பதிற்றுப்பத்து/ஏழாம்பத்து

விக்கிமூலம் இலிருந்து
(பதிற்றுப்பத்து ஏழாம்பத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன்

பாடியவர்: கபிலர்

பாட்டு - 61[தொகு]

பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்
வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள் கணவன்
5  பொன்னின் அன்ன பூவின் சிறிஇலைப்
புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர இரவலர் இனைய
10 வாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்(க)என
இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்
ஈத்த(து) இரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்
நல்இசை தரவந் திசினே ஒள்வாள்
15 உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை
நிலவின்அன்ன வெள்வேல் பாடினி
முழவின் போக்கிய வெண்கை
விழவின் அன்னநின் கலிமகி ழானே. (61)


பெயர்: புலாஅம் பாசறை
துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 62[தொகு]

இழைஅணிந்(து) எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு
மழைஎன மருளும் மாஇரும் பஃறோல்
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவியொடு
மைந்(து)உடை ஆர்எயில் புடைபட வளைஇ
5  வந்துபுறத்(து) இறுக்கும் பசும்பிசிர் ஒள்அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
பொல்லா மயலொடு பாடிமிழ்(பு) இழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே
10 புனல்பொரு கிடங்கின் வரைபோல் இஞ்சி
அணங்(கு)உடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பி
வளன்உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
15 களன்அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி
அரியல் ஆர்கை வன்கை வினைநர்
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வரிவண்(டு) ஓப்பும்
பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே. (62)


பெயர்: வரைபோல் இஞ்சி
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 63[தொகு]

பார்ப்பார்க்(கு) அல்லது பணி(பு)அறி யலையே
பணியா உள்ளமொ(டு) அணிவரக் கெழீஇ
நட்டோ ர்க்(கு) அல்லது கண்அஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணம்கமழ் அகலம்
5  மகளிர்க்(கு) அல்லது மலர்ப்(பு)அறி யலையே
நிலம்திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்(பு)அறி யலையே
சிறிஇலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக்
10 குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி
ஒருமுற்(று) இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற்(று) அழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையேம் என்றனர் நீயும்
15 நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால்
செல்வக் கோவே சேரலர் மருக
கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
நனம்தலை உலகஞ் செய்தநன்(று) உண்(டு)எனின்
அடைஅடுப்(பு) அறியா அருவி ஆம்பல்
20 ஆயிர வெள்ள ஊழி
வாழி யாத வாழிய பலவே. (63)


பெயர்: அருவி ஆம்பல்
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 64[தொகு]

வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம
அறம்கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
5  அந்தணர் அரும்கலம் ஏற்ப நீர்பட்(டு)
இரும்சே(று) ஆடிய மணல்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தார்அரும் தகைப்பின்
புறம்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவி
10 அலங்கும் பாண்டில் இழைஅணிந்(து) ஈம்என
ஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்
மாஇரு விசும்பில் பல்மீன் ஒளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் நோன்தாள் வாழ்த்திக்
15 காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல்
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப்(பு) உற்ற தோற்றமொ(டு) உயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி அதனால்
பசிஉடை ஒக்கலை ஒரீஇய
20 இசைமேம் தோன்றல்நின் பாசறை யானே. (64)


பெயர்: உரைசால்வேள்வி
துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 65[தொகு]

எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின்
பரிஉடை நல்மா விரிஉளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறம்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும
5  வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ
பூண்அணிந்(து) எழிலிய வனைந்துவரல் இளமுலை
மாண்வரி அல்குல் மலர்ந்த நோக்கின்
வேய்புரை(பு) எழிலிய விளங்(கு)இறைப் பணைத்தோள்
காமர் கடவுளும் ஆளும் கற்பின்
10 சேண்நாறு நறுநுதல் சேஇழை கணவ
பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை
பூண்அணிந்து விளங்கிய புகழ்சால் மார்பநின்
நாள்மகிழ் இருக்கை இனிதுகண் டிகுமே
தீம்தொடை நரம்பின் பாலை வல்லோன்
15 பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச்
வேறுசெய் மாரியின் அளிக்கும்நின்
சாறுபடு திருவின் நனைமகி ழானே. (65)


பெயர்: நாள்மகிழிருக்கை
துறை: பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 66[தொகு]

வாங்கிரு மருப்பின் தீம்தொடை பழுனிய
இடன்உடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல
இடிஇசை முரசமொ(டு) ஒன்றுமொழிந்(து) ஒன்னார்
5  வேல்உடைக் குழூஉச்சமம் ததைய நூறிக்
கொன்றுபுறம் பெற்ற பிணம்பயில் அழுவத்துத்
தொன்றுதிறை தந்த களிற்றொடு நெல்லின்
அம்பண அளவை விரிந்(து)உறை போகிய
ஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர்
10 உறுமுரண் தாங்கிய தார்அரும் தகைப்பின்
நாள்மழைக் குழூஉச்சிமை கடுக்கும் தோன்றல்
தோல்மிசைத்(து) எழுதரும் விரிந்(து)இலங்(கு) எஃகின்
தார்புரிந் தன்ன வாள்உடை விழவின்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
15 கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்பப்
பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
20 அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. (66)


பெயர்: புதல்சூழ் பறவை
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 67[தொகு]

கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடன்அறி மரபின் கைவல் பாண
தெள்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை
5  கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க
வயங்குகதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்பப்
பல்களிற்(று) இனநிரை புலம்பெயர்ந்(து) இயல்வர
அமர்க்கண் அமைந்த அவிர்நிணப் பரப்பின்
குழூஉச்சிறை எருவை குருதி ஆரத்
10 தலைதுமிந்(து) எஞ்சிய வாள்மலி யூபமொ(டு)
உருவில் பேய்மகள் கவலை கவற்ற
நா(டு)உடன் நடுங்கப் பல்செருக் கொன்று
நா(று)இணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர்
வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
15 நெறிபடு மருப்பின் இரும்கண் மூரியொடு
வளைதலை மாத்த தாழ்கரும் பாசவர்
எஃ(கு)ஆ(டு) ஊனம் கடுப்பமெய் சிதைந்து
சாந்(து)எழில் மறைத்த சன்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தள் மாறா(து) ஊதிய
20 கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய்ப்
பறைபண் அழியும் பாடுசால் நெடுவரைக்
கல்உயர் நேரிப் பொருநன்
செல்வக் கோமான் பாடினை செலினே. (67)


பெயர்: வெண்போழ்க்கண்ணி
துறை: பாணாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 68[தொகு]

கால்கடிப்(பு) ஆகக் கடல்ஒலித் தாங்கு
வேறுபுலத்(து) இறுத்த கட்டூர் நாப்பண்
கடும்சிலை கடவும் தழங்குகுரல் முரசம்
அகல்இரு விசும்பின் ஆகத்(து) அதிர
5  வெவ்வரி நிலைஇய எயில்எறிந்(து) அல்ல(து)
உண்ணா(து) அடுக்கிய பொழுதுபல கழிய
நெஞ்சுபுகல் ஊக்கத்தர் மெய்தயங்(கு) உயக்கத்(து)
இன்னார் உறையுள் தாம்பெறின் அல்லது
வேந்(து)ஊர் யானை வெண்கோடு கொண்டு
10 கள்கொடி நுடங்கும் ஆவணம் புக்(கு)உடன்
அருங்கள் நொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வடபுலம் வாழ்நரின் பெரி(து)அமர்ந்(து) அல்கலும்
இன்நகை மேய பல்உறை பெறுபகொல்
15 பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ
நெடுமண் இஞ்சி நீள்நகர் வரைப்பின்
ஓ(வு)உறழ் நெடும்சுவர் நாள்பல எழுதிச்
செவ்விரல் சிவந்த அவ்வரிக் குடைச்சூல்
அணங்(கு)எழில் அரிவையர்ப் பிணிக்கும்
20 மணம்கமழ் மார்பநின் தாள்நிழ லோரே. (68)


பெயர்: ஏமவாழ்க்கை
துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 69[தொகு]

மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி
வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்
கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்
கால்உறு கடலின் கடிய உரற
5  எறிந்துசிதைந்த வாள்
இலைதெரிந்த வேல்
பாய்ந்(து)ஆய்ந்த மா
ஆய்ந்துதெரிந்த புகல்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
10 கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போல், அசைவில் கொள்கையர் ஆகலின் அசையா(து)
ஆண்டோ ர் மன்றஇம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணியப்
பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
15 விசும்புமெய் அகலப் பெயல்புர(வு) எதிர
நால்வேறு நனம்தலை ஓராங்கு நந்த
இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே. (69)


பெயர்: மண்கெழுஞாலம்
துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்


பாட்டு - 70[தொகு]

களிறுகடைஇய தாள்
மாஉடற்றிய வடிம்பு
சமம்ததைந்த வேல்
கல்அலைத்த தோள்
5  வில்அலைத்த நல்வலத்து
வண்(டு)இசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீம்சுனை நீர்மலர் மலைந்து மதம்செருக்கி
உடைநிலை நல்அமர் கடந்து மறம்கெடுத்துக்
10 கடும்சின வேந்தர் செம்மல் தொலைத்த
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறம்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
15 கற்(பு)இறை கொண்ட கமழும் சுடர்நுதல்
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கை சுற்றம் சுற்ற
வேள்வியின் கடவுள் அருத்தினை கேள்வி
உயர்நிலை உலகத்(து) ஐயர்இன்(பு) உறுத்தினை
20 வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளம்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்
மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
இழும்என இழிதரும் பறைக்குரல் அருவி
25 முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்
அயிரை நெடுவரை போலத்
தொலையா(து) ஆகநீ வாழும் நாளே. (70)


பெயர்: பறைக்குரல் அருவி
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்


பதிகம்[தொகு]

மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
5  வெருவரு தானை கொடுசெருப் பலகடந்(து)
ஏத்தல் சான்ற இடன்உடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன்உறப் பெற்றவற்(கு)
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்
10 புரோசு மயக்கி
மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக்கடுங்கோ வாழிஆதனைக்
கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்:
புலாஅம் பாசறை, வரைபோலிஞ்சி, அருவியாம்பல், உரைசால் வேள்வி,
நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை,
மண்ஞெழுஞாலம், பறைக்குரலருவி. இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங்காணம் கொடுத்து நன்றாவென்னும்
குன்றேறி நின்று தன்கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.