உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/026-028

விக்கிமூலம் இலிருந்து

26

அன்றிரவு இருளப்பக் கோனாரின் குடிசை கல்யாண வீடுபோல் என்றுமில்லாத குதூகலத்தோடும் கலகலப் போடும் விளங்கியது.

பொதுக் கூட்டத்துக்குச் சென்றிருந்த இருளப்பக் கோனார் அங்கு தம் மகனையும், மணியையும் காண்போம் என்று எதிர்பார்க்கவேயில்லை. எதிர்பாராத அந்த அதிசயம் அவர்முன் எதிர்ப்பட்ட போது அவர் இன்னது பேசுவதென்றே தெரியாமல் கண்ணீர் சிந்திவிட்டார். மணியை அவர் கண்டதும், "மணி!", என்று கத்திக்கொண்டு அவனைப் போய்க் கட்டிக் கொண்டார். இருவரும் உணர்ச்சிப் பரவசத்தால் வாயடைத்து நின்ற சமயத்தில், அருகில் நின்ற ராஜு "அப்பா!" என்று கம்மியடைத்த குரலில் அழைத்தான். 'அப்பா!' பத்து வருஷங்களாகக் கேட்காத குரல், கேட்பதற்காகத் தவித்துக் கொண்டிருந்த குரல் காதில் விழுந்ததும் இருளப்பக் கோனாரின் உடம்பில் ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஆட்சிக்குக் கட்டுப்படாத ஜீவரசம் ததும்பி ஒடுவது மாதிரித் தோன்றியது.

"வீரையாவா அவர் குரல் இத்தனை நாளும் பூத்துக் கிடந்த பாசத்தையும் ஆர்வத்தையும் விசிறிக் கொண்டு பிறந்தது.

மணி அவருக்குச் சகலவிஷயங்களையும் சுருக்கமாகச் சொன்னான்.

கூட்டம் முடியும் வரையிலும் இருளப்பக் கோனார் நிலை கொள்ளாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். யுகாந்திர காலமாக, ஊழுழி காலமாகக்கூட்டம் முடிவற்று நடந்து கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றியது. ஒவ்வொரு விநாடியும் மார்க்கண்டேயன் போல் மரணமோ மாற்றமோ இன்றி ஸ்தம்பித்து நிலைபெற்று நிற்பதுபோல் அவருக்குத் தோன்றியது.

அவர் பூமியிலே கால் தரிக்காமல் புழுங்கிக் கொண்டிருந்தார்; அவர் மனத்தில் தோன்றிய எல்லையற்ற குதூகலம் அவரது நரம்புக்கால்களிலெல்லாம் இன்ப ஜுர வேகத்தை ஏற்றுவது போலிருந்தது. அந்தக் குதுகுதுப்பில் அவர். மகிழ்ந்தார். வேதனையடைந்தார். சிரித்தார்; கண்ணீர் சிந்தினார்; பேசினார்; ஊமையானார்....

கூட்டம் முடிந்தவுடனேயே கோனார் தம் மகன் வீரையாவையும் மணியையும் விடாப்பிடியாய்க் குடிசைக்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். வடிவேலு முதலியாரும் பிற நெசவாளிகளும் தங்கள் தலைவர்களுக்குச் சாப்பாடு பண்ணி வைத்துவிட்டு, தாமே அழைத்து வருவதாகச் சொல்லியும், கோனார் ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்க விரும்பவில்லை. கடைசியில் மணியும் ராஜுவும் நெசவாளர்கள் புடை சூழ, கோனாரின் குடிசையை நோக்கிப் புறப்பட்டு வந்தனர். வடிவேலு முதலியார் அவர்களுக்கு முன்னால் ஒரு பேபி பெட்ரோமாக்ஸ் விளக்கைத் தூக்கிக் கொண்டு வழி காட்டிக் கொண்டு பெருமிதத்தோடு நடந்து சென்றார்...

தங்கள் குடிசையை நோக்கி, கையில் விளக்குடன் பல பேர் திரண்டு வருவதைக் கண்டவுடன், குடிசையின் வெளிப்புறத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தங்கமும் மாரியும் திடுக்கிட்டு பயந்து எழுந்து நின்றார்கள்.

தாய்மார்களைக் கண்டதும் ராஜுவும் மணியும் தங்களையும் மீறியெழுந்த உணர்ச்சிப்பெருக்கோடு "அம்மா!" என்று கத்திக் கொண்டு தத்தம் தாயை நோக்கி ஓடினார்கள்.

மகனை இழந்து தவித்துக் கொண்டிருந்த அந்த இரண்டு தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைத் திடீரென்று காண நேர்ந்த பிரமிப்பாலும், ஆனந்தத்தாலும், அதிர்ச்சியாலும் எண்ணற்ற உணர்ச்சிப் பரவசங்களுக்கு ஆளாகி, தங்கள் அன்பையும் தாகத்தையும் புலப்படுத்த வழி தெரியாமல் தவித்தார்கள், அவர்களுக்கு அழுகையும், சிரிப்பும், கண்ணீரும் மாறிமாறிப் பொங்கியெழுந்தன. அந்தத் தாய்மார்கள் ஆனந்தம் சொல்லில் அடங்காத சூட்சுமம்.

அந்த ஆனந்த வெறியிலிருந்து அவர்கள் தன்னிலை தெளிந்த பிறகு, வடிவேலு முதலியார்தான் அவர்கள் இருவரும் வந்து சேர்ந்த விவரத்தை அவர்களுக்குத் தெரிவித்தார்.

"என்னடா மணி? என்னை இப்படித் தவிக்க விட்டுட்டு ஓடிப் போயிட்டியே. ஒரு கடுதாசி கூடவா போடப்பிடாது?" என்று தன் அங்கலாய்ப்பை வெளியிட்டாள் தங்கம். "என்னை மன்னிச்சிடு, அம்மா. ஆனால், நான் அப்படி ஓடிப் போயிருக்காவிட்டால், வீரையாவைச் சந்தித்திருக்க முடியுமா?” என்று கூறித் தன் தாயைச் சமாதானப்படுத்தினான் மணி.

மகனின் சமத்காரமான பதிலைக் கேட்டு, தங்கம் ஏதோ புதுமையைக் கண்டதுபோல் புளகித்து விம்பினாள்.

மணியும் ராஜுவும் குடிசைக்கு வெளியே கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அங்கு குழுமியிருந்த நெசவாளர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களது கூேமலாபங்களையும், சங்க வேலைகளையும் விசாரித்தார் ராஜு சத்தியாக்கிரகத்தில் யார் யார் பங்கெடுக்கிறார்கள் என்பதை விசாரித்தார். சத்தியாக்கிரகப் போரில் அவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றியெல்லாம் அறிவுரைகள் கூறினார்.

புஸ்ஸென்று இரைந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கின் முன்னிலையில் அமர்ந்து சாவதானமாக வெற்றிலையைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் இருளப்பக் கோனார். தன் பிள்ளை அந்த நெசவாளிகளுக்கு அறிவுரை கூறுவதையும் அந்த நெசவாளர்கள் அவற்றைக் கவனத்தோடும் மரியாதையோடும் கேட்பதையும் கண்டு அவரது உள்ளம் கர்வத்தால் நிமிர்ந்தோங்கியது.

சிறிது நேரத்தில் இருளப்பக் கோனாரின் குடிசை முன்னால் சங்கரின் மோரீஸ் மைனர் வந்து நின்றது.

"சங்கரும் வந்துவிட்டான்!" என்றார் வடிவேலும் முதலியார்.

காரைவிட்டு சங்கரும் கமலாவும் பரபரப்போடு இறங்கி வந்தார்கள். கமலா அங்கு கூடியிருந்த மக்களையும் பொருட்படுத்தாமல், "அத்தான்/" என்று கூறிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தாள்; கமலா வருவதைக் கண்டதும், தங்கம்மாள் எழுந்து சென்று அவளை மார்போடு அணைத்து எதிர்கொண்டழைத்து வந்தாள்.

கமலாவைக் கண்டதும் மணி அத்தனை நாள் தன் உள்ளத்தின் அடித்தளத்திலே புதையுண்டு, தலை தூக்க முடியாது தவித்துக் கொண்டிருந்த ஆசையும் பாசமும் திடீரென்று கட்டவிழ்ந்து திமிறுவது போல் உணர்ந்தான்.

“வா, கமலா" என்று அவன் அவளை வரவேற்ற குரலில், அந்தப் பாசமெல்லாம் கலந்து பிரவகித்ததுபோல் இருந்தது.

கமலா மணியை கண்ட பரவசத்தில் இன்னது பேசுவதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அவளது மனநிலையை உணர்ந்த தங்கம்மாள் அவளைப் பரிவுடன் அணைத்தவாளே, "என்ன கமலா, பேசாம நிக்கிறே?" என்று கூறிக் கமலாவைத் தன்னிலைக்குக் கொண்டுவந்தாள்.

"அத்தை. இத்தனை நாள் ஆகியும் நீங்கள் தான் எங்க வீட்டுக்கு வரவில்லை. கடைசியில் நான் தான் உங்களைத் தேடி உங்கள் வீட்டுக்கு வந்தேன்" என்று புன்னகை குமிழ்ந்த பூரிப்போடு சொன்னாள் கமலா.

"என்னைத் தேடியா? இல்லை, அவனைத் தேடியா?" - ' என்று தங்கம் செல்லமாகக் கேட்டாள்.

கமலா தன் அத்தையின் குறும்புத் தனத்தைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து நின்றாள்; சங்கர் மணியுடன் போய் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான்.

இருளப்பக் கோனார் தட்டி வைத்திருந்த வெற்றிலையை வாயில் போட்டு ஒதுக்கிக் கொண்டே, "என்னமோ தெய்வம் இவ்வளவு சோதிச்சதுக்கப்புறம் தான் நம்மையெல்லாம் ஒண்ணா சேர்க்கணும்னு இருந்திருக்கு!" என்று மன நிறைவோடு சொல்ல முனைந்தார். ஆனால், அவரது மன நிறைவைத் திடீரென்று பறிக்க முயலும் பைசாசக் கரங்கள் போல், பிரகாசமான இரு பெருங்கொள்ளிக் கண்கள். அவர் முகத்தில் விழுந்து திரும்பின.

இருளப்பக்கோனார் ஏறிட்டுப்பார்த்தார்.

எதிரே தாதுலிங்க முதலியாருடைய காரின் ஹெட்லைட் வெளிச்சம் அவரது கண்ணொளியை மழுக்கி குருடாக்கி விடுவதுபோல் பிரகாசித்தது. மறுகணமே பயங்கரமாகப் பெருமூச்சு விட்டு அடங்கிய அந்தக் காரிலிருந்து தாதுலிங்க முதலியார் இறங்கி வந்தார்.

தாதுலிங்க முதலியாரைக் கண்டதும், அங்கு நிலவிய கலகலப்பும் குதூகலமும் வாயடைந்து. மௌனமாகி விட்டன. அவரது திடீர்ப்பிரவேசத்தால் எல்லோரும் தமது இடத்தை விட்டு எழுந்து நின்றனர்; குழுமி நின்ற நெசவாளர்கள் தம்மையறியாமலே அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

பிரளய கால ருத்ர மூர்த்தியைப் போல் தாதுலிங்க முதலியார் கோபாவேசமாக "கமலா!" என்று கத்திக் கொண்டு வந்து நின்றார்.

அந்தக் குரலைக் கேட்டதும், வேடனைக்கண்டு பயந்த மானைப்போல் இதயம் படபடக்க, தங்கம்மாளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் கமலா.

தாதுலிங்க முதலியார் கோபத்தால் பொருமி இரைந்து கொண்டு கமலாவை நோக்கிக் கத்தினார்;

"இந்த ஊதாரிப்பயல் மகனை அர்த்த ராத்திரிலே ' தேடி வர்ரத்துக்கு உனக்கென்னடி தைரியம்?"

அவர் உறுமிக் குமுறும் சப்தம் எல்லோருடைய காதிலும் விழுந்தது. தாதுலிங்க முதலியாரின் பேச்சைக் கேட்டதும் மணி சீறியெழுந்தான்.

"முதலியார்வாள் மரியாதையாய்ப் பேசுங்கள், அப்புறம் மரியாதை கெட்டுப்போகும்!" என்று உள்ளடங்கிய கோபத்தோடு எதிரொலி கிளப்பினான்.

"உங்கிட்டே என்னடா பேச்சு. என்று சீறியவாறே தாதுலிங்க முதலியார் கமலாவிடம் திரும்பினார். "கமலா வா வீட்டுக்கு, ம்!" என்று அதிகார தோரணையில் உறுமினார்.

கமலா இன்னது செய்வதெனத் தெரியாமல், தந்தையின் முன்னால் ஓடிச் சென்று நின்றவாறே, "அப்பா, உங்க கோபம் இன்னம் மாறலையா? அத்தானை ஏன் திட்டுறீங்க?" என்று பரிதாபகரமாகக் கேட்டாள்.

"இந்தப் பரதேசிப் பயலை அத்தான் என்று சொல்ல உனக்கென்னடி அத்தனை ஆணவம்?" என்று கடுகடுத்தார் முதலியார்.

கசையடிப்பட்ட சிங்கத்தைப்போல், மணி அந்தச் சொல்லைக் கேட்டுப் பொறுமையிழந்து தாதுலிங்க முதலியாரைத் தாக்க விரும்பிச் சாடினான்; அதற்குள் அருகிலிருந்த ராஜு அவனை இழுத்துப் பிடித்துத் தடுத்தார்.

கமலா தன் தந்தையின் கோபாவேசத்தைத் தாங்கி நிற்க முடியாமல், மன்றாடினாள்: "அப்பா, உங்கள் பெண் நல்லபடியாய் வாழ்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நான் மணந்தால் அத்தானைத்தான் மணப்பேன். இல்லாவிட்டால் என் பிணத்தைத்தான் காண்பீர்கள்?" என்று உறுதியோடு பேசினாள் கமலா. அவளையும் மீறி அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்தோடியது.

"என்னடி, நாடகமாடுறே?" என்று கிண்டலும் கோபமும் கலந்த குரலில் சினந்து குமுறியவாறு, தாதுலிங்க முதலியார் கமலாவின் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டு செல்ல முனைந்தார்.

"அப்பா! அப்பா!" என்று கமலா கதறிய குரல் அந்தகார. இருளின் அமைதியைக் குலைத்துப் பயங்கரமாக ஒலித்தது.

இத்தனை நேரமும் தன் தந்தையின் ஆக்ரோஷத்தையெல்லாம் பொறுமையோடு சகித்துக்கொண்டு நின்ற சங்கர் பொறுமையை இழந்து விட்டான். உடனே அவன் ஓடோடிச் சென்று, தன் தங்கையைத் தன் தந்தையின் பிடியிலிருந்து பலவந்தமாக விடுவித்து, அவளைப் பின்னால் போகச் சொல்லி விட்டு, பதியிட்டுத் தாக்க முனையும் புலி போல் தந்தையை முறைத்துப் பார்த்தான்:

"அப்பன் என்ற மரியாதைக்காக இத்தனை நாளும் பொறுத்துக் கொண்டிருந்தேன். இனிமேல் என் தங்கையின் இஷ்டத்தில் நீங்கள் குறுக்கிட நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்!" என்று வைரம் பாய்ந்த குரல் அவன் கண்டத்திலிருந்து வெடித்துப் பிறந்தது.

"குலத்தைக் கெடுக்கவந்த கோடாலிக் காம்பே! எனக்கே விரோதியாகி விட்டாயா?" என்று சீறினார் தாதுலிங்க முதலியார்.

"உங்களுக்கென்ன? உங்கள் வர்க்கத்துக்கே நான் விரோதிதான்"

"டேய் சங்கர்! நீ யாரிடம் பேசுகிறாய் என்பது ஞாபகமிருக்கட்டும்!"

'யாரிடமா? கேவலம், பணத்தாசையின் காரணமாக ஒரு. குடும்பத்தையே பலி வாங்கிய ரத்த பிசாசிடம் பேசுகிறேன். உங்கள் பேராசை கைலாச முதலியாரைப் பலி வாங்கியது போல், உங்கள் மமதைக்கு என் தங்கையைப்பலி கொடுக்க நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்!

"என்ன திமிரடா உனக்கு?" "எனக்கா, உங்களுக்கா?" என்று பளீரெனக் கேட்டு நிறுத்தினான் சங்கர்.

"மரியாதையாகக் கமலாவை என்னுடன் அனுப்பி விடு. இல்லையேல், நீங்கள் இரண்டு பேருமே என் வீட்டு நடையை மிதிக்க முடியாது!" என்று பயமுறுத்தினார் முதலியார்.

"கமலா ஒருத்திக்காகத்தான் நானும் இத்தனை நாள் உங்கள் வீட்டில் இருந்தேன். இனி நீங்கள் என்னைப் புறக்கணித்தாலும் கவலையில்லை!"

தாதுலிங்க முதலியார் அத்துடன் அடங்கி விடவில்லை. தம் மகன் தம்மை அத்தனை பேருக்கு முன்னாலும் வைத்து எதிர்த்துப் பேசுவதை, இழிவுபடுத்துவதை, அவரால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை; அவரது கோபம் விஷம் போல் தலைக்கேறிக் கனன்றது.

"டேய் சங்கர்! நீ லட்சாதிபதி தாதுலிங்க முதலியாரிடம் மோதிக் கொள்கிறாய் என்பது ஞாபகம் இருக்கட்டும். என் பண பலத்தால் உங்கள் எல்லோரையும் பூண்டற்றுப் புழுதி மூடிப் போகச் செய்ய என்னால் முடியும்" என்று அவர் பயமுறுத்தினார்.

"அந்தத் திமிரில் தானா இத்தனை பேச்சும்?உங்களுக்கு லட்சோப லட்சமாகப் பணம் இருக்கலாம். ஆனால், எங்களுக்குப் பின்னால் லட்சோப லட்சம் மக்கள் துணை நிற்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். ஜனங்களுக்கு விரோதமாகச் சென்றவர்களின் கதி தெரியுமா, உங்களுக்கு?" என்று ஆணித்தரமாகக் கேட்டான் சங்கர்.

"உன்னிடம் பாடம் படிக்க வரவில்லையடா, முட்டாள்.' "சரித்திரம் உங்களுக்குத் தானே பாடம் கற்றுக் கொடுக்கும். உங்களுக்கு மட்டுமல்ல, உங்களை அடிதாங்கி நின்று ஆதரித்துப் போற்றுகிறதே சர்க்கார், அதற்கும் கூடப் பாடம் கற்பிக்கும்!"

"துரோகி!"

"நானா துரோகி? சமூகத் துரோகியான நீங்கள் தியாகிகள் நிற்கும் இந்த நிலத்தில் நிற்கக்கூட யோக்கியதையற்றவர்கள். மரியாதையாகப் போய் விடுங்கள்!"

"போகாவிட்டால்." என்று சவால் விடுத்தார் தாதுலிங்க முதலியார்.

"பெற்றெடுத்த தந்தை என்ற பாவத்துக்காக வாயால் சொல்கிறேன். போய்விடுங்கள் போகிறீர்களா, இல்லையா?"

சங்கர் பொறுமையை இழந்து தன் தந்தையைத் தாக்கி விடுவானோ என்று சூழ நின்ற நெசவாளிகள் பயந்தார்கள். தாதுலிங்க முதலியார் அங்கு நிலவிய சூழ்நிலையில் இனிமேல் தாம் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்தவராக, அடிபட்ட பாம்பைப் போல் சீறிக் குமைந்து கொண்டு திரும்பிச் சென்றார்.

"டேய்! உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்!" என்ற கடூரமான குரல் காரினருகே கிடுகிடுத்து ஒலித்தது; அந்த ஒலிக்கு எதிரோலி கிளம்புவதுபோல், அந்த பியூக் காரும் திடீரென்று உறுமிக் குமைந்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

தாதுலிங்க முதலியார் சென்று மறைந்ததும், அங்கு நிலவிய பயங்கர அமைதி குலையவில்லை. நெசவாளிகள் அனைவரும் சங்கருக்கும் அவருக்கும் நடந்த வாக்கு வாதத்தைக் கண்டு, பயமும், தைரியமும், வியப்பும் கொண்டவர்களாக அசைவற்றுச் சமைந்து நின்றனர்.

ராஜு சங்கரின் உறுதியையும் லட்சிய வேட்கையையும் கண்டு பிரமித்தார்; மணி தனக்காகப் போராட முன் வந்த சங்கரின் பெருமிதத்தையும், நட்புரிமையையும் எண்ணித் தனக்குள் பூரித்துக்கொண்டான்.

கோபத்தால் களைத்துச் சோர்ந்து, அங்கு நின்றவர்களின் பக்கமாகத் திரும்பி வந்தான் சங்கர். தந்தையுடன் போராடியதால் ஏற்பட்ட வெற்றிக் களிப்பும், அவரது குரூரத் தன்மையைக் கண்டெழுந்த ஆக்ரோஷ உணர்வும் அவன் முகத்தில் கலந்து பிரதிபலித்தன.

இருளப்பக் கோனார்தான் அங்கு நிலவிய அமைதியைக் குலைக்க முன்வந்தார். அவர் சங்கரை நோக்கி, "தம்பி, என்ன இருந்தாலும், நீங்க இவ்வளவு கடுமையாய்ப் பேசியிருக்கக் கூடாது?" என்று அடக்கத்தோடும் பெரிய மனுஷத் தன்மையோடும் கூறினார்.

'இல்லை, பெரியவரே! இப்படிப்பட்ட சந்தர்பத்துக்காக நான் எவ்வளவு காலம் தவம் கிடந்தேன், தெரியுமா?"

அண்ணனைக் கண்டதும், இன்னது செய்வதெனத் தெரியாமல், "அண்ணா!" என்று கேவிக் கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள், கமலா.

சங்கர் அவளருகே சென்று அவள் தலையைப் பரிவோடு தடவிக் கொடுத்தவாறே அவளுக்கு ஆறுதல் கூறினான்.

"அழாதே, கமலா. தைரியமாயிரு! என் தோள் பலம் உன்னை என்றும் காப்பாற்றும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/026-028&oldid=1684071" இலிருந்து மீள்விக்கப்பட்டது