பஞ்ச தந்திரக் கதைகள்/சாட்சி சொன்ன மரம்
ஒரு பட்டணத்தில் இரண்டு வணிகப் பிள்ளைகள் இருந்தார்கள். ஒருவன் பெயர் நல்ல புத்தி. இன்னொருவன் பெயர் கெட்டபுத்தி. இரண்டு பேரும் பணம் சேர்ப்பதற்காக வெளியூருக்குச் சென்றார்கள். அங்கே நல்லபுத்திக்கு ஆயிரம் பொன் கிடைத்தது, கெட்டபுத்திக்கு எதுவும் கிடைக்க வில்லை.
நல்ல நோக்கமுடைய நல்லபுத்தி, கெட்டபுத்தியைப் பார்த்து, 'கவலைப்படாதே, நாம் இருவரும் ஆளுக்கு ஐநூறு பொன்னாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்' என்று கூறினான்.
'சரியென்று ஒப்புக் கொண்ட கெட்டபுத்தி, 'நாம் உடனே இவ்வளவு பணத்தையும் ஊருக்கு எடுத்துச் சென்றால் கெடுதல் உண்டாகும். இங்கேயே ஒரு மரத்தின் கீழ்ப் புதைத்து வைப்போம். மற்றொரு நாள் வந்து எடுத்துக் கொண்டு போவோம்’ என்றான்.
இது பொருத்தமாகத் தோன்றவே, நல்லபுத்தி ஒப்புக் கொண்டான். உடனே அங்கொரு மரத்தடியில் பள்ளம் தோண்டிப் பணத்தைப் புதைத்து ஓர் அடையாளம் வைத்துவிட்டு இருவரும் ஊருக்குள் சென்றார்கள்.
கெட்டபுத்தி அன்று இரவே திரும்பி வந்து ஆயிரம் பொன்னையும் அடித்துக் கொண்டு போய் விட்டான்.
சில நாள் கழித்து இருவரும் அந்த மரத்தடிக்கு வந்து பார்த்தார்கள். பணம் காணவில்லை. உடனே, கெட்டபுத்தி முந்திக் கொண்டு நல்லபுத்தியைப் பார்த்து, 'நண்பா இப்படி மோசம் செய்யலாமா?' என்று கேட்டான்,
'நீதான் எடுத்துக் கொண்டு என்னை ஏமாற்று கிறாய்!' என்றான் நல்லபுத்தி.
இருவருக்கும் சண்டை வந்து விட்டது. கடைசியில் வழக்கு மன்றத்திற்குப் போனார்கள். ஊர் வழக்காளர் அவர்களுடைய வழக்கை விசாரித்தார். பிறகு, 'ஏதாவது சாட்சி உண்டா?' என்று கேட்டார். 'எங்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறுயாரும் சாட்சியில்லை’ என்றான் நல்லபுத்தி.
'அந்த மரமே இதற்குச் சாட்சி சொல்லும்’ என்றான் கெட்டபுத்தி.
‘உண்மைதானா? காலையில் வாருங்கள் அந்த மரத்தையே கேட்போம்’ என்று சொல்லி வழக்காளர் போய்விட்டார்.
வீட்டுக்கு வந்த கெட்டபுத்தி தன் தந்தையை அழைத்து மரப்பொந்தில் போய் ஒளிந்து கொண்டு, மரம் சாட்சி சொல்வது போல் பேசச் சொன்னான்.
‘தம்பி, கொக்கின் முட்டையைத் திருடிய நாகத்தைப் போல் நமக்குத் துன்பம் ஏற்படக் கூடும். இந்தக் கெட்ட நினைப்பை விட்டுவிடு’ என்று
அறிவுரை கூறினார் அவர். ஆனால், கெட்டபுத்தி அவர் பேச்சைக் கேட்கவில்லை. அவரை வலுவாக இழுத்துச் சென்று அந்த மரப் பொந்தில் ஒளிந்து. கொள்ளும்படி வற்புறுத்தினான்.
பொழுது விடிந்தது. ஊர் வழக்கர் தன் ஆட்களோடு நல்லபுத்தியையும் கெட்டபுத்தியையும் அழைத்துக் கொண்டு வந்து மரத்தைச் சாட்சி சொல்லும்படி கேட்டார்.
மரம் பேசியது : ‘நல்லபுத்திதான் பணத்தை எடுத்தான்!' ஏன்று அழுத்தந்திருத்தமாகக் கூறியது.'ஆ! என்ன புதுமை! மரம் சாட்சி சொல்லுகிறதே!” என்று ஊர் வழக்காளர் ஆச்சரியப்பட்டார்.
நெருப்பின் சூடு தாங்காமல், கெட்டபுத்தியின் தந்தை மரப்பொந்தின் உள்ளிருந்தபடியே' கெட்ட புத்தி, உன்னால் கெட்டேன்!’ என்று பதைபதைத்துக் கதறினான். நெருப்பில் வெதும்பி இறந்து போனான்.
இதைக் கண்ட ஊர் வழக்காளர் அரசரிடம் போய் நிகழ்ந்ததைக் கூறினார்.
பொன் முழுவதையும் நல்லபுத்திக்குக் கொடுக்கும்படி சொல்லி, கெட்டபுத்தியை அரசர் சித்திரவதை செய்து கொல்லும்படி உத்தர விட்டார்.
பிறரைக் கெடுக்க நினைப்பவர்கள் தாங்களே கெட்டொழிவார்கள்.