உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்ச தந்திரக் கதைகள்/கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

விக்கிமூலம் இலிருந்து

பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 3
அடுத்துக் கெடுத்தல்
1. கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்


இருள் குடிகொண்டது என்று சொல்லும்படியான ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஓர் ஆலமரத்தில் மேகவண்ணன் என்ற பெயருடைய காகம் ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் உள்ள காகங்களுக்கெல்லாம் அதுதான் அரசனாக விளங்கியது. மேகவண்ணன் தன் அமைச்சர்களோடும், மற்ற காகங்களோடும் அந்த ஆலமரத்தில் நெடுநாள் இருந்து வந்தது.

பக்கத்தில் இருந்த ஒரு குகையில் கோட்டான்களின் கூட்டம் ஒன்று குடிகொண்டிருந்தது. அந்தக்கோட்டான்களின் அரசனும், தன் அமைச்சர்களோடும் கூட்டத்தோடும் அச்சமில்லாமல் வாழ்ந்தது. தடுப்பாரில்லாமல் அந்தக் கோட்டான் அரசன் இரவில் வேட்டையாடிக் களித்திருந்தது.

கோட்டான்களுக்கும் காகங்களுக்கும் அடிக்கடி பகை ஏற்படும். பகற் பொழுது முழுவதும், காகங்கள் கோட்டான்களைப் பதைக்கப் பதைக்க வதைப்பதும், இரவெல்லாம் காகங்களை எழும்பவிடாமல் கோட்டான்கள் அடிப்பதும், இப்படியாக நாளுக்கொரு பகையும் வேளைக்கொரு சண்டையுமாக இருந்து வந்தது.

ஒருநாள் இரவுப்பொழுது வந்ததும் கோட்டான் அரசன் தன் அமைச்சர்களை அழைத்துப் பேசியது.

‘கதிரவன் தோன்றிவிட்டால், நாம் அந்தக் காக்கைகளை ஒன்றும் செய்யமுடியாது. இதுதான் நல்ல சமயம். இப்போதே நம் சேனைகளையெல்லாம் திரட்டிக்கொண்டு வாருங்கள். நம் பகைவர்களாகிய அந்தக் காகங்களை இந்த இருட்டு நேரத்திலேயே வளைத்து அடித்துக் கொன்று குவித்துவிட்டு வருவோம்’ என்றது.

உடனே அமைச்சுக் கோட்டான்கள், இது நமக்கு நல்ல வேளைதான். இப்போதே நாம் சென்று அந்தக் காக்கைகளை வென்று மீள்வோம்’ என்று சொல்லி உடனே விரைவாகப் படை கூட்டித் திரண்டன. எல்லாக் கோட்டான்களும், ஆலமரத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, அங்கு கூடு கட்டி வாழ்ந்த காகங்களையெல்லாம், கொத்திக் கொன்று விட்டுத் தங்கள் அரசனிடம் திரும்பி வந்தன.

ஆலமரத்தில் இருந்த அந்தக் காகக் கூட்டம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆலமரம் முழுவதும் இரத்தம் வெள்ளம் போல் வழிந்தோடிக் கொண்டிருந்தது. காகங்கள் சின்னாபின்னமாகக் கிடந்தன. சிறகொடிந்த காக்கைகள் ஒருபுறம், காலொடிந்த காக்கைகள் ஒரு புறம், குடல் சரிந்து விழுந்து கிடந்த காக்கைகள் ஒரு புறம், இப்படி அந்த இடம் ஒரே பயங்கரமாகக் காட்சியளித்தது.

அந்தக் காக அரசன் எப்படியோ, கோட்டான்களின் கண்ணுக்குத் தப்பிப் பிழைத்துக் கொண்டது.

மறுநாள் பொழுது விடிந்து கதிரவன் தோன்றியவுடன், காக அரசன், ஆலமரத்தின் கீழ் தன் கூட்டம் கொலைபட்டு மலைபோல் கிடப்பதைக் கண்டது. அவற்றின் மத்தியில் தனது பெரிய மந்திரிகளான ஐந்து காகங்களும் மற்ற சில காகங்களும் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டு காக அரசன் ஓரளவு மகிழ்ச்சி கொண்டது.

உயிர் பிழைத்த காகங்களையும் தனது மந்திரிகளையும் அரச காகம் ஒன்று திரட்டியது. நம் குடியே அழியும்படியாக இப்படி நேர்ந்து விட்டதே!’ என்று வருந்தியது. பிறகு, அவற்றைக் கொண்டு, காயப்பட்டுக் கிடந்த காகங்களுக்கெல்லாம், மருந்து வைத்துக் காயங்களைக் குணப்படுத்தச் செய்தது. இறந்து போன காகங்களுக்கெல்லாம் செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்தது. பிறகு, பொய்கையில் சென்று தலை முழுகிவிட்டு வந்தது. அரச காகம் உயிர் பிழைத்த மற்ற காகங்களுடன் வேறொரு மரத்திற்குக் குடிசென்றது. அங்கு சென்றதும், தன் அமைச்சர்களை நோக்கி ‘இப்பொழுது நாம் என்ன செய்யலாம்? உங்கள் யோசனைகளைச் சொல்லுங்கள்’ என்று கேட்டது.

‘அரசே ஒரு பகைவனை அவனைக் காட்டிலும் வல்லவர்களோடு சேர்ந்து வெல்லுதல் வேண்டும். அந்த முறை நடைபெறக் கூடாததாக இருக்குமாயின் அந்தப் பகைவனையே வணங்கி வாழவேண்டும். அல்லது அவன் வாழவிடக் கூடியவனாக இல்லாமல் இருந்தால் நாம் இருக்கும் நாட்டை விட்டு வேறு நாடு போய்விட வேண்டியதுதான். இப்படி மூன்று வழிகள் இருக்கின்றன’ என்று ஓர் அமைச்சுக் காகம் கூறியது.

'தான் இருக்குமிடத்தை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் வெளியேறக் கூடாது. நாய் கூடத் தான் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் சுகமாக இருக்கும். சிங்கமாக இருந்தாலும் அது தன் இடத்தை விட்டுவிட்டால் யாரும் அதை நினைத்துப் பார்க்கக் கூடமாட்டார்கள். பசுமாடும், இடம் மாறினால் பால் சுரக்காது. ஆகவே, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, பகையை வெற்றி காணும் வழியை நாம் சிந்திக்க வேண்டும்' என்று இரண்டாவது அமைச்சுக்காகம் கூறியது.

எல்லாம் சரிதான். ஆனால், நம்மை வெற்றி கொண்ட பகைவர்கள், நாம் இங்கே இருக்க அனுமதிப்பார்களா? மேலும் மேலும் தீமை செய்து கொண்டேதான் இருப்பார்கள். அந்தத் தீமைக்கு ஆளாகாமல் தப்ப, அவர்களுடன் இனிமேல் சமாதான ஒப்பந்தம் பேசிக்கொண்டு இருப்பதுதான் நல்லது என்று மூன்றாவது அமைச்சுக்காகம் கூறியது.

கோட்டான்களுக்குப் பகலில் கண் தெரியாது. நம் காகங்களுக்கோ இரவில் கண்கள் தெரியாது. இந்த நிலையில் எப்படிச் சமாதானம் பேசிக் கொண்டு இருக்க முடியும்? பேசாமல் இப்பகல்

நேரத்திலேயே, இப்போதே போய் அந்தக் கோட்டான்களை வளைத்துக் கொண்டு அடித்துக் கொன்று போட்டுவிட்டு வருவதே நல்லது என்று நான்காவது அமைச்சுக் காகம் கூறியது.

முதல் நான்கு அமைச்சுக் காகங்களும் ஒன்றையொன்று மறுத்தும், தத்தமக்குத் தெரிந்ததைக் கூறியும் யோசனை சொல்ல, ஐந்தாவது அமைச்சுக் காகம் பேசாமல் இருந்தது.

அந்த ஐந்தாவது அமைச்சுக் காகம் மிக வயதான கிழட்டுக் காகம். அமைச்சுத் தொழிலில் நெடுநாள் அனுபவமும், தந்திரத்தில் பெருந்திறமையும் கொண்டது.

சிரஞ்சீவி என்ற அந்தக் காகத்தை நோக்கி, ' உன் கருத்து என்ன? சொல்’ என்று அரச காகம் கேட்டது.

விதையைச் சும்மா வைத்திருந்தால் பயன் ஒன்றும் இல்லை. அதை ஒரு நிலத்தில் விதைத்தால் தான் அது விளைந்து பயன் கொடுக்கும். அதுபோல, அமைச்சர்களிடம் மந்திராலோசனை செய்வது மட்டும் பயன்படாது. அதை மன்னர்கள் மனத்தில் இருத்திச் செயல்பட முற்பட்டால்தான் சரியான பயன் உண்டாகும்.

'பகைவர்களோடு, நட்புக் கொண்டு கூடியிருப்பது ஒரு முறை; கூடியிருந்து அவர்களை பகைவர்களோடு, நட்புக் கொண்டு கூடியிருப்பது ஒரு முறை; கூடியிருந்து அவர்களைக் கெடுப்பது ஒரு முறை: நாட்டை விட்டுப் போவது ஒரு முறை; நாட்டிலேயே தகுந்த கோட்டையில் பாதுகாப்பாக இருப்பது ஒரு முறை; இருக்கும் இடத்தை விட்டுப் போகாமல் இருப்பது ஒரு முறை; நட்புப் பிரித்தல் ஒரு முறை; இப்படியாக ஆறு முறைகள் அரசர்கள் கையாளக் கூடியவைகளாகும்.

ஒரு செயலைச் செய்யக் கூடிய அங்கங்கள் ஐந்து எனப்படும். அவை, அந்தச் செயலுக்கான முயற்சிகளில் ஈடுபடுதல், அதற்கான காலத்தையும் இடத்தையும் ஆராய்தல், அதற்கு வேண்டிய பணமும் ஆளுதவியும் தேடுதல், ஒருவன் தனக்குச் செய்ததை யொத்த செயலைத் தானும் செய்தல், சமாதானம் செய்து கொள்ளுதல் என்பன ஐந்தும் ஒரு செயல் முறையின் அங்கங்களாகும்.

‘ஒப்பந்தம் செய்தல், தானமாக வழங்குதல், பகைத்தல், தண்டித்தல் என்று உபாயங்கள் நான்காகும்.

'ஆர்வம், மந்திரம், தலைமை ஆகிய சக்திகள் மூன்றாகும்.

'ஆறு குணங்கள், ஐந்து அங்கங்கள், நான்கு உபாயங்கள், மூன்று சக்திகள் ஆகியவற்றிலே தக்கவற்றை ஆராய்ந்து கொண்டு நடத்துவதே அரசர்

'நம்மினும் வலிமை யுள்ளவர்களோடு சேர்ந்திருப்பது நமக்கு நன்மை தராது. ஆகவே சமாதானம் செய்து கொண்டு நாம் நன்றாக வாழ வழியில்லை. நமக்கும் அந்தக் கோட்டான்களுக்கும் குலப்பகை. அப்படிப்பட்ட பகைவர்களுக்கு அடி பணிந்து நடப் பதும் ஆகாது என்று சிரஞ்சீவி கூறிக் கொண்டிருக்கும்போது அரச காகம், காகங்களுக்கும் கோட்டான்களுக்கும் பகை வரக் காரணம் என்ன?’ என்று கேட்டது.

‘அரசே, எல்லாம் வாயினால் வந்த வினை தான்! கழுதை தன் வாயினால் கெட்டது போல, நம் காகங்களும் வாயினாலேயே இந்தக் கோட்டான்களோடு பகை தேடிக் கொண்டன.

“ஒரு முறை காட்டில் உள்ள பறவைகளெல்லாம் கூடித் தங்களுக்கோர் அரசனைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தன. அவை யாவும் ஒரு கோட்டானைத் தங்களுக்கு அரசனாகப் பட்டம் கட்டி அதன் ஆணைப்படி வாழ்வதெனப் பேசி முடித்து வைத்திருந்தன. அப்போது அங்கு ஒரு கிழட்டுக் காக்கை போய்ச் சேர்ந்தது.

போயும் போயும் ஒரு கோட்டானையா நமக்கு அரசனாகத் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்தக் கோட்டான் குலத்திலும் நல்லதல்ல, குணத்திலும் நல்ல தல்ல. அத்தனையும் தீக்குணங்கள். கோட்டான் என்ற சொல்லே அருவருப்புக்குரியது. இரவில் நட மாடும் இந்தக் கோட்டானுக்குப் பகலில் கண்கள் குருட்டுக் கண்களாயிருக்கும். பார்வைக்கு இது கோரமாகக் காட்சியளிக்கும். முகத்திலே அழகும் இல்லை. மொழியிலே இனிமையும் இல்லை. அகத்திலே அறிவும் இல்லை. இதை யாரும் நினைப்பதும் இல்லை. இதன் பெயரைச் சொன்னாலே நமக்கு எதிரிகள் அதிகமாவார்கள். இப்படிப்பட்ட மோசமான ஒன்றையா நாம் அரசனாக ஏற்றுக் கொள்வது?

‘அரசனாகத் தகுந்தவர்கள் நல்ல குணமுடைய பெரியவர்களே, அவர்கள் பெயரைச் சொன்னால், பெரும் பகைகளையும் வெல்லக் கூடிய வன்மை யுண்டாகும். அப்படிப்பட்ட பெரியவர்களைச் சேர்ந்தால் தான் ஒவ்வொருவனும் அவனுடைய கூட்டத்தாரும் மேன்மையடையலாம். சந்திரன் பெயரைச் சொல்லியே யானைகளின் படையை வென்று முயல் தன் இனத்துடன் இனிதாக வாழ்ந்திருப்பதைப் போல் உயர்வாக வாழ வேண்டும். அதற்கு அரசன் நல்லவனாக வாய்க்க வேண்டும்.

இதை யெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் எப்படி இந்தக் கோட்டானுக்கு முடிசூட்ட முகூர்த்தம் பார்த் தீர்கள்? உங்கள் எண்ணம் சரியாகவே யில்லையே.

'பாவிகள் மெளனிகளைப் போலவும், பல விரதங்களைக் காக்கும் பெரியவர்களைப் போலவும் தோன்றுவார்கள். உதவி செய்பவர்களைப் போலவும், உறவினர்களைப் போலவும் வந்து ஒட்டிக் கொள்ளுவார்கள். அவர்களிடம் ஏமாந்து சேர்ந்து விட்டால் எவ்வளவு மேன்மையுடையவர்களும் தப்பிப் பிழைக்க முடியாது. ஒரு மைனாவும் முயலும், பூனை யொன்றைச் சேர்ந்து மோசம் போன கதையாய் முடிந்து விடும்.

‘உலகத்தில் அற்பர்களைச் சேர்ந்தவர்கள், கெட்டொழிந்ததைத் தவிர இன்பமாக வாழ்ந்ததாகக் கதை கூட இல்லை. கோட்டானை அரசனாக்குவது நம் பறவைக் கூட்டத்துக்குத் தீமையே உண்டாக்கும்? என்று சொல்லிச் சென்றது அந்தக் கிழட்டுக் காகம். மற்ற பறவைகள் அரசனைத் தேர்ந் தெடுக்காமலே பறந்து சென்று விட்டன. அன்று முதல் இன்று வரை கோட்டான் கூட்டம் நம் காகக் குலத்தின் மீது தொடர்ந்து பகை கொண்டாடி வருகிறது.

சிரஞ்சீவி என்ற அமைச்சுக் காகம் இவ்வாறு சொல்லியதைக் கேட்ட மேகவண்ணன் என்ற காக அரசன், 'இனி நாம் என்ன செய்யலாம்? அதைக் கூறு’ என்று கேட்டது.

'அடுத்துக் கெடுத்தல் என்ற முறைப்படி நான் பகைவர்களிடம் சென்று காரியத்தை முடித்து வரும் வரையில் மற்றோர் இடத்தில் போயிருக்க வேண்டும். நம்முடைய இந்த ஆலோசனைகள் வேறு யாருக்கும் தெரியாதபடி இரகசியமாய் வைத்திருக்க வேண்டும்” என்று சிரஞ்சீவி சொல்லியது.

'எப்படி நீ அந்தக் கோட்டான்களை வெல்லப் போகிறாய்?' என்று காக அரசன் ஆவலோடு கேட்டது.

‘மூன்று வஞ்சகர்கள் கூடி ஒரு பார்ப்பனனை மோசம் செய்து அவனுடைய ஆட்டைக் கைப்பற்றியது போலத்தான் நானும் அந்தப் பகைக் கூட்டத்தை வெல்லப் போகிறேன்” என்றது சிரஞ்சீவி.

காக அரசன் தன் அமைச்சனான சிரஞ்சீவியின் சொற்படியே, அப்போதே தன் கூட்டத்தோடு ஒரு மலை முடியில் போய்த் தங்கியிருந்தது. சிரஞ்சீவி கோட்டான் கூட்டத்திடம் போய்ச் சேருவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே இருட்டி விட்டது.

இரவு வந்தவுடன், கோட்டான்களின் அரசன், மிகுந்த வெறியோடு தன் கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு ஆலமரத்தை நான்கு புறமும் வளைத்துக் கொண்டது. இன்றே ஒரு காக்கை விடாமல் கொன்று போட வேண்டும் என்று வஞ்சினம் கூறிக்கொண்டு வந்தது. ஆனால், ஆலமரத்தில் ஒரு குஞ்சுக் காக்கை கூட இல்லை. இதைக் கண்ட கோட்டான் அரசன், மற்ற கோட்டான்களைப் பார்த்து, 'காகப் பெரும் பகையை வென்றொழித்து விட்டோம். இனி நமக்கு யாரும் எதிரிகளே இல்லை’ என்று வெற்றிப் பெரு மிதத்தோடு கூறியது.

இதையெல்லாம் ஒளிந்து மறைந்து கேட்டுக் கொண்டிருத்த சிரஞ்சீவி, 'நல்ல வேளை! இன்றே எல்லோரும் வேறிடம் போனதுதான் நல்லதாகி விட்டது. இல்லாவிட்டால் நம் கூட்டம் அடியோடு செத்திருக்க வேண்டும்' என்று மனத்திற்குள் நினைத்து மகிழ்ந்தது.

அடுத்து அது தன் சூழ்ச்சி வேலையைத் தொடங்கியது.

முதல் நாள் கோட்டான்கள் அடித்துக் கொன்று போட்டிருந்த காக்கைகள் ஆலமரத்தினடியில் சிறகு ஒடிந்து போய் இரத்தம் வழிந்து அலங்கோலமாகக் கிடந்தன. அந்தப் பிணக் கூட்டத்தின் இடையிலே போய் மறைவாகக் கிடந்து இரக்கந் தரத்தக்க முறையில், துன்பமும் வருத்தமும் நிறைந்த குரலில் முக்கி முனகிக் கொண்டிருந்தது சிரஞ்சீவி.

கோட்டான் அரசன் காதில் இந்தக் குரல் விழுந்தது. 'காகம் ஏதோ கிடந்து கதறுகிறது. போய்ப் பார்’ என்று ஒரு தூதனிடம் கூறியது. அந்தக் கோட்டான் துரதன், பிணக் குவியலிடையே தேடிக் கதறிக் கொண்டிருந்த சிரஞ்சீவியைத் தூக்கிக் கொண்டு போய்க் கோட்டான் அரசன் முன்னே விட்டது.

'நீ யார்?’ என்று கோட்டான் அரசன் கேட்டது.

சிரஞ்சீவி தந்திரமாய்ப் பேசியது.

'என் பெயர் சிரஞ்சீவி. காக அரசனாகிய மேக வண்ணனுடைய தலைமுறையில் வந்தவன் நான், நான் அவனுடைய அமைச்சனாக இருந்தேன். நான் சொன்னபடி அவன் நடந்து வந்தான். நலமாக இருந்தான். நல்லறிவு சொல்பவர்களின் சொற்படி நடப்பவர்களுக்குத் தீமை வருவதுண்டா? ஆனால், பிறகு தீய அமைச்சர்கள் அரசனுக்கு வாய்த்தார்கள். அதன் பிறகு அவன் என் பேச்சைக் கேட்பதில்லை.

அவர்கள் அரசனுக்குத் தீய யோசனை கூறி உங்கள் கூட்டத்தோடு சண்டையிடும்படி தூண்டிவிட்டார்கள். வேண்டாம் வீண் பகை என்று நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். யாரும் கேட்கவில்லை. உங்களோடு சண்டையிட்டார்கள். உங்கள் குலத்தில் பலரைக் கொன்று போட்டார்கள். நான் சொன்னேன், 'வீண் சண்டைக்குப் போகிறீர்கள். அவர்கள் ஒரு நாள் வந்து நம்மை வளைத்துக் கொண்டு அடித்துக் கொன்று விடுவார்கள்’ என்று. யாரும் கேட்கவில்லை. நேற்று இரவு நான் சொன்னபடியே நடந்து விட்டது.

‘கால் வேறு தலை வேறாகக் கிடந்த காகங்கள் பல. கரிய சிறகு வேறு வால் வேறாகத் துண்டுபட்ட காகங்கள் பல. குடல் வேறு வாய் வேறாகக் கிழிக்கப் பட்ட காகங்கள் பல. தோல் வேறு துடை வேறாகத் துண்டுபட்ட காகங்கள் பல. இப்படி எங்கள் கூட்டமே அழிந்து போய் விட்டது. நானும் இன்னும் நான்கு மந்திரிகளும் எங்கள் அரசனும், தப்பிப் பிழைத்தோம். அடிபட்ட காகங்களின் கீழே நடுநடுங்கி மறைந்து கிடந்த நாற்பது காகங்கள் பிழைத்துக் கொண்டன. எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி, அரசன் கேட்டான், இனி என்ன செய்யலாம் என்று. அப்போது ஓர் அமைச்சன் பகல் நேரத்தில் நாம் அந்தக் கோட்டான்களைப் பழி வாங்குவோம் என்றது. இன்னோர் அமைச்சன் வேண்டாம் வேறு இடம் போவோம்’ என்றது. 'நம் பகையைத் தேடிக்கொண்ட அந்தக் கோட்டான் இனி நம் கண்ணில் அகப்படுமா?’ என்று ஓர் அமைச்சுக் காகம் கூறியது. 'நாம் எப்படி அவற்றை வெல்ல முடியும்? நமக்குள் இத்தனை கருத்து வேறுபட்டிருக்கிறதே?' என்று கடைசி அமைச்சன் சொல்லியது.

'இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான், 'இவ்வளவு அழிவு நேர்ந்த பின்னும் உங்களுக்கு அறிவு வரவில்லையா? இனி நாம் பகை கருதாமல், கோட்டான் அரசனுக்குப் பணிந்து வாழ் வதுதான் பிழைக்கும் வழி!’ என்று சொன்னேன். உடனே அவையெல்லாம் ஒன்று கூடி, என்னை அடித்துத் துவைத்து இழுத்துப் போட்டுவிட்டு இங்கிருந்து பறந்து போய்விட்டன.

'நான் செத்தேனென்று நினைத்துக் கொண்டு என்னை அத்தோடு விட்டு விட்டுப் போனார்கள். ஆனால் நல்ல வேளையாக நான் பிழைத்துக் கொண்டேன். உத்தமனாகிய கோட்டான் அரசே! உடனடியாக உன் காலில் வந்து விழ வேண்டும் என்பது தான் என் ஆவல். ஆனால் அடிபட்ட சோர்வினால் என்னால் எழுந்து பறந்து வரமுடியவில்லை. இனி உன் முடிவு என் விடிவு!’ என்று கூறிச் சிரஞ்சீவி, கோட்டான் அரசனுக்கு வணக்கம் செலுத்தியது.

கோட்டான் அரசனின் மனம் இளகியது. அது தன் அமைச்சர்களை நோக்கி, 'இது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டது.

'கொடிய புலி தானாக வந்து வலைகோட்யில் சிக்கிக் கொண்டால் அதை விட்டு விடுவது புத்திசாலித்தன மல்ல' என்று பெரும்பாலான அமைச்சுக் கோட்டான்கள் கூறின. அந்த அமைச்சர்களிலே குருதிக் கண்ணன் என்ற கோட்டான் 'அடைக்கலம் என்று வந்த ஒருவனைக் கொல்வது அறமல்ல’ என்றது. கொடுங்கண்ணன் என்ற அமைச்சனைப் பார்த்துக் கோட்டான் அரசு கருத்துக் கேட்ட போது 'பகைவர்கள் நமக்குப் பணிந்து வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதுதான் மனுநீதி முறைப்படி சரியாகும். அவர்களைக் கொன்றவர்களையும் அவர்கள் உதவியைக் கைவிட்டவர்களையும் இதுவரை உலகத்தில் நான் பார்த்ததில்லை’ என்று கூறியது.

கொள்ளிக் கண்ணன் என்ற அமைச்சனைக் கேட்ட போது, 'பகைவர் கூட்டத்தைச் சேர்ந்தவர் களானாலும், நமக்கு இனிமையாகப் பேசி உதவ முன் வருபவர்களை நல்ல பதவி கொடுத்து ஆதரித்துக் காப்பாற்றுவதே உத்தமர்களின் கடமை. அப்படிபட்ட உத்தமர்கள் உலகில் நெடுங்காலம் நலமாக வாழ்வார்கள். கோமுட்டியின் வீட்டில் திருட வந்த கள்ளனுக்கு அந்தக் கோமுட்டி ஓர் உதவி செய்தான். அதனால் திருடன் அவனுக்குப் பதிலுக்கொரு உதவி செய்தான். அதுபோலப் பகை வர்களாலும் பயனடைய முடியும்' என்று கூறியது.

குருநாசன் என்ற கோட்டான் அமைச்சனைக் கேட்டபோது, 'கள்ளனுக்கும் பேய்க்கும் பரிசு கொடுத்துப் பயன் கண்ட பார்ப்பனன் போல் இவனுக்கு உதவி செய்து நாம் இலாபம் அடையலாம் என்றும், 'பகைவருக்குப் பகைவன் நமக்கு நட்பாவான்’ என்றும் கூறியது.

அடுத்துக் கோட்டான் அரசன் பிராகார நாசன் என்ற தன் அமைச்சனைப் பார்த்து, 'உன் கருத்தை உரை' என்று கேட்டது.

'பகைவர்கள் நல்லவர்கள் போல் வந்தாலும் அவர்களை நம்பி விடக் கூடாது. நம்பினால் இரகசியத்தை விட்டுக் கொடுத்த பாம்புகள் போல் அழிய நேரிடும். வேடனைக் காப்பாற்ற எண்ணிப் புறாக்கள் இறக்க நேர்ந்தது போல், பகைவனைக் காப்பாற்ற நம் உயிரைத் தத்தம் செய்யவேண்டி வந்தாலும் வரும். பொன் எச்சமிடும் புறாவைக் காப்பாற்றப் போய் மூடப்பட்டம் பெற்ற அமைச்சனைப் போல், பகைவர்களைக் காப்பாற்ற முற்படுவோர் மூடராகி விடுவர். ஆதலால் பகைவன் என்று அறிந்த பின் ஒருவனை நம்புபவன், தானே சாகும்படியான நிலையை அடைவான். சிங்கத்தின் மோசம் அறிந்த நரியைப் போல் பகைவனை ஆராய்ந்து அவன் தீமையை விலக்கிக் கொள்வதே சிறந்ததாகும்’ என்று பல கதைகளை எடுத்துரைத்துக்காகத்தை நம்பக்கூடாதென்று வலியுறுத்தியது.

ஆனால், கோட்டான் அரசு அதன் அறிவுரையைத் தள்ளிவிட்டது. முன் கூறிய பல அமைச்சர்களின் ஆலோசனைகளே அதற்குப் பொருத்தமாகத் தோன்றின.

ஆகவே, அது சிரஞ்சீவி என்ற அந்தக் காகத்திற்குப் பல பரிசுகள் கொடுத்து, 'சிரஞ்சீவி, இனி நீயும் என் அமைச்சர்களில் ஒருவனாய் இருந்துவா’ என்று பதவி கொடுத்துச் சிறப்பித்தது.

அப்போது சிரஞ்சீவி என்ற அந்தக் காகம், ‘அரசே, என் அன்புக்குரிய கோட்டான் அரசே, உனக்கு நூறு கோடி வணக்கங்கள். காக்கைகளால் அடிபட்ட நான் இந்தக் காக்கை யுருவத்தை வைத்துக் கொண்டு உன்னிடம் இருக்க வெட்கப் படுகிறேன். இப்போதே தீயிட்டு இந்த உடம்பை அழித்து விடுகிறேன். மறுபிறப்பிலாவது ஒரு கோட்டானாகப் பிறந்து அந்தக் காகங்களைப் பதிலுக்குப் பதில் தப்பாமல் அடிக்க வேண்டும் என்பதே என் ஆசை!' என்று பசப்பியது.

'சிரஞ்சீவி, ஆகாததைப் பற்றி ஏன் பேச வேண்டும். பெண்ணாக மாறிய எலி மீண்டும் எலியாக மாறியே வாழ வேண்டியிருப்பதைப் போலத்தான், அவரவர்கள் எடுத்த உடம்பை வைத்தே ஆக வேண்டிய செயல்களைப் புரிய வேண்டும். நீ நினைத்தாலும் உன்னுடைய காக வடிவத்தை மாற்றிக் கோட்டான் உருவம் அடைய முடியாது. அது குறித்து நீ மனக்கவலை கொள்ள வேண்டாம். இங்கே என்னிடத்தில் நீ எப்பொழுதும் நலமாக இருக்கலாம்’ என்று கோட்டான் அரசு சொல்லியது.

சிரஞ்சீவிக் காகம் கோட்டான் அரசு மனம்போல் நடந்து, மற்ற கோட்டான் அமைச்சர்களைக் காட்டிலும் மேலான பதவியை யடைந்தது. பதவியின் மூலமாகத் தன் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டு, கோட்டான்கள் தங்கியிருந்த குகை வாசலைத் தன் கண்காணிப்பில் வைத்துக் கொண்டது. ஒரு நாள் பகலில் கோட்டான் அரசு தன் அமைச்சர்களோடும் கூட்டத்தினரோடும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, சிரஞ்சீவிக்காகம் குகை வாயிலில் குச்சிகளைக் கொண்டு வந்து போட்டுக் குவித்து, அதில் நெருப்பு வைத்துவிட்டது.

குகைக்குள்ளே நெருப்பும் புகையும் சூழ்ந்து கொண்டது, உள்ளேயிருந்த கோட்டான்களெல்லாம் கண்ணும் தெரியாமல், வழியும் தெரியாமல், புகையில் மூச்சுத் திணறியும், நெருப்பில் வீழ்ந்து ஒரே கூட்டமாக இறந்து ஒழிந்து போவிய்ட்டன.

வெற்றிகரமாகத் தன் பகைவர்களை ஒழித்து விட்ட சிரஞ்சீவிக் காகம், தன் அரசனாகிய மேகவண்ணனும், பிற காகங்களும் உள்ள சிங்க மலைக் குப்பறந்து சென்றது.

அங்கு தான் செய்த செயலைப் பற்றி அது கூறியவுடன், மேகவண்ணன் மனம் அடங்காத மகிழ்ச்சி கொண்டு சிரஞ்சீவியைக் கட்டித் தழுவிக் கொண்டது, எல்லாக் காக்கைகளும், 'கொண்ட பகை தீர்த்தகுலமணி’ என்று போற்றிப் பாராட்டின.

காக அரசன், சிரஞ்சீவியைப் பகைவர்களிடையே இருந்து செயலாற்றியது குறித்துப் பலவாறாகப் புகழ்ந்துரைத்தது.

மேகவண்ணனுடைய புகழுரைகளை யாற்றாமல் சிரஞ்சீவி இவ்வாறு கூறியது.

‘அரசே, அருமையான தம்பிமார்களையும், அளவில் அடங்காத சேனைகளையும் கொண்டு ஒப்பில்லாத அரசாட்சி செய்து உலகாண்ட தருமராசன் கூட, துறவி வேடங்கொண்டு விராடனிடம் இருக்கும்படி நேர்ந்ததில்லையா?

‘தன் தோள்வலியால் பெரும்புகழுடன் வாழ்ந்த மாவீரனான வீமன் கூடத் தன் பழிப்புக்குரிய பகை யரசனிடம் போய் அடுக்களைச் சமையல்காரனாக இருக்கும்படி நேர்ந்ததில்லையா?

'விஜயன் என்ற புகழ்ப் பெயர் பெற்ற அர்ச்சுனனே நாடகப் பெண்களுக்கு நட்டுவனாராகச் சிகண்டி என்ற பெயரில் இருக்கும்படி நேர்ந்த தில்லையா?

'நகுலன், விராடனிடம் குதிரைக்காரனாகச் சேர்ந்து வாழ நேர்ந்ததில்லையா? சகாதேவன் மாடு மேய்ப்பவனாக நேர்ந்ததில்லையா?

நெருப்பில் பிறந்த சிறப்பினையுடையவளும், சூரிய குலத்தில் பிறந்து சந்திர குலத்தில் புகுந்த மின்னல் கொடி யொத்தவளும் ஆகிய பாஞ்சாலி, விராடன் மகளுக்குத் தோழியாய் இருக்கும்படி நேர்ந்ததில்லையா?

'பாண்டவர் குலத் தோன்றல்களைப் போல எடுத்த காரியம் முடிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டியது நம் கடமை யல்லவா?’ என்று சிரஞ்சீவி மேகவண்ணனுக்குப் பதிலளித்தது.

'கத்தி முனையிலிருந்து தவம் செய்பவர்களைப் போலவும், நெருப்பினிடையே புகுந்திருந்தவர்களைப் போலவும், பாம்புப் புற்றினுள் நுழைந்தவர்களைப் போலவும், பகைவர் கூட்டத்தினிடைப் புகுந்த நீ என்னென்ன துன்பம் அடைந்தாயோ?” என்று மேகவண்ணன் மேலும் அரற்றியது.

'அரசே, உன் அருளால் நான் எவ்விதமான தீமையும் அடையவில்லை. இருக்க வேண்டிய இடத்தில் இருக்காமல் இந்த மலைக்காட்டில் வந்து இருந்து, கவலையினால் நீ உடல் மெலிந்து போன தெல்லாம் நான் செய்த பாவமே!’ என்று சிரஞ்சீவிக் காகம் மேகவண்ணனிடம் அன்புடன் பரிந்து பேசியது.

‘இராமர் தான் இருந்த அயோத்தியை விட்டு வனவாசம் புகுந்ததும், அவருடைய தேவியான சீதை சிறைப்பட்டதும், இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்டதும் எல்லாம் ராமருடைய தீவினையின் பயன் தானே!

'நளன் தன் அரசை இழந்ததும், தூயவளான தமயந்தியை, இரவில் சேலையை அரிந்து காட்டில் விட்டு விட்டுச் சென்றதும், கொடிய பாம்பு தீண்ட உடல் பழுப்பு நிறம் கொண்டதும், நளனுடைய தீவினையின் பயன்தானே!

பாண்டவர் சூதாடி அரசை இழந்ததும், பாஞ்சாலி வாட்டமடைந்ததும், காட்டில் வாழ்ந்ததும் எல்லாம் அவர்களுடைய தீவினையின் பயன்தானே,

‘தன் செல்வம், நாடு, மகன், மனைவி எல்லாம் இழந்ததும், பறையனுக்கு ஊழியம் செய்ததும், தன்னையே அடிமையாக விற்றதும் அரிச்சந்திரனுடைய தீவினையின் பயன்தானே!

வினைப்பயனைக் கடந்தவர்கள் யாருமில்லை! அந்தக் கோட்டான்களினால் நம் குலம் அழிந்ததும், இருந்த இடம் பெயர்ந்ததும், இன்பம் இழந்ததும்’ மலையில் ஒளிந்து வாழ்ந்து வருவதும் எல்லாம் நம் தீவினையின் பயனே! இப்போது நீ நம் குலத்தினை வாழவைத்தாய்’ என்று மேகவண்ணன் பாராட்டியது.

எதிரிகளை ஒரு வேளை தலை மேல் துக்கி வைத்துப் பேசியும், தோள்மேல் தூக்கி வைத்துக் கொண்டாடியும் புகழ்ந்து, சமயம் வரும்போது வதைத் தொழிக்க வேண்டும். கருநாகம் தவளைகளைச் சுமந்து கடைசியில் கொன்றொழித்தது போல நடந்து கொள்ள வேண்டும். அரசர்களும் அமைச்சர்களும் அறிவுடையவர்களாக இருந்தால் என்றும் துன்பங்களை விலக்கி இன்பமாக யிருக்க லாம். இல்லாவிடில் கருநாகப் பாம்பிடம் ஏமாந்த தவளைகளைப் போலவும், என்னிடம் ஏமாந்த கோட்டான்களைப் போலவும் கூட்டத்தோடு ஒழிய வேண்டியதுதான்’ என்று சிரஞ்சீவி சொல்லிற்று.

அதை ஒப்பி காக அரசன் மேகவண்ணன் 'நல்ல அறிவினாலும், பொறுமையினாலும், திறமையினாலும் எச்செயலும் வெற்றியாய் முடிவது போல, சேனைகளாலும், செல்வத்தாலும், கோபத்தாலும், மான உணர்ச்சியாலும், மனோ சக்தியாலும் கூட முடிவதில்லை'. என்று சொல்லியது.

அதன் பின் பல்வகையான சூழ்ச்சிகளிலும் தந்திரங்களிலும் வல்லமையுடையதான சிரஞ்சீவியுடனும், மற்ற அமைச்சர்களுடனும், தன் காக்கை இனத்துடன், திரும்பவும் முன்னிருந்த பழைய ஆல மரத்தை அடைந்து மேகவண்ணன் பல ஆண்டுகள் நலமாக வாழ்ந்தது.