பஞ்ச தந்திரக் கதைகள்/ஒட்டகத்தைச் கொன்ற காகம்

விக்கிமூலம் இலிருந்து

9. ஒட்டகத்தைச் கொன்ற காகம்
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அரசு செய்துகொண்டிருந்தது. அதற்கு அமைச்சர்களாக ஒரு நரியும் ஒரு புலியும், ஒரு காக்கையும் இருந்து வந்தன.

ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வழிதப்பி அந்தக் காட்டுக்குள் வந்து விட்டது. அதைக் கண்ட காகம், சிங்கத்தினிடம் அழைத்துக் கொண்டு வந்து விட்டது. சிங்கம் அதற்கு அடைக்கலம் கொடுத்து, அதையும் தன் அமைச்சர்களில் ஒருவனாக இருக்கும்படி கூறியது.

எல்லாம் ஒன்றாகப் பல நாட்கள் இருந்தன. ஒரு நாள் சிங்கம் நோயுற்றிருந்ததால், தன் அமைச்சர்களாகிய புலி, நரி, காகம், ஒட்டகம் ஆகியவற்றைப் பார்த்து, ' என் பசியைத் தீர்க்க ஏதாவது இரை தேடிக் கொண்டு வாருங்கள்’ என்று கூறியது.

அவை நான்கும் காடெல்லாம் சுற்றித் திரிந்து எங்கும் இரை கிடைக்காமல் திரும்பி வந்தன.

ஒட்டகத்திற்குத் தெரியாமல், காகம் மற்ற இரண்டையும் அழைத்துக் கொண்டு சிங்க மன்னனி டம் சென்றது.

‘மன்னா, காடு முழுவதும் தேடிப் பார்த்து விட்டோம். எங்கும் இரை கிடைக்கவில்லை” என்று காகம் கூறியது.

“அப்படியானால் என் பசிக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? உங்கள் கருத்து என்ன?’ என்று சிங்கம் கேட்டது.

'மன்னா ஒட்டகம் இருக்கிறதே!’ என்று காகம் கூறியது. ‘சிவசிவ! நினைப்பதும் பாவம்’ என்று சிங்கம் தன் காதுகளை மூடிக் கொண்டது.

“மன்னவா, ஒரு குடியைக் காப்பாற்ற ஒருவனைக் கொல்லலாம். ஒரு நகரைக் காப்பாற்ற ஒரு குடியைக் கெடுக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு நகரையே அழிக்கலாம். இந்த நீதியைக் கொண்டுதான், பஞ்ச பாண்டவர்கள், தங்கள் மகன் அரவானைப் போர்க்களத்தில் பலியிட்டு வெற்றி அடைந்தார்கள்’ என்று காகம் எடுத்துக் கூறியது.

‘அடைக்கலமாக வந்தவர்களை அழிப்பது சரியல்ல' என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது.

‘அரசே, அடைக்கலமாக வந்ததை நீங்களாகக் கொல்ல வேண்டாம். அதன் ஒப்புதலின் பேரிலேயே அதைக் கொன்று பசி தீரலாம்' என்று காகம் கூறியது. சிங்கம் அதற்குப் பதில் எதுவும் கூற வில்லை. காகம், அது பேசாமல் இருப்பதே ஒப்பியதாகும் என்று எண்ணிக் கொண்டு, நரியையும் புலியையும் கூட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது.

ஒட்டகம் வந்தவுடன், நான்குமாக மீண்டும் சிங்க மன்னனிடம் வந்தன.

‘அரசே! இந்தக் காடு முழுவதும் இரையே அகப்படவில்லை. என்னைக் கொன்று உண்ணுங்கள்’ என்று காகம் கூறியது.

‘உன்னுடலும் எனக்கோர் உணவாகுமா?' என்று சிங்கம் பதில் கூறியது.

உடனே நரி, 'என்னைத் தின்னுங்கள்’ என்றது.

‘உன்னைத் தின்றாலும் என் பசியடங்காதே' என்று சிங்கம் கூறியது.

புலி முன் வந்து,' அரசே என்னைச் சாப்பிடுங்கள்!' என்று வேண்டியது,

'நீயும் என் பசிக்குப் போதுமானவன் அல்ல’ என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டகம்' நம்மைக் கொல்லத்தான் சூழ்ச்சி நடக்கிறது’ என்று தெரிந்து கொண்டது. ஆயினும் வேறு வழியில்லாமல், 'அரசே, நான் மிகுந்த தசை உடையவன், என்னைக் கொன்று தின்னுங்கள்? என்று கூறியது.

அது சொல்லி முடிப்பதற்கு முன்னால், சிங்கம் என்ன சொல்கிறது என்பதையும் எதிர் பார்க்காமல், புலி அதன் மேல் பாய்ந்தது.

சிங்கம் இறந்து போன ஒட்டகத்தின் இரத்தத்தைக் குடித்தது. புலி அதன் மூளையைச் சுவைத்துத் தின்றது. நரி அதன் ஈரலைக் கடித்துத் தின்று மகிழ்ந்தது. காகமோ, தசையைக் கொத்தித் தின்று வயிறு புடைத்தது.

கொடியவர்களுடன் கூடியவர்கள் மடிவது திண்ணம் என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது.