல் சொத்துச் சுகத்தை இழந்து தவிக்கிறாளா? சோற்றுக்கில்லாமல் தலிக்கிறாளா? அவளுக்குள்ள கவலையெல்லாம் தன் காதல் கைகூட வில்லையே என்பது தான்.

ஒரு பக்கத்தில் மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள்?வாழவழியின்றித் தற்கொலையைச் சரண் புகுகின்றார்கள்; வடிவேலு முதலியார் போன்ற நெசவாளிகள் கூட, உரிமைக்காகப் போராட முன் வந்து விட்டார்கள்; ஆனால், கமலாவோ இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் காதலை எண்ணி உருகிக் கொண்டிருக்கிறாள். அதிலும் அவள் காதலைக்கூடப்

பொருட்படுத்தாமல்ஓடிப்போன ஒரு கோழையை எண்ணி உருகிக் கொண்டிருக்கிறாள்! நானும் இதை அனுமதித்துக் கொண்டிருக்கிறேன்.

'சே! இந்த நிலைமை நீடிக்கக் கூடாது; நீடிக்கவேகூடாது!'

சங்கர் ஏதோ தீர்மானித்து முடிவு கண்டவன் போல் திடீரென்று நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தான்; மேஜை விளக்கைப் போட்டான்; படுக்கையை விரித்துப்படுத்தான்; தூங்கினான்.

காவையில் கமலா காப்பித் தம்ளரும் கையுமாக வந்து அண்ணனை எழுப்பினாள். சங்கர் திடுக்கிட்டு எழுந்து, உட்கார்ந்தான்; எதிரே கமலா. நிற்பதைக் கண்டான்; காப்பித் தம்ளரைக் கையில் வாங்கியவாறே, "என்ன கமலா?" என்று கேட்டான்.

"என்னண்ணா , நீ ராத்திரியே வந்துட்டியாமே" என்றாள் கமலா;

பிறகு அவனுடைய பதிலுக்கே காத்திராமல், "அண்ணா , அத்தானைப் பற்றி ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள்.

சங்கருக்கு அந்தக் கேள்வியே நாராசம்போல் ஒலித்தது; தான் முடிவு கட்டி வைத்திருந்ததை அவளிடம் சொல்லியே விடுவது என்று தீர்மானித்தான்.

"கமலா, அப்படி உட்கார். நானும். உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்னுதான் இருக்கேன்" என்று அர்த்த பாவத்தோடு கூறியவாறு காப்பியைக் குடித்து முடித்தான்.

கமலா அங்குகிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

"என்னண்ணா?"

சங்கர் குனிந்த தலைநிமிராமல்பேசினான்.

"கமலா, நான் சொல்றேன்னு நீ வருத்தப்பட்டுக்-

கொள்ளக் கூடாது. மணி ஊரைவிட்டு ஓடிப்போய் மாதம் இரண்டாகிறது. என்ன ஆனான், எங்கே போனான் என்று ஒன்றும் தெரியவில்லை. இத்தனை நாள் ஆகியும் ஒருகடிதம் போட அவனுக்குத் துப்பு இல்லை. இனி அவன் திரும்பி வந்தால்தான் நிச்சயம். அவனை எண்ணியெண்ணி உடம்பையும் மனசையும் கெடுத்துக் கொள்வதில் என்ன பிரயோஜனம்?"

சங்கர் சொல்ல வந்த விஷயத்தின் உட்பொருளை உணர்ந்தகமலாவின் மனம் ஒருகணம்திக்கென்று குதித்துத் துடித்தது.

"என்னண்ணா சொல்கிறாய்?"

"கமலா, மணியை மணந்து கொள்வது மட்டும்தானா உன் வாழ்க்கை லட்சியம்? உன்னைக்கூட எண்ணிய பார்க்காமல் ஓடிப்போனவனை எண்ணி ஏங்குவதுதானா உன் வாழ்க்கை? நீ அவனை மறந்து விடுவதே நல்லது!"

கமலாவுக்கு மறு கணமே கண்களில் நீர் மோதிக் கரித்தது; எனினும் பல்லை அதுக்கிக் கடித்துக் கொண்டு, பேசினாள்:

"எனக்குத் தைரியம் சொல்லவேண்டிய நீயா."

"கோழைகளுக்குத் தைரியம் கற்றுக் கொள்வது வருவதில்லை . நீயும் ஒரு கோழை; அவனும் ஒரு கேழை. அவன் துன்பத்திற்குப் பயந்து ஓடிப் போனான்; நீ ஏமாற்றத்தைத் தாங்கச் சக்தியற்றுத் தைரியமற்று ஏங்குகிறாய்!"

சங்கரின் குரலில் உறுதியும் உள்ளடங்கிப்போன கசப்பும் பிரதிபலித்தன.

கமலாவுக்குத் தன் அண்ணனின் வார்த்தைகள் ஆயிரம் கருந்தேள்கள் கொட்டுவது போலிருந்தன. 'அவன் ஏன் என்மீது ஈவிரக்கமற்றுப் பேசுகிறான்? ஏன் அப்படி?' என்று அவள் மனம் ஒரு கணம் சிந்தித்தது; எனினும் அந்தச்

சிந்தனையை மூழ்கடித்து அவள் உள்ளத்திலே சோகம் பெருக்கெடுத்தது. கண்ணில் முட்டி மோதிய கண்ணீர் அவனையும் அறியாமல் உருண்டு சிதறியது. சங்கரும் அவள் நிலைமையைக் கண்டுணர்ந்தான்.

"கமலா!"

கமலா ஏறிட்டுப் பார்த்தாள்.

"இதோ பார். உன் மீது எனக்கு அனுதாபம் இல்லாமலில்லை. உன் நிலைமையை நித்த நித்தம் கண்டு மனம் புண்பட்டதாலேயே, நான் இப்படிப் பேச நேர்ந்தது. என்னை மன்னித்துக்கொள். ஆனால், அதே சமயம் நீயே யோசித்துப் பார். சிறந்ததொரு லட்சியப் பெண்ணாக வாழவேண்டிய நீ ஒரு கோழையின் காதலை எண்ணி உருக்குலைந்து கொண்டிருப்பதா? வாழ்க்கை என்பது காதலுடனும் கல்யாணத்துடனும் முடிந்து விடுகிறதா? நமக்கென்று வேறு பல கடமைகள் இல்லையா? அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டாமா?" என்று தன் குரலின் சுருதியையே மாற்றிக் கொண்டு பேசினான் சங்கர்.

கமலா அவனுக்குப் பதில் கூறவில்லை; இன்னது கூறுவது என்றே அவளுக்குத் தெரியவில்லை.

சங்கரே மீண்டும் பேசினான்:

"எம் பேச்சு உன் மனத்தை மேலும் புண்படுத்தியிருக்கும். ஆனால், அதில்தான் உன் மன நோய்க்குரிய மருந்தும் இருக்கிறது. இதை நீயே சீக்கிரம் உணர்ந்து கொள்வாய்."

அத்தானைப்பற்றி ஏதாவது தகவல் விசாரிக்கலாம் அல்லது சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டாவது வரலாம் என்று நினைத்து வந்த கமலாவுக்கு, சங்கரின் பேச்சு எதிர்பாராத தாக்குதல் போல இருந்தது அவளுக்கு. இன்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை; பொங்கி வந்த அழுகையைச் சிரமப்பட்டு உள்ளடக்கியவாறே அங்கிருந்து எழுந்து சென்றாள்; அவள் எழுந்திருந்து செல்வதைச் சங்கர் தடுக்க விரும்பவில்லை.

அவள் சென்று மறையும் வரையிலும் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்; அவள் நிலைக்காக அவன் உள்ளம் இரங்கியது.

"ஆம். எத்தனை நாளைக்குத் தான் கமலா இப்படியே உருக்குலைந்து கொண்டிருப்பது? புரையோடிப் போன புண்ணை மூடி மூடி வைப்பதை விட, அதைக் கீறியாற்றுவது தான் நல்லது. கீறும் போது வேதனை இருக்கத்தான் செய்யும். அதைப் பொருட்படுத்தலாமா?..."

அந்த விஷயத்தைக் கமலாவிடம் சொல்லிலிட்டதை எண்ணி, அவன் மனம் ஏதோ பாரத்தை இறக்கி வைத்தது போன்ற நிம்மதியையும், நிவர்த்தியுணர்வையும் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/020-028&oldid=1684094" இலிருந்து மீள்விக்கப்பட்டது