உள்ளடக்கத்துக்குச் செல்

பதிற்றுப்பத்து/மூன்றாம் பத்து

விக்கிமூலம் இலிருந்து


பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கெளதமனார் பாடியது

மூன்றாம் பத்து
பதிகம்

[பாடியவர் : ஆசிரியர் பாலைக் கெளதமனார் பாடப் பட்டோன் : பல்யானைச் செல்கெழு குட்டுவன். பாடிப் பெற்ற பரிசில் : நீர் வேண்டியது கொண்மின்' என்றான் குட்டுவன். “யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகவேண்டும்" என்றனர் கெளதமனார். குட்டுவன், பார்ப்பாரிற் பெரியோரை 'அதற்குரிய வழி யாது?’ எனக் கேட்டு, அவர் கூறியபடியே ஒன்பது பெருவேள்விகளை இயற்றுவித்தான். பத்தாம் வேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் அங்கிருந்தார் காநணாராயினர். அவர்கள் தாம் விரும்பியவாறே சுவர்க்கம் புகுந்தனர். இவன் அரசு வீற்றிருந்த காலம் இருபத்தைந்து யாண்டுகள்.]

இமைய வரம்பன் தம்பி அமைவர
உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா வெறிந்து பகற்றி வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக் 5

கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒருபகல் ஆடி
அயிரை பரைஇ ஆற்றல்சால் முன்போடு
ஒடுங்கா நல்லிசை உயர்ந்த கேள்வி
நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த 10

பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்
கெளதமனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்,

(1) அடுநெய்யாவுதி, (2) கயிறுகுறு முகவை,
(3) ததைந்த காஞ்சி, (4) சீர்சால் வெள்ளி,
(5) கானுணங்கு கடுநெறி, (6) காடுறு கடுநெறி,
(7) தொடர்ந்த குவளை, (8) உருத்துவரு மலிர்நிறை,
(9) வெண்கை மகளிர், (10) புகன்ற வாயம்.


இவை பாட்டின் பதிகம்.

தெளிவுரை: இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன். அவன், உம்பற் காட்டுப்பகுதியை அது தன் ஆணைக்கு அடங்கி அமைந்துவருமாறு, அவ்விடத்தே தன் ஆட்சியை நிறுவியவன்; 'அகப்பா' என்னும் கோட்டையை அழித்து, ஒரு பகற்போதிற்குள்ளாகவே அதனைத் தீயிட்டுக் கொளுத்தியவன். தன் அறிவோடு ஒத்திருந்தாரான முறைமையுடைய பெரியோரைத் தழுவிக்கொண்டு அரசாண்டவன். இடமகன்ற நிலப்பரப்பை யுடைய தன் நாட்டு நிலத்தைத் தன் நாட்டவருக்கு அவரவர்க்குரிய எல்லையை அளந்து வகுத்துக்கொடுத்து ஒழுங்கு செய்தவன். கருமையான களிற்றியானைகள் பொருந்திய தன் களிற்றுப்படையை நெடிதாக்கி, மேல்கடலும் கீழ் கடலும் என்னும் இருகடல் நீரையும் ஒரு பகற்காலத்துள்ளேயே அவற்றின் மூலம் கொணர்ந்து, அயிரை மலையிடத்தே கோயில்கொண்டிருந்த தேவியை நீராட்டி வழிபட்டுப் போற்றியவன். ஆற்றல்மிகுந்த வல்லமையோடு, குறைவற்ற நற் புகழைக்கொண்டு விளங்கியவன். உயர்ந்த கேள்விஞானத்தைப் பெற்றவரான நெடும்பாரதாயனார் என்னும் முனிவர் முன்னின்று வழிகாட்டத், தன் இல்லறத்தைத் துறந்து, துறவுபூண்டு காட்டிற்குச் சென்று தவமியற்றியவன், இத்தகையானாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கெளதமனார் பத்துப்பாட்டுக்களால் போற்றிப் பாடினார்.

சொற்பொருளும் விளக்கமும் : அமைவர - அமைந்துவர; அஃதாவது, அவ்விடத்துள்ள எதிர்ப்புக்களை அழித்து வெற்றி கொண்டு என்பதாம். 'உம்பற்காடு சேரநாட்டின் ஒரு பகுதி; 'காடு' என்னுஞ் சொல் அப் பகுதியின் முல்லைநிலப் பகுதியாகிய தன்மையை விளக்கும். ஊழ்தல் . பொருந்துதல். அகப்பா - ஓர் வலிய அரண். முதியர் - பெரியோ (அறிவாலும் வயதாலும்). மண்வகுத்தல் - நிலத்தை அளந்து பகுத்து அவரவர்க்கு உரிமை செய்தல் புணர்நிரை - பொருந்திய நேரான வரிசை. நீட்டி - நெடிதாக விளங்கச் செய்து. கீழ்கடல் மேல்கடல் என்னும் இரண்டனுக்கும் இடையே யானைகளை ஒன்றன்பின் ஒன்றாக நெடுகிலும் நிற்கச் செய்து, இருகடல் நீரையும் கொணர்ந்து, அயிரைமலைக் காளிக்குத் திருமுழுக்காட்டிப் போற்றியவன் என்றனர். முன்பு - வல்லமை, இப் பெருஞ்செயலால் இவன் 'பல்யானைச் செல்கெழு குட்டுவன்' என்னும் பெயரைப் பெற்றனன்; குட்டுவன் - குட்டநாட்டிற்கு உரியவன்; இவன் இயற்பெயர் தெரிந்திலது, அது இதுவுமாகலாம். கேள்வி - கேள்விஞானம்; வேதங்களைப் பாடம் கேட்டுப் பெற்ற வேதஞானம்; பாரதாயனார் - பாரத்துவாசர் மரபில் தோன்றிய பார்ப்பன முனிவர். முந்துற - முற்பட்டுச் செல்ல காடுபோதல் - துறவு பூண்டு, காட்டிற்குத் தவமியற்றப் போதல்; அரசை மகனுக்கு அளித்து ஆன்மநலம் கருதித் துறவு பூண்டு செல்லல்.

'உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ' என்றதனால், இடையில் அது சேரரின் கையிலிருந்து சென்றதாதல் வேண்டும். 'மதியுறழ் மரபின் முதியர்' என்றது பாண்டியரைக் குறித்ததுமாகலாம். அவரைப் போலவே இவனும் நிலத்தை அளந்து ஒழுங்கு செய்து அரசிறை விதித்தான் எனலாம். 'இருகடல் நீரும் ஒருபகல் ஆடி' என்றது, இவனே நீராடித் தன் பெருமையை உலகுக்கு உணர்த்தியதாகவும் கொள்ளப்படும். 'உருகெழு மரபின் அயிரை மண்ணி, இரு கடல் நீரும் ஆடினோன்' எனச் சிலம்பு கூறுவதும் ஒப்பு நோக்குக- (சிலம்பு. 28). ஆரிய முனிவர்கள் இவனிடம் செல்வாக்குப் பெற்றிருந்ததும், அவருட் சிலர் தமிழ்ச் செய்யுள் செய்யும் அளவு புலமை பெற்றிருந்ததும் இதனால் அறியப்படும் செய்திகள்.

சேர மன்னருட் சிலர் தம்முடைய ஆன்ம விசாரங் கருதிப் பார்ப்பன அறிஞரைக் குருவாக ஏற்றிருந்தனர் என்பதும், அவர்கள் மூலம் வடமொழியறிவும், வடமொ யாளரின் வேள்வியும் ஞானமும் பற்றிய அறிவும் பெற்று விளங்கினர் என்பதும் இதனால் அறியப்படுகின்றது.

21. அடுநெய் ஆவுதி ?

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர் : அடுநெய் யாவுதி. இதனாற் சொல்லியது: அவன் நாடுகாவற் சிறப்புச் சொல்லி வாழ்த்தியது.

[பெயர் விளக்கம் : இவன் பல வேள்விகளைச் செய்தவன். இவன் விருந்தினரை உபசரித்தலையும் ஒரு வேள்வியாக்கி, 'ஆள்வினை வேள்வி' என்று ஒரு துறையாகக் கூறினர். இந்த நயம்பற்றி இப் பாடலுக்கு இது பெயராயிற்று.]

சொற்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி அவை துணையாக
எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபிற் கடவுட் பேணியர் 5

கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா துணீஇய பாசவர்
ஊணத் தழித்த வானிணக் கொழுங்குறை 10

குய்யிடு தோறும் ஆனா தார்ப்பக்
கடலொலி கொண்டு செழுநகர் நடுவண்
நடுவண் எழுந்த அடுநெய் யாவுதி
இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி 15

ஆர்வளம் பழுனிய வையந்தீர் சிறப்பின்
மாரியங் கள்ளின் போர்வல் யானைப்
போர்ப்புறு முரசம் கறங்க வார்ப்புச் சிறந்து
நன்கலந் தரூஉம் மண்படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் 20

புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக்
கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம்

மிதியற் செருப்பின் பூழியர் கோவே!
குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை!
பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு 25

நீரறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட் பஞ்சாச்
சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய
நேருயர் நெடுவரை அயிரைப் பொருந!
யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து 30

நோயின் மாந்தர்க் கூழி யாக
மண்ணு வாயின் மணங்கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்
ஒரீஇயின போல விரவுமலர் நின்று
திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண் 35

அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து
வேயுறழ் பணைத்தோள் இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே!

தெளிவுரை : சொல்லிலக்கண நூலும், பொருளிலக் கணத்தைச் சொல்லும் நூலும், சோதிட நூலும், வேத லும், இவற்றைக் கற்று உணர்ந்து உள்ளே அடங்கிய நெஞ்சமும் என்னும் இவை ஐந்து. இவ்வைந்தினையும் ஒருங்கே போற்றியவர்: இவற்றால் அடைந்த தெளிவையே வாழ்விற்குரிய உறுதுணையாகக் கொண்டவர்; பிறவுயிர்கட்கு அவற்றால் வருத்தஞ் செய்தலைக் கருதாமல், விளக்கமுற்ற கோட்பாட்டினால், காலைக் கதிரவனைப் போலும் சிறப்புப் பொருந்தியவர்: என்றும் பொய்த்தலற்ற வாய்ம்மை உரைகளைக் கொண்டவர், முனிவர்கள். உட்குப் பொருந்திய மரபினையுடைய கடவுளைப் பரவுவதற்காக, அம் முனிவர்கள் மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடரானது கொழுந்துவிட்டு மேலெழும்போதெல்லாம், அவ் விருப்பமானது தம் உடலின் கண்ணும் சுடரிட்டு எழுந்து பரந்தாற்போலக் காணப்படும், பெரிய பொருளைத் தருவதான ஆவுதிப் புகையும்.

தம்பாற் பரிசில் பெறுதற்பொருட்டாக வருபவர். இவ்வளவென்னும் ஒரு வரையறையில்லாமல், தாம் வேண்டுமளவும் வயிறார உண்ணுதலை விரும்பியும், வந்த விருந்தினர் தம்மைவிட்டு அகன்று வேற்றிடம் போகாதாராயிருந்து உண்ணலின் பொருட்டாகவும், ஆட்டு வாணிகர் ஊனைக் கொந்தும் கட்டை மேலாக வைத்துக் கொந்திய, நல்ல நிணம் பொருந்திய கொழுமையான இறைச்சித் துண்டுகளை வேகவைத்துத் தாளிக்குந்தோறும், மிகுதியாக எழுகின்ற ஆர்ப் பொலியானது கடலொலிபோல ஒலிக்க, செழுமையுடைய மாளிகையின் நடுவிடத்தே வைத்து உணவினைச் சமைக்கும் போது, புகையெழுந்த அடிசிலினிடத்துப் பெய்த நெய்யினின்று எழும் ஆவுதிப் புகையும்,

இரண்டும் ஒன்றுகலந்து கமழுகின்ற நாற்றத்தோடு, வானத்தே நிலைபெற்றுள்ள கடவுளும் விருப்பங்கொள்ளத் தகுந்தபடி பேணி, கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வத்திலே நின்று முதிர்ந்த குற்றமற்ற சிறப்பினையும், மழை போலச் சொரியும் அழகிய மதநீரைக் கொண்ட போர்த் தொழில் வல்ல யானையின் மேலாக இருக்கும் ஏற்றுரி போர்த்த போர்முரசம் ஒலிமுழங்க, ஆரவாரம் மிக்குச்சென்று பகைவர்நாட்டு நன்கலங்களை யெல்லாம் கவர்ந்துகொணரும் அவர் நாட்டு மண்படிந்த மார்பினைக் கொண்டவனே!

முல்லைப்பூக் கண்ணியை அணிந்தவரான பலவாகிய ஆனிரைகளை உடையவரான கோவலர்கள், புல் மிகுதியாக வுடைய பரந்த புலத்திலே தம் பலவான பசுக்களையும் பரவலாக மேயவிட்டுக், கற்கள் உயர்ந்த காட்டிடத்தே ஒளி திகழும் மணிகளைப் பொறுக்கிப் பெறுகின்ற தன்மையுடைய மிதியாகிய செருப்பில்லாதே, செருப்பென்னும் மலையினை யுடைய பூழிநாட்டினர்க்கும் வேந்தனாகத் திகழ்பவனே! பல வெற்றி மலர்க்கண்ணிகளையெல்லாம் குவியச் சூடியவரான மழவர்க்குக் கவசத்தைப் போன்று விளங்குபவனே!

பலவான பழங்களைக் கொண்டுள்ள, நல்ல பயன் கெழுமிய நெடிய உச்சியையுடைய, நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்லுதற்கியலாத, சேய்மையிலிருந்தே நுனித்துப் பார்க்கும் பார்வையையுடைய கொக்கின் பரிவேட்டத்திற்கு அஞ்சாத, சிறப்புடைய நாட்டிடையே, பகைவர் போரியற்றா வாறு குறுக்கிட்டுக் கிடக்கும், அயிரை யென்னும் நேரிதாக உயர்ந்த நெடிய மலைக்கு உரியோனகிய தலைவனே!

ஓர் யாண்டேனும் பொய்த்தலை அறியாது மழைபெய்து பயன் விளைத்தலாலே, மாந்தர்க்கு யாண்டுகள் நோயற்ற காலமாகக் கழிய, எண்ணெய் பூசாவிடத்தும் நறுமணமே கமழ்தலைக் கொண்டதாய்க், கார்காலத்து மலரான முல்லையின் நறுமணத்தைக் கமழ்ந்து கொண்டிருக்கும், தாழ்ந்த கரிய கூந்தலையும், நாளத்தின் நீங்கியனபோல, இரவுப் போதிலும் மலர்ச்சி நிலைபெற்று, அழகிய முகத்திடத்தே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும், அசைகின்ற காந்தள் மலர்கள் விளங்கும் கரையையுடைய நீர்யாற்றின் கரையிடத்தே நின்ற மூங்கிலையொப்ப விளங்கும் பெருத்த தோள்களையுமுடைய, நின் தேவியாகிய இவளுடனே கூடி யிருந்தவனாக, நீதான் பலவாயிர வெள்ளம் ஆண்டுகள் வாழ்வாயாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : சொல் - சொல்லிலக்கண நூல். பெயர் - பொருளிலக்கண நூல். நாட்டம் - சோதிட நூல். கேள்வி - வேதம். நெஞ்சம் - மனம். எவ்வம் - உயிர் வருத்தம். சூழ்தல் - கருதுதல். கொள்கை-ஒழுக்கம்; விரதம். காலை - சூரியன்; இவன் தான் தோன்றலில் பொய்த்தல் இலன்; இவ்வாறே வாய்மையும் என்றும் பிறழ்தல் கூடாது என்பதாம். சீர்- சீர்மை. உரு - உட்கு. எவ்வம் சூழாக் கொள்கையும், காலையன்ன வாய்மொழியும் உடையவர் என்க; இவரே யாகஞ் செய்வதற்குரியவர். பேணியர் - பேணும் பொருட்டாக. தீ - யாகத் தீ. சுடர் - நெருப்புக்கொழுந்து. விரும்பு - விருப்பு. வேள்வி - ஒன்றை விரும்பி வேட்பது; அவ் விருப்பம் மெய்யாவதுபோலப் பரந்த பெரும்பெயராவுதியும் ஆம். பெரும்பெயர் ஆவுதி - பெரும்பொருளைத் தருவதான ஆவுதி; பெரும்பொருளாவது கடவுளரால் மட்டுமே தரப்படுவது. வேள்வி செய்வார்க்கு வேண்டிய தகுதிகள் முறையே சொல்லப்பெற்றன. அவை 'சொல், பெயர், நாட்டம், வேள்வி, நெஞ்சம் என்னும் ஐந்தையும் ஒருங்கே போற்றி, அவையே துணையாகப் பிறவுயிருக்கு எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கையும், காலையன்ன சீர்கால் வாய் மொழியும்' கொண்ட தன்மை; இவ்வாறு, இவரான் மட்டுமே செய்வது வேத வேள்வி.

வருநர் - வரும் பரிசிலர். வாரல் . அளவின்றி வேண்டுமளவுகொள்ளல். விருந்து கண்மாறல் - விருந்தினர் இவ்விடம் வேண்டாவென்று பிறவிடம் நோக்கிப் போதற்கு முற்படல், பாசவர் - ஆட்டு வாணிகர். ஊனம் - ஊனைக் கொந்தும் மணைக்கட்டை. சோறும் கறியும் சேர்த்துச் சமைத்த உணவு இது. குய்யிடல் - தாளித்தல். ஆனாது ஆர்ப்ப - சட்டியிலிடும்போது ஒலி மிக்கு எழ. நகர் மாளிகை. மை - புகை. அடும் நெய்யாகிய ஆவுதிப் புகை இடையறாதே எழுந்து கொண்டிருக்கும் என்க. குட்டுவன் வேத வேள்வியும் இயற்றுவித்தான்; விருந்து புரந்தரலாகிய வேள்வியும் இயற்றுவித்தான்; இரண்டின் வேள்விப் புகையும் ஒன்றுகூடி ஒருங்கெழுந்து அவனரண்மனையிற் பரவின என்பதாம்.

'கடவுளும் விழைதக' என்றது, அக் கடவுளரும் அதன் சிறப்பை வியந்து, சேரனுக்கு வரந்தரலை விரும்பி வந்து அவன் மாளிகையை அடைந்திருக்க என்றதாம்; கேள்வித் தீயில் இடப்பெறும் அவியுணவைப் பெறுதலே விரும்பி அவர் வருவர் என்றும் கொள்க. தீயில் நெய்யும் ஊனும் சொரிந்து இயற்றும் வேள்விப் புகையும், சட்டியில் ஊனும் நெய்யும் இட்டுப் புலாலுணவு தாளிக்கும் தாளிதப் புகையும் ஒரே மணத்தைச் செய்தனவென்னும் நயத்தை அறிந்து இன்புறுக. 'ஆர்வளம் பழுனிய' என்றது, கொடுக்கக் கொடுக்கக் குறையாத நல்வளம் நிறையப் பெருகி முதிர்ந்த என்றதாம். கடவுளர் 'நாற்ற உணவினர்' ஆதலின் இரண்டின் கலந்த நாற்றத்தையும் விரும்பி உண்டனர் என்பதும் கொள்க. 'மண்படு மார்ப - பகைவர் நாட்டு மண்படும் மார்பினன்', எனக், குட்டுவன் அவர் நாட்டைத் தான் கொண்டதுபற்றிக் கூறியுதாம்.

முல்லைக் கண்ணி - முல்லைப்பூவாலான தலைமாலை, முல்லை நிலத்தாரான அவர்தம் நிலத்துக்குரிய பூவினைக் கண்ணியாகத் தொடுத்து அணிந்தனர் என்க. பல்லான் - பல லாகிய ஆநிரைகள்: பலவென்பது பலவகைச் சாதிகளைக் குறிக்கும். வியன்புலம் - பரந்த நிலம். பரப்பி - பரவலாக மேயவிட்டு. கல் - முனை கூரிய கல். கடம் - காட்டுப்பகுதி. 'கடத்திடைக் கதிர்மணி' உண்டென்பார், கோவலர் அதனைப் பெறுவதனைக் கூறினார். செருப்பு - செருப்புமலை. குவியற் கண்ணி - வெட்சிமுதல் வாகை ஈறாகிய போர்க் கண்ணி. மழவர் - இவர் கொங்கு நாட்டு மறவருள் ஒரு சாரார்: குதிரைப் போரில் வல்லவர்; இவர்க்கு மெய்ம்மன்ற யாயது, இவர்க்குப் பிறரால் வரவிருந்த துயரைப் போக்கிக் காத்தது. மெய்ம்மறை - கவசம்: மெய்யை மறைப்பது.

பல்பயம் - பலவகைப் பழங்கள். தழீஇய - பொருந்திய. பயம், பயனுமாம்; அவை பயனுடைய மரம், செடி, கொடி முதலியன. அயிரை, மலையையும் ஒருவகை மீனையும் குறிக்கும். கொக்கின் பரிவேட்புக்கு அஞ்சுவது அயிரை மீன்; அஞ்சாதது அயிரை மலை நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்வது அயிரை மீன்; செல்லாதது அயிரை மலை. அயிரை மலை கடந்து போதற்கு அரிதாதலின் பகைவர் முனைகெடக் குறுக்கே கிடப்பது என்றனர்.

பயம் - நன்மை. 'ஊழி, மாந்தர்க்கு நோயில் ஊழியாக' என்று கூட்டிப் பொருளுரைக்க. மண்ணாவாயின் மணம் கமழ்தல் கூந்தலின் இயற்கையான நறுமணத்தால்; உயர் சாதிப் பெண்ணின் கூந்தல் நறுமணம் கமழும் என்பர். 'அரிவை கூந்தலின் நறியவும் உளவோ' (குறு 2) என்பதும் காண்க. 'மண்ணாவாயின' தன்மை, தன் தலைவன் போர்வினை மேற்கொண்டானாகத் தன்னைப் பிரிந்து உறைதலால். மண்ணியபோது கார்மலராகிய முல்லை பெய்யப் பெறுதலின் முல்லைமணம் கமழும் கூந்தல் என்றனர். 'இரவு கூம்பாது நிலைத்திருக்கும் தாமரை மலருண்டெனின், அது அவள் திருமுகத் தலமரும் பெருமழைக்கண்' என்க. இது கண் உறக்கம் பெறாதநிலையாற் சிவப்புற்ற தன்மையைக் குறித்துக் கூறியதாம். ஒரீஇயினபோல - குளத்தினின்றும் நீங்கிப் போயினபோல. 'இவளோடு' என்றது, குட்டுவன் தேவியோடு இருந்த சமயமாதலால், அவளைச் சுட்டிக் கூறிய தாகும். வெள்ளம் - பேரெண்.

22. கயிறுகுறு முகவை !

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும், தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் : கயிறுகுறு முகவை. இதனாற் சொல்லியது : சேரனின் வெற்றி மேம்பாடு.

[துறை விளக்கம் முதலியன : 'சீறினை' ஆதலின் நாடு கெழு தண்பணை பாழாகும் எனப் போர்புரிதற்குச் செல்லும் செலவின் விளைவை மேலிட்டுக் கூறியமையால், வஞ்சித் துறைப் பாடாண் பாட்டுஆயிற்று. 'உழைப் பொலிந்த மா' என்பது முதலாகிய நாலடியும், "கடிமிளை" என்பது முதலாகிய இரண்டடியும் வஞ்சியடியாய் வந்தமையான் வஞ்சித் தூக்கும் கூறினர். சில ஊறிய நீர்வாய்ப் பத்தற் கயிறு குறுமுகவை' எனத் தன்னால் நீர் வாங்குவது பெரிதன்றித், தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை எனக் கோடை வெம்மையின் நீரற்ற தன்மையைக் கூறிய சிறப்பால் இப் பாட்டுக்கு இப் பெயரைத் தந்தனர்.]

சினனே காமம் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை
தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத்
தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும்
தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து 5

கடலுங் கானமும் பலபயம் உதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மையில் அறிவினர் செவ்விதின் நடந்துதம்
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய 10

ஊழி உய்த்த உரவோர் உம்பல்
பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தற்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த 15

வேல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப்பொலிந்த மா
இழைப்பொலிந்த களிறு
வம்புபரந்த தேர்
அமர்க் கெதிர்ந்த புகன் மறவரொடு 20

துஞ்சுமரங் துவன்றிய மலரகன் பறந்தலை
ஒங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த
வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதில் நிரைப்பதணத் 25

தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூசலி னம்பழிக் குநரும்
ஒலித்தலை விழவின் மலியும் யாணர் 30

நாடுகெழு தண்பணை சீறினை யாதலின்
குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பகல் அமயத்துக்
கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றிக் 35

கழல்கட் கூகைக் குழறுகுரற் பாணிக்
கருங்கட் பேய்மகள் வழங்கும்
பெரும்பா ழாகுமன் அளிய தாமே.

தெளிவுரை : இவ்வுலகத்தே, அறந்தெரிந்து செலுத்துவதற்கு உரியதான அரசனது ஆணைச்சக்கரத்திற்கு அளவு கடந்த சினமும், அளவுகடந்த காமமும், மிக்க கண்ணோட்டமும், பேர் அச்சமும், பொய்ச் சொல்லும், அன்பு மிகவும் உடைத்தாயிருத்தலும், குற்றவாளியரைக் கடுமையாகத் தண்டித்தலும், இவை போன்ற பிறவும் தடைக் கல்லாக நிற்பனவாகும். ஆகவே, இத் தீமைகளெல்லாவற் யும் நம்மை நெருங்காதபடிக்கு நீக்கியவராக, நன்மையான வற்றையே மிகவும் செய்து, நாட்டு மக்கள் எல்லாரும் தம் போற் பிறரை வருத்தாமலும், பிறருக்கு உரித்தான பொருளைத் தாம் விரும்பாமலும் குற்றமல்லாத அறிவுடைய வராகச் செவ்வையாக நடப்பவர்களாய்த், தம்பால் அன்பு செய்து வாழ்கின்ற துணைவியரைப் பிரியாமல், தம்மை நாடி வந்தோருக்குத் தம்மிடமுள்ளதைப் பகுத்து உண்டு, முதுமை பெற்ற யாக்கையும் நோயும் இல்லாதவராய்த் தம் வாணாளைக் கழிக்குமாறு, கடலும் காடும் பலவான பயன்களையும் தந்து உதவ, நெடிது காலம் ஆட்சி செலுத்திய வரான, அறிவும் ஆற்றலுமுடையவரான பேரரசர்களின் வழித்தோன்றலே!

இரும்பாற் செய்த குந்தாலியாலே திண்ணிய பிணிப்பை யுடைய வன்னிலத்தை உடைத்ததுத் தோண்ட, அண்டுச் சிதறினாற்போலச் சிறிதே ஊறிய நீரினையுடைய குழிகளில், கயிறுகட்டி நீரைச் சேந்தும் குறுகிய முகவையை நெருங்கச் சூழ்ந்து மொய்த்து நிற்கும் பசுக்களையுடைய, கொங்கரது நாட்டை வென்று தன்னாட்டோடு அகப்படுத்திக் கொண்ட, வேல்வீரர் நிரம்பிய தானைப் பெருக்கத்தையுடைய, பகைவர்க்கு அச்சத்தை விளைவிக்கும் தோன்றலே!

தலையாட்டத்தால் பொலிவுற்று விளங்கும் குதிரைகள்; அணிகளால் அழகுற்றுத் தோன்றும் களிறுகள்: தேர்ச்சீலைகள் விரிக்கப்பெற்று அழகுடன் விளங்கும் தேர்கள்: போர் புரிதற்கென முற்பட்டாரான போர் விருப்பத்தைக் கொண்ட போர்மறவர்கள் என்னும், இந்நால்வகைப் படையோடும் கூடியவனாக நீதான் பகைவர் நாட்டுட் புகுந்தனை.

பரந்து அகன்ற வெளியிடத்தே, உயர்ந்த நிலையினை உடையதான கணையமரம் செறிக்கப்பெற்ற கோட்டை வாயில் அமைந்திருந்தது. அவ்விட்த்தே, எந்திரவிசையுடன் கூடிய விற்கள் பொருத்தப்பெற்ற, சிறந்த சிறப்பினையுடைய ஐயவித்துலாம் தொங்கவிடப் பெற்றிருந்தது. அப் பறந்தலையை அடுத்ததாகக் காவற்காடும் ஆழ்ந்த கிடங்கும் விளங்கின. நெடிய மதிலின் உட்புறத்தே நிரல்பட அமைந்த பதணங்கள் விளங்கின. தலைமையும் பெருமையுமுடைய 'அகப்பா' என்னும் அவ்வரணை அழித்து நீ தான் வெற்றி கொண்டனை. பொன்னாற் செய்த உழிஞை மாலையினையும் குடிக்கொண்டனை. இத்தகைய, போர்க்களத்தே வெற்றியே பெறுதலையுடைய குட்டுவனே!

ஏற்றுரி போர்த்துள்ள பறையை அறைந்து மக்களை வருவித்து மிக்குவரும் புனலைத் தடுத்து நிறுத்துவோரும், புதுநீர் விளையாட்டின்போது எழுகின்ற ஆரவார ஒலியினலே அம்பேவற் பயிற்சி செய்வார் எழுப்பும் ஒலியை அடக்கு வாரும், ஒலிகளையுடைய விழாக்களிலே திரண்டு கூடி மகிழ்வோருமாக, புதிய வருவாயினையுடையதாகத் திகழ்வன பகைவர் நாடுகள். அந் நாடுகளிலுள்ள தண்மை பொருந்தி விளைநிலங்கள் எல்லாம், நீ தான் அவர்பாற் சீற்றங் கொண்டனை யாதலினாலே பாழ்நிலங்களாக மாறிப்போகும். மேற்குத்திசையிலே சென்று மறைந்து காலையில் மீண்டும் கிழக்குத்திசையிலே எழுந்து தோன்றி, இந் நிலவுலகிற் பரவியிருந்த இருளைப் போக்கும் பயன் பொருந்திய பண்பினை யுடையது ஞாயிறு. அது ஒருபக்கமும் சாயாமல் நிற்கின்ற உச்சிப்பொழுதாகிய நண்பகற் காலத்தே, கவர்ந்த வழிப்பக்கங்களில் நின்றுகொண்டு வெண்மையான நரிகள் முறையிட்டுக் கூவுதலை மேற்கொள்ளும். அக் குரலுக் கேற்பத் தாளமிடுதலைப்போலப் பதுங்கிய கண்களையுடையவான கூகை குழறா நிற்கும். கருங்கண்களை யுடையவளான பேய் மகள் திரிந்துகொண்டிருப்பாள். இத்தகைய பெரிதும் பாழ்பட்ட நிலங்களாக, அம் மருதவள நிலங்கள் மாறிப் போகும். அவைதாம் இரங்கத்தக்கன, பெருமானே!

சொற்பொருள் : கண்ணோட்டத்தின் முன்னின்ற 'கழி' என்னும் உரிச் சொல்லைச் சினன் முதலியவற்றிற்கும் கூட்டிப் பொருள் கொள்க. அரசவினைக்கண் இவை யாவும் வேண்டுவதே! எனினும், இவை அளவிறப்பின் அதனாற் கேடும் வந்து சூழும் என்பதாம். 'அச்சம் உடையார்க்கு அரணில்லை' (குறள் 534) என்பதனால், அச்சத்தின் தீமை பெறப்படும்; அது அரசனின் உளத்திண்மையைச் சிதைத்தலின் குற்றமா யிற்று, இஃதன்றி 'அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்' என்றதனால் அஞ்சவேண்டுமவற்றுக்கு அஞ்சுதல் விலக்கப்படுவதன்று என்பதும் அறிதல்வேண்டும். தெறல் - தண்டித்தல். அறம் தெரி திகிரி - அறம் நிலைபெறப் பொருட்டாக ஆராய்ந்து செலுத்தப் பெறும் அரசமுறைமை. வழியடை - தடை. சேணிகந்து - நெடுகிலும் கைவிட்டு ஒதுக்கி. மை - குற்றம். பாத்து - பகுத்து. ஊழி - நெடுங்காலம். உரவோர் - அறிவும் ஆற்றலும் உடையோர்; குட்டுவனின் முன்னோர். உம்பல் - வழித்தோன்றல், அரசு முறை கோடாது நடைபெறுதலால் மக்களும் நெறிபிறழாதாராய் ஒழுகுவர் என்பார், அவர்தம் ஒழுக்க நெறியையும் காட்டினார். இவை இரண்டும் பொருந்த ஆட்சி செய்தவர் குட்டுவனின் முன்னோர் ஆவர்.

பொன் - இரும்பு; கரும்பொன். கணிச்சி - குந்தாலி; பாறையுடைக்கும் கருவி. திண்பிணி - திண்மையான பிணிப்புடைய பாறை; பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. பிணி - பிணிப்பு முதனிலைத் தொழிற்பெயர். உடைத்து - உடைக்க சிரறுதல் - சிதறுதல். சில -சிறிது; சின்மை. சிறுமைப் பொருளது. பத்தல் - குழி; சிறு கிணறு. மிக ஆழத்து அமைத்து சிறிதளவே நீருள்ள கிணறு; ஆதலின் குறுமுகவையிற் கயிறுகட்கு நீரைச் சேந்த முற்படுங்காலத்துப் பலசமயங்களில் வெறுங் குறுமுகவையே மேலே வர, நீர்க்கு அவாவி நிற்கும் ஆணினம் அதனை மறைத்துக்கொண்டே போய் நிற்கும் என்க. 'குறுமுகவை' என்றதனால், நெடுங்கயிறு என்று கொள்க. "கொங்கர் - கொங்குநாட்டார்; இவர் நாடு சேரநாட்டைச் சார்ந்து விளங்கியது; சில சமயங்களில் பாண்டிநாட்டாரும் கொங்கு நாட்டை ஆண்டனர். வேல் கெழு தானை - வேல்மறவரை யுடைய தானை. கொங்கையும் குட்டுவன் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டிருந்தான் என்பதாம்.

உளை - தலையாட்டம், இழை - வெற்றிப்பட்டம், பொன்னரிமாலை முதலியன. வம்பு - தேர்ச்சீலை, எதிர்ந்த - முற்படுகின்ற. புகல் -விருப்பம்; அது போரியற்ற வேண்டுமென்பது. துஞ்சுமரம் - கணையமரம்; மதிற் கதவுகட்குப் பின்பக்கமாக அவற்றுக்கு வலிமையாக அமைக்கப்படுவது. துவன்றிய - செறிக்கப்பெற்ற. மலர் அகன் பறந்தலை - மிக அகன்ற வெட்டவெளி: இதனைச் செண்டுவெளி என்பர். "மலரகன்" என்றது ஒருபொருட் பன்மொழி. இது புறமதிலுக்கும் அகமதிலுக்கும் இடையே அகழியை அடுத்ததாக அமைந்துள்ள வெளி; புறமதிலைக் கடந்து வரும் பகைவர் இதன்கண் விளங்கும் வீரருடன் கடும்போரிட்டு வென்ற பின்னரே அகமதிலை நெருங்கவியலும். நிலை - வாயிற்படி. தூங்குபு - தூங்கும்படியாக. வில்விசை - வில்லாகிய எந்திரம்: இது தானே இயங்கிப் பகைவர்மேல் அம்புமாரி பொழிவது. ஐயவி - ஐயவித்துலாம் என்னும் மதிற்பொறி. கடிமிளை - காவற்காடு; இதன்கண் வீரர் மறைந்திருந்து வரும் பகை வரைத் தாக்குவர். குண்டு - ஆழம். கிடங்கு - அகழி. பதணம் - அகமதிலின் உட்புறத்தே வரிசையாக நாற்புறமும் அமைந்துள்ள காவன் மேடைகள். அண்ணல் - தலைமை. கோடு - உச்சி. அகப்பா - கோட்டையின் பெயர்: இத்துணைக் கடுங்காவலமைந்த மதிலைத் தன் நாற்பெரும் படையுடன் சென்று கைப் பற்றினான் குட்டுவன் என்பதாம். 'குட்டுவன் அகப்பா வழிய நூறிச் செம்பியன், பகற்றீ வேட்ட ஞாட்பு (நற். 14)" என்று இதனை மீளப் பாண்டியன் கைப்பற்றிய செய்தியை மாமூலனார் குறிப்பிடுவர். இதனால் இவ்வரண் கடுங்காவல் மிகுந்ததென்பதும்; இதனைக் கைப்பற்றல் சிறந்த வெற்றிச் செயலாகக் கருதப்பட்டதென்பதும் விளங்கும். உழிஞை என்பது ஒருவகைக் கொடி; பொற்கொற்றான் என இந்நாளில் வழங்கப்பெறும். "உழிஞைப் போர்" ஆதலால் வெற்றி கொண்டதும் பொன்னாற் பெய்த உழிஞைப் பூவைச் சூடினான் என்க.

'போர்த்து' என்றது, ஆனேற்று உரியைப் போர்த் திருப்பதனைக் குறிப்பிட்டதாம். பறையால் - பறை யோசையால். புனல் செறுக்குநர் - தடைமீறிப் போகும் புதுப்புனற் பெருக்கை அடைத்து நிறுத்துவார். நீர்த்தரு பூசல் - நீர் விளையாட்டால் எழுகின்ற ஆரவாரம். அம்பு அழிக்குநர் - அம்பு எய்யும் பயிற்சி பெறுவார், வில்வளைத்து நாணேற்றி எழுப்பும் நாணொலியையும், அம்பைச் செலுத்துங் காலத்து எழுகின்ற ஒலியையும் இல்லையாக்குவோர். தலை - இடம். விழவு - விழா மலிதல் - சிறத்தல். யாணர் - புது வருவாய். தண்பணை - மருதநிலம். நண்பகல் - நடுப்பகல், கவலை - கவர்த்தவழி. கழல்கண் - கழன்று விழுதலைப்போலத் துருத்திக் கொண்டிருக்கும் கண். கூகை - பேராந்தை; கோட்டான். பாணி - தாளம். வழங்கும் - திரியும். நின்னைப் பகைத்தோன் வளநாட்டுப் பகுதிகள், நின்னால் அழிக்கப் பெற்றவாய், நரியும் கூகையும் பேய்மகளும் நண்பகற் போதிலேயே திரிதலையுடைய பெரும் பாழிடங்களாகும்; ஆகவே, அவைதாம் எம்மால் இரங்கத்தக்கன என்பதாம்.

23. ததைந்த காஞ்சி !

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : ததைந்த காஞ்சி. இதனாற் சொல்லியது : சேரனது போர்மற மாண்பு ஆகும்.

[பெயர் விளக்கம் முதலியன : மகளிர், காஞ்சியினது தளி ரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக்கின்ற நிலையைக் கூறிய சிறந்த காட்சிநயத்தால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது. துறை விள்க்கம் முற்பாட்டில் கூறப்பெற்றது. போரிடற்கு எழுவானது செயலைப் பகைவரது அழிவை மேலிட்டுக் கூறிப் போற்றியதனக் காண்க.]

அலந்தலை உன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
நிலம்பை தற்ற புலங்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகுசிறை பாடும் 5

வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து
நெஞ்சுமலி யுவகையர் உண்டுமலிந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ 10

நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
வழங்குநர் அற்றென மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவின் அழிந்த வாற்ற வேறுபுணர்ந்து
அண்ணன் மரையா அமர்ந்தினி துறையும்
விண்ணுயர் வைப்பின் காடா யினநின் 15



மைந்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த
போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்
மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புறழ் அடைகரை 20

நந்து நாரையொடு செவ்வரி யுகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழன்மருள் பூவின் தாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்
அறாஅ யாணரவர் அகன்றலை நாடே. 25

தெளிவுரை : இலையற்றதாய் உலர்ந்துபோன உச்சியையுடைய உன்னமரத்தினது அழகிய கவடுபட்ட கிளை யிடத்தே தங்கியிருந்தபடி, சிள்வீடு என்னும் வண்டுகள் கரையும்படிக்குப் பெரிதான பஞ்சம் வந்துற்றது. அதனாலே நிலம் பசுமை நீங்கிற்று; வயல்கள் விளைவின்றிக் கெட்டன. அத்தகைய வறட்சிக்காலத்தினும், நரம்பினாலே இழுத்துக் கட்டப் பெற்ற யாழ் முதலியவான இசைக்கருவிகளை இட்டுக்கட்டிய பையினைக் கொண்டவராய், நின் நகரத்தேயுள்ள ஊர் மன்றத்துக்குச் சென்றோம். அவ்விடத்தே, தெருக்களின் இருபுறத்துமுள்ள வீடுகள்தோறும் பாடிச் சென்றோம். அப்படிப் பாடிய கூத்தரும் பாணருமாகிய எம் கூட்டத்தாரது கடுமையான பசிநோய் நீங்குமாறு, பொன்னாற் செய்யப் பெற்ற புனைதற்கு உரிய அணிகலன்கள் ஒலிமுழங்கிக் கொண்டிருக்கப், பெரிதான உவப்புடனே, நெஞ்சத்தே மிக்கெழுந்த உவகையினை உடையவராக, எம்மவர் உண்டு, அம் மகிழ்ச்சி யினாலே பெரிதும் ஆடிக் களிக்குமாறு, சிறிது கள்ளையே உண்ட மகிழ்ச்சியைக் கொண்டவனாயினும், பெரிய அணி கலன்களை நீதான் வழங்கினை. போரிலே எதிரிட்ட பகைவரைக் கொல்லும் வன்மைகொண்டு தானைமறவரையும், பொன்னாற் செய்யப்பெற்ற பனம்பூமாலையையும் உடையவனாகிய குட்டுவனே!

மருத மரங்கள் தம்பாற் பல்வேறான பறவையினமும் தங்கியிருந்தபடி ஒலி செய்திருக்க உயரமாக வளர்ந்திருக்கும்; செறிவுடைய பெரும் பரப்பிடமாகிய மணல் மிகுந்த பெருந்துறையிடத்தே இருந்த காஞ்சியினிடத்தே முருக்க மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரியும்; அதனாலே அவ் அடைகரைப் பகுதியெல்லாம் உயர்ந்த நெருப்புப் பரவியிருப்பதுபோலத் தோன்றும். அவ்வடைகரைப் பகுதிகளிலே சங்கினம் நாரையோடு செவ்விதான கோடுகளைச் செய்தபடி உலவிக் கொண்டிருக்கும். கழனிகட்கு வாயிலைப் போல அமைந்த, பொய்கையைச் சார்ந்த விளைநிலத்திலே, நெருப்பைப்போல விளங்கும் செந்தாமரை மலர்களும், வளையணிந்த விளையாட்டு மகளிர் பறிக்காதே மலர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களும் விளங்கும். இவற்றோடும் நீங்காத புதுவருவாயினை உடையதாகவும், நின்னைப் பகைத்தோரது அகன்ற இடத்தையுடைய நாடுகள் காணப்படும்.

இனி, அப்பகைவர் நாடுதான், நின்னைப் பகைத்ததால் அழிந்து பட்டது. நின் வலிமிகுந்த பெரும்புகழை அறியாராய் நின்னோடும் போரிட்டவரான, போரினை எதிரேற்ற பகைவேந்தர், நின் தூசிப்படைக்கே ஆற்றாதாராய்த் தம் நாட்டை யகன்று ஓடிப் போயினர். அதனால் அவர்கள் நாட்டில் போக்குவர்வு புரிவார் யாரும் இலராயினர். அதனால் வழிகள் புல்மிகுந்தவையாய், இருந்த இடம் தெரியாதபடி மறைந்து கெட்டன. அவ்விடங்களின் பண்டைப் பேரழகும் அழிந்தது. அவ்வழிகளிலே, தம் ஏறுகளோடு கூடியவையாய்ப் பெருமையுடைய காட்டுப்பசுக்கள் விருப்போடு இனிதாகத் தங்கியிருந்தன. வானுயரத்திற்கு நிமிர்ந்த மாடங்களையுடைய ஊர்களைக்கொண்ட நாட்டுப்பகுதிகள் எல்லாம் காட்டுப்பகுதிகளாக மாறின. அவற்றையெல்லாம், நின்பாற் பரிசில் பெற விரும்பி வருவோமாகிய யாமும் வழியிடையே கண்டனம், பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : அலந்தலை - அலந்த தலை; உலர்ந்த தலைப்பகுதி. உன்னம் - ஒருவகை மரம். கவடு - கவறுபட்ட கிளைப்பகுதி. சிதடி - சிள்வீடு; கவட்டிடையமர்ந்து மரத்தைத் துளைக்கும் வண்டு; அதுதான் கரைதற்குக் காரணம் மரம் காய்ந்து துளைப்பதற்குக் கடுமையாகத் தோன்றியதனாலாம். வறம் - பஞ்சம். பைது - பசுமை. புலம் - விளைவயல். வாங்குபு - இழுத்து. தகைத்த - கட்டிய. கலப்பை - கலங்கள் பெய்த பை. மன்றம் ஊர்மன்றம். மறுகு - தெரு. சிறை - இருபக்கமும். வயிரிய மாக்கள் - பாணர் கூத்தர் முதலியோர். கடும்பசி - நெடுநாள் நின்ற பெரும்பசி. அது தீர ‘மலிய உண்டு’ என்றனர். மகிழ் - கள்! பேருணவழித்துப் பசிபோக்கியதுடன் பெருங்கலம் வீசிப் பரிசிலும் நல்கினான் என்றனர். இனி, “நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே” (புறம் . 123) என்னுமாறு போலக், கள்வெறியால் அவற்றைத் தந்தானல்லன் என்பார், ‘சிறுமகிழானும்’ என்றனர். ‘பெருங்கலம் வீசல்’ அவன், தன் தகுதிநோக்கிச் செய்ததாகும்.

மருது - மருதமரம். இழிழ்தல் - இனிதாக ஒலித்தல். நளி - செறிவு. துறை - நீரில் இறங்குதற்குரிய நீர்த்துறை. காஞ்சி - ஒருவகை மரம்; காஞ்சிரம் என்றும் சிலர் கூறுவர். முருக்கு - முள்ளுமுருக்க மரம்; இதன் பூக்கள் தீப்போற் சிவந்த நிறமுடையன; வெள்ளைப் பூக்களைக் கொண்டவையும் உள்ளன; இங்குக் குறித்தது சிவப்புப் பூக்களையுடைய மரம்; இதனைக் கல்யாண முருங்கை என்பர். தாழ்பு - தாழ்ந்து தொங்குதல். உறழ் - ஒத்த; உவம உருபு. செந்நிறப் பூக்கள் படிந்திருத்தலால் பொய்கைக் கரை நெருப்புப் படிந்தாற் போலத் தோற்றியது என்றனர். கழனி வாயில் பழனம் - வயல்களுக்கு முன்பக்கமாக அமைந்துள்ள குளம்; மருத நிலத்து இவை பரவலாகக் காணப் பெறுவன. படப்பை - விளை நிலங்கள். ‘மருள்’ - உவம உருபு. வளைமகள் - வளையணிந்த குறுமகள். குறுதல் - பறித்தல். குறுமகளிர் தழையும் பூவும் கொய்து விளையாட்டயர்தலால் சிதைந்த காஞ்சி என்க; இந் நயம்பற்றி இப்பாட்டின் பெயர் அமைந்தது என்பர். இவை, குட்டுவனோடு போரிடா முன்னர் விளங்கிய பகைவர் நாட்டு வளங்களாம்.

நயந்து - விரும்பி; விருப்பம் ஆவது, சேரலாதன்பாற் பரிசில் பெறுதல். வழங்குநர் - வழிச் செல்வார். மருங்கு - வழி. தூர்ந்து - இல்லையாகும்படி புல்லால் மூடப்பெற்று. கவின் - அழகு. ஆற்ற - வழியிலுள்ள. ஏறு - மரையாவின் ஏறு; மரையா - காட்டுப்பசு. அமர்தல் - விரும்புதல். வைப்பின - ஊர்களையுடைய நாடு. வைப்பு - ஊர். மைந்து - வலிமை. மலிதல். மிக்குப் பெருகுதல். பெரும் புகழ் - பெரிதாக எழுந்த புகழ்; அது மறம் வீங்கு பெரும் புகழ் என்பவர், மைந்து மலி பெரும்புகழ் என்றனர். மலைதல் - போரிடல். போரெதிர் வேந்தர் - போருக்கு எதிர்ப்பட்ட பகைவேந்தர். தார் - தூசிப் படை.

முன்னர் யாம் கண்ட வளநாடு, இடையில் நின்னைப் பகைத்த பொருந்தாச் செயலின் பயனால், இப்போது காடாகக் கிடந்த அவல நிலையைக் கண்டு வந்தோம் என்பதாம்.

‘முருக்கு தாழ்பு எழிலிய’ என்பதற்கு, முள்ளு முருக்கின் பூக்கள் நீரிலே தங்குதலாலே அழகுபெற்ற எனவும் ‘நெருப்பு உறழ் அடைகரை’ என்பதற்கு, நெருப்பை யொத்த நீரை ஆடைந்த கரை எனவும் பொருளுரைப்பர். இவையும் பொருந்தும்.

24. சீர்சால் வெள்ளி!

துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு செந்துக்கு. பெயர் : சீர்சால் வெள்ளி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் பெருமையும் கொடைச் சிறப்பும்.

[பெயர் விளக்கம் முதலியன : சேரனின் இயல்புகளாயின பலவற்றையும் சொல்லி வாழ்த்தலின் இயன்மொழி வாழ்த்து ஆயிற்று. ‘வெள்ளி வறிது வடக்கு இறைஞ்சுதல்’ மழைவருங் குறிப்பு. அதுவும் பொய்யாய்ப் போனது என்பவர், அதனையடுத்துக் குட்டுவனின் சோறு அளிக்கும் கொடைத்திறனைக் கூறி வியந்தனர். ‘வறிது வடக்கு இறைஞ்சிய’ என்னும் அடைச்சிறப்பால் இப் பாட்டு இப் பெயர் பெற்றது.]

நெடுவயின் ஒளிறு மின்னுப்பரங் தாங்குப்
புலியுறை கழித்த புலவுவாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலனுயர்த் தேந்தி
ஆரிரண் கடந்த தாரரும் தகைப்பில்
பீடுகொள் மாலைப் பெரும்படைத் தலைவ! 5

ஒதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றலென் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி யந்தணர் வழிமொழிக் தொழுகி
ஞாலம் நின்வழி யொழுகப் பாடல்சான்று
நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத் 10

திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ!
குலையிழி பறியாச் சாபத்து வயவர்
அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை

இடாஅ வேணி யியலறைக் குருசில்!
நீர்நிலக் தீவளி விசும்போ டைந்தும் . 15

அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையைநின்
வளம்வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே
உண்மரும் தின்மரும் வரைகோள் அறியாது
குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோறு
அடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் 20

எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் 25

கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
கொண்டல் தண்டளிக் கமஞ்சூன் மாமழை
காரெதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே! 30

தெளிவுரை : நெடுந்துாரத்து வானத்திடத்தே ஒளி விட்டு விளங்கும் மின்னலானது தோன்றிப் பரந்தாற்போல, புலித்தோல் உறையினின்றும் நீக்கிய புலவுநாற்றம் நாறும் முனையைக் கொண்ட வாளினை, நின் ஏவலுக்குட்பட்டவரான போர்மறவர்கள் வலக்கையிலே உயர்த்துப் பிடித்தவராகச் சென்று, பிறராற் கடத்தற்கரிய பகை அரணினை வெற்றி கொள்வர். இவ்வாறு, தூசிப்படையும் பகைவரது படை வகுப்பால் வெல்லற்கரிதாக விளங்கும் இயல்பினைக் கொண்டிருக்க விளங்கும், பெருமை கொண்ட வெற்றி மாலையினை அணிந்த, பெரும்படைக்குத் தலைவனாக விளங்குவோனே!

ஒதலும், வேட்டலும், அவை பிறரைச் செய்வித்தலும், (ஒதுவித்தல், வேட்பித்தல்) ஈதலும், ஏற்றலும் என்று சொல்லப்படும் அந்தணர்க்கு உரியவான ஆறு ஒழுக்கங்களைப் புரிந்தவராக ஒழுகிவருகின்ற, அறத்தொடு பட்டவையே விரும்பிச் செய்யும் அந்தணர்களது சொல்லுக்கு, ‘அவ்விதமே’ என்று கூறி, அவ்வாறே நடந்தும் வருவாய். ஆனால், இவ்வுலகமோ நின்னைப் பணிந்து நின் ஆணைப்படியே ஒழுகி வரும், பொய்யா நாவிற் புல்வர் பாடும் பாடல்களால் நிறைந்துள்ளோனே! நாடு முழுவதும் பரவி விளங்கும் ஆராயப்படாத நல்ல புகழினைப் பெற்றுள்ளோனே! திருத்தமான அணிகளை அணிந்துள்ள தேவியின் கணவனே!

பூட்டிய நாணின் இறக்குதல் அறியாத வில்லைக் கொண்டோரான படைமறவர்கள், தம் அம்புகளைக் களைதல் எப்பொழுதென்பதனை அறியாதவராக இருக்கும், ஏணி இடப்படாது செறிந்து அசைகின்ற பாசறை இருப்பை உடையோனே! அளவிடப்படாத பெரிய எல்லையினையுடைய, பாசறைக்குரியவான இயல்பெல்லாம் பொருந்திய, பாசறையையுடைய குருசிலே!

நீரும் நிலமும் தீயும் காற்றும் வானமும் என்னும் ஐந்து பெரும்பூதங்களின் பரப்பின் அளந்து அவற்றின் முடிவை அறிந்தாலும், அளந்தறிதற்கு, இயலாத பெரும் ஆற்றலைக் கொண்டவனாக விளங்குவோனே! நின் வளமானது பெருகும் பெருக்கத்தை யாமும் இனிதாகக் கண்டோமே!

விளங்குகின்ற கதிரவனின் கதிர்கள் விரிந்து வானகமெங்கனும் ஒளிவீசி நிற்க, வடதிசைப் பக்கமாகச் சிறிதளவே சாய்ந்துள்ள சிறப்புப்பொருந்திய ‘சுக்கிரன்’ என்னும் கிரகமானது, பயன் பொருந்திய பிறவான கிரகங்களோடு மழை பெய்வதற்கு உரியதான நல்லநாளிலே பொருந்தி நிற்க, நீரைச் சொரியும் மேகத் தொகுதியோடு நாற்றிசையும் பொருந்தக் கவிந்து, உலகில் நிலைபெற்ற உயிர்களை எல்லாம் காக்கும் பொருட்டாக, வலமாக எழுந்து ஒலிக்கின்ற கீழ்க் காற்றால் கொணரப்பெற்ற தண்மையான நீர்த்துளிகளைக் கொண்டவும், நிறைசூலைக் கொண்டவுமான கரிய மேகங்கள், கார்காலம் எதிர்ப்படுகின்ற, தான் பெய்தற்குரியதான பருவத்தை மறந்து பெய்யாமற் போனாலும்,

உண்போரும் தின்போருமாக அளவோடு கொள்ளுதலை அறியாதவராய் மயங்கும்படிக்கு, ஒலிக்கும் பூண் மழுங்கிப் போன உலக்கையினாலே அரிசியைக் குற்றிச் சமையலைச் செய்கின்ற அடுக்களை இடந்தோறும், இலைகளோடும் கூடிய சேம்பின் கிழங்குகள் மேலெழுந்து துள்ளச் சமைத்தலையுடைய மிடாவினிடத்தே, வாளாற் கொந்திய சிவந்த இறைச்சித் துண்டுகளுடனே கூடியதும், யாவரும் கண்டதும் மதிமயங்கத் தக்கதுமான, குறையாத உணவினை வழங்கு வோனே! நின் வலிமைதான், நீங்காத புதுவருவாயினை உடையதாக வாழ்வதாக!

சொற்பொருளும் விளக்கமும் : நெடுவயின் - நெடுந்துாரத்துள்ள வானம். ஒளிறு - ஒளிவிடும். மின்னு - மின்னல். பரந்தாங்கு - தோன்றி நாற்புறமும் பரவினாற்போல. மின்னல் வானத்தே தோன்றி நாற்புறமும் ஒளியோடு பரந்தாற் போலக் குட்டுவனும் சேர்நாட்டிடைத் தோன்றித் தன் மறப்புகழால் எப்புறமும் பரவிய பெருமையினன் ஆயினான் என்க. புலியுறை - புலித்தோலாற் செய்த உறை. எஃகம் - வாள்; வேலுமாம். ஏவலாடவர் - அரசனது ஏவலைச் செய்யும் ஆடவரான மறவர். வலனுயர்த்து ஏந்தல் - வலக்கையிற் பற்றி உயரத் தூக்கியபடி ஏந்தி வருதல்; இது வெற்றிப் பெருமிதத்தைக் காட்டுவது. ஆரரண் - பிறரால் எளிதிற் கடத்தற்கரிய அரண். தார் - தூசிப்படை. தகைப்பு - படை வகுப்பு. பீடு -பெருமை. மாலை - இயல்பும் ஆம். பிற்ரால் கடத்தற்கரிய பகைவரின் அரணத்தை நின் தூசிப்படையே சென்று எளிதில் கடந்து வெற்றி பெறும் என்றதாம்.

ஒதல் ஒதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்பன அந்தணர்க்குரிய அறுதொழில்கள் என்பர். புரிதல் - விரும்பிச் செய்தல். வழிமொழிந்து ஒழுகி - பணிந்து நடந்து. ஞாலம் - உலகம். சான்று - நிறைந்து. நாடா நல்லிசை - ஆராயப்படாத நற்புகழ்; அனைவரும் ஏற்கும் நற்புகழ். இயல்மொழி - இயல்புடைய பேச்சு. திருந்திழை - திருத்தமான அணிகள்; இவை அணிந்த தேவியைச் சுட்டியது.

குலை - நாண். சாபம் - வில். தூங்கு துளங்கு இருக்கை - செறிந்து அசையும் பாசறை இருக்கை; மறவர் நெருக்கத்தால் பாசறைக் கூடாரமும் அசைந்தது என்க. அறை - பாசறை. குருசில் - உபகாரகுணம் உள்ளவன். ஏணி - எல்லை. இடாத ஏணி - அளவிடலாகா எல்லையுடையது. இது போருக்குரிய தயார் நிலையிலிருக்கும் பாசறையின் நிலையைக் கூறியது.

கடை அறிதல் - முடிவான எல்லையை அறிதல். ‘குரை’, அசை. வீங்கல் - பெருகல். கண்டிகும் - கண்டோம். ‘வளம் வீங்கு பெருக்கம்’ என்றது, குட்டுவன் தன் மறமாண்பால் பகைவரை வென்று பெற்ற வளமைப் பெருக்கத்தை.  உண்மர் - உண்ணற்குரியன உண்போர். தின்மர் - தின்னற்குரிய தின்போர்; தின்னல் பற்களாற் கடித்து விழுங்கல். வரைகோள் - கொள்ளும் எல்லை. குரைத்தொடி - ஒலிக்கும் பூண்; உலக்கை ஓச்சும்போது உரலிற்பட்டு ஒலி முழக்கும் பூண்; 'மழுகிய' என்றது ஓயாது குற்றுதலால். வயின் - இடம்; இங்கே சமையலறை. அடை - இலை. 'சேம்பு எழல்' கொதிக்குங் காலத்துக் கிழங்கு மேலெழுந்து துள்ளல்: இதன் பின்னரே அரிசியிடுவர். எஃகு - வாள். வாடாச் சொன்றி - குறைவற்ற உணவு. கதிர் - கதிரவன். வறிது - சிறிது. இறைஞ்சுதல் - சாய்தல்; இது கார்காலத் தொடக்கத்து நிகழ்வது. 'பயங்கெழு பொழுது' - மழையாகிய பயனைத் தருதற்குப் பொருந்திய பிற கோள்நிலை அமைந்த பொழுது, கலிழும் - சொரியும். கருவி - தொகுதி. கையுற - நாற்றிசையும் வனத்தே பொருந்த. புரைஇய - காத்தற் பொருட் டாக. கொண்டல் - கீழ்காற்று. கமஞ்சூல் - நிறைசூல். மாமழை - கார்மேகம்.

25. கானுணங்கு கடுநெறி!

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணமும், சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்துக்கும். பெயர் : கானுணங்கு கடுநெறி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம் முதலியன : நீ தேரோட்டிய பகைவர் நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறியமையால், வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று. 'மாவடிய' எனத் தொடங்குவது முதலாகிய மூன்றடிகளும் வஞ்சியடிகளாதலான் வஞ்சித்தூக்கும் ஆயிற்று. மழை இல்லாது போயினதால் வானம் வெப்பமிகுதியினை உடையதாய்த் தீய்ந்த கடிய வழி என்று கூறிய சிறப்பால் இப் பாட்டு இப்பெயரைப் பெற்றது.]

மாவாடியபுலன் நாஞ்சில்ஆடா
கடாஅஞ்சென்னிய கருங்கண்யானை
இனம்பரந்தபுலம் வளம்பரப்பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
நீ, உடன்றோர் மன்னெயி றோட்டி வையா 5



கடுங்கால் ஒற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்
ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய
உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை 10

வரையிழி யருவியின் ஒளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே.

தெளிவுரை : இடிபோல ஒலிமுழங்கும் முரசினோடு, பெரிய மலையினின்று அதன் பக்கத்தே வீழும் அருவியினைப் போன்று ஒளியுடன் விளங்கும் கொடியானது அசைந்து கொண்டிருக்க, விரைந்த செலவையுடைய பறவையினைப் போன்ற விரைவுடனே, நீ நின் நெடிய தேரை ஓட்டிச் சென்ற பகையரசரது பரந்தஇடத்தினையுடைய நாடானது

நின் குதிரைப்படைகள் புகுந்து போரிட்ட வயற்புறங்களிலே இனிக் கலப்பைகள் உழவைச் செய்ய மாட்டா; மதமொழுகும் தலையினையும் கொடுமையினையுமுடைய நின் யானைக்கூட்டங்கள் பரந்த வயற்புறங்கள் இனித் தம்பால் வளமை பரவுதலை அறியா நிலையை அடைந்தன. நின் படை வீரர் சேர்ந்திருந்த மன்றங்கள் கழுதைகள் சென்றிருக்கும் பாழிடங்களாயின. நின்னால் கோபிக்கப்பெற்ற பகைவரது நிலைபெற்ற மதில்கள் காவல் வேண்டாதவாறு அழிவடைந்தன. கடுமையான காற்று மோதுதலாலே நீ இட்ட தீயானது சுவாலை மிகுந்து சினங்கொண்டதாய்ப் பசும் பிசிரையுடைய ஒள்ளிய அழலாகப் பற்றி எரிந்த பக்கங்கள், ஆண்டலைப் பறவைகள் திரிந்து கொண்டிருக்கும், கானம் தீய்ந்துபோன கடத்தற்கரிய வழியினைக்கொண்ட, ஆறலைகள்வர் வழிப்பறி செய்யும் போர் முனைகளைக் கொண்ட, அகன்ற பாழிடங் களாக நிலைபெற்றன, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : உரும் - இடி. உறழ்பு - ஒத்து. இரங்கல் - ஒலித்தல். வரை - பக்கமலை. ஒளிறு - விளங் கும். நுடக்கம் - அசைவு. கடும்பரி - விரைந்த செலவு. சிறகு - சிறகையுடைய பறவை; சினையாகு பெயர். கதழ்வு - விரைவு. கடும்பரி - விரைந்த செலவு: கடும் செலவையுடைய குதிரையும் ஆம்; அப்போது, கடுமையான விரைவோடு செல்லுதலையுடைய குதிரைகள் பறவையைப்போலப் பாய்ந்து செல்ல நீ நெடுந்தேர் ஓட்டினை என்று கொள்க. அகைப்ப - ஒப்ப. பிறர் - பகைவர். இனி அந்நாடு அடைந்த பாழ் நிலையைக் கூறுகின்றனர்.

கடுங்கண் - கொடிய தாகிய சினம். நாஞ்சில் - கலப்பை. வளம் பரப்பு அறியா - வளத்தை மிகுதியாகத் தருதலை ஒழிந்தன. உடன்றோர் . சினங்கொண்டோர். மன் எயில் - நிலைபெற்ற கோட்டை. தோட்டி - காவல்; மதில் அழிந்து பாழாயினமையின் காவல் வேண்டா நிலை பெற்றது. கடுங்கால் - பெருங்காற்று. ஒற்றல் - மோதியடித்தல். சுடர் - தீக்கொழுந்து. சிறந்து - மிகுந்து. உருத்து சினந்து. பசும் பிசிர் - பசிய பிசிர், தீப்பற்றி எரியுங்காலத்துக் காற்றில் மேலே பரந்து செல்லும் துகள்கள். ஒள் அழல் - மிக்க தீ, ஆடிய - கொளுத்திய. மருங்கு - பக்கம்.

26. காடுறு கடுநெறி !

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும், தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்துக்கும். பெயர் : காடுறு கடுநெறி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம் முதலியன : புலமானது நெருஞ்சி படர்ந்து காடாய்ப் போனது என நெறியின் பாழடைந்த தன்மையைக் கூறிய சிறப்பால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது. 'நற்புலம் காடுற்றது' எனக் குட்டுவனின் பகைவர் நாட்டழிவினை, அவன் எடுத்துச் செலவின்மேலிட்டுக் கூறினமையால், இது வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு ஆயிற்று. "தேர் பரந்த" என்பது முதலாக வரும் மூன்றடியும் வஞ்சியடி யாகலான் வஞ்சித்தூக்கும் ஆயிற்று.]

தேஎர்பரந்தபுலம் ஏஎர்பரவா
களிறாடியபுலம் நாஞ்சிலாடா
மத்துரறியமனை யின்னியமிமிழா
ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவளம் நினைப்பின்
நோகோ யானே நோதக வருமே 5



பெயன்மழை புரவின் றாகிவெய் துற்று
வலமின் றம்ம காலையது பண்பெனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்
பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் 10

காடுறு கடுநெறி யாக மன்னிய
முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்
உரும்பில் கூற்றத் தன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.

தெளிவுரை : நின் பகைவர் நாட்டிலுள்ள செல்வர்களின் தேர்கள் பரவிச்சென்றதனாலே சேறுபட்ட வயற்புறங்கள், பின்னர் ஏர்கள் சென்று பரிந்து உழுதலை வேண்டாவாயிருக்கும். பன்றிகள் தம் கொம்புகளாற் கிளறிய கொல்லைப் புறங்கள் ஏறுபூட்டி உழுதலைப் பின்னர் வேண்டாவாக விளங்கும். தயிர் கடையும் மத்தின் ஒலிமுழக்கம் எழுகின்ற ஆய்ச்சியரின் மனைகளிலே, இனிய வாச்சியங்களின் முழக் கிசை கேட்கப்படாதே போகும். இவ்வாறாக அந்நாடு முன்பு விளங்கிய செழுமையான வளத்தினது தன்மையைக் கண்டு நன்கறிந்தவர்கள், இப்போது அதனை நினைப்பாராயின், நினைக்கும் நெஞ்சம் நோவத்தக்க வருத்தமே உண்டாகும். யானும் அதனை எண்ணியே வருந்தா நிற்கின்றேன்.

காலத்தாற் பெய்தலையுடைய மழைதான் பெய்யாமற் பொய்த்தமையாலே, வெம்மையானது மிகுதிப்பட்டு நாடு நலம் பயப்பது இன்றாயிற்று. 'இதுதான் காலக் கோளாற்றின் பண்பாகும்’ என்று சொல்லியவராக, அந்நாட்டு மக்களும், பனித்த கண்களிலே துளிர்த்தநீரை மிகத் தாங்கியவராகத், தம் கைகளைப் புடைத்தவுராக, நெஞ்சத்தேயும் மெலிவுற்ற தன்மையராயினர். இவ்வாறு அவர்கள் வருத்தத்தை அடையுமாறு, பீர்க்கங் கொடிகள் படர்ந்த வேலிசூழ்ந்த பாழ்மனைகளும், நெருஞ்சி பரந்த காடுபட்ட கடத்தற்கரிய வழிப்பகுதிகளுமாக அவ்விடங்கள்தாம் நிலை பெற்றன, பெருமானே!

முருகப் பெருமான் வெகுண்டு பொருது அழித்தலாலே செல்வக் களிப்பை இழந்துபோன மூதூர்களைப் போல, பிறராலே நலிவுறுதல் என்பதில்லாத கூற்றத்தைப் போலும் வலிமையுடையவரான, நின்னுடைய திருந்திய தொழிலையுடைய படைமறவர்கள் வெகுண்டு பொருதழித்த நாடுகளின் நிலைதான் இவ்வாறு அழிவுடைத்தாயின, பெருமானே! என்பதாம்.

சொற்பொருளும் விளக்கமும் : தேஎர் - தேர்கள்: இவை பரந்த புலம் என்றார், அவை மிகுதியாக நிறைந்திருந்த நிலையை உரைத்தனர். தேர்ச் சக்கரங்கள் ஓடியோடிச் சேறுபட்ட வயல்கள் உழாதேயே விதைத்தற்குரிய பக்குவத்தை அடைந்தன என்று, தேர்களின் மிகுதியையும், அவற்றைச் செலுத்தும் வலனுடையாரின் பெருக்கையும் உரைத்தனர். களிறு - ஆண் பன்றி; களிறாடிய புலம்; என்றது, பன்றிகள் உழுத தரிசாகக் கிடந்த கொல்லைப் பகுதிகளை; அவைதாம் அப்படியே புழுதிபட்டு மீண்டும் உழாதே வித்துதற்குரிய தன்மையடைந்தன என்பதாம். 'மத்து உரறிய மனை இன்னியம் இமிழா' என்றது, மத்தொலியின் மிகுதியைக்கூறி, அவ்விடத்துள்ள பாற்பயனின் செழுமையை உரைத்ததாம். இவ்வளன் எல்லாம் இப்போது அவ்விடத்து இல்லையாயின என்றனர், 'நினைப்பின் யான் நோகு' என்றனர். நாஞ்சில் - கலப்பை. பண்டு - பண்டிருந்த வளமை; காலவாகுபெயர். 'நோதக வருமே' என்றது. பண்டு அறிந்தார் யாவரேயாயினும், இன்று இந்நிலை காணின் அப் பண்டைய நிலைதான் கெட்டதனை நினைந்து வருந்தாதிரார் என்பதாம்.

நின்னால் அழிவுற்ற அந்நாட்டிற்கு மேலும் வருத்தம் தருவதுபோலத் தெய்வமும் கொடுமை செய்தது என்பார், காலத்தாற் பெய்தற்குரிய மழையுங்கூடப் பெய்து புரத் தலின்றி, எங்கணும் வெம்மை மிகுதிப்படச் செய்தது என்றனர். புரவு - காத்தல். வெய்துற்று - வெம்மையை மிகுதியாகப் பெற்று, வலம் - நன்மை. பனித்தல் - துளித்தல். மலிர் - மிக்க நீர். புடையூ - புடைத்து. சிறுமை - துன்பம்: வறுமைத் துயரம். காடுறு - காடாகப் பெரிதும் முளைத் தடர்ந்த நிலை; இது அழித்துப் பண்படுத்தற்கு இயலாது போயினமையால். 'காலையது பண்பெனக், கண்பனி மலிர் நிறை தாங்கிக், கைபுடையூ, மெலிவுடை நெஞ்சினர், சிறுமை கூர' என, அந்நாட்டு மக்களின் துயரமிகுதியைக் கூறினர். பெருமைப்பட வாழ்ந்த அவர், சேரனால் வந்துற்ற அழிவையும், தொடர்ந்து மழை பொய்த்தலினால் வந்துற்ற கொடுமையின் நிலையையும் கண்டு வெதும்பித், தம் நெஞ்சுறுதியையும் இழந்தவராக 'காலத்தின் பண்பு இது போலும்!' எனக் க்ருதி வருந்தி நைவாராயினர் என்பதாம்.

முருகு - முருகப் பிரான். உடன்று . வெகுண்டு. கறுத்த - சினங்கொண்டு சென்று அழித்த. கலியழி மூதூர் - ஆரவாரம் அழிந்த பழைய ஊர்: ஆரவாரம் அழிதலாவது மக்கள் ஆழிந்தும் வளமை கெட்டும்பாழுற்றதனால்: இது முருகனைச் சினந்து பகைத்ததனாலே, அவன் படைஞரால் வந்துற்ற நிலை. உரும்பில் - பிறரால் நலிவுபட்டு மனக் கொதிப்புப் படாத வன்மை; உரும்பு - வெம்மை. 'திருந்து தொழில் வயவர்' என்றது. அவர்தாம் போரியற்றத் தகுதியிலாரை யாதும் துன்புறுத்தலைச் செய்யாதே, அறப் போரியற்றும் தொழில்முறை உடையவர் என்பதனால்.

27. தொடர்ந்த குவளை !

துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : தொடர்ந்த குவளை. இதனால் சொல்லியது : குட்டுவன் தன் நாட்டினைக் காத்து வந்த நல்ல சிறப்பு.

[பெயர் விளக்கம் : அரசனைப் புகழ்தற்கண் வந்த பாடாண் பாட்டாய்ச் செந்துறையில் அமைந்தது இது. பகையரசரின் நாட்டது அழிவைக் கூறுகின்ற வகையானே குட்டுவனின் போராண்மையையும் வாழ்த்தினர். ஆண்டுகள் தோறும் இட்டு ஆக்க வேண்டாது, தொண்டு இட்டதே ஈடாக எவ்வாண்டிற்கும் தொடர்ந்துவரும் குவளை எனக் குறிப்பார், 'தொடர்ந்த குவளை' என்றனர். இந்தச் சிறப்பாலே இப் பாட்டிற்கும் இது பெயராயிற்று.]

சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி
அலர்ந்த வாம்பல் அகமடி வையர்
சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி
அரிய லார்கையர் இனிதுகூ டியவர் 5

துறைநணி மருத மேறித் தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற்

பழனக் காவிற் பசுமயி லாலும்
பொய்கை வாயிற் புனல்பொரு புதவின்
நெய்தன் மரபின் நிரைகட் செறுவின் 10

வல்வா யுருளி கதுமென மண்ட
அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப
நல்லெருது முயலும் அளறுபோகு விழுமத்து
சாகாட் டாளர் கம்பலை யல்லது
பூசல் அறியா நன்னாட்டு 15

இயானர் அறாஅக் காமரு கவினே.

தெளிவுரை : ஒளி பொருந்திய வளையல்களைஅணிந்தவரான இளமகளிர், இடையறவில்லாதே தொடர்ந்து மலர்ந் திருக்கும் வேளையினது முழுப்பூவைச் சேர்த்து, ஆம்பலின் மலர்ந்த பூக்களை அவற்றின் இடையிடையே அமையுமாறு வைத்துத் தொடுத்த தழையுடையினை உடுத்தவராகச் சென்று, சுரிந்த தலைமயிரிற் பூவால் தொடுக்கப்பெற்ற கண்ணியைச் சூடியவராகக், கள்ளுண்ணும் இயல்பினராக, அவர்கள் இனிதே கூடியிருக்கும் நீர்த்துறைக்கு அணித்தாகவுள்ள மருதமரத்தின் மேலாக ஏறிநின்று நெற்கதிர்களைக் கொய்யவரும் புட்களை ஓட்டுதற்காக விளிக்குரலெடுத்து இசைப்பார்கள். வயலருகேயுள்ள பொழில்களில் தங்கியிருக்கும் பசுமை நிறமுடைய மயில்கள் அவ் விளிக்குரலை அவர் இசைக்கக் கேட்டதும், ஆடலேச் செய்யத் தொடங்கும். அதனைக் கண்டு மக்கள் செய்யும் ஆரவாரமும்—

பொய்கை வாயிலிடத்தேயுள்ள, புனலாலே தாக்கப்படும் கதவின்வழிக் கசிவு ஒழுகிச்செல்லும் கால்களிற் பூத்திருக்கும் நெய்தற்பூக்களை ஊதும் முறைமையினை உடையவாய், நிரை நிரையாக ஆரவாரித்துச் செல்லும் வண்டினம் நிறைந்த வயலிடத்துச் செல்லும் வலிய வாயையுடைய வண்டிச் சக்கரமானது, சேற்றினிடத்தே பட்டுச் சட்டென அழுந்திவிட, அவ் வண்டியைச் செலுத்துவோர், தம் இருக்கையினின்றும் துள்ளிக் கீழே குதித்தவராக, எருதுகளை உரப்பிச் செலுத்த, அந் நல்ல எருதுகளும் முயன்று வலித்து அச் சேற்றுப் பகுதியைவிட்டு வண்டியை இழுத்துப் போகும். அவ் வருத்தத்திடையே, அவற்றை ஊக்குமாறு வண்டியைச் செலுத்துவோர் செய்யும் ஆரவாரமும் ஆகிய, இவ் ஆரவாரங்களையல்லாமல் வேறானதொரு பேராரவாரத்தைக் கேட்டறியாத நல்லவளநாட்டின் புதுவருவாய் குறைபட்டுப் போகாத அனைவரும் விரும்புதற்குரிய அழகானது, நீதான் வெகுண்டனையாய்ச் சினந்து பார்த்ததனாலே, இதுகாலை சிதைந்து போவதாயிற்று, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : தொடர்ந்த குவளை ஆண்டுதோறும் பயிரிடுதலை வேண்டாது, முதலில் இட்டதே ஈடாகத் தொடர்ந்து தழைத்து மலரும் குவளை; இந்தக் கருத்தினைக் கூறும் சிறப்பாலே இப்பெயரை இப்பாட்டுப் பெற்றது. தூநெறி - புறவிதழ்கள் களையப்பெற்ற முழுப்பூ. அடைச்சி - நிறையச் சேர்த்து. ஆம்பல் - அல்லிப் பூ. அக மடிவை - நடுநடுவே தைத்துத் தொடுக்கப்பெற்ற தழையுடை; பசிய தளிரும், நீலக் குவளையும், சிவந்த அல்லி மலருமாகத் தொடுத்த தழையுடை; மயிலின் தோகையொப்ப விளங்கும் என்க; இதனையுடுத்த அவர் துறையணி மருதத்து ஏறிக் குரலெழுப்பத், தம்மினம் என மயங்கிய மயிலினம் தாமும் ஆடலைத் தொடங்கின என்க. எல் - ஒளி. தெள்விளி - தெளிந்த விளிக்குரல். பழனம் - வயல். கா - சோலை. இயவர் - இசைபாடுவோர்; இனி கூடு இயவர் . சுருதியோடு இனிதாகப் பொருந்துகின்ற வாச்சியங்களைக் கொண்டோ ரான இயவரும் ஆம். 'குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள் வரும் அல்குல்' (புறம் 116) எனக் குவளை மலரைத் தழையுடையிற் சேர்த்தலைப் பிறரும் கூறுவர்; இனிக் குவளைத் தூநெறியைக் கூந்தலிற் சேர்த்து எனக் கொள்வாரும் உளர்.

பயிரை உழக்கும் மயிலினத்தைக் கடிவாரான இளமகளிர், மருதமரக் கிளைகளில் ஏறி நின்றவராக விளிக்குரலைச் செய்ய, அதனைக் கேட்ட மயிலினம் வெருவியோடாவாய் மகிழ்ந்து ஆடா நிற்கும் எனவும், அக் காட்சியைக் காண்பார் அதன் தன்மையைக் கண்டு ஆரவாரித்து இன்புறுவர் என்பதும் கொள்க. இவ்வாறு களித்துச் செய்யும் கம்பலையன்றி, வேறு பூசலையறியாத வளநாடு என்பதும் இதனால் அறியப்படும்.

'பொய்கை வாயில்' என்றது. பொய்கையின் கண்ணே மிகுதிப்பட்ட நீர் வழிவதற்காக அமைந்திருக்கும் மதகுப் புறத்தை. அம் மதகுகளின் மேலாக மிகுதிப்படும் நீர் வெளிப்பட்டுப் போகும். வெள்ளம் பெருகிற்றாயின், மதகுகளையும் திறந்து விடுதற்கேற்றவாறு கதவுகளை அமைத்திருப்பர். அக் கதவுகளின் இடைவெளிகளின் வழியாகக் கசிந்து செல்லும் நீர் ஓடும் கால்களிலே நெய்தற்பூக்கள் நிறைந்திருந்தன என்க. செறுவிடை வண்டி செல்வது கூறியது, அறுவடைக்குப் பின்னர் என்க. அறுவடைக்குப் பின்னர் காய்ந்து கிடக்கவேண்டிய வயற்புறமும் நீர்வள மிகுதியால் சேறுபட்டுக் கிடந்தது என்கின்றனர். வண்டிச் சக்கரம் சேற்றிற் சிக்க, அதனைச் செலுத்துவார் எருதுகளைச் செலுத்தச் செய்த ஆரவாரம் என்றது, இந் நாளினும் கிராமங்களிற் கேட்கக் கூடியதாகும். 'உருளி அல்லற்பட்டுக் கதுமென மண்டியது' வண்டியில் நெற்பாரம் மிகுதியா யிருந்ததனால் என்க. கள் - வண்டு. உருளி - சக்கரம். புதவு - கதவு. நிறை - வரிசை. மண்ட - அழுந்த அள்ளல் - சேறு. முயலும் - முயலுதற்குக் காரணமான. நெய்தல் - நீர்ப்பூ வகையுள் ஒன்று; வைகறையில் மலர்வது. 'நல்எருது' என்றது, அல்லற்பட்ட வல்வாய் உருளையையும் இழுத்துச் செல்லும் வலிமையுடைய எருது என்றதாம். 'அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே' என, மதுரைக்காஞ்சி யாசிரியரும் இதனை உரைப்பர் (259 - 60). இவ் வாரவாரமன்றி வேறு பூசலால் உண்டாகும் ஆரவாரமில்லாத வளநாடு என்க. சிவத்தல் - வெகுளல்; கோபித்தல். 'நோக்கலின்' என்றது. அவன் நோக்கவும், அவன் படைமறவர் சென்று வினைமுடித்தனர் என்றற்காம்; அவன் நேரிற் சென்றானல்லன் என்றதுமாம்.

28. உருத்துவரு மலிர்நிறை !

துறை : நாடு வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : உருத்துவரு மலிர்நிறை. இதனாற் சொல்லியது : குட்டுவனின் நாடுகாவற் சிறப்பு.

பெயர் விளக்கம் : நாடு காத்தலின் சிறப்பினை வியந்து குட்டுவனைப் பாராட்டிப் பாடுதலால் நாடு வாழ்த்து என்றனர். தழைகளைச் சூடியபடியே சினந்து வருகின்ற பெரு வெள்ளமானது, தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர்வேட்டு வருவோரைப்போல் வந்தது என்று கூறிய சிறப்பால்,இப்பாட்டு, 'உருத்துவரு மலிர்நிறை' எனப் பெயர் பெற்றது.]

திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர்
பைங்கண் யானைப் புணர்நிரை துமிய
உரந்துரங் தெறிந்த கறையடிக் கழற்கால்

கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
இளையினிது தந்து விளைவுமுட் டுறாது 5
புலம்பா வுறையுள் நீதொழில் ஆற்றலின்
விடுகிலக் கரம்பை விடரளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
அருவி யற்ற பெருவறற் காலையும்
நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச் 10
சீருடை வியன்புலம் வாய்புரந்து மிகீஇயர்
உவலை குடி யுருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப் பூசல் அல்லது
வெம்மை யரிதுநின் அகன்றலை நாடே.

தெளிவுரை : கோடையின் வெம்மையானது நீட்டித்தலினாலே குன்றிடமெல்லாம் பொலிவிழந்து தோன்றின. அருவிகள் நீர் வற்றியவாய் உலர்ந்தன. இத்தகைய பெருவறட்சி ஏற்பட்ட காலத்திலும், கரையளவும் உயர்ந்தபடி நீரானது பெருகி வழிந்துசெல்லுவதாக விளங்கிற்று அகன்ற இடத்தை யுடைய பேரியாறு. அதன் கரைமருங்குள்ள சிறப்புடைய அகன்ற விளைநிலப் பரப்பெல்லாம், தம்மிடமெங்கணும் நீர்நிறைந்து வாய்க்காலளவுக்குத் தாமும் நிரம்பப்பெற்றன. மேய்ச்சலுக்கு விடப்பெற்ற கரம்பை நிலங்களிலுள்ள வெடிப்புகளெல்லாம் நீரால் நிறையப்பெற்றன. தழைகளைத் தன் மேற்புறத்துச் சூடிக்கொண்டதாகச் சினங்கொண்டாற் போல விரைந்துவருகின்ற மிக்க வெள்ளமாகிய செந்நீரிடத்தே, புதுப்புனல் ஆடுவாரும், கரைகாப்பாருமாக, மக்கள் செய்யும் ஆரவாரத்தையல்லாமல், நின் பரந்த இடத்தையுடைய நாட்டினிடத்தே, வேற்றாரின் படையெடுப்பால் தோன்றும் வெம்மையென்பது உண்டாதற்கு அரிதாகும் , பெருமானே! n

பெரு வளமை கொண்டாரான பகைவர்களது பசிய கண்களையுடைய யானைப்படைகளின் தொடர்ந்த வரிசை முற்ற அழியுமாறு, தமது வலிமையைச் செலுத்தி எறிந்த, குருதிச் கறைபடிந்த பாதங்களையும், கழல்விளங்கும் கால்களையும், விரைந்த செலவையுமுடைய பெருமறவர்கள், மிக்க விசையுடன் செலுத்தும் தம் விற்றொழிலையே மறக்குமாறு, காவற்றொழிலை இனிதாகச் செய்து, விளைபொருள்கட்குக் குறைவில்லாமற்படிக்கும் செய்து, அவர்கள் தமக்கு இனியவரைப் பிரிந்து வாழ்தலின்றிக் கூடியேயிருக்கின்ற நிலையினராகுமாறு, நீதான் நின் ஆட்சித்தொழிலைச் செய்து வருகின்றனை. ஆதலினாலே, நின் நாடு மிக்க திருவினை உடை தாயிருப்பது, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: விடு நிலம் - மேய்ச்சலுக்கு விடப்பெற்ற ஊர்ப் பொதுநிலம். கரம்பு - வேறு எதுவும் விளையாத தரிசு நிலம். விடர் அளை - வெடிப்பின் வாய். கோடை- கோடைக்காலம். குன்றம் - மலைப்பகுதி. புல்லெனல் - பொலிவழிதல். வறற்காலை - வறட்சிக்காலம். கரைநிவந்து - கரையளவுக்கு உயர்ந்து. நனந்தலை அகன்ற இடம். பேரியாறு; ஆற்றின் பெயர். சீர் - சிறப்பு; இது - ஆற்றுப் பாய்ச்சலுள்ள பகுதியிலே அமைதலால். வியன் புலம் - அகன்ற வயற்பகுதிகள். வாய் - வாய்க்கால்; இடம். மிகீஇயர் - மிக்கதாக. உவலை-தழை. உருத்து – சினந்து. செந்நீர் - சிவப்பான புது வெள்ளம். பூசல் - ஆரவாரம். வெம்மை - கொடுமை. அகன்றலை - பரந்த இடத்தைக் கொண்ட நாடு; குட்டுவனது நாட்டுப்பகுதி. தமிழகத்தின் பிற பகுதிகளிற் கோடைக் காலம் நீடித்து வருத்துகின்ற ஆனியும் ஆடியுமாகிய மாதங்களில், சேரநாட்டுப் பக்கத்தே தென்மேற்குப் பருவக்காற்றால் பெருமழை பெய்யும்; இதனையே நயமாகக் கூறுகின்றனர். நீர்வளத்தால் உண்டாகும் பேராரவாரத்தை யல்லாமல், நீரற்று வெம்மையால் வாடித் துன்புறும் நிலையற்ற, வளநாடு என்று கொள்க.

திரு - செல்வம்; இயற்கை செயற்கை வளங்கள். விறல்- வல்லமை; வீறுடைமை. புணர் நிரை - தொடர்ந்து செல்லும்வரிசை. துமிய - துண்டுபட்டு அழிய. உரம் - வலி துரந்து - செலுத்தி. கறை - குருதிக்கறை. கழல் - வீரக்கழல். கடு - விரைவுடைய. மா - பெரிய. மறவர் - போர்மறவர். கதழ்வு - விரைவு. தொடை - அம்புதொடுத் தெய்யும் செயல். இளை தந்து - காத்து. முட்டுறல் - குறைபாடு உண்டாதல். புலம்பா உறையுள் - பிரிவற்றுத் தங்கியிருத்தல். தம் அம்புகளாலே பகைவரது களிற்றுப்படை நிறையை அழிக்கும் திறனுடைய பெருமறவர் எல்லாரும், நீதான் நின் நாட்டை இனிதாகக் காத்தலினாலே, தம் அம்புசெலுத்தும் தொழிலையே மறந்தாராயினர் என்பதாம். காட்டாற்றுப் புதுவெள்ளம் தழைகளையும் தன் மேற்கொண்டு மிகுவிரைவோடு வருதலின், ' உவலை சூடி உருத்துவரு மலிர்நிறை' என்றனர்.

29. வெண்கை மகளிர் !

துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: வெண்கை மகளிர். இதனாற் சொல்லியது:குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: ’வரம்பில் தானை பரவா ஊங்கென’ எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறியதனால் வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று. வெறுங்கையராய் மகளிர் வெண்குருகு ஒப்புவர் என்பதனை, 'வெண்கை மகளிர் வெண்குருகு ஒப்பும்’ எனக் கூறிய நயம்பற்றி இப்பாடல் இத்தலைப்பைப் பெற்றது.]

அவலெறி உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தாள் நாரை யிரிய அயிரைக்
கொழுமீன் ஆர்கைய மரந்தொறுங் குழாஅலின் 5

வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்
அழியா விழவின் இழியாத் திவவின்
வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ
மன்றம் நண்ணி மறுகுசிறை பாடும்
அகன்கண் வைப்பின் நாடுமன் அளிய 10

விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன்
வரம்பில் தானை பரவா வூங்கே. 15

தெளிவுரை: அவலிடித்த உலக்கையினைப் பக்கத்தேயிருந்த வாழைமரத்திலே சார்த்திவிட்டு, வளையணிந்த கையினைக் கொண்டவரான இளமகளிர், வள்ளைப்பூவைச் சென்று கொய்வார்கள். இத்தகைய வளமுடைய, வளைந்த நெற்கதிர்களையுடைய விளைவயல்களிற் பரவியிருந்து மேய்கின்ற பெரிய கால்களையுடைய நாரைகள், அம் மகளிர்க்கு அஞ்சி அவ்விடத்தை விட்டு அகலும். அடுத்து, அவைதாம் அவ் வயல்களிற் பற்றிய அயிரைக் கொழுமீன்களை உண்பனவாக, அவ்வயல்களை அடுத்துள்ள மரங்களிற் சென்று கூட்டமாகத் தங்கியிருக்கும். வளைகளும் அணியப்பெறாத கைகளை உடையவரான சிறுமகளிர், அவ் வெண்குருகுகளை ஓட்டி விளையாடுவர். கெடாத விழாக்களிலே, சுருதி இறங்காத நரம்புக் கட்டினையுடைய யாழுடன் கூடியவரான கூத்தர்கள், பண்களை நன்றாகப் பொருந்த அமைத்து இசை எழுப்பியவராக, அவ்வூர் மன்றங்களைச் சென்றடைந்தவராக அங்குள்ள தெருக்களின் பக்கமாகப் பாடியபடி செல்வர். இத்தகைய வளத்தையும் ஆரவாரத்தையும் உடையவாயிருந்த நின் பகைவரது அகன்ற இடத்தைக் கொண்ட ஊர்களை யுடைய நாடுகள்தாம், இந் நாளிலே இரங்கத்தக்கவை ஆயினவே!

ஒன்றாக விரவிய பல்வேறு வகைப்பட்ட தானியங்களோடு குருதியைக் கலந்த பலியுணவைப் பலியாக ஏற்க விரும்புவதும், மயிரோடுங்கூடிய எருதின் தோலாற் போர்க்கப் பெற்றதும், கருமையான கண்ணை உடையதுமான போர் முரசம் கடுமையாக ஒலிக்கப், போரினை மேற்கொள்ளலை நேராகத் தானே மேற்கொண்டவனாகச் சென்று, அப்பகைவர்களது கடத்தற்கரிய கோட்டையைக் கைக்கொள்ளும், பெருமையுடைய பலவான யானைப்படைகளை உடையவனாகிய குட்டுவனான நின் எல்லையற்ற படைகள் சென்று பரவா முன்னர், அந் நாடுகள் அத்தகைய வளமுடையவாயிருந்தன. அவைதாம், இதுகாலைத் தம் அழகழிந்தவையாய் இரங்கத் தக்கவை யாயின, பெருமானே!

சொற்பொருள் விளக்கம்: அவல் - நெல்லவல். வாழை சேர்த்து - வாழை மரத்திலே சார்த்திவைத்து. வள்ளை - ஒரு வகை நீர்ப்பூ. முடந்தை - வளைவு. தடந்தாள் - பெரிய கால். இரிய - அஞ்சி அகல. மகளிர் வயற்புறங்களுள் இயங்கி வள்ளைப்பூக் கொய்ய, அவர்க்கஞ்சிய நாரைகள் பறந்து அகன்றன என்பதாம். 'அயிரைக் கொழுமீன் ஆர்கைய’ என்றது, அயிரையின் கொழுவிய மீனைத் தின்னும்பொருட்டு என்பதாம். சிறுமீன்களை இவை பற்றா என்றதுமாம். ’மரந் தொறும் குழாலின்' என்றது, வெண் குருகினம் மரங்கள் தோறும் கூடியிருத்தலின் என்றதாம். அவற்றைக் காணும் வெண்கை மகளிர் அவற்றை ஓட்டி அவை ஆரவாரத்தோடு பரத்தலைக் கண்டு மகிழ்வர் என்பதாம். 'அழியா விழவு’ கெடாத விழவு; இது விழவுகள் உரிய காலத்தே தவறாமல் நிகழ்ந்தன என்பதாம். 'இழியாத் திவவின் வயிரியமாக்கள்’ என்றது, நரம்புக் கட்டுக்கள் குலையாத யாழையுடைய வயிரிய மாக்கள் என்றதாம். இவர் முதற்கண் ஊர்மன்றத் தைச் சென்றடைந்து பாடிய பின்னர், தெருக்களின் பக்கங்களிலும் பாடிச்செல்வர் என்பதாம். மகளிருள் இருவகை யினரைக் கூறுகின்றனர். 'வள்ளை கொய்யும் வளைக்கை மகளிர்’ ஒரு சாரார். ’வெண் குருகு ஓப்பும் வெண்கை மகளிர்' ஒரு சாரார்; இவருள் பருவத்தால் சிறுமியர் வெண்கை மகளிர் என்பர்.

இனி, அவலிடிக்கும் இளமகளிர், அதனைக் கைவிட்டுச் சென்று வள்ளைப் பூக்களைக் கொய்து தங்களைப் புனைதலில் ஈடுபடுவர் எனவும், வெண்கை மகளிர் மரங்களிலிருந்த வெண்குருகுகளை ஓட்ட, அவை ஆரவாரித்து எழுதலால், வளைந்த நெல்லின் விளைவயலுள் பரந்த தடந்தாள் நாரைகளும் அஞ்சி அகன்றுபோம் எனவும் கொள்ளலாம். இவற்றால் எழும் ஆரவாரமன்றி, மக்கள் ஊரைவிட்டு வெளியேறிச் செல்லும் ஆரவாரம் எழாத வளநாடு என்பதாம். கடியகழற – கடுமையாக ஒலிக்க; ஒலியின் கடுமை அரசனின் கடுஞ்சினத்தை வெளிப்படுத்துவதாம். மாக்கண் - கரிதான கண்; கண் - முரசிடத்து அறையப்படும் இடம். கழற ஒலிக்க ஒலியின் மூலம் மறவர் போருக்குரிய அழைப்பை அறிவராதலின் 'கழற' என்றனர். நேரிகந்து - ஒப்பற்று; போரினை எதிரேற்றுக் கொள்வதிலே ஒப்பற்று; இது தம்பாலுள்ள மறமாண்பினால் ஆகும். 'ஆர் எயில்' பகைவரால் எளிதில் கடத்தற்கரிய கோட்டைகள். வரம்பில் எல்லையற்ற பெருக்கம். தானை பரவுதல் – படை பகை நாட்டைக் கைப்பற்றி நாற்புறமும் பரவி நிற்றல். வெண்கை மகளிர் - வெண்சங்கு வளைகளணிந்த கையினரான மகளிரும் ஆம்; இனி அடுதல் முதலிய தொழிலைச் செய்தறியாத கையினையுடைய சிறு மகளிர் எனலும் பொருந்தும். ’வளையைக் கையிலே அணிந்த மகளிர் வள்ளையைக்கொய்யச் சென்றனர்' என்று கூறிய நயத்தை உணர்க. வயிரிய மாக்கள் -கூத்தர்.

'இதில், இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் துறக்கம் வேண்டினார் என்பது குறிப்பு வகையால் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப் பொருள் வந்த பாடாணாயிற்று' என்பர் நச்சினார்க்கினியர் (தொல்-புறம். 25 உரை). 'வெண்கை மகளிர் வெண்குருகை ஓட்டினாற்போல், நீயும் எம் உயிரைத் துறக்கம் போகச் செலுத்துக' என்பது குறிப்பு.

30. புகுன்ற வாயம் !

துறை: பெருஞ்சோற்று நிலை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: புகன்ற வாயம். இதனாற் சொல்லியது:குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: 'வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றை ஞான்று, போர் குறித்த படையாளரும் தானும் உடன் உண்டான் போல்வதோர் முகமன் செய்வதற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ் சோற்று நிலை' என்பது, தொல்காப்பியப் புறத்திணை இயலுள் நச்சினார்க்கினியரால் கூறப்படுவது. அதனைக் குறித்துப் பாடிய இப்பாட்டு அதனால் பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாற் குறிக்கப்பெற்றது. புகன்ற வாயம் என்றது, முன்பு மணல் அணைக்கு நில்லாத பெருவெள்ளத்தினை அணை செய்து முடித்த, விருப்பத்தையுடைய ஆயம் என்றவாறாம். இச்சிறப்பால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.]


இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்
அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை 5

தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல்
இலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும்
தண்டகடற் படப்பை மென்பா லனவும்
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
செங்கோட் டாமான் ஊனொடு காட்ட 10

மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
கால மன்றியும் கரும்பறுத் தொழியா
தரிகா லவித்துப் பலபூ விழவிற் 15




றேம்பாய் மருத முதல்படக் கொன்று
வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்
முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும் 20

செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
ஏன லுழவர் வரகுமீ திட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலந் தழீஇய புறவணி வைப்பும் 25

பல்பூஞ் செம்மற் காடுபய மாறி
அரக்கத் தன்ன நுண்மணற் கோடு கொண்
டொண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும்
பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து 30

கடலவும் காட்டவும் அரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்
தருந்திறன் மரபிற் கடவுட் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறற் பிண்டம் 35

கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி
எறும்பு மூசா விரும்பூது மரபிற்
கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் 40

பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர்
உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து
பெருஞ்சோ றுகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே

நெய்தல் நிலவளம்:

தெளிவுரை: பூங்கொத்துக்கள் செறிந்த ஞாழல் மரங்களை யுடைய கரையினிடத்தே பொருந்திய பெரிதான நீர்த்துறை யிடத்தே, நீலமணியாற் செய்யப்பெற்ற கலத்தைப்போல விளங்கும் கரிய விதழ்களையுடைய நெய்தற்பூக்களைக் கொண்ட, அதன் பசுமையான இலைகள் விளங்கும், குளிர்ந்த கழியிடத்தே துழாவிப் பெற்ற மீன்களை யுண்டுவிட்டுப், புன்னை மரத்தினது வெண்ணிறப் பூக்கள் நிறைந்த கிளை களிலே சென்று குருகினம் தங்கியிருக்கும். அத்தகைய புன்னைமரச் சோலைகளையுடையதும், தங்குதல் பொருந்திய கடற்கரைச்சோலை யென்னப் படுவதுமான, மணல்மேடுகள் விளங்கும் அடைகரையிடத்தே, தாழப் படர்ந்திருக்கும் அடும்பின் கொடிகளை மோதிய கடற்சங்குகள் ஒலிசெய்யும். அவ்வொலியைக் கேட்டு அங்கு வந்தடையும் மீனவர், விளங்கும் தன்மையுடைய முத்துக்களோடு, நீண்ட பவழங்களையும் எடுத்துச் செல்வர். இத்தகைய குளிர்ச்சியான கடற்கரைப் பக்கங்களையுடைய மென்மைப் பகுதி நிலங்களும்—

பாலை நிலவளம் :

காந்தளின் அழகிய மலரால் தொடுத்த கண்ணியைச் சூடியவரும், கொலை செய்தற்குரிய வில்லைக் கையேந்திய வருமான வேட்டுவர்கள், செவ்விய கொம்புகளையுடைய காட்டுப் பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள மதத்தையுடைய யானைகளின் வெண்கொம்புகளையும், பொன்வள முடைய கடைத் தெருவுக்குக் கொண்டுசென்று, ஆண்டுத் தாம் பெறுகின்ற கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும், குன்றங் களிடையே அமைந்துள்ள பாலை நிலத்தவான ஊர்களும்—

மருத நிலவளம் :

உரியதான காலமல்லாத காலத்தேயும் கரும்பினை அறுத்தறுத்துச் சேர்ப்பாரின் ஆரவாரமும், நெற்கதிர் முற்றியதனை அறுத்துக் குவித்த போரினைத் தள்ளி அடிப்பாரது ஆரவாரமும், பலவகைப் பூக்களைக் கொண்டு விழா நிகழ்த்துவாரது ஆரவாரமும், தேன் பாயும் மருதமரத்தை அடியோடு சாயுமாறு வெட்டிச் சாய்ப்பாரது ஆரவாரமும், நுரைகளால் வெண்மையான மேற்பரப்பைக் கொண்ட செம்புனல் பரந்து இடங்கள் தோறும் வெள்ளமாகப் பரவுங் காலத்து எழும் ஆரவாரமும், பல வைக்கோற் புரிகளாலே சூழ்ந்த மணற்கோட்டைகளை வெள்ளம் கரைத்துப் போக அவ்வெள்ளத்தை ஆரவாரத்தோடு தடுக்கும் முயற்சியின்போது எழுகின்ற விருப்பங்கொண்ட கூட்டத்தின் ஆரவாரத்தோடு, முழவொலியின் முழக்கமும் சேர்ந்து எழுகின்ற மூதூர்க்கண் எடுக்கப்பெறும் விழவினைக் காண்பதன் பொருட்டாகச் செல்லும் மக்களின் ஆரவாரமும் பொருந்திய செழுமையான ஊர்கள் பலவற்றைக் கொண்ட மருதநிலப் பகுதியும்—

குறிஞ்சி நிலவளம்:

தினைக்கொல்லையை உழுகின்ற உழவர்கள், தம் குடிசை மேல் போடப்பெற்றிருக்கும் வரகின் வைக்கோல் மேலாக இட்ட மணமிக்க காட்டு மல்லிகைக் கொடிகளைப் பொருந்தியதும், வன்னிலத்தைச் சேர்ந்த குடியிருப்பை உடையதுமான குடியிருப்பை உடையவர்கள். அவர்கள், மெல்லிய தினையின் மாவினைத் தமக்குள் முறைமுறையே பகுத்துக் கொள்வர். இத்தகைய மலை சூழ்ந்த புன்புலத்தைக் கொண்டவான மலைநாட்டு ஊர்களும்—

முல்லை நிலவளம்:

பலவகைப் பூக்களும் உதிர்ந்து வாடிக்கிடக்கின்ற காடானது, தான் பயன் தருதலினின்றும் மாறிப்போனதாக, செவ்வரக்கைப் போல விளங்கும் நுண்மணலைத் தன்பாற் குன்றுகளைப் போல மேடிடும்படியாகக் கொண்டதாக ஒள்ளிய நுதலையுடையவரான இளமகளிர் கழற்சிக்காயோடு திரிந்து கொண்டிருக்கும், வானளாவும் உயர்ந்து வளர்ந்த மரங்களையுடைய காடுகள் பொருந்திய முல்லை நிலத்து ஊர்களும், பிற நிலத்து ஊர்களும்—

முரசுகள் பொருந்தியவரான முடியுடை வேந்தர்களும், பதினெண் குடியினரான வேளிர்குலத் தலைவர்களும், நின் ஆணையாகிய அவ்வொன்றனையே தாமும் சொல்லியவராக, நினக்கு அடங்கியோராக விளங்குவர். கடலிடத்தும், காட்டிடத்தும் அரணங்களைப் பெற்றுள்ளோர் என்னும் வலிமையாளர்களும், நின் பேரைக் கேட்ட மாத்திரத்தானே நடுங்குவர். வலிமைமிக்க நினது வெற்றி முரசத்தினது கடுமையான முழக்கமானது வானத்தளவுக்கும் அடைந்த தாய் எப்புறமும் எதிரொலி செய்யும். கடுமையான சினம் தோன்றுமாறு முழங்கும், மந்திரத்து அரிய திறலையுடைய மரபினைக்கொண்ட கடவுளாகிய கொற்றவையை வழிபடும் பொருட்டு, அவ் வழிபாட்டை நிகழ்த்தும் உயர்ந்தோன் தன் கையிலேந்திய அரிதாகப் பெறுதலையுடைய திரளையினைக் கண்டதும், அக்கொற்றவையின் ஏவற்பணி புரிவாளான கருங்கண்களையுடைய பேய்மகளானவள் கைபுடைத்தவளாக நடுநடுங்கியபடி நின்றனள். அங்ஙனமாக இரத்தங்கலந்த பிண்டங்களைத் தூவி வழிபாடாற்றிய, நிறைந்த கள்ளினாலே உண்டாகிய மகிழ்வைக் கொண்ட பெரிய பலியூட்டினை நீ செய்தனை. எறும்பும் மொய்க்காத வியக்கத்தக்க சிறப்பினையுடைய அப்பலிச்சோற்றைக் கரிய கண்களையுடைய அண்டங் காக்கைகளுடனே பருந்துகளும் மிகுதியாக இருந்து உண்டு செல்லும்—

பகை மறவர்க்கு அஞ்சிப் புறமிட்டு ஓடாத மறச் செவ்வியையும், வீரச் செயல்கள் பொறிக்கப் பெற்ற கழல் விளங்கும் கால்களையும் உடையவரும், பெரும் போர்களை வென்று பகைவரை யழித்த சிறப்பினரும், மேலும் போர்க்குச் செல்லுதலையே விருப்பமாகக் கொண்டிருப்போருமாகியவர் நின் படைமறவர்கள். அவர்கள், இடியிடித்து நிலப் பகுதியை அதிரச் செய்வதுபோன்ற கடுங்குரலோடு. யாழிசையோடு கலந்து ஆரவாரக் குரலை எழுப்புவர். அங்ஙனம் அவர் ஆரவாரிக்கப் பெருஞ் சோறாகிய பலியூட்டை அளித்ததற்கு முரசினை முழக்குவோனாகிய, கடுஞ்சினத்தை யுடைய வேந்தனே! நின் ஒலித்தலையுடைய வெற்றி முரசானது என்றும் இவ்வாறே முழங்குவதாக!

சொற்பொருள் விளக்கம்: இணர் - பூங்கொத்து. தகை தல் - நெருக்கமாக விளங்கல். மணி - நீலமணி. மா - கரிய. பாசடை - பசுமையான இலை. பனிக்கழி - குளிர்ந்த கழியிடம். துழைஇ - துழாவி. அங்குப் பற்றிய மீன்களை யுண்டு. வாலிணர் - வெண்ணிறப் பூங்கொத்துக்கள். படுசினை - பொருந்திய கிளைகள். குருகு -நீர்ப்பறவை வகை: வெண்குருகு என்று முன்பாட்டிலும் கூறப்பெற்றது. இறைகொள்ளல் - தங்கியிருத்தல். அல்குறுதல் - தங்குதல். கானல் கானற்சோலை. ஓங்குமணல் - உயர்ந்த மணல் மேடு. அடைகரை - நீரினை அடையும் கரைப்பகுதி; ஆற்றுத் துறை போல்வது. அடும்பு - அடும்பங்கொடி. தாழ் அடும்பு என்றது, அது கழி நீருள் தாழ்ந்து தொங்குவதை. வளை - சங்கு. ஞரலல் -ஒலித்தல். துகிர் - பவளம். முத் தெடுக்கச் சங்கினை எடுப்பார்க்கு அதனுடன் பவளக்கொடியும் சேர்ந்துவரும் வளத்தைக் குறிப்பார், 'முத்தமொடுவார் துகிர் எடுக்கும்' என்றனர். இதனாற் கடல்படு பொருளின் பெருக்கம் உரைக்கப் பெற்றது. ’அலையால் மோதுண்டு தாழடும்பிற் சிக்கிய சங்கின் குரலைக் கேட்டு வந்தோர், முத்தும் பவளமும் பெற்றனர்’ என்றது, அடை கரைக் கானலிற் புன்னையம் பெருநிழலில் வெண்குருகோப்பி விளையாடிய இளமகளிர், தாம் எதிர்பாராதேயே முத்தும் பவளமும் அடைகின்ற பெருவளத்தைக் கொண்டன நெய்த னிலத்து ஊர்கள் என்பதாம்.

காந்தள் - காந்தளுள் ஒன்றாகிய செங்காந்தட் பூ; இவற்றை மகளிர் சூடார்; எனினும் கொலைவில் வேட்டுவர், தம் கொடுமை தோன்ற இவற்றைச் சூடுவர் என்றனர். கொலைவில் - கொலைக் கருவியாகிய வில்; பல உயிர்க் கொலைகட்குக் காரணமாகிய வில். வேட்டுவர் - வேட்டமாடி வாழ்வோரான மலைநாட்டவர். செங்கோடு - சிவந்த கொம்பு. ஆமான் - காட்டுப் பசு. பொன்னுடை நியமம் - செல்வ வளமுடைய கடைத்தெரு; இது வஞ்சிமூதூர்க் கடைத்தெரு ஆகலாம். பிழி - கள். நொடை - விலையாகத் தரும் பொருள். புன்புலம் - பாலைநிலம். 'குன்றுதலை மணந்த’ என்றது, இது குன்றந் திரிந்த பாலை என்பதற்கு.

காலம்- உரிய பருவ காலம். ஒழியாது - தீராது; அவ்வளவு மிகுதி என்றபடி. அரிகால் - நெல்லரியப் பெற்ற நிலப்பகுதி; அவித்தல் - போரழித்தல்; அரிகாற் பகுதியை உழக்கி உழுது சேறுபடுத்தியும் ஆம். பல பூ விழவு -பல பூக்களால் கொண்டாடப் பெறும் விழாக்கள்; விழாவுக்குப் பல பூக்கள் பயன்படுத்தப் பெற்றமை அறியப்படும். தேம் - தேன். 'தேம்பாய் மருதம்' என்றது, மருதம் புதுப்பூக்களுடன் விளங்கியதனைக் குறித்தற்கு. வண்டினம் மொய்க்கும் மருதமும் ஆம்; தேன் - வண்டு. பாய்தல் - மிக்குச் சொரிதல்; முதல்படக் கொன்று - அடியோடு வீழ வெட்டி. ’வெண் தலைச் செம்புனல்' வெண்மையான நுரைகளைப் போர்த்து வருகின்ற சிவந்த புதுப்புனல். வாய் - இடம்; வாய் மிகுத்தல் - இடமெங்கணும் மிக்குப் பெருகுதல். பதப்பர் - மணல் மேடாகிய கரை: பலசூழ் - பல வைக்கோலும் தழையுமாகச் சூழ்ந்திருக்க அமைக்கப் பெற்ற; இவை மணல் அரியுண்டு போகாமலிருக்க அமைப்பது; எனினும் புது வெள்ளம் இதனையும் அரித்துக் கரைக்கு மென்பார், 'பரிய' என்றனர். சிறை கொள்பூசல் - வெள்ளத்தை கரையுடைத்துப் போகாதபடி தடுப்பதன்கண் எழுகின்ற மக்களின் ஆரவாரம் புகன்ற - விரும்பிய. ஆயம் - கூட்டம் காணூஉப் பெயரும் - காணும் பொருட்டாகச் செல்லும். வைப்பு - ஊர்கள்; பழனப்பால் - மருதநிலப்பகுதி.

ஏனல் - தினைக்கொல்லை. வரகு மீது இட்ட - வரகின் வைக்கோலைக் கூரை மேலாகப் பரப்பிய. கான் குளவி - காட்டு மல்லிகை ; கான் - மணமும் ஆம்; அப்போது கான்மிகு குளவிய என்பது மணமிக்க காட்டு மல்லிகைக் கொடிகளையுடைய எனப் பொருள்படும். வன்புசேர் - வன்புலஞ் சேர்ந்த. இருக்கை - இருப்பிடம்; குறிச்சி. நுவணை - மாவு. முறைமுறை பகுக்கும் - இன்னாருக்கு இவ்வளவு என்றவாறு முறைப்படி பகுத்தல்; தினைப் பயிரைக் கூடியே செய்த குன்றவர், விளைந்து கொண்ட தினையை மாவாக்கித் தமக்குள் பகுத்துண்ணும் கூட்டு வாழ்க்கை முறையைக் கூறியது இது. புன்புலம் - புல்லிய நிலங்கள் பொருந்திய பகுதி. புறவு-காடு. வைப்பு - ஊர்கள்.

செம்மல் - காய்ந்து சிவந்த சருகுகள். பயம்-பயன். மாறி - மாறுபட்டு; இல்லையாகப் போய்; இது கோடையின் வெம்மையால். அரக்கம் - செவ்வரக்கு. கோடு கொள்ளல். குன்றமாக அமைதல்; இது காற்றால் ஏற்படுவது. 'கழலொடு' - கழற்சிக்காயொடு; இது பிரிந்த காதலரின் வரவைக் கழலாற் காணும் பொருட்டுக் கொள்ளல். 'மகளிர் கழலொடு மறுகும்' என்றதற்கு, 'மகளிர் கழலணிந்த இளைஞரான தம் காதலரோடுங் கூடியவராக உடன் போக்கிற் செல்லும்' என்றலும் பொருந்தும். கடறு - காடு. 'பிறவும்' என்றது இவையல்லாத பிறவான ஊர் மக்களை.

இது, குட்டுவன் தன் வெற்றியின் நினைவாகக் கொற்றவைக்குப் பெரும் பலியூட்டிய சிறப்பைக் கூறுவது. பணை- முரசம். வேந்தர் - முடியுடைய மூவேந்தர். வேளிர் - வேளிர் குலத்தவராகிய குறுநில மன்னர். 'இவர் ஒன்று மொழிய, கடலவும் காட்டவும் அரண்வலியார் நடுங்க' என்று கொள்க. முரண் - மாறுபாடு ; வலிமை. அதிர-எங்கணும் எதிரொலிக்க. 'அருந்திறல் மரபின் கடவுள்' என்றது, போர்க்குரிய கொற்றவையை; இவள் அயிரை மலைக்கண் கோயில் கொண்டிருப்பவள் ஆகலாம். உயர்ந்தோன்- பூசாரி. பிண்டம் – சோற்றுருண்டை. நெய்த்தோர் - இரத்தம். தூஉய-தூவிக்கலந்த. மகிழ் - கள். இரும்பலி –பெரும்பலி. மூசல் - மொய்த்தல், இறும்பூது- வியக்கத்தக்க பெருமிதம். ஆர - உண்ண. தெய்வத்திற்கிடும் பிண்டத்தைக் காக்கையும் பருந்தும் உண்ண, அவற்றை அத்தெய்வம் ஏற்றதாகக் கொள்ளல் மரபு; இம்மரபு இன்றும் தமிழ் மக்களிடையே நிலவக் காணலாம்.

ஓடா - புறமிட்டு ஓடாத. பூட்கை - மறக் கோட்பாடு. ஒண்பொறி - ஒள்ளிய செயல்கள் பொறிக்கப் பெற்ற; இனி ஒள்ளிய அரும்பு வேலைப்பாடுகளும் ஆம். ததைந்த - அமித்த. புகல்தல் - விரும்பல். உருமு - இடி. கொள்ளை - யாழிசை. பெருஞ்சோறு - பெரிய பலியூட்டு. உகுத்தற்கு - அழித்தற்கு. தழங்குதல் - ஒலித்தல்; 'நின் தழங்கு குரல் முரசம் என்றும் இவ்வாறே முழங்குக' என்று வாழ்த்துகின்றனர். இதனைப் போர்மேற் செல்லும் மன்னன் கொற்றவையைப் பேணியவனாகத் தன் வீரர்க்கு அளிக்கும் பெருஞ்சோற்று நிலை என்றும் கொள்வர்.

பெருஞ்சோற்று நிலையைப் பற்றிய தெளிவான கருத்து இப்பாட்டாலே அறியப்படுகின்றது. பண்டைத் தமிழ் அரசர்கள் தம்மளவிலேயும் பெருமறவராக விளங்கினார்கள். பேரறிஞர்களாகவும் பெருங் கொடையாளர்களாகவும் பெரும் மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் விளங்கினர்.

இத்தகைய எல்லாம் சிறப்புற அமைந்து விளங்கிய செவ்வியினாலேதான் அவர்களின் புகழ் காலவெள்ளத்தையும் கடந்து நிலைத்து நிற்கின்றது. பண்டைப் புலவர்கள் போற்றுதற்குரிய செவ்வியும் இந்தச் சிறப்புத்தான், வெம்மையும் தண்மையும் ஒன்று கூடிய நிலை. போர்க்களத்திலே கொடிய வெம்மை; மக்களிடத்திலே அளவற்ற தண்மை; இந்த இணைவுதான் பெருமை தந்தது, புகழைத் தந்தது. புலவர்களைப் பாடவும் வைத்தது!

மேல்நிலை ஆட்சிப் பொறுப்பிலே அமர்வோர் என்றும் போற்றிக் கொளற்குரிய ஆட்சிச் சால்பும் இதுவே யாகும். இதனைப் பிற சங்கப் பாடல்களும் உரைக்கும்.