பஞ்சும் பசியும்/028-028
அனுபந்தம்
பிறந்த கதை
பிறவிரகசியத்தைச் சொல்லலாமா?
பாதகமில்லை.
"துடிக்குதென் உதடும் நாவும்; சொல்லு சொல்லெனவே நாவில் இடிக்குது குறளி அம்மே!" என்று குற்றாலக் குறவஞ்சியில் குறத்தி சொல்கிறாள் அல்லவா? சிருஷ்டி ரகசியமும் அது போலத்தான். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இவ்வாறு இடிக்கின்ற அனுபவம் என்னுள்ளேயிருந்து மட்டும் புறப்படுவதில்லை. சமயங்களில் வெளியிலிருந்தும் ஏதாவதொன்று இடிக்கத் தான் நேர்ந்திருக்கிறது. "இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டவன் 'இன்ஸ்பிரேஷ'னுக்காகக் காத்திருக்கக் கூடாது" என்று சிறந்த நாவலாசிரியரான சாமர்செட்மாம் உபதேசம் செய்கிறார். எனது 'இன்ஸ்பிரேஷனோ' சந்தர்ப்பத்துக்காகக்காத்துக்கொண்டிருக்கும்; ஏதாவது ஒரு நெருக்கடியில்தான் பொங்கிப் புரண்டுகொண்டு வரும். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தமாதிரி, அதுவரை யிலும் அதோ இதோ என்று ஏமாற்றிக்கொண்டிருந்த என் பேனாவும் மூளையும் அசுர வேகத்தில் செயல்படத் தொடங்கும். அவ்வளவுதான். பக்கம்பக்கமாக நாவல்பிறக்க ஆரம்பித்து விடும்! இவ்வாறு நான் எழுத உட்காரும் காரியம் எனக்கு ஒரு மகா யக்ஞம் மாதிரி, கையிலே காப்புக் கட்டி, பல நாட்கள் விரதம் காத்து. அக்கினிப்பிரவேசம் செய்து நேர்ந்த கடனை முடிக்கும்பக்தனைப்போலத்தான் நான் அப்போது நடந்து கொள்வேன். அந்த நாட்களில் எனக்கு இரவும் பகலும் ஒன்றுதான். எழுதுவேன்; எழுதித் தள்ளுவேன். அப்போது வேறு எதுவுமே என் கவனத்தைத் திசை திருப்புவதில்லை. அப்போதெல்லாம் நான் பெரும்பாலும் தன்னுள்ளே கானாகத் தனிமையிலேதான் வாழ்வேன். ஆனால், உண்மையில் நான் தனிமையில் வாழ்வதில்லை. ஏனெனில் எனது நாவலில் வரும் பாத்திரங்கள் எல்லாம் (அவை ஓரிடத்திலே தலை காட்டி விட்டு மறைவதுயினும் சரி, அல்லது கதையின் அடிமுடி வரையிலும் நடமாடுபவையாயினும் சரி அவையெல்லாம்) பரிவாரம் போல் என்னுடனேயே இருக்கும். நான் எங்கு சென்றாலும் என்கூடவே அவையும் வரும். அவர்களில் யாரையேனும் அழைத்து, என்னோடு அமர்ந்து வெற்றிலை போடச் சொல்லாதகுறையாக, அத்தனை பேரும் சதையும் ரத்தமும் கொண்ட பிறவிகளாய் என் மனவரங்கில் உலவித் திரிவார்கள். அத்தனை பேருடைய முக பாவனைகள், சாடை மாடைகள், அந்தரங்கங்கள் எல்லாம் எனக்குத் துலாம்பரமாகத் தெரியும். அவர்களையே துணையாகக் கொண்டு நான் நாவலைச் சில தினங்களில் எழுதி முடித்து விடுவேன். அநேகமாக அதே அவசரத்தில் அது அச்சிலும் வந்துவிடும். என்றாலும் முற்றும் போட்டு முடித்துவிட்ட எழுத்துப் பிரதியின் கடைசிப் பக்கத்தைக் காணும்போது எழுகின்ற பெருமிதமும், திருப்தியும், ஆசுவாசமும் அச்சுப் பிரதியைப் பார்க்கும் காலத்தில் என்னில் எழுவதில்லை 'ஈன்று புறந்தரும்' போது காணும் இன்பத்துக்கு எதுவுமே ஈடாவதில்லை.
இந்தரகசியத்தை ஏன் சொல்லவந்தேன் என்றால் 'பஞ்சும் பசியும்' என்ற நாவலையும் நான் இதே அசுர வேகத்தில்தான் எழுத நேர்ந்தது. பதிப்பகத்தாருக்குச் சொன்ன தவணைக்குச் சுமார் இருபது தினங்களுக்கு முன்னர்தான் பேனாவை எடுத்தேன். தினசரி குறைந்த பட்சம் ஓர் அத்தியாயம் எழுதுவது என்பது என் திட்டம். அவ்வாறு பதின்மூன்று அத்தியாயங்கள் எழுதி முடித்த பின்னர் மறுநாள் என்னால் பேனாவைத் தொட முடியவில்லை. காரணம் என்ன தெரியுமா? அந்த நாவலின் முற்பகுதியில் கைலாச முதலியார் என்ற கடவுள் பக்தி மிகுந்த நெசவாளி ஒருவர் முதலிடம் பெறுகிறார். பதின் மூன்றாவது அத்தியாயத்தோடு அவருடைய வாழ்வும் முடிகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விடுகிறார். அவரைச் சாகடித்து விட்டு, மறுதினமே என்னால் கதையை நடத்திச் செல்ல முடியவில்லை. அவருக்காக மூன்று தினங்கள் என்னுள்ளே நான் 'துக்கம்'கொண்டாடிய பின்னர்தான் என்னால் மீண்டும் பேனாவைத் தொட முடிந்தது. நான் நினைத்திருந்தாலும் கூட அவரைச் சாவினின்றும் காப்பாற்றியிருக்க முடியாது. எத்தனையோ கைலாச முதலியார்கள் தற்கொலையைச்சரண்புகுந்தகாலச்சூழ்நிலைஅது!அதை நான் ஒருவனாக எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? அன்று அவர்சாகநேர்ந்ததுதான் யதார்த்தவிதி, என்றாலும் அந்தச் சாவு என் உள்ளத்தைத் தொட்டது; சுட்டது.
இராம கதையில் இந்திரஜித் மகோந்நதமான பாத்திரம்தான். என்றாலும் அவனுடைய மரணம் தருமத்தின் தவிர்க்க முடியாத விதி. இருந்தாலும், கதையின் இறுதியில் அத்தகைய பெரும் பாத்திரத்தைக் கம்பன் படைத்து, அவனை இலக்குவனின் கணைக்குக் காவு கொடுத்து விடுகிறான் அல்லவா? பின்னர் இறந்துபட்ட இந்திரஜித்தின் தலையைக் காட்டி செய்த கொலையினை நோக்கும்!'என்றுகூறும்போதுகம்பனது அந்தரங்கக்குரலே அதில் ஒலிப்பதைக் கேட்கிறோம் அல்லவா? அதேபோன்று நானும் கைலாச முதலியாரின் கொலைக்குக் காரணமான சூழ்நிலையை எண்ணிக் குமைந்தேன். துக்கித்தேன். ஆனால் அந்த நாவல் வெளிவந்த பின்னர் அரசியல்வாதியும் இலக்கிய ரசிகருமான என் நண்பர் ஒருவர், "என் வாழ்க்கையில் நான் ஒரே ஒரு முறைதான் கண்ணீர் விட்டிருக்கிறேன், அதுவும் என் தந்தை இறந்தபோது. கைலாச முதலியாரின் மரணத்தைப் படித்தபோது என் கண்கள் கலங்கிவிட்டன, என் வாழ்வில் இரண்டாம் முறையாகக் கண்ணீர் விட்டேன்" என்று எனக்கு எழுதினார். அதை படித்தபோதுதான் நான் துக்கம் கொண்டாடியதிலும் அர்த்தம் உண்டு என்பது ஊர்ஜிதமாயிற்று.
இதனால் எனது படைப்புக்கள் எல்லாம் அந்தக் கணத்திலேயே கருவுற்று, அந்தக் கணத்திலேயே ரிஷி பிண்டமாக அவதாரம் செய்து விடும் என்று அர்த்தமல்ல. சொல்லப்போனால் நாவல்கள் மட்டுமல்ல, சிறுகதைகளும் கூட என் மனக் குகையில் பல்லாண்டுக் காலம், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பிறவிப் பேற்றைக் காணாமல்மோனச் சிறையில் தவம் கிடந்த துண்டு கன்னிக் கோழியின் வயிற்றுக்குள்ளேயுள்ள கருக்குலையைப் போல் என் உள்ளத்திலே கதா பாத்திரங்களும், சம்பவங்களும் என்றோ எப்போதோ சுருப் பிடித்து உறங்கும்; வளர்ந்து கொண்டிருக்கும். ஆனால் எந்த நேரத்தில் எந்தக்கரு பூரண வளர்ச்சி பெற்று வெளியுலகத்தைப் பார்க்கும் என்பது எனக்கே தெரியாது. சமயங்களில் சின்னக் கருவே பெரிய கருக்களை முந்திக் கொண்டு வளர்ந்து விடும். இலக்கிய சிருஷ்டியின் பரிணாம விசித்திரம் அப்படி!
'பஞ்சும் பசியும்' சரித்திர நாவல், பத்தாண்டுகளுக்கு முன்னால் நமது நாட்டில் கைத்தறி நெசவாளர்கள் பட்ட அவலத்தையும் அதைப் போக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் சித்திரிக்கும் நாவல். அன்று எல்லோ ரையும் போலவே நானும் மவுண்ட்ரோட் ரவுண்டாணா வாயினும் மங்கம்மாள் சாலையாயினும் எங்கும் எந்தத் திக்கிலும் பஞ்சையராகித் திரிந்த நெசவாளர்களைக் கண்டேன். நாட்டு மக்களின் மானத்தைக் காப்பதற்காக உழைத்த மக்கள் தங்கள் மானத்தைக் காப்பதற்கு வகையற்றுத்திரியும் அலங்கோலத்தைக்கண்டேன் ஆணும் பெண்ணும் குழந்தை குட்டிகளும் அல்லோல கல்லோலப் பட்டுச் சீரழிவதைப் பார்த்தேன். அவற்றைக் கண்டபோது எனது உள்ளமும் உதடும் துடித்தன. அவற்றைச் சொல்லு, சொல்லு!' என்று என் மனக்குறளி இடித்தது. ஆம், அவற்றைச்சொல்லத்தான் வேண்டும் எப்படிச்சொல்வது? அந்த மக்களோடு சேர்த்து நானும் கண்ணீர் வடிப்பதா? நான் அழுகுணிச் சித்தன் அல்ல. கண்ணீர் விடுபவனோடு கண்ணீர் விடுவது, அவனுடன் சேர்ந்து ஒப்பாரிவைப்பது எழுத்தாளனுக்கு அழகல்ல. கண்ணீரைத் துடைக்க, வழிகாணும் பாதையிலே செல்பவன் தான். சிறந்த எழுத்தாளன். மனிதத் தன்மையை இழந்து நிற்கும் அந்தப் பிறவிகளை மனிதர்களாக்கிக் காட்ட வேண்டும் என்று நினைத்தேன்; வெறும் ஜீவகாருண்ய உணர்ச்சியான மரக்கறிவாதம் அதற்குப் பயன்படாது என்பதும் எனக்குத் தெரியும்.எனவேநான் அன்றைய சரித்திரச்சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முனைந்தேன் அதன் காரணகாரியங்களை ஆராய்ந்தேன்; அதற்காக எவ்வளவோ படித்தேன். அந்தத் துறையிலே அனுபவம் மிகுந்தவர்களிடம் பேசினேன். நெசவாளர்களின் துன்ப துயரங்களையும் பிரச்னைகளையும் அந்தச் சமூகத்தாரிடமிருந்தே கண்டும் கேட்டும் அறிந்தேன், காதில் விழுந்த செய்திகள், கண்ணில் பட்ட நிகழ்ச்சிகள் முதலியவற்றைக் கவனம் செய்து என் மன ஏட்டில் பதிவு செய்து கொண்டேன். இவ்வளவும் செய்த பின்னர் எனக்குக் கிடைத்தது என்ன? கதையின் ஆதார சுருதியாக விளங்க வேண்டிய சரித்திர தத்துவ தரிசனம் தான். ஆனால் சரித்திரமோ, தத்துவமோ மட்டும் இலக்கியமாகி விடுவதில்லையே! உயிரும் உணர்ச்சியும் கொண்ட கதாபாத்திரங்கள் அல்லவா கதையை, நாவலை உருவாக்க முடியும்! காலம், களம் என்ற கட்டுக்கோப்பமைதியில் அல்லவா அந்தப் பாத்திரங்கள் நடமாட வேண்டும்! காலத்தைப்பற்றிய தரிசனத்தைச் சரித்திரம் தந்துவிட்டது. அடுத்தாற் போல் களத்தை நிர்ணயிக்க வேண்டும்.
எனது நாவலில் கதை நிகழும் பிரதான இடங்களாக அம்பாசமுத்திரமும், மதுரை நகரும் இடம் பெற்றன. அம்பாசமுத்திரம் சிறு வயதிலிருந்தே என்னைக் கவர்ந்த ஊர்; மதுரைக்கு என் இதயத்திலே தனி மதிப்பும் இடமும் உண்டு. மேலும் நான் கையாள நினைத்த கதைப் பொருளுக்கு அவை ஏற்ற இடங்களாகத் தெரிந்தன. அம்பா சமுத்திரத்தை நான் திறம்படவே சித்திரித்தேன். எனது. நாவலை செக் மொழியில் மொழி பெயர்த்த கமில ஸ்வலெபில் என்ற செக் நாட்டு அறிஞர் தமிழகத்துக்கு வந்தபோது, என்னிடம் - "நான் அம்பாசமுத்திரத்தைப் பார்க்க வேண்டுமே. உங்கள் கதையிலிருந்து என் மனத்தில் அதைப் பற்றி ஓர் உருவம் படிந்திருக்கிறது. இருந்தாலும் கற்பனையும் யதார்த்தமும் எப்படி இருக்கின்றன என்று பார்க்க வேண்டாமா?" என்று கூறினார். அவர் மதுரைக்கு வந்தார்; எனினும் அம்பாசமுத்திரத்தைப் பார்க்க அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. அதற்குள் அவர் தமது தாயகத்துக்குத் திரும்பி விட்டார். எனது கதைக்களத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஓர் அன்னிய நாட்டாரின் மனத்தில் எனது நாவல் உருவாக்கி விட்டதல்லவா? அது எனக்கு ஒரு வெற்றிதான்.
இனி, பாத்திரங்கள்: என் கதையில் வரும் பாத்தி ரங்கள் எல்லாம் குறிப்பிட்ட சரித்திர காலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், அவர்கள் எல்லாம் எந்தக் காலத்திலோ என் மனத்தில் கருப்பிடித்து வளர்ந்தவர்கள், சிறுவயதிலேயே எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில்நெசவைத் தொழிலாகக் கொண்ட ஒருவர் தறிவைத்திருந்தார். அந்தத் தறியில் தாளலயம் தவறாது எழும் சத்தத்தையும் ஊடும் பாவும் : பின்னிப் பிணையும் அதிசயத்தையும் நான் மணிக்கணக்கில் கண்டு கேட்டு அனுபவித்திருக்கிறேன் மேலும் நெல்லையில் நான் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே நெசவாளர் சமூகத்தினர் அதிகம். அவர்கள் மத்தியிலே எனக்கு நண்பர்களும் உண்டு. எனவே இளம் வயது முதலே என் உள்ளத்திலே சிதையும் தசையும் கொண்ட உருவங்களாக எத்தனையோ பேர் பதிந்து போய் விட்டார்கள், மேலும் எந்தச் சமூகத்தினர். ஆனாலும் மனிதர்கள் மனிதர்கள் தானே. எனவே எனது நாவலின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெசவாளர் சமூகத்தினர் தான் என்றாலும், அந்தப் பாத்திரங்களை வலித்து உருவாக்குவதில் நான் வாழ்க்கையில் கண்ட எல்லாச் சமூகத்தையும் சேர்ந்த மனிதர்கள் பலரும் பயன்பட்டார்கள்.
எனது நாவலில் வரும் கைலாச முதலியார், மைனர் முதலியார், வடிவேலு முதலியார், இருளப்பக் கோனார், தர்மாம்பாள், வீரையா, சங்கர், கமலா, மணி முதலிய பாத்திரங்களைப் படைத்தபோது அவர்கள் ஒவ்வொரு வருடைய குணாம்சங்களையும் பெற்ற எத்தனையோ பேர்கள் என் மனத்தில் எழுந்தார்கள். உதாரணமாக, கைலாச முதலியாரின் குணாம்சங்களைப் பெற்ற பல்வேறு கைலாச முதலியார்கள் சேர்த்துதான் ஒரு கைலாச முதலியாராக உருவானார்கள். என்றாலும், அவர்கள் அத்தனை பேரிலும் யாராவது ஒருவர்தான் என் முன் பிண்டப் பிரமாணமாகக் காட்சி அளித்தார். இப்படி ஒவ்வொரு பாத்திரமுமே பல்வேறுபாத்திரங்களின் திரட்சி என்ற போதிலும், அவர்களில் ஒருவர்தான் ஒவ்வொரு பாத்திரத்தின் கண்கண்ட உருவமாக என் முன்னே நின்றார். அந்த 'ஒருவர்'கள் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களாகவும் இருக்கலாம்; எனக்குப் பிடிக்காதவர்களாகவும் இருக்கலாம். எங்கோ எப்போதோ கண்டபின் மறக்க முடியாது என் உள்ளத்தில் தமது உருவைப் பதித்தவராகவும் இருக்கலாம். இவர்களிலே வியாபாரிகள், அரசியல்வாதிகள், மாணவர்கள், மாணவிகள், மைனர்கள், தொழிலாளிகள் பலரும் உண்டு. அவர்கள் இன்னின்னார்தான் என்ற ரகசியத்தை வெளிப்படையாக நான் எடுத்துக் கூறிவிடலாமா? அப்புறம் ஆபத்தாயிற்றே!
சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட நாகசர்ப்பம் போல், இந்தப் பாத்திரங்கள் எல்லாம் நான் எடுத்துக் கொண்ட சரித்திரகதிக்குக் கட்டுப்பட்டு. கதையை அவர்களே நடத்திச் சென்றார்கள். நானும் அந்தச் சரித்திர கதிக்குக் கட்டுப்பட்டவன். எனவே நான் எனது இஷ்டத்துக்கு எதையும் உருவாக்கிவிட முடியாது. சொல்லப் போனால், ஒவ்வொரு பாத்திரமும் 'சாமிகுடி புகுந்த மாதிரி அந்தந்தச் சமயத்தில் என்னுள்ளே' கூடுவிட்டுக் கூடுபாய்ந்து நின்று அவர்களே கதையை உருவாக்கினார்கள். நான் அந்தக் கதாபாத் திரங்களின் கருவியாகத்தான் பயன் பட்டேன். அவர்கள் பேசியபோது நானும் பேசினேன். அவர்கள் சிரித்தபோது நானும் சிரித்தேன். அழுதபோது நானும் அழுதேன்: குமுறிய போது குமுறினேன். தர்க்கித்த போது தர்க்கித்தேன். அவர்கள் வாழ்வுக்காகப் போராடிய போது நானும் போராடினேன்; அவர்கள் இறந்தபோது நானும் அந்தக் கணத்துக்கு இறந்து மீண்டேன். இறுதியில் நாவலின் முடிவில் "பல்வேறு சிற்றாறுகளைத் தன்பால் இழுத்துக் சேர்த்து மகாப்பிரவாகமாகப்பரிணமித்துச் செல்லும் ஜீவ நதியைப் போல் ” நாவலின் கதாநாயகர்களான நெசவாளிகள் ஊர்வலமாகச் செல்லும் போது நானும் அந்த ஜீவ நதியில், ஊர்வலத்தில் ஒரு துளியாகக் கலந்து நடந்தேன். ஆமாம்! அவர்களோடு நான் "நடந்தேன். நடக்கின்றேன். நடந்து நடந்தேறுகின்றேன்!"
ஊர்வலம் என்று சொன்னவுடன் எனக்கு ஒருவிஷயம் நினைவுக்கு வருகிறது. 'பஞ்சும் பசியும்' நாவலில் மதுரை நகரில் நடைபெறும் இரண்டு பிரம்மாண்ட ஊர்வலக் காட்சிகள் வருகின்றன. நாவலின் சிகர கும்பங்களாக இடம் பெறும் நிகழ்ச்சிகள் அவை. அந்தக் காட்சிகளைப் பிரத்தியட்ச சொரூபமாகச் சொல்லில் வடித்தெடுக்க நான் எவ்வளவு வெறி வேகத்தில் இருந்தேன் என்பது வேறு விஷயம். எனினும் எனது நாவலை விமர்சிக்க நேர்ந்த எழுத்தாளர் ஒருவர் அந்தக் காட்சிகளுக்கான இன்ஸ்பிரேஷனை நான் மாக்ஸிம் கார்க்கியிடமிருந்து பெற்று, அதனைப் பயன் படுத்திக் கொண்டிருப்பதாக வலிந்து குற்றம் சாட்டினார். ஆனால் பாவம், உண்மை அதுவல்ல.
என்னைப் பொறுத்த வரையில் நான் மாணவப் பருவத்திலேயே தேசியப் போராட்டக் காலத்தில் பல ஊர்வலங்களையெல்லாம் உருவாக்கியவன்; அந்த ஊர்வலங்களுக்குத் தலைமை தாங்கியவன்; பங்கெடுத்தவன். அந்தக் காலத்தில் தடியடிப் பிரயோகத்துக்கு இரையான ஊர்வலங்களிலும் கூட ஒன்றி நின்றவன். மேலும் மதுரை நகரிலேயே இரண்டு லட்சம் பேர்கள் கொண்ட பிரம்மாண்டமான ஊர்வலத்தைக்கண்டவன்; களித்தவன். அதன் காந்த சக்திக்கு ஆட்பட்டவன்.'பாரடா என்னோடு பிறந்த பட்டாளம்' என்ற உணர்வைப் பெற்றவன். எனவே அத்தகைய ஊர்வலக் காட்சியைச் சொல்லாட்சித் திறனோடு உருவாக்கும் சந்தர்ப்பத்தைத்தான் எதிர்நோக்கி யிருந்தேன்.
'பஞ்சும் பசியும்' எனக்கு அந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தது. ஏனெனில் எழுத்தாளன் என்பவன் வாழ்க்கையில் பார்வையாளனாக இருக்கக்கூடாது, பங்குதாரனாக இருக்க வேண்டும் என்று கருதுபவன் நான். வாழ்க்கைதான் இலக்கிய கர்த்தாவுக்கு வற்றாத கருவூலம். அதுதான் அவனுக்கு சர்வத்தையும் வழங்குகிறது.
அந்த வாழ்க்கையிலே கலந்து நிற்கத் தெரியாமல் நத்தைமாதிரி தன்னுள்ளே தானாய் உடம்பையும் உள்ளத்தையும் சுருக்கிக் கொள்பவன்தான் ‘இன்ஸ்பிரேஷ னுக்காக அடுத்தவனிடம் முந்திப் பிச்சை கேட்க வேண்டியிருக்கும்!
எனது நாவல் வாழ்க்கையிலிருந்தே பிறந்தது; வாழ்க்கையிலேயே வேரூன்றி நிற்பதன் காரணமாகத்தான் அதன் வலுவையும் வெற்றியையும் யாரும் அலட்சியப்படுத்த முடியவில்லை. எனது அரசியல் போக்கையும் இலக்கிய நோக்கையும் ஒப்புக் கொள்ளாதவர்களும் ஒதுங்கி நிற்பவர்களும்கூட, அந்த நாவலின் கதாபாத்திரங்களின் வலுவையும் வனப்பையும் புறக்கணிக்க முடியவில்லை. அரை மனசு குறை மனசாகவேணும் அதை ஒப்புக் கொண்டாக வேண்டி நேர்ந்தது.
தமிழ் இலக்கியத்திலே புதியதொரு பாதையை அந்த நாவல் வகுக்க முயன்று அதில் முன்னோடியாகத் திகழ்ந்த காரணத்தினாலேயே, அந்த நாவல் அன்னிய நாட்டிலும் மொழி பெயர்க்கப்பட்டு, தமிழுக்கும் எனக்கும் பெருமையைத் தேடித் தந்தது.
இன்றும் அந்த நாவலை எண்ணிப் பார்க்கும் போது-
அதோ மைனர் முதலியார்வாளின் 'கான்பூர் நைட்குயீன்' ஸெண்டின் மணம் என் மூக்கைத் துளைக்கிறது; கைலாச முதலியார் பூசும் திருச்செந்தூர் பன்னீர் விபூதியின் மணம் கமகமக்கிறது; தர்மாம்பாளின் புதுப் பட்டுப் புடவை சரசரக்கும் ஓசை கேட்கிறது; தாதுலிங்க முதலியாரின் பியூக்காரின் பயங்கர உறுமல் காதைச் செவிடுபடச் செய்கிறது: "பொருமிப் பொருமி வீசும் மேல் காற்று தன் ஜீவனைப் பறித்துக் கொண்டு விடாதவாறு உயிரைப் காப்பாற்றிக் கொண்டிருக்கும்" மெலிந்த தீச்சுடரைப் போல் இருளப்பக் கோனார் நடமாடுவது என் கண்ணுக்குத் தெரிகிறது. வடிவேலு முதலியாரின் வைரம் பாய்ந்த உரிமைக் குரல் என் காதில் இனிய நாதமாக விழுகிறது_
ஆமாம். அவர்களை நான் மறக்கமுடியாது. அவர்கள் வெறும் கற்பனை வடிவங்கள் அல்ல; நம்மோடு வாழ்ந்தவர்கள்; வாழ்பவர்கள். அவர்களை எப்படி மறப்பது?
எட்டு ஆண்டுகளுக்கும் பின்னால், மீண்டும் ‘பஞ்சும் பசியும்’ நாவலைப் புரட்டிப் பார்க்கும்போது, அதிலுள்ள சிற்சில குறைபாடுகள் எனக்குத் தெரியத்தான் செய்கின்றன. தெரிந்தாலென்ன? எனது குறையினை நானே கண்டு கொள்ள முடிகிறது என்றால், நான் வளர்ந்திருக்கிறேன் என்று தானே அர்த்தம்!
–ரகுநாதன்
(“நாவல் பிறக்கிறது” என்ற தொடரில் 13-8-61 அன்று “கல்கி” யில் வெளிவந்தது.)
எமது தமிழ்த்துறை வெளியீடுகள்
சென்னை, மனோன்மணீயம் சுந்தரனார், பாரதியார், பாரதிதாசன். மதுரைக்காமராசர், அண்ணாமலை, வெங்கடேஸ்வரா ஆகிய பல்கலைக் கழகங்கட்கு பரிந்துரைக்கப்பட்டவை.
ப. முருகன்
வள்ளுவும் பன்னோக்குப் பார்வை
மயிலை சீனி.வேங்கடசாமி
பழங்காலத்தமிழர் வாணிகம்
செ.அரங்கநாயகம்
சோவியத் நட்புறவுப்பயணம்
சு.சமுத்திரம்
ஏவாதகணைகள்
இ. சுந்தரமூர்த்தி
வான்மறை வள்ளுவம்
இலக்கியமும் பண்பாடும்
சு.பாலச்சந்திரன்
இலக்கியத்திறனாய்வு
அ.அ.மணவாளன்
அரிஸ்டாடிலின் கவிதையியல்
கே.ஏ.குணசேகரன்
நாட்டுப்புற நடனங்களும் பாடல்களும்
பொன்னீலன்
கரிசல்
கொள்ளைக்காரர்கள்
நியூ செஞ்சரி புக்ஹவுஸ் (பி) லிட்.,
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
சென்னை - 600 098