உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/023-028

விக்கிமூலம் இலிருந்து

23

அன்று காலையில் மணி பொழுது விடிவதற்கு முன்பே எழுந்துவிட்டான். முந்திய நாள் இரவில் மட்டுமல்ல, இரண்டு நாட்களாகவே மணி இராப் பகலாய் வேலை செய்தான். இரவில் கூட அவனுக்குத் தூங்க நேரம் கிடைக்கவில்லை; தூங்க நேரம் கிடைத்தாலும் அவனுக்குத் தூக்கத்தைப் பற்றிய நினைவுகூட வருவதில்லை. எப்போதாவது தன்னையும் மீறித் தூக்கவெறி அவனைக் கிறக்கினால், அவன் இருந்த இடத்திலேயே சில நிமிஷம் கோழித்துக்கம் போட்டுச் சமாளித்துக் கொண்டான். இரண்டு நாட்களாக அவன் மனத்தில் நிரப்பி நின்ற ஒரே எண்ணம் பட்டினிப் பட்டாளத்தார் எப்போது வந்து சேர்வார்கள்?" என்பதுதான்.

அவர்கள் வரப்போகும் நாளும் வந்துவிட்டது.

மணியும் அவனோடு ஒத்துழைத்த வேறு சில நெசவாள ஊழியர்களும் பட்டினிப் பட்டாளத்தின் வரவைக் குறித்து நகரெங்கும் விளம்பரப் படுத்தியிருந்தார்கள். நகரின் பிரதான நாற்சந்தி மூலைகளிவெல்லாம் பட்டினிப் பட்டாளத்தின் வரவைத் தெரிவித்து, மக்கள் ஆதரவைக் கோரும் போர்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தன; நகரத்தின் சுவரெங்கிலும் பட்டினிப்பட்டாளத்தினரின் வரவையும் போராட்டத்தையும் ஆதரித்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பிரதான வீதிகளிலெல்லாம் ரோட்டின் மீது 'வருக!' 'வருக!' படைதிரண்டு வரும் பட்டினிப் பட்டாளமே வருக!' என்றெல்லாம் வரவேற்புரைகள் தீட்டப் பெற்றிருந்தன. இந்த விளம்பரங்களையெல்லாம் மணியே கூட நின்று ஒத்துழைத்து நிறைவேற்றினான். நிலவு வெளிச்சம் பால் போல் பொழிந்து கொண்டிருந்த அந்தக் கார்த்திகை மாச இரவில் கொட்டும் பனியையும் ஊதைக் குளிரையும் பொருட்படுத்தாது, மணி அந்த விளம்பரப் போர்டுகளில் பலவற்றைத் தானே சுமந்து சென்று பல இடங்களில் தொங்கவிட்டான்; போஸ்டர்கள் ஒட்டினான்; அத்தனை குளிரிலும் அவன் உள்ளம் மட்டும் பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்கும் உற்சாகத்தில் குதுகுதுத்துப் பொங்கி, அவன் உடம்பில் வெது வெதுப்பையும் விறுவிறுப்பையும் ஊட்டிக்கொண்டிருந்தது.

விளம்பரத்தோடு மட்டுமல்லாமல், மணி பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்கும் பணியில் ஈடுபடுமாறு மக்களிடையே பிரசாரம் செய்து வந்தான்; நெசவாளர்களையும், மற்றும் பல ஜனநாயகவாதிகளையும் சந்தித்து அவர்கள் ஆதரவைத் திரட்டினான்; சகோதரத் தொழிற் சங்கங்களையும், வாலிபர் சங்கங்களையும், வாசகசாலை களையும், அரசியல் கட்சிகளையும் அந்த வரவேற்பில் ஈடுபடச்செய்வதற்காக, அவற்றின் நிர்வாகிகளைச் சந்தித்து. அவர்கள் ஆதரவைப் பெற்றான்; அத்துடன் படை திரண்டு வரும் நெசவாளிகளுக்கு, அவர்கள் மதுரையில் தங்கும் காலத்தில், உணவு கொடுத்து உபசரிப்பதற்காக, உண்டியல் எடுத்துக் கடைகடையாகத் தெருத்தெருவாகச் சென்று நிதி பிரித்தான்; அரிசி, காய்கறி, மற்றும் உணவுப் பொருள்களையும் நன்கொடையாகச் சேகரித்தான். பட்டினிப் பட்டாளத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முறையில் அன்று மதுரை நெசவாளர் சங்கத்தின் ஆதரவில் ஒரு மாபெரும் ஊர்வலம் நடத்துவதற்கும், அவர்களது கோரிக்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அன்று மாலை ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் ஏற்பாடுசெய்திருந்தான். அந்த இரண்டு நாட்களிலும் அவன் பம்பரமாகத்தான் சுழன்றுவேலை செய்தான். நெசவாளர்களின் போராட்டத்துக்காக, மக்களின் ஆதரவைத் திரட்டும் ஒவ்வொரு நிமிஷத்தையும் அவன் பொன் போல் பயன்படுத்தினான். "ஆம். 'நாம் ஒவ்வொரு நிமிஷத்தையும் பொருட்படுத்தித்தான் வேலை செய்ய வேண்டும். நெசவாளர் போராட்டத்தின் வெற்றி எத்தனை நிமிஷங்கள் தாமதமாகின்றதோ, அத்தனை நிமிஷங்களுக்குள் எவ்வளவு கோரங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டுவிடக் கூடும்? நித்த நித்தம் நாடெங்கிலும் ஆங்காங்கே ஊரூக்கு ஊர் பட்டினிச் சாவுகளும், தற்கொலைகளும் நேர்ந்து வரும் இந்த நெருக்கடியான கட்டத்தில் நாம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாய்ப் பணியாற்றி வெற்றி காண்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு இந்த நாட்டில் பல்வேறு மனித ஜீவன்களை சாவுப் பாதையினின்றும் தடுத்து நிறுத்த முடியுமே!' என்றெல்லாம் அவன் தனக்குள் அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தான். ஒவ்வொரு நிமிஷமும் ஒரு மனித உயிர்போல் அவனுக்குத் தோன்றியது; அந்த எண்ணம்தான் அவனைச் சிறிது நேரம் கூட ஓய்ந்திருக்கவிடாமல் ஓடியாடி உழைக்கத் தாண்டியது:

மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் மங்கம்மாள் சாலையை நோக்கி மணியும், ராஜுவும், நூற்றுக்கணக்கான நெசவாளர்களும் பொழுது விடிவதற்கு முன்பே புறப்பட்டுச் சென்றார்கள். மதுரை நகரின் ஊர் எல்லையிலேயே பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்று அழைத்து வருவதற்காக அவர்கள் சென்றார்கள்; அவர்களைப்போல் நகரின் பல பாகங்களிலிருந்தும் தொழிலாளர்களும், பொது மக்களும் அதிகாலையிலேயே மங்கம்மாள் சாலையை நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள், பல்வேறு உபநதிகள் சங்கமமாகும் மகா சமுத்திரம் போல் மங்கம்மாள் சாலை. அன்று காலையில் மதுரை நகரத்தின் சந்து பொந்துகளிலிருந்தும் தொழிலாளர் குடியிருப்புகளிலிருந்தும் மக்களை ஆகர்ஷித்துக் கவர்ந்திழுத்தது,

பொழுது பலபலவென்று விடிந்தது.

மேகப்படலமற்று நிர்மலமாகத் துலங்கிய கீழ்த்திசை வானத்தில் சூரிய வட்டம் வெதுவெதுப்பு நிறைந்த கதிர்களை நீளப் பரப்பி, மங்கம்மாள் சாலையில் கூடி நின்ற மக்களின் உள்ளத்தையும் உடலையும் இதப்படுத்தியது; பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்பதற்காகக் கூடி நின்ற அந்த மக்களின் முகத்தில் பிரதிபலித்த உற்சாகத்தையும் ஒளியையும் தானும் பெற்றுப் பிரகாசிப்பதுபோல் சூரிய ஒளி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

வாழையிலையில் கட்டி வைக்கப் பெற்ற பூமாலையோடு, மணியும் அவனுடைய தோழர்களும் பட்டினில் பட்டாளத்தினரின் வரவை நிமிஷத்துக்கு நிமிஷம் எதிர்பார்த்து,மரச்செறிவு நிறைந்து கூடாரம் போல் நீண்டு தெரியும் மங்கம்மாள் சாலையில் கண்ணெட்டுத்தொலைவு வரைக்கும் ஏறிட்டுப் பார்த்தவாறு நின்று கொண்டிருந் தார்கள். நேரம் ஆக ஆக, மணியின் மனத்தில் பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்கத் துடிக்கும் ஆர்வ உணர்ச்சி மேலோங்கிப் படபடத்தது. இரண்டு நிமிஷங்களுக்கு ஒரு முறை அவன் மனம் 'அவர்கள் ஏன் இன்னும் வரவில்லை?” என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தது. காதலனின் வரவை எண்ணி ஏங்கி, வழி மேல் விழி வைத்து நிற்கும் காதலியின் உள்ளத்தைப் போல், அவன் உள்ளமும். உடலும் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தூது கொண்டு வரும் பாங்கியையைப் போல், திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த பஸ்ஸின் டிரைவர் காரை நிறுத்தி, "பட்டினிப்பட்டாளத்தார் இன்னும் சிறிதுநேரத்தில் வந்து விடுவார்கள்; பசுமலையை நெருங்கி விட்டார்கள்!" என்று தகவல் சொல்லிவிட்டுச் சென்றார். அந்தச் செய்தியைக் கேட்டதும் மணியின் மனத்தில் எப்படியும் அவர்கள் வந்து விடுவார்கள் என்ற ஆறுதலுணர்ச்சியும், சீக்கிரம் வரமாட்டேன் என்கிறார்களே. என்ற ஆதங்கமும் மாறி மாறிச் சுழன்று அவனது. தவிப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன.

அந்தப் பட்டினிப்பட்டாளத்தினரை எதிர்கொண்டு அழைக்கப் போவதுபோல், வானத்தில் விரைவாக மேலேறிச் சென்று கொண்டிருந்தது சூரியக் கதிர்; நீண்டு கிடந்த மரங்களின் நிழல்களெல்லாம் தாமும் அந்த வரவேற்பில் பங்கு கொள்ள விரும்புவது போல் வயற் புறங்களிலிருந்து நீளம் சுருங்கி, சாலையை நோக்கிக் குறுகி வந்து கொண்டிருந்தன; சாலைப்புறத்தில் கூடி நின்ற மக்களின் தொகையும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்து வந்தது.

எட்டரை மணி சுமாருக்கு, மங்கம்மாள் சாலையின் தென் கோடியில் கிணற்றுக்குள்ளிருந்து எழுப்பும் குரலைப் போல் ஆரவார ஒலி கேட்டது; அந்த மங்கிய ஆரவாரம் அங்கு நின்று கொண்டிருந்த மணியின் மனதில் ஏதோ ஒரு தெய்வீக நாதம் போல் ஒலித்து விம்மியது. அவன் கண்களை அகல விரித்துக் கொண்டு வைத்த கண் வாங்காமல், இமை தட்டாமல், மங்கம்மாள் சாலைத் தொலைவில் கண் பதித்து நின்றான். சிறிது நேரத்தில், தூரத்தில் செம்மண் புழுதிப் படலம் மரச் செறிவையும் கடந்து, செக்கர் ஒளிபோல் வான மண்டலத்தில் பரவுவதை அவன் கண்டான்; செக்கச் சிவந்த செம்மண் மண்டலத்திலிருந்து, யாக குண்டப் புகையிலிருந்து கிளம்பி வரும் பூத உருவங்களைப்போல், மனித உருவங்கள் தோன்றி முன்னேறி வருவதையும் அவன் கண்டான்.

"அதோ வந்து விட்டார்கள்!" என்று அவனையும் அறியாமல், அவன் வாய்விட்டுக் கூறி மகிழ்ந்தான். அவனுடைய காலும் கையும் கட்டிப் போடப்பட்ட பந்தயக் குதிரையைப் போல் துறுதுறுத்தன; அவன் இதயம், அவர்களை எதிர் கொண்டு அழைக்கப்போகும் உற்சாகத்தில் நிதானகதி இழந்து படபடத்துத் துடித்தது; அவன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு நின்றான்...

பட்டினிப் பட்டாளம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. போர் முகத்தை நோக்கிச் செல்லும் முன்னணி வீரர்களைப் போல் அந்தப் பட்டாளத்தினர் முன்னேறி வந்து கொண்டிருந்தார்கள்; அவர்கள் அருகில் வந்து சேர்வதற்கு முன்பே அவர்கள் கர்ஜித்து வரும் கோஷங்களின் இடிமுழக்கம் அவர்கள் வரவைத் தூது சொல்லி எதிரொலித்தது.

"வாழப்பிறந்தோம்.சாகமாட்டோம்!"

"வேலைகொடு அல்லது சோறு கொடு!"

"போராடுவோம் வெற்றிபெறுவோம்!"

போராடுவோம் வெற்றிபெறுவோம்!"

புயலின் வரவை முன்னறிவித்து ஹூங்காரித்து முன்னேறி வரும் சூறைக்காற்றின் ஓலத்தைப்போல், அந்த கோஷங்களின் முழக்கவொலி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டிருந்தது; சாலைப்புறத்தில் கூடி நின்ற மக்களெல்லாம் அந்த முழக்கவொலி கேட்டுச் சுறு சுறுப்படைந்தார்கள்.

அவர்கள் வந்து விட்டார்கள்_

அந்தப் படை வரிசைக்கு முன்னணியில் "வாழப் பிறந்தோம்;சாகமாட்டோம்!"என்ற எழுத்துக்கள் பொறித்த பதாகை கட்டியம் கூறி முன்னேறி வந்தது. அந்த வீரப்பதாகையின் நிழலில் பட்டாளத்தின் தலைவர் வந்து கொண்டிருந்தார். தலைவரைப் பின்தொடர்ந்து, தமது போர்க் கோஷங்களை முழக்கிக் கொண்டு கட்டுத் தறிகளையும் விலங்குகளையும் உடைத்தெறிந்துவிட்டு வருகின்ற மத்த கஜப் படைகளைப்போல், நெசவாள வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். பட்டாளத்தினர் அருகே நெருங்கி வந்ததும், கூட்டத்தினர் அலைமோதிச் சாடிக்கொண்டு அவர்களை எதிர்கொண்டு அழைக்க முன்னேறினர். போர் முனையில் இருவேறு திசைகளிலிருந்து வந்து ஒன்று கலக்கும் சகோதரப் பட்டாளங்களைப் போல, மதுரை நகர மக்களும் பட்டினிப் பட்டாளத்தினரும் சந்தித்தனர். "வாழப் பிறந்தோம்" என்று பட்டினிப் பட்டாளத்தார் கோஷம் எழுப்பினார்கள்.

"சாகமாட்டோம்!" என்று கடலலை பொங்கியது! போல் எதிரொலி கிளப்பினர் மதுரை மக்கள்.

மணி ஓடோடியும் முன் சென்று, பட்டினிப் பட்டாளத்தின் தலைவருக்கு மாலையிட்டான். மக்களின் ஆரவாரம் சாலை மரங்களிலெல்லாம் மோதி எதிரொலித்தது. மணியைத் தொடர்ந்து பற்பல சங்க நிர்வாகிகளும், தொழிலாளிகளும் பட்டினிப் பட்டாளத்தின் தலைவருக்கும், படையினருக்கும் மாலைகள் சூட்டி வரவேற்றனர்.

மணியின் உள்ளம் அந்தப் பட்டாளத்தினரைச் சந்தித்தது முதற்கொண்டு இன்னதென அறிய முடியாத இன்ப உணர்ச்சிக்கும், பரபரப்புக்கும் ஆளாகிப் புளகித்தது. இன்னது பேசுவதெனத் தெரியாமல், அவர்களிடம் தொடர்பற்றுப் பல கேள்விகளைக் கேட்டு விசாரித்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில், பட்டாளத்தினரும், கூடியிருந்த மதுரை மக்களும் அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, கோஷங்களை முழக்கிக்கொண்டு நகரை நோக்கிக் கிளம்பினர்.

"வாழப்பிறந்தோம். சாகமாட்டோம்!"

"வேலைகொடு அல்லது சோறுகொடு!"

மதுரை நகரின் பிரதான வீதிகளில் இந்த முழக்கங்கள்' விம்மியெழுந்தன, சூறைக் காற்றைப் போல் கோஷித்துக் கொண்டு அலைபுரண்டு வரும் கட்டாற்று வெள்ளம் போல் முன்னேறிக் கொண்டு பட்டினிப் பட்டாளத்தார் மதுரை நகரை வலம் வந்தார்கள்; அந்த போர்ப் படையினரின் கோஷம், நீண்டு வளர்ந்த மதுரை நகரத்தின் கட்டிடங்களுக்குள்ளும், கட்டிடங்களுக்குளே சுசுவாசம் செய்யும் மனிதர்களின் உள்ளத்துக்குள்ளும் புகுந்து மோதியது. ஆயிரமாயிரம் மக்கள் நகர வீதிகளின் இருமருங்கிலும் கூடி நின்று, பட்டினிப் பட்டாளத்தை வரவேற்றார்கள்; பட்டினி பட்டாளத்தாரின் கோஷங்களைத் தாமும் கோஷித்தார்கள்; பலர் அந்தப் பட்டாள அணிகளோடு கலந்து கொண்டார்கள்.

அந்தப் பட்டாளத்தின் முன்னணியில் நின்று மணியும், ராஜுவும் கோஷங்களிட்டுச் சென்றார்கள்; அந்தக் கோஷங்களைத் தான் சொல்லி முடிந்தபின், அந்தக் கோஷங்களுக்கு எதிரொலியாக அணி வகுப்பிலிருந்து எழுந்து அலை மோதித் திரண்டு வரும் எதிரொலியைக் கேட்டு, மணியின் உள்ளம் சிலிர்த்தது; உடம்பில் என்றுமில்லாத புதுப் பலமும், உணர்ச்சியும் ஊறிப் பெருகித் ததும்புவது போல் அவனுக்குத் தோன்றியது.

ஆவணி வீதியின் ஈசான மூலை கடந்ததும், பட்டாளத்தின் முன் வரிசையிலிருந்த ஒரு ஊழியர் மெகாபோன் மூலம் மக்களுக்கு அறிவித்தார்.

"மதுரைமக்களே! இந்த அரசாங்கம் நெசவாளர்களின் வயிற்றில் அடித்துவிட்டது. அவர்கள் தம் வாழ்க்கைக்காகப் போராடி முன்னேறி வருகிறார்கள்; அருப்புக்கோட்டை, சாத்தூர், சீவில்லிப்புத்தூர் முதலிய ஊர்களிலிருந்து இந்த நெசவாளிகள் பட்டினிப் பட்டாளமாகக் கிளம்பி, சென்னை நோக்கிக் கால் நடையில் செல்கிறார்கள். சிங்கத்தின் குகையிலேயே சிங்கத்தோடு போராடுவது போல், இவர்கள் தம்மை வஞ்சித்த அரசியலாரோடு உரிமைக்காகப் போராடுவதற்காக, இந்தப் புனித யாத்திரையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்று உபசரித்து ஆதரவளித்து வழியனுப்பி வைப்பது நம் கடமை. எனவே, எல்லோரும் இவர்களுக்கு உணவு வழங்குவதற்காகவும், வழிச் செலவுக்குக் கொடுத்து உதவுவதற்காகவும் பொருளுதவி செய்ய வேண்டுகிறோம்...."

ஊழியரின் அறைகூவல் வீண் போகவில்லை. கோஷமிட்டு முன்னேறிச் செல்லும் பட்டாளத்தினருக்குத் தெருவில் நின்ற மக்கள் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன் வந்தார்கள்.படையின் முன்னணியில் துண்டை விரித்தவாறு சென்று கொண்டிருந்த ஊழியரின் முந்தியில் செப்புக் காசுகளும் வெள்ளி நாணயங்களும் வந்து விழத் தொடங்கின.

வேலை கொடு அல்லது வெளியேறு"

"மக்கள் சர்க்கார் வேண்டும்!

நிமிர்ந்த நன்னடையோடு நேர் கொண்ட பார்வை யோடு பட்டினிப் படை வீதிகளை வலம் வந்தது. பல வீடுகளில் பெண்கள் வாசலில் கோலமிட்டு, ஊர்வலத்தை வரவேற்றார்கள், பற்பல சங்கங்கள் அவர்களுக்கு மாலை மரியாதை செய்து வரவேற்றன; ஒரு வாசகசாலை அன்பர்கள் அந்தப் பட்டாளத்தினரைத் தமது இடத்தில், நிறுத்தி, சிரம பரிகாரமாய்ப் பானகமும், மோரும் கொடுத்து உபசரித்தார்கள்; சிலர் ஊர்வலத்தினருக்குக் கடைகளிலிருந்து பலகாரங்களும் தின்பண்டங்களும் வாங்கி வழங்கினார்கள்.

ஊர்வலம் மதுரை மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் திரட்டிப் பலம் பெற்றவாறு, மதுரை நெசவாளர் சங்கத்துக்கு வந்து சேர்ந்தது; சங்க முகப்பில் சூரிய ஒளியில் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நின்ற சங்கக் கொடி 'அந்த ஊர்வலத்தினரைக் கண்டதும், அதிக உற்சாகத்துடன் படபடத்து அவர்களை வரவேற்பது போல் காற்றில் ஆடியது.

பட்டினிப் பட்டாளத்தினர் அன்று நெசவாளர் சங்கத்திலே தங்கினார்கள். நெசவாளர் சங்க ஊழியர்கள் அவர்களுக்கு அன்று மதியம் வடை பாயசத்தோடு விருந்தளித்து உபசரித்தார்கள்; மணி அந்த நெசவாளர் படையினரை உபசரிப்பதிலும், அவர்களோடு பேசி அவர்கள் சிரமங்களைக் கேட்டறிவதிலும் மிகுந்த பிரயாசையும், கவனமும் எடுத்துக் கொண்டான். பட்டாளத்திலிருந்த நெசவாளர்கள் பலரும் மானத்தோடு பிழைத்து வந்தவர்கள். தங்கள் குடும்பத்தின் கஷ்ட நிலைமைகளையும் பசிக் கொடுமையையும், அவர்கள் வெளியே தெரியாமல் மறைத்து வைத்து, மானத்தோடும், கௌரவத்தோடும் வாழ முயன்றார்கள். ஆனால் பசித்து அழும் குழந்தை குட்டிகளின் முகங்களும், குழந்தைகளுக்குப் பதில் சொல்ல வகையற்று வாயடைத்துக் கண்ணீர் விட்டு நிற்கும் மனைவிமார்களின் முகங்களும்தான் அவர்களைத் தன்னுணர்வு கொள்ளச் செய்தன. உள்ளுக்குள்ளேயே சூடேறிச் கொண்டு வரும் தண்ணீர் எப்படித் தன் கொதிநிலை வந்ததும் திடீரென்று கொப்புளங்களை வாரியிறைத்துத் துள்ளிக் குதித்துக் கொதிக்க ஆரம்பிக்கிறதோ, அதேபோல, அவர்கள் மனத்துக்குள்ளாகவும் நித்த நித்தம் சூடேறிக் கொதித்து வந்த அவர்களது கஷ்ட நிலைமை அவர்களை ஒரு நாள் கொதித்தெழச் செய்துவிட்டது; கொதிக்கின்ற தண்ணீரைப் போல் அவர்கள் குமுறியெழுந்து தங்கள் விமோசனத்துக்காகப் போராட முன்வந்தார்கள். தங்கள் கோரிக்கைகளை அரசாங்கத்துக்குத் தெரிவித்தார்கள்; ஆனால், அதற்கு எந்தவிதப் பிரதிபலனையும் பெறாத காரணத்தால், தலைநகருக்கே சென்று போராடுவது என்று துணிந்து புறப்பட்டு விட்டார்கள்.

அந்தப் பட்டாளத்தில் வாலிபர்கள் இருந்தார்கள்; வயோதிகத்தன்மையை எட்டிப் பிடித்தவர்களும் இருந்தார்கள்; அரசியல் உணர்ச்சி கொண்டவர்கள் இருந்தார்கள்; அரசியலின் போக்கை அறியாதவர்களும் இருந்தார்கள், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தார்கள் தெய்வ நம்பிக்கை அற்றவர்கள் இருந்தார்கள்; காங்கிரஸ் தலைவர்கள் மீது விசுவாசம் இழந்தவர்களும் இருந்தார்கள்; இழக்காதவர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் கஷ்டங்களைப் போக்க இந்த சர்க்கார் வேண்டிய முயற்சிகளைச் செய்யவில்லை என்ற உண்மையை மட்டும் பரிபூரணமாக உணர்ந்திருந்தார்கள்; பசிப் பிரச்னை இவர்கள் அனைவரையும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கச் செய்தது...

அந்தப் படையில் உள்ள ஒரு வயோதிகம் தட்டிய மனிதரைக் கண்டு, "என்னய்யா, நீங்ககூட இந்த வயதிலே இப்படிப் புறப்பட்டு வந்திட்டிங்களே என்று அனுதாபத்தோடும் ஆச்சரியத்தோடும் கேட்டான் மணி.

அந்தக் கிழவர் தந்த பதில் அவனைத் திடுக்கிட வைத்தது.

"ஆறிலும் சாவு, நூறிலும் சாவுதான், தம்பி. ஆனா, எந்தச் சாவானாலும், ஊரிலே கிடந்து கஷ்டப்பட்டு அவச்சாவு சாகக்கூடாது; சாகிறதே சாகிறோம். தல்ல காரியத்துக்காக உயிரைவிட்டோம்னாவது இருக்கட்டுமே!"

விழுந்த வயோதிகரின் உறுதியும், நம்பிக்கையும் மணியின் மனத்தில் சில்லிட்டுப் பரந்தது. அவன் அவரைப் பார்த்துச் சொன்னான்.

"பெரியவரே! நீங்கள் இனிச் சாகவேண்டியதில்லை. வாழ்வதற்குரிய மார்க்கத்தில் வந்து விட்டீர்கள். உங்களைச் சாகடிக்கும்படி நாங்கள் விட்டுக் கொண்டிருக்கமாட்டோம்!”

மனியின் குரலில் உறுதியும், நம்பிக்கையும் பிரதிபலித்தன.

பட்டினிப் பட்டாளத்தினருக்கு ஆதரவாக இன்று மதுரையிலே பல தொழிலாளர்கள் ஊர்வலம் நடத்தினார்கள், பல தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் நிறைவேற்றின; மாலையில் அவர்களுக்கு ஆதரவாக, ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. பொதுக் கூட்டத்தில் ராஜுவும், பட்டினிப் பட்டாளத்தின் தலைவரும் பேசினார்கள். பத்தாயிரம் மக்களுக்குக் குறைவில்லாமல் கூடியிருந்த அந்தக் கூட்டம் பட்டினி நெசவாளருக்குத் தன் ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியது.

மறுநாட் காலையில் பட்டினிப் பட்டாளத்தினர் மதுரையிலிருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்; மீண்டும் அவர்கள் தமது கோஷங்களைக் கோஷித்துக்கொண்டு நகர வீதிகளைக் கடந்து வடக்கு நோக்கிக் கிளம்பினார்கள்; மதுரை நெசவாளர் சங்க ஊழியர்கள் பலரும் ராஜுவும் மணியும் மதுரை நகர் எல்லைப் புறம் வரையிலும் அவர்களோடு துணை சென்று வழியனுப்பினார்கள்.

பட்டாளத் தலைவர் விடைபெறும் போது "மதுரை மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவியுங்கள். அவர்கள் அளித்த ஆதரவுக்கும் உபசரணைக்கும் எங்கள் வந்தனத்தைத் தெரிவியங்கள். நாங்கள் சென்று வருகிறோம்" என்றார்.

ராஜு அவர் கையைப் பிடித்து விடைபெற்றவாறே, அங்கு கூடியிருந்த மக்களை நோக்கிப் பேசினார்; "நீங்கள் வாழவேண்டும் என்ற புனிதப் போரில் ஈடுபட்டிருக்கிறீர்கள். சென்னைக்குச் செல்கின்ற நீங்கள் தொகையில் ஒரு சிலராக இருக்கலாம். ஆனால் உங்களோடு உங்கள் காலடிபட்ட மண்ணிலுள்ள மக்களின் இதயங்களெல்லாம் துணையாக வருகின்றன என்பதை மட்டும் நீங்கள் மறந்து விடாதீர்கள். தீரமாகப் போராடுங்கள். வெற்றி வீரர்களாகத் திரும்பி வாருங்கள்."

பட்டினிப் பட்டாளப் படையினரின் கோஷங்கள் தூர தொலையில் ஒலித்தன. அந்தப் படையினர் கண் மறையும் வரையிலும் மணியும் மற்றவர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் கோஷங்களும் உருவங்களும் மறைந்து, அவர்கள் சென்ற திக்கில் எழும்பி தின்ற புழுதி மண்டலம் படிந்து தெளிவுற்ற பிறகும், மணி அந்தத்திசையிலிருந்து கண்களைத் திருப்பாமல் அப்படியே நின்றான். அவன் உள்ளம் ஏதோ ஒரு பார உணர்ச்சிக்கு ஆளானது போல் பெருமூச்செறிந்து விம்மியது. அவன் கண்களில் காரண காரியமறியாமல் கண்ணீர் துளிர்த்து மறைத்தது. அவன் ஏதோ தனக்கு நெருங்கிய நண்பர்களை இழந்து விட்டது போல் உணர்ந்தான். அந்த உணர்ச்சி அவன் மனத்தில் திடீரென்று ஏதோ ஒரு சூனிய வெளியை உண்டாக்குவது போல் தோன்றியது.'நானும் அவர்களுடன் சேர்ந்து போயிருந்தால்.? என்று அந்தரங்க ஆசை அவன் மனத்தின் அடித்தளத்தில் குறுகுறுத்து இதய வேதனையை அதிகப்படுத்தியது. அவன் மீண்டும் பெருமூச்செறிந்தான்.

"என்ன மணி திரும்ப வேண்டாமா?' என்ற ராஜுவின் குரல் கேட்டதும் தான் அவனுக்குத் தன்னுணர்வு மீண்டது.

திரும்பி நடந்தான். வழியில் அவன் யாருடனும் எதுவும் பேசவில்லை பேச முடியவும் இல்லை.

பத்திரிகைகளில் தினம் தினம் பட்டினிப் பட்டாளத்தினரின் யாத்திரையைப் பற்றிச் செய்திகள் வந்தன, அவற்றை மணி ஆர்வத்தோடு படித்தான். அந்தப் பட்டாளத்தாருக்கு நகர மக்களும் கிராம மக்களும் பல ஊர்களில் வரவேற்பு அளித்துக் கௌரவித்த செய்திகளைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தான்.அப்போதெல்லாம் அவன் 'தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்:

'அவர்களை விட்டுப் பிரிய நேர்ந்ததற்காக நான் ஏன் வருத்தப்பட்டேன்? என்னைப் போல் எத்தனை ஊர்களில் எத்தனை பேர்கள் வருந்தியிருப்பார்கள்? அவர்களைப் பிரிவதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது? அவர்கள் போராட்டத்துக்கு நாடெங்கிலுமுள்ள மக்கள் குலத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் திரட்டிக்கொடுப்பதே நம் வேலை. நமது போராட்டத்தின் முன்னணிப்படை அவர்கள். நாம் பின்னணிப்படை. அவர்கள் எங்கிருந்தாலென்ன? அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்காகப் போராட விரும்பும் என் இதயமும் அவர்களோடு இருக்கும்! என் போன்ற எத்தனையோ தோழர்களின் இதயங்களும் அவர்களுக்குத் துணை நிற்கும். அது ஒன்றுதான் நமக்கும் ஆறுதல்; அவர்களுக்கும் தைரியம்....

பட்டினிப் பட்டாளத்தார் வந்து சென்ற பிறகு மணி மீண்டும் சங்க வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டான். அந்தப் பட்டாளத்து மக்களின் உறுதியும் வைராக்கியமும் போராட்ட மனப்பான்மையும் அவனுக்குத் தீபஸ்தம்பம் போல் ஆதர்சம் காட்டின...

நெசவாளர் பட்டாளத்தின் வரவு மணிக்கு எத்தனை பரபரப்பையும் பொறுமையின்மையையும் ஊட்டியதோ, அதைவிடப் பன்மடங்கு பரபரப்பும் பொறுமையின்மையும் தரக்கூடிய ஒரு நிகழ்ச்சி மணிக்காகக் காத்திருந்தது.

அப்போது ராஜு ஊரிலில்லை. அவர் சென்னையில் நடைபெறவிருந்த ஒரு தொழிலாளர் மகாநாட்டுக்காகச் சென்றிருந்தார். அந்த வேளையில் மணி தான் காரியாலயத்தின் முழுப் பொறுப்பையம் கவனித்து வந்தான். ஒரு நாள் அவன் முக்கியமான கடிதம் ஒன்றைக் காணாமல், அறை முழுவதும் தேடினான். அலமாரியிலும் பீரோவிலும் தேடி விட்டான். புத்தகங்கள் அத்தனையும் பிரித்துப் பார்த்துச் சலித்துவிட்டான்: குப்பைக் கூடையைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை.

'ஒரு வேளை ராஜுதான் அதை எங்கேனும் எடுத்து வைத்திருக்கிறாரோ?” என்ற சந்தேகம் தட்டியதும், அவன் ராஜுவின் துணிமணிகள் இருந்த பெட்டிகளையும் திறந்து தேடத் தொடங்கினான். துணிமணிகளை யெல்லாம் வெளியே இழுத்துப் போட்டுப் பார்த்தும், அந்தக் கடிதத்தைக் காணவில்லை; அதற்குப் பதில் ராஜுவின் பெட்டியின் அடியில் கிடந்த புகைப்படம் தான் அவன் கையில் அகப்பட்டது.

மணி அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். அதைப் பார்த்தவுடனேயே அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் கைகள் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கின, மறு கணமே அவன் அந்தக் கடிதத்தை மறந்துவிட்டான், அந்தப் படத்தில் பதித்த கண்ணை வாங்க முடியாமல் அப்படியே பிரமித்து விட்டான்,

அந்தப் புகைப்படத்தில் இருளப்பக் கோனாரும், அவர் மனைவி மாரியும் இருந்தார்கள்!

தனக்கு ஏற்பட்ட திக் பிரமையிலிருந்து விடுபட்ட மணியின் மனத்தில் எண்ணற்ற கேள்விகளும் சந்தேகங்களும் சரக்கூடம் வகுத்து அவனைப் பிணித்தன. அவன் அந்தப் படத்தைக் கையிலெடுத்துக் கொண்டு வெளியே வந்தான். படத்தைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு இருளப்பக் கோனாரின் நினைவும், அவரது விகவாச புத்தியும் நினைவுக்கு வந்தன. ஆனால், இருளப்பக் கோனாரைப் பற்றிய நினைவுகளையெல்லாம் மிஞ்சி, மணியின் மனத்தில் படத்தைப் பற்றிய சந்தேகங்களே வலுத்தன.

'இந்தப் படம் இங்கே எப்படி வந்தது? ராஜுவுக்கும் இருளப்பக் கோனாருக்கும் என்ன சம்பந்தம்? இருளப்பக் கோனாரை இவருக்குத் தெரியுமா? இவர் அவருக்கு உறவினரா_'

மணியின் மனத்தில் திடீரென்று இருளப்பக் கோனாரின் காணாமற்போன மகன் வீரையாவைப் பற்றிய நினைவு வந்தது.

'ஒரு வேளை இருளப்பக் கோனாரின் மகன் வீரையாவை ராஜுவுக்குத் தெரிந்திருக்குமோ? வீரையாவை ராஜுக்குத் தெரிந்திருந்தது என்றே வைத்துக் கொண்டாலும், இந்தப் படம் ராஜுவின் பெட்டியில் இருப்பானேன்? ஒருவேளை வீரையாதான் இந்தப்படத்தை இவரிடம் கொடுத்து வைத்திருந்தானோ? ஏன் கொடுத்து வைக்க வேண்டும்? அல்லது வீரையா இறந்து போய் விட்டானோ? ராஜு அவன் ஞாபகார்த்தமாக இந்தப் படத்தைவைத்திருக்கிறாரோ?ஞாபகார்த்தமாக இருளப்பக் கோனாரின் படத்தை ஏன் வைத்திருக்க வேண்டும்...? : 'ஒன்றுமட்டும் தெரிகிறது. வீரையாவை ராஜுவுக்குத் தெரியும். வீரையா எங்கிருக்கிறான்? அவனைப் பற்றி ராஜு ஒருமுறை கூடப் பிரஸ்தாபித்ததில்லையே. ஒரு வேளை அவனும் இவரை மாதிரி எங்கேனும் தேச சேவை செய்கிறானா? அல்லது சிறையில் இருக்கிறானோ...?'

மணியின் மனம் அந்தப்படத்தை வைத்துக்கொண்டு என்னென்னவோ சந்தேகங்களை வாரியிறைத்து மேலே போட்டுக்கொண்டு, அவற்றின் பாரத்திலிருந்து வெளிவர முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் ராஜுவும் இங்கில்லையே என்று அவன் மனம் மீண்டும் மீண்டும் எண்ணியெண்ணி வருந்தியது. அவன் அந்தப் படத்தைப் பற்றிய மர்மத்தை அறிந்து கொள்ளத் துடியாய்த் துடித்தான். அந்தப்படத்தைக் கையோடு எடுத்துக்கொண்டு ராஜுவை நன்கறிந்த நெசவாளர் ஊழியர்களைத் தேடிச் சென்றான். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தப் படத்தைக் காட்டி, இந்தப் படத்திலுள்ளவர்களைத் தெரியுமா?' என்று கேட்டான். 'ராஜுவுக்கும் இருளப்பக் கோனாருக்கும் என்ன சம்பந்தம்' என்று விசாரித்தான்.

அவனுக்கு உண்மை புலப்பட வெகுநேரம் ஆகவில்லை.

"இந்தப் படத்திலுள்ளவர்களை எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லுகின்ற வீரையாவை எனக்குத் தெரியும்!" என்று அமுத்தலாகப் பதில் அளித்தார் ஒரு ஊழியர்.

"வீரையாவை உங்களுக்குத் தெரியுமா?" என்று வியந்து கேட்டான் மணி.

"நம்ம யூனியன் காரியதரிசி ராஜுதான் வீரையா!" என்று நிர்விசாரமாய்ப் பதில் அளித்தார் அவர்.

"என்னது?" என்று பிளந்த வாய் மூடாமல் பிரமித்து நின்று விட்டான் மணி. "என்ன? உங்களுக்கு இத்தனை நாள் தெரியாதா?"

அவன் மனத்தில் ஒரு புறத்தில் மகிழ்ச்சியும், மறு புறத்தில் ஆச்சரியமும் மாறி மாறித் தோன்றின; அவனால் தன் மகிழ்ச்சியையோ, ஆச்சரியத்தையோ வார்த்தை வடிவில் வெளியிட முடியவில்லை; திடீரென்று தன்னை ஆட்கொண்ட உணர்ச்சிப் பரவசத்திலிருந்து மீண்டு, தன்னிலைக்கு வர அவனுக்குச் சிறிது நேரம் பிடித்தது.

உடனே மணி அந்த ஊழியரைக் கையோடு சங்கத்துக்குக் கூட்டி வந்து அவரிடம் ராஜுவின் வரலாற்றையெல்லாம் ஆர்வத்தோடு விசாரித்துக் கேட்டான். அந்த ஊழியரும் ராஜுவைப் பற்றித் தாம் அறிந்திருந்த செய்திகளையெல்லாம் விளக்கிச் சொன்னார்.

-ராஜுவின் சொந்தப் பெயர் வீரையாதான். கடந்த வருஷங்களில் காங்கிரஸ் சர்க்கார் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டபோது, ராஜு தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அந்தக் காலத்தில் தான் அவர் தம் பெயரை 'ராஜன்' என்று மாற்றி வைத்துக் கொண்டார். நெசவாளர்களுக்கு ராஜு என்ற பெயரே பழகிப் போனதாலும், பிடித்திருந்ததாலும், வீரையா அந்தப் பெயரையே ஸ்திரமாக்கிக் கொண்டார். நெசவுத்தொழிலாளர் சங்கத்தில் பணியாற்றுவதற்கு முன்பு அவர் மதுரையிலுள்ள பஞ்சாலையில் வேலை பார்த்தார். பஞ்சாலைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய காலத்தில் ராஜு முன்னணியில் நின்று போரடினார். பின்னால், அவரைப் பழி வாங்கும் நோக்கத்தோடு பஞ்சாலை நிர்வாகஸ்தர்கள் அவர் ஒரு பயங்கர அரசியல்வாதி என்ற குற்றத்தைச் சாட்டி, வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள். அது முதற்கொண்டு அவர் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபடுகிறார். நெசவாளர் சங்கத்தின் காரியதரிசியாக இருந்து பணியாற்றி வருகிறார்.பஞ்சாலையில் வேலை பார்ப்பதற்கு முன்னால், அவர் எங்கோ தேயிலைத்தோட்டத்தில் வேலை பாத்ததாகக் கேள்வி.

மணி அந்த ஊழியரை மாறிமாறிக் கேள்விகள் கேட்டு இத்தனை விவரங்களையும் கிரகித்துக் கொண்டான்.

அன்று முதல் அவனுக்கு ராஜு எப்போது வந்து சேருவார் என்ற கவலையே பெரிதாய்ப் போய்விட்டது. அன்று அவர் வரமாட்டார் என்று தெரிந்தும்கூட ஒரு வேளை தப்பித் தவறி வந்துவிட மாட்டாரா என்ற அசட்டு நம்பிக்கையோடு ரயில்வே ஸ்டேஷன் வரையிலும் அர்த்த மற்றுச் சென்று திரும்பி அங்கலாய்த்தான்.

'ராஜு என்று வருவார்?'

அவரை எதிர்பார்த்து தவித்துக் கொண்டிருந்தான் மணி.

கடைசியில் ஒருநாள் அவர் வந்து சேர்ந்தார்.

"ராஜுவைக் கண்டதும் மணிக்கு இன்னது பேசுவதென்று தெரியவில்லை. உணர்ச்சி மேலீட்டால் அவன் வாய் அடைத்துப் போய்விட்டது.

"என்ன மணி? சௌக்கியந்தானே" என்று கேட்டுக் கொண்டே ராஜு தமது பையை உள்ளே கொண்டு வந்து வைத்தார்; சட்டையைக் கழற்றி ஸ்டாண்டில் மாட்டினார். "மகா நாடு எல்லாம் சிறப்பாக இருந்ததா?" என்று கேட்டான் மணி.

"மிகச் சிறப்பாக நடந்தது!” என்றார் ராஜு.

மணி தன் தொண்டையை லேசாக இருமிச் சரிப்படுத்திக் கொண்டு, "ராஜு, நான் இப்போது உங்களைப் பிரமிக்க வைக்கப் போகிறேன்" என்று கூறிக்கொண்டே தன் பையில் வைத்திருந்த புகைப்படத்தை எடுத்து அவர் முன் நீட்டினான். "இது எங்கே கிடந்தது கொஞ்ச நாளைக்கு முன்னால், நான் இதைத் தேடித் தேடிப் பார்த்துவிட்டு, தொலைந்து போயிற்று என்றல்லவா முடிவு கட்டிவிட்டேன்!" என்று சாவதானமாகச் சொன்னார் ராஜு,

"சரி உங்கள் பேர் வீரையாதானே? இவர்கள்தானே உங்கள் பெற்றோர்?"

"ஆமாம்."

மணிக்குக் குதுாகலம் தாங்க முடியவில்லை. அவன் ராஜுவை உட்கார வைத்து, தான் அறிந்து கொண்ட சகல விவரங்களையும் இருளப்பக் கோனாரைப் பற்றிய செய்திகளையும் கூறினான். அதைக் கேட்ட ராஜூ பிரம்மிப்பு அடைந்தார்.

"அப்படியானால், என் பெற்றோர்கள் உயிரோடிருக் கிறார்களா?"

"ஆமாம். உங்களைப்பற்றி அவர்கள் நினைத்து வருந்தாத நாள் இல்லை. அது சரி நீங்கள் ஏன் அவர்களுக்கு ஒரு கடுதாசி கூடப் போடலை?"

'போட்டேன் மதுரைக்கு வந்து வேலைக்கு அமர்ந்த பிறகு ஒரு கடிதம் போட்டேன் விலாசதார் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. அதிலிருந்து அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது. இந்தப் படம் ஒன்றுதான் அவர்கள் ஞாபகார்த்தமாக என்னிடம் இருக்குது. இது அவர்கள் எப்போதோ சங்கரன் கோயில் தவசித் திருநாளுக்குப் போயிருந்த போது எடுத்த படம்."

"சரி, நீங்கள் இத்தனை நாளும் என்னிடம் உங்கள் வரலாறு பற்றி என் சொல்லவில்லை? கடைசியில் நானாகத் தானே உங்களைக் கண்டுபிடித்தேன்!" என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டான் மணி "சொல்வதற்குச் சந்தர்ப்பம் கிட்டவில்லை அவ்வளவு தான். ஆனால், நீங்கள் உங்கள் கதையைச் சொன்னபோது கூட என் தந்தையின் பெயரைப் பிரஸ்தாபித்தாக ஞாபகம் இல்லையே!” என்று ஏதோ யோசித்தவாறு கூறினார் ராஜு.

"அப்படியா?" என்று மணியும் வியப்படைந்து கூறினான். பிறகு அவன் ராஜுவிடம் திரும்பி, "ராஜு, என் தந்தை சாகும் வரையிலும் உங்களைக் கண்டுபிடித்து, உங்கள் பெற்றோரிடம் சேர்த்து விடவேண்டும் என்று எவ்வளவோ தேடினார். கடைசியில் நான் தான் உங்களைக் கண்டுபிடித்தேன்!" என்று குதூகலத்தோடு கூறினான்.

ராஜு மெல்லச் சிரித்துக் கொண்டார்.

"நானும் உங்களைப் பிரமிக்க வைக்கப் போகிறேன், நாம் இன்னும் சில தினங்களில் அம்பாசமுத்திரம் போகிறோம்."

அம்பாசமுத்திரத்துக்கா?பெற்றோரைப்பார்க்கவா?" "பார்க்க வேண்டியதுதான். ஆனால், இது ஏற்கெனவே முடிவு செய்த திட்டம். சென்னை மகா நாட்டுக்கு, அம்பாசமுத்திரத்திலிருந்து ஒருவர் வந்தார். அம்பாசமுத்திரத்தில் ஒரு நெசவாளர் சங்கம் ஆரம்பித்து நன்கு வேலை செய்கிறதாம். அங்கு யாராவது பேச வரவேண்டும் என்று அங்குள்ள நெசவாளர்கள் கேட்டுக் கொண்டார்களாம். அவர் என்னை வரும்படி அழைத்தார். சரி என்று ஒப்புக்கொண்டு தேதியும் குறிப்பிட்டுவிட்டேன். தெரிந்ததா?"

மணி அவரது பேச்சைச் சரியாகக்கூடக் காதில் வாங்கவில்லை. அதற்குள் அவன் மனம் அம்பாசமுத்திரத்துக்கு ஓடிச் சென்றுவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/023-028&oldid=1684081" இலிருந்து மீள்விக்கப்பட்டது