பர்மாவில் பெரியார்/சின்னச் சின்னச் செய்திகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சின்னச் சின்னச் செய்திகள்
பெரியார் தம்முடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களுக்கு ரூபாய் ஐந்து கட்டணம் வைத்தார். பலர் ஐந்து ரூபாய் கொடுத்து பெரியாருடன் படம் எடுத்துக் கொண்டார்கள். பர்மா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஒருவர் ஏழைத் தொழிலாளி.

"நாங்கள் கூடப் பணம் கொடுத்துத்தான் படம் எடுத்துக் கொள்ளவேண்டுமா?" என்று கேட்டார்.

"நீங்கள் என் பிள்ளைகள். உங்களுக்குக் கட்டாயமில்லை. பதிமுகவைச் சேர்ந்தவர்கள் இலவசமாகவே படம் எடுத்துக்கொள்ளலாம்" என்று பெரியார் விதிவிலக்கு அறிவித்துவிட்டார்.

***

ஒரு நாள் ஒரு பெரியவர் பெரியாரைப் பார்க்க வந்திருத்தார். ஐயா நான் காங்கிரஸ்காரன். உங்களோடு படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.அனுமதிப்பீர்களா?" என்று கேட்டார்.

"காங்கிரஸ் பெரிய கட்சி. ஆகையால் நீங்கள் பத்து ரூபாய் கொடுக்கவேண்டும்" என்றார் பெரியார். அந்தப் பெரியவர் பத்துரூபாய் கொடுத்துப் படம் எடுத்துக்கொண்டார்.

***

நெற்றி நிறைய நீறும் உருத்திராட்சமும் சட்டைபோடாமல் மேல் துண்டும் அணிந்திருந்த ஒரு பெரியவர் பெரியாரைப் பார்க்கவந்தார்.

வணக்கம் சொல்லி வரவேற்று இருக்கச் சொல்லி உபசரித்தார் பெரியார்.

அந்தப் பெரியவர் கேட்டார். நீங்கள் நாத்திகர், முஸ்லீம்கள் ஆத்திகர்கள். அவர்களை மட்டும் ஆதரிப்பதன் நோக்கம் என்ன?

பெரியார் பதில் சொன்னார்.

"அவர்கள் யோக்கியமான ஒரே ஒரு கடவுளை வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கடவுள் வைப்பாட்டி வைத்துக்கொள்வதில்லை".

வந்தவர் முகத்தில் ஈயாடவில்லை. எழுந்துபோய் விட்டார்.

***

பாங்கில் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் பர்மா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர். ஒருநாள் இரவு பெரியாருக்கு விருந்து ஏற்பாடு செய்தார். விருந்துக்கு ஐம்பது பேருக்கு அழைப்பு கொடுத்திருந்தார். இலையில் உட்கார்ந்த பெரியார் திரும்பிப்பார்த்தார். அந்த நண்பரை அழைத்தார். "எனக்குத்தானே விருந்து வைப்பதாகச் சொன்னாய் தாங்கள் மூன்றுபேர். செயலாளர், பொருளாளர் இரண்டு பேர் ஆக ஐந்து பேருக்குச் சொன்னால்போதுமே,எதற்காக இத்தனை பேர்? இப்படிச் செலவாகிற பணத்தையெல்லாம் கொடுத்தால் எனக்கு நிதி சேருமே?" என்றார்.

"மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா, உங்களுக்கு நிதியும் தருகிறேன்." என்று கூறி நூறு ரூபாய் கொடுத்தார்.

***


அகில பர்மா தமிழர் சங்கத்தின் தலைவர் முத்துராமலிங்கத் தேவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உறவினர். பெரிய மீன் வியாபாரி, மொத்த வியாபாரம், ஏராளமான படகுகளுக்குச் சொந்தக்காரர். பெரியாரைப் பார்க்க வந்திருந்தார். காரில் பத்துக்கிலோ எடையுள்ள ஒரு பெரிய மீன் கொண்டு வந்தார்.

"ஐயா என் அன்பளிப்பு" என்று மீனைத் தூக்கிப் பிடித்தார்.

"நாங்கள் ஒட்டலில் சாப்பாடு எடுத்துச் சாப்பிடுகிறோம். இங்கு சமைக்க ஆளில்லை. இதைச் சமைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்" என்றார் பெரியார்.

அன்று மாலை தேவர் வீட்டிலிருந்து சாப்பாடு வந்தது பெரியாருக்கு மீன் குழம்புடன்.

சாப்பிட்டு முடித்தவுடன் கூலி எங்கே? என்றார் பெரியார்.

எதற்கு?

விருந்து சாப்பிட்டதற்கு. தேவர் நூறுரூபாய் கொடுத்தார். பெரியார் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார்.

***

கார் வைத்திருந்த நண்பர் ஒருவர் பெரியாருக்கு நகர் சுற்றி பார்ப்பதற்கென்று ஒருநாள் தம் காரைக் கொடுத்திருந்தார்.

துறைமுகப் பகுதியில் சென்று கொண்டிருந்தோம் போலீஸ்காரர்கள் யாரும் காணப்படவில்லை என்ற எண்ணத்தில் காரோட்டி நோ என்ட்ரி போட்டிருந்த பகுதியில் நுழைந்தார். உடனே ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த போலீஸ்காரன் காரை நிறுத்தினான்.

அவன் காரோட்டியைக் கண்டித்துக் கொண்டிருந்த போது, சற்றுத் தொலைவிலிருந்த ஓர் அதிகாரி ஒடிவந்தார்.

அந்தப் போலீஸ்காரனைக் கோபித்துக்கொண்டார். உள்ளேயிருப்பவரை நீ பார்க்கவில்லையா? அவர் இந்தியப்பொங்கி, பேசாமல் இரு என்று சொல்லிக் காரை போக அனுமதித்தார்.

காரோட்டி, சரியான பாதையில் செல்வதற்காக காரைப் பின்னுக்குச் செலுத்தினார்.

அப்படிப்போனால் சுற்றுவழி. நீ இப்படியே போ என்று நோ என்ட்ரி வழியாகவே போக வற்புறுத்தினார் அந்த போலீஸ் மேலதிகாரி.

***

இரங்கூன் தியேட்டர் ஒன்றில் முப்பரிமாணப் படம் (Three Dimension) ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. உருவங்களை நேரில் பார்ப்பது போல் அமைந்துள்ளது பற்றி பெரியாரிடம் கூறினோம்.

அதைப் பார்க்கவேண்டும் என்றார் பெரியார், மறு நாள் பதிவு செய்து அழைத்துச் சென்றோம்.

விஞ்ஞான முன்னேற்றம் கண்டு அதிசயப்பட்டார்.

சினிமாப் பார்க்கக் கூடாதென்று சொன்ன நீங்கள் நேற்று சினிமாப் பார்க்கப் போனீர்களே? சரி தானா? என்று ஒருவர் கேட்டார்.

பெரியார் அமைதியாகப் பதில் சொன்னார். காதல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, புராணம், மூடபக்தி என்று சினிமாப் படம் பிடிப்பதால் பார்க்கக்கூடாது என்கிறேன்.

விஞ்ஞான முன்னேற்றத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கல்விக்கு சினிமா பயன்படுத்தப்படவேண்டும். அப்போது எல்லாரும் சினிமாப் பார்க்கலாம்.

அந்த நண்பர் உண்மையான ஞானம் பெற்றவரானார்.

***

"இருக்கின்ற மதங்களிலே புத்தமதம் சிறந்ததாகத் தெரிகின்றது. நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டார் பெரியார்.

" புத்தர் தோற்றுவித்த புத்த சங்கம் மிகச் சிறந்ததுதான். ஆனால் இன்றுள்ள புத்தமதம் தெய்வநம்பிக்கையில்லாத புத்தரையே தெய்வமாக்கிவிட்டது. புத்தர் எதுஎது கூடாதென்று சொன்னாரோ அதையெல்லாம் செய்யும் மதமாக இருக்கிறது. மறுபிறப்பில் நம்பிக்கையில்லாத புத்தர் பல பிறப்புப் பிறந்ததாக சாதகக் கதைகள் கூறுகின்றன.

"இன்றுள்ள புத்த பிட்சுக்கள் ஜோதிடம் பார்க்கிறார்கள், மக்களுக்கு மந்திரவாதிகளாக பில்லி சூனியம் ஆக்குபவர்களாகவும் நீக்குபவர்களாகவும் செயல்படுகிறார்கள். தங்கள் காலடியில் மக்கள் தெய்வமாக விழுந்து வணங்குவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.

"மக்களோ, புத்த பிட்சுக்கள் தெய்வ அருள் பெற்றவர்கள் என்றும், அவர்களுக்குச் செய்யும் தொண்டு மோட்சத்தில் சேர்க்கும் என்றும் நம்புகிறார்கள். இங்குள்ள பெண்கள் தங்கள் கூந்தலை விரித்துப்போட்டு அதன் மீது பிட்சுக்கள் பாதம் பட நடந்து போவதால் சுவர்க்கத்தில் இடங்கிடைக்கும் என்று நம்புகிறார்கள். பேய் பிடித்தல், பேய் விரட்டல் முதலியவை தொடர்ந்து நடைபெறுகின்றன. சிறு தெய்வவணக்கம் சிறிதும் குறைய வில்லை. சிறு தேவதைகளுக்கு நடக்கும் பூசைகளும் குறையவில்லை.

"புத்தமதம் இன்று மற்றொரு இந்து மதமாகவே காட்சியளிக்கிறது" நான் சொல்லி முடித்ததும், புத்த மதம் இவ்வளவு மோசமாக இருக்கிறதா? என்று வியப்படைந்தார்.

***

சிங்கப்பூரிலிருந்து கப்பலில் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த பெரியாரை "ஸ்டேட்ஸ்மன்" செய்தியாளர் பேட்டிகண்டு புத்தமதத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார். "எல்லா மதங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்" என்று ஒரே வரியில் பதிலளித்தார் பெரியார்.

***

டாக்டர் அம்பேத்கார் புத்த மதத்துக்கு மாறியபோது புத்த பிட்சுக்கள் பல சடங்குகள் செய்து சாத்திரமுறைப்படி அவருக்கு தீட்சை செய்து புத்தராக மாற்றினார்கள், அம்பேத்காருடன் சேர்ந்தவர்களும் இவ்வாறே சாத்திர முறைப்படி மதமாற்றம் பெற்றார்கள்.

கருத்து மாற்றத்துக்கு சடங்கு சாத்திரம் எல்லாம் தேவையில்லை என்பது பெரியார் கொள்கை. எனவே டாக்டர் அம்பேத்கார் பல முறை வற்புறுத்தியும் புத்தமதத்திற்கு மாறவில்லை.

புத்தர் பழுத்த நாத்திகராக விளங்கினார். இன்று பெரியார் எவ்வளவு தீவிரமாகப் பேசுகிறாரோ, அதே தீவிரத்தோடு இந்து மதத்தை எதிர்த்துப் போராடியிருந்தார் புத்தர்.

புத்தமதத்தில் ஊடுருவியவர்கள் செய்த சூழ்ச்சியால் புத்தர் இன்று புத்த பகவான் ஆகிவிட்டார். அவருடைய பல், தலைமுடி மற்ற உறுப்புக்கள் இருக்கும் இடமெல்லாம் புத்தர் கோயில்களாகி விட்டன.

இந்த நிலை பிற்காலத்தில் பெரியாருக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கால காலத்துக்கும் அவர் நாத்திகராகவே விளங்கவேண்டும். அப்போதுதான் எதிர்கால இளைஞர்கள் பகுத்தறிவுச் சுடர்களாக ஒளிவீசமுடியும்.
தமிழர் தலைவர்

அருள் பொலியும் திருமுகத்தான்
அன்பு நிறை நெஞ்சத்தான்
இருள் விலகப் பணிபுரியும்
இனியத்தவம் இயற்றுகின்றான்!

தமிழரெலாம் தலைநிமிர்ந்து
தன்மஈனம் மிக்கவராய்
வாழ்வதற்குக் காரணாைய்
வந்துதித்த பெருந்தலைவன்!

கண்மூடிப் பழக்கமெல்லாம்
மண்மூடிப் போவதற்கே
எண்ணியெண்ணிச் செயலாற்றும்
இதயமுள்ள மாமனிதன்!

தீதுக்குக் காரணமாம்
தெய்வ மத சாத்திரத்தை
வாதிட்டே யொழி சிக்கவநதி
வண்டமிழர் தலைவனிவன்!

ஈரோட்டுத் தாத்தா

வாடும்நாள், வாழும் வகையினை அறிஞர்
தேடும்நாள் அறிஞரைத்தோற்றுதற்கென்று.

தமிழறம் பேணும் தகைமையாளர் !
அமைதியாய்ச் சிந்தித்தறியும் மாண்பினர்!

வள்ளுவர் நெறியை வாழ்க்கையிற் காட்டும்
தெள்ளிய உள்ளச் செவ்வியுடையார்!

உளம்சொல் உடலால் உவப்புறும் பணியை
இளமைப் பொழுதிலும் வளர்தமிழ் நாட்டுக்கு

அளித்த வள்ளல்!அஞ்சாச் சிங்கம் !
உழைப்பின் பயனை விழையாச் செல்வன்!

சிந்தனைச் சிற்பி! திராவிடத்தந்தை!
வந்தனைக்குரிய வடிவிற் பிறந்தார்!

ஈரோட்டுத்தாத்தா!தமிழர் பாராட்டும் பெரியார் இராமசாமியே !

கிழச் சிங்கம்

வெண்மை யான தாடியுளார்-கொள்கை

விளக்கிப் பேசும் சொற்பொழிவில்

உண்மை யிருக்கும்; பயனிருக்கும்-தமிழர்

உயர்வுக் கான கருத்திருக்கும்!


சூதும் வாதும் செய்பவரைக்-கண்டால்

தூவென் றுமிழ்ந்து தள்ளிடுவார்

சாதி வெறியும் மதவெறியும்-போனால்
தானே நன்மை வருமென்பார்

பழைய புராணம் படித்ததனை-நாட்டில்
பரப்பு வோர்க்குப் பகையாவார்

உழைப்பு முயற்சி பகுத்தறிவு-மிகவும்
உடையோர்க் கன்புத் தாயாவார்!

இறைத்துப் பாய்ச்சும் தண்ணீர் போல்-அவர்

எழுச்சிக் கருத்தும் பயன்தருமே!

நரைத்துத் திரைத்து மூத்திடினும்-தமிழ்
நாட்டுக் குழைக்கும் பெரியாரே!


நேரிய ஒழுக்கம்; பண்புடைமை-நாட்டில்

நிலைபெற் றோங்க வேண்டுமெனும்

சீரிய கருத்தை உடையவராம்-கிழச்
சிங்கம் பெரியார் வாழியவே!