பஞ்ச தந்திரக் கதைகள்/மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்

விக்கிமூலம் இலிருந்து

8. மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்

ஓர் அரசனுடைய படுக்கையில் சீலைப்பேன் ஒன்று வாழ்ந்து வந்தது. அரசனும் அரசியும் உறங்கும் நேரம் பார்த்து அது அவர்கள் உடலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்தது. ஒருநாள் கொள்ளிவாய்ப் பிசாசு வந்ததுபோல் ஒரு சிறு மூட்டைப் பூச்சி அங்கு வந்து சேர்ந்தது. அது சீலைப் பேனை நெருங்கி, 'நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறியது.

'இல்லை இல்லை, வேண்டாம். முள் போன்ற உன் பற்களால் அரசன் துங்குவதற்கு முன்னாலேயே நீ கடித்து விடுவாய். உன்னால் என் வாழ்வுக்கும் முடிவு வந்து விடும்’ என்று சீலைப் பேன் மறுத்துக் கூறியது.

'நான் அப்படித் துடுக்குத் தனமாக நடந்து கொள்ள மாட்டேன். நீ சொன்னபடி கேட்டுக் கொண்டிருப்பேன்'என்று கெஞ்சியது மூட்டைப் பூச்சி.

'சரி, அப்படியானால் இங்கேயே இரு. எப்பொழுதும் வெடுக்கென்று கடிக்காதே. அரசனும் அரசியும் உறங்குகின்ற நேரம் பார்த்து மெதுவாகக் கடித்து இரத்தம் குடித்து உன் பசியைப் போக்கிக் கொள்’ என்று கூறி அந்த மூட்டைப் பூச்சிக்குச் சீலைப்பேன்".இடம் கொடுத்தது.

கெஞ்சி இடம் பிடித்துக் கொண்ட அந்த மூட்டைப் பூச்சி, அன்று இரவே அரசனும் அரசியும் படுக்கைக்கு வந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அரசனை வெடுக்கென்று கடித்து விட்டது.

'ஏதோ என்னைக் கடித்து விட்டது’ என்று அரசன் கூறியதும் வேலைக்காரர்கள் விளக்குடன் ஒடி வந்தார்கள்.

அரசனைக் கடித்த மூட்டைப் பூச்சி வேலைக்காரர்கள் வருவதற்குள் எங்கோ ஒரு மூலையில் போய் ஒளிந்து கொண்டு விட்டது. நடந்தது அறியாத சீலைப் பேன் அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது உடனே அவர்கள், ' நீ தானே இந்தப் பொல்லாத வினையைச் செய்தாய்?’ என்று சொல்லிக் கொண்டே, சீலைப் பேனை நசுக்கிக் கொன்று விட்டார்கள். வகை தெரியாமல் நட்புக் கொண்ட அந்தச் சீலைப் பேன், பாவம் இறந்து ஒழிந்தது.

ஒருவனுடைய தன்மையை உணராமல் அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது.