பர்மாவில் பெரியார்/மோல்மேன் பயணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மோல்மேன் பயணம்


இரங்கூன் பர்மாவின் தலைநகரம். பர்மாவின் நடுமையத்தில் உள்ள மாந்தலே அந்தக் காலத்துத் தலைநகரம்; பர்மாவில் பழங்காலத்தில் பல அரசுகள் இருந்தாலும், மாந்தலேயைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசுதான் பேரரசாக விளங்கியது.

பர்மாவில் குறிப்பிடத்தக்க மூன்றாவது பெரிய நகரம் மோல்மேன்.

மோல்மேன் நகருக்குள்ள சிறப்பு அது ஓர் ஆற்றுத் துறைமுகமாகும். ஐராவதி நதிக்கரையில் உள்ளது மாந்தலே நகரம். ஐராவதி ஆற்றின் கிளையாறாகிய இரங்கூன் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது இரங்கூன் நகரம். அதுபோல சால்வீன் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது மோல்மேன் நகரம்.

இரங்கூன் ஆறு ஆழமானது. ஆகையால் கப்பல்கள் இரங்கூன் ஆற்று வழியாக நகருக்குள் வந்துவிடும்.

சால்வீன் ஆற்றின் ஆழம் குறைவாக இருப்பதால், கப்பல்கள் வருவதில்லை. வரும் கப்பல்கள் கடலிலேயே நங்கூரம் பாய்ச்சி நின்றுவிடும். கப்பலிலிருந்து சரக்குகள் மோட்டார்ப் படகுகள் மூலமே கொண்டு வரப்படும். ஏற்றுமதியும் அவ்வாறே. இத்தகு சிறப்பு வாய்ந்த மோல்மேன் நகரில் என் தந்தையார் தொழில் நடத்திவந்ததால், நான் அங்கு சில நாட்கள் தங்கியிருந்ததுண்டு. அடிக்கடி போய் வந்ததும் உண்டு.

அங்கு எனக்குப் பழக்கமான நண்பர் ஒருவர் ஒருநாள் என்னைத் தேடி வந்தார்.

பர்மாவுக்குப் பெரியார் வந்திருப்பதறிந்த மோல்மேன் நகர இந்திய மக்கள், பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்க விரும்புவதாகவும். அவரை அழைத்துப் போகவே தான் வந்திருப்பதாகவும் கூறினார்.

எனக்குப் பழக்கமானவர் என்பதாலும் நகரத்தார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரை நான் நம்பினேன்.

மேலும், மோல்மேன் வாழ் இந்தியப் பெருமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரவேற்புக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறிய போது எனக்குப் பெருமையாக இருந்தது.

இரங்கூனில் இருந்த அத்தனை இந்திய இனத்தவர்களும் என் வீட்டைத் தேடி வந்து பெரியாரைப் பெருமைப் படுத்தியதைக் கண்ணாரக் கண்டவன் நான்.

மோல்மேனில் உள்ள அனைத்து இந்திய இனத்தவர்களும். என் அன்புப் பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்கப்போகும் அந்த மகத்தான காட்சியை எண்ணிப் பார்த்து நான் பெரு மகிழ்ச்சி கொண்டேன்.

அந்த நண்பரை அழைத்துக் கொண்டு பெரியாரிடம் சென்றேன். மோல்மேன் நகருக்கு அவர் அழைக்க வந்திருக்கும் செய்தியைக் கூறிப் பெரியாரின் ஒப்புதலைக் கேட்டேன்.

"நீயும் கூட வருகிறாயா?" என்று பெரியார் கேட்டார்.

என் இயலாமையை அவரிடம் விளக்கிக் கூறினேன். தொழிலில் உள்ள கடமையை எடுத்துச் சொன்னேன்.

"அப்படியானால் மோல்மேனுக்குப் போக வேண்டாம்!" என்று பெரியார் மறுத்துவிட்டார்.

வந்தவர், அன்றே புறப்படுவதாக இருந்தால், தானே உடன் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

பெரியார் அதற்கும் மறுத்துவிட்டார்.

மோல்மேனில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பிருக்கும்போது அதைக் கைவிடுவது எனக்குப் பிடிக்கவில்லை.

நான் பெரியாரை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளச் செய்தேன்.

இரங்கூன் நிகழ்ச்சிகள் இரண்டொன்றை முடித்துக் கொண்டு மூன்றாவது நாள் மோல்மேனுக்குப் புறப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

உடனிருந்து அழைத்துச் செல்வதாகக் கூறிய அந்த நண்பர் அன்று மாலையே மூன்றாவது நாள் புறப்படும் விமானத்துக்கு மூன்று சீட்டுகள் பதிவு செய்து சீட்டுகளை என்னிடம் கொடுத்து விட்டு அவர் அன்றைக்கே மோல்மேனுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.

பயனச்சீட்டுகளை நான் பெரியாரிடம் கொடுத்தேன்.

"வந்தவர் இருந்து கூட்டிச் செல்லவில்லை. நீயும் வரவில்லை. மொழி தெரியாத ஊரில் நாங்கள் தனியாகப் போவது சரியில்லை. இந்தச் சீட்டுகளைக் கொடுத்து பணத்தைத் திரும்ப வாங்கிவிடு" என்று மீண்டும் மறுத்துரைத்தார் பெரியார்.

"இங்கே விமானத்தில் நான் கூட வந்து ஏற்றி விடுகிறேன். வந்தவர் மோல்மேனில் விமானத் திடலுக்கே வந்து உங்களை அழைத்துச் செல்வார். இடையில் நாற்பது நிமிடம் தான்" என்று கூறிப் பெரியாரை வற்புறுத்தி மோல்மேனுக்கு அனுப்பி வைத்தேன்.

உலக அனுபவங்கள் முழுவதும் அடைந்திருந்த அந்த முதுபெரும் அறிவின் செல்வர், அனுபவம் சிறிதும் இல்லாத என் வற்புறுத்தலுக்கு இணங்கிக் கடைசியாக மோல்மேன் செல்ல ஒப்புக் கொண்டார்.

பெரியார், தோழர் இராசாராம், மணியம்மையார் ஆகிய மூவரும் நாங்கள் வழியனுப்ப விமானத்தில் ஏறி மோல்மேனுக்குச் சென்றார்கள்.

அங்கே நடந்த நிகழ்ச்சி, அனுபவம் இன்மையால் நான் முடிவெடுத்த மடமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

காலையில் ஆறு மணிக்கு நாங்கள் 50 பேர் பெரியாரை வழியனுப்பி வைத்தோம். 6-40க்கு மோல்மேனில் பெரியார் விமானத்தை விட்டு இறங்கிய போது அவரை வரவேற்க யாரும் வரவில்லை.

என் நகரத்தார் நண்பர் தலைகாட்டவே இல்லை.

மோல்மேன் விமானத் திடல் நகரிலிருந்து ஐந்து கல் தொலைவில் ஒரு காட்டின் நடுவில் உள்ளது.

வெறுங் கட்டாந் தரையான ஒரு சிறு திடல்தான் விமானம் இறங்கும் இடம்.

விமானத்தை விட்டு இறங்கியவர்களும் வரவேற்க வந்தவர்களும் தவிர வேறு மனிதர் சந்தடியே இல்லாத இடம். நிலைமையைப் பார்த்த பெரியார், உடனே அந்த விமானத்திலேயே இரங்கூன் திரும்பிவிட முடிவு செய்தார்.

விமானத்தில் இடம் இல்லை என்று தெரிவித்து விட்டார்கள்.

பத்தாவது நிமிடம் அங்கு ஏறிய பயணிகளுடன் விமானம் புறப்பட்டு விட்டது.

இறங்கிய பயணிகளும், வரவேற்க வந்த உறவினர்களுடன் கார்களில் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.

ஒரே ஒரு வாடகை ஜீப் மட்டும் நின்றது. அதன் ஒட்டுநர் பர்மியர்.

அவரே வலிய வந்து "வருகிறீர்களா!" என்று பர்மிய மொழியில் கேட்டார்.

ஆங்கிலம் தெரியாத அவரிடம் இராசாராம் ஏதோ கேட்க அவர் மொழி புரியாமல் தவிக்க, ஒரு குழப்பமா சூழ்நிலை நிலவியது.

அந்த நேரத்தில் மூன்றுபேர் அரக்கப் பரக்க விமானத் திடலை நோக்கி வந்தார்கள்.

"ஐயா வணக்கம்" என்று கை கூப்பிப் பெரியாரை வணங்கினார்கள்.

அவர்கள் கையில் ஒரு துண்டறிக்கை!

அதை இராசாராம் வாங்கிப் படித்தார்.

மோல்மேன் நகர இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பெரியாருக்கு பிரம்மாண்ட வரவேற்புக் கொடுப்பதாகவும், சாதிமத வேற்றுமை மனசாட்டாமல் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய மக்களை அன்புடன் அழைத்தது அந்த அறிக்கை.

"வரவேற்பாளர்கள் எல்லாரும் எங்கே?" என்று பெரியார் கேட்டார்.

"அவர்கள் வர மாட்டார்கள்:" இது அந்த மூன்று தமிழ் இளைஞர்களின் பதில்.

"அந்தச் செட்டியார் எங்கே?"

"இரங்கூனுக்கு வந்து உங்களை அழைக்க வந்தவரா? அவரும் வரமாட்டார்!"

ஏன்?

நேற்று வந்த "ரசிகரஞ்சனி" பத்திரிகையில் நீங்கள் இரங்கூனில் இந்து மதத்தைத் தாக்கிப் பேசியதாகவும், இதனால் மதக் கலவரம் ஏற்படக் கூடிய சூழ்நிலையிருப்பதாகவும், முதல் பக்கம் கொட்டை எழுத்தில் செய்தி போட்டிருக்கிறார்கள்.

அதைப்பார்த்த பலர் உங்களுக்கு வரவேற்புக் கொடுத்தால் பெரும் கலவரம் செய்வதாக அச்சுறுத்தியதால், வரவேற்புக் குழுவினர் பயந்துபோய் விட்டார்கள். அந்தச் செட்டியாரும் பயந்து போய் ஒதுங்கி விட்டார்.

"அந்த ஆள் இங்கே வந்து செய்தியைச் சொல்லி எங்களைத் திருப்பி அனுப்பி இருக்கலாம் அல்லவா?"

அமைதி நிலவியது.

"நீங்கள் யார்?

"நாங்கள் ஆதி திராவிடர்கள். இங்கே கூலி வேலை செய்து பிழைக்கிறோம். பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள். அய்யாவைப் பார்ப்பதற்காக வந்தோம். சிறிது தாமதமாகி விட்டது." "சரி நாங்கள் உடனே இரங்கூனுக்குத் திரும்பிப் போவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்."

"அய்யா நகருக்குள் சென்று தான் எல்லா ஏற்பாடும் செய்யவேண்டும்; விமான அலுவலகத்தில் போய்க் கேட்டு ஏற்பாடு செய்யலாம்".

எங்கள் குடிசைப் பகுதியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம், அதில் நீங்கள் வந்து சிறிது நேரம் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும். நிகழ்ச்சி முடிந்தவுடன் உங்கள் பயனத்திற்கு ஏற்பாடு செய்கிறோம்.

மேட்டுக் குடியினர் எல்லாரும் வெறுப்புக்கொண்டு விலகிவிட்ட நிலையில் அந்த எளியமக்கள் அன்புடன்கேட்டுக் கொண்ட நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க பெரியார் அப்போதே ஒப்புக்கொண்டார்.

இவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பர்மியரின் வாடகை ஜீப்பில் எல்லாரும் ஏறிக்கொண்டனர்.

ஜீப் குடிசைப் பகுதியில் வந்து நின்றது.

அந்தப் பகுதியில் இருந்த ஏழைமக்கள் விலகி விலகி நின்ற படி தங்கள் பகுதிக்கு வந்த பெரியாரை வியப்புடன் நோக்கினர்.

நாடு கடந்துவந்த நிலையிலும் ஊரின் ஒதுக்குப் புறத்தில் தனித்தொகுதியாக வாழ்ந்து வந்த மக்களின் வரவேற்பை அன்புடன் ஏற்றுக்கொண்டார்.

சீனாக்காரன் கடையில் வாங்கி வந்த பன்னும் டீயும் தான் அன்று பெரியாருக்கு அவர்கள் கொடுத்த விருந்து,

தாழ்த்தப்பட்ட மக்கள், சமுதாயத்தில் சமநிலைக்கு முன்னேற வேண்டிய தன்மான உணர்வூட்டும் கருத்துக்களை ஒரு மணிநேரம் பேசி அவர்களுக்குப் புத்துணர்வு உண்டாகச் செய்தார். அந்தத் தோழர்களுக்கு கொள்ளை மகிழ்ச்சி. தந்தை பெரியார், அவர்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து, அவர்களின் விருந்தாளியாக இருந்து அவர்களுக்கு நல்லுரை கூறி வாழ்த்திப் பேசியது பெரும் பேறு என எண்ணினார்கள்.

ஆனால் அவர்களுக்கு ஒரு வருத்தம்.

ஏற்பாடாகியிருந்த பெருமிதமான கூட்டம் நடைபெறாமல் போனதே என்பதுதான்.

மோல்மேனிலே பெரிய அளவிலே திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டம் ஒன்று நடத்தவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

பெரியாருக்கு வரவேற்பளிக்காத அந்த நாளில் அவருடைய இலட்சியத்தை வளர்க்கின்ற இயக்கமாக, பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் மோல்மேன் கிளை வளர்ந்தது. பெரியார் வருகைக்கு முன் பத்துத்தோழர்கள் இரங்கூன் கழகத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள். பெரியார் வந்து சென்றபின் சிறிது சிறிதாக இருநூறு உறுப்பினர்கள் சேர்ந்து மோல்மேன் கிளை உருவாகிவிட்டது.

ஆறு மாதம் கழித்து ஒருவாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு என் மனைவியுடன் சுற்றுலாப் பயணமாகச் சென்றபொழுது மோல்மேன் போயிருந்தேன், என் வருகையை அறிந்துகொண்ட அந்தத் தோழர்கள் உடனே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மோல்மேனில் மையப்பகுதியில் நான்கு சாலைகள் கூடும் இடம் ஒன்றில், திறந்தவெளியில் நடந்த அந்தக் கூட்டத்தில் நான் இரண்டு மணிநேரம் சொற்பொழிவாற்றினேன். பெருந்திரளான கூட்டம். பெரியார் வந்தபொழுது, மோல்மேனில் கூட்டம் ஒன்று நடத்தமுடியாமல் போய்விட்டது. அந்தக்குறையை இன்று தீர்த்துவிட்டோம் என்று அந்த மூன்று தோழர்களும் என்னிடம் உணர்ச்சியுடன் கூறினார்கள்.

அன்று பெரியார் அவர்கள் குடிசைப் பகுதியில் சொற்பொழிவாற்றி முடித்த பின் அந்தத்தோழர்கள். அவரை இரங்கூனுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

"அய்யா, நாளை மறுநாள் மாலைபோகும் விமானத்தில் ஒரே ஒரு இடம் இருக்கிறது. அதன் பிறகு பதினைந்து நாட்களுக்கு எந்த விமானத்திலும் இடம் இல்லை" என்று அந்தத்தோழர்கள் சொன்னபோது பெரியார் திகைத்துப் போனார்.

"வேறு வழியில்லையா?"

"அய்யா, இரயிலில் போகலாம், ஆனால் போய்ச்சேர மூன்றுநாள் ஆகும்".

" அவ்வளவு தொலைவா? பிளேனில் நாற்பது நிமிடத்தில் வந்துவிட்டோமே?"

" தொலைவு இல்லை அய்யா. அது மிகக் கடுமையான பயணம் உங்களுக்கு மிகத் தொல்லையாய் இருக்கும்."

"இரயிலுக்கு என்ன கட்டணம்?"

" பதினைந்து ரூபாய்."

" பிளேனுக்கு?"

"நாற்பது ரூபாய்".

"ஒரு சீட்டுக்கு இருபத்தைந்து ரூபாய் மிச்சம் இருக்கிறது. பதினைந்து நாட்கள் இங்கே வெட்டியாய் இருப்பதை விட இரயிலில் உட்கார்ந்துகொண்டு போகலாம்."

இன்றைக்கே இரயிலுக்கு டிக்கெட் வாங்கிவிடு.

அந்தத்தோழர் தயங்கினார். " அய்யா ரயில் பயணம் கடுமையாய் இருக்கும் நாளை மறுநாள் மாலை பிளேனுக்கு ஒரு டிக்கெட் இருப்பதாகச் சொன்னான். அதில் நீங்கள் போய்விடலாம். நாளைக் காலையில் புறப்படும் இரயிலில் இவர்கள் இருவரும் புறப்பட்டு வரட்டும்."

தோழர் ராஜாராமும் மணியம்மையாரும், அந்தத் தோழருடைய கருத்தை ஆதரித்துப் பெரியாரை வற்புறுத்தவே, பெரியார் அந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார்.

மறுநாள் காலை ரயிலில் மணியம்மையாரும், ராஜாராமும் புறப்பட்டுச் செல்லப் பெரியார், அந்த ஆதிதிராவிட தோழர்களுடன் மோல்மேனில் தங்கினார்.

ஏழைகளான அந்தத்தோழர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும், தங்களால் முடிந்த அளவுக்குப் 'பெரியாருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து, மணியம்மையார் கூட இல்லாத குறை தெரியாதவாறு செய்தார்கள்.

பெரியாருடைய பழக்கவழக்கங்களும், எந்தச் சூழ்நிலைக்கும் ஒத்துப்போகக்கூடிய தன்மையை இயற்கையாகவே அவருக்கு ஏற்படுத்தியிருந்தன.

ஆசார அனுஷ்டானங்களைப் பற்றிக் கவலைப்படாத நாத்திகர் ஒருவரால் தான், சூழலுக்குத் தகுந்தபடி சமாளித்துக்கொள்ளமுடியும்.

பெரியார் நாள்தோறும் குளிப்பதில்லை. இதில் என்ன வசதியென்றால், குளியலறை, வெந்நீர், சோப்பு போன்றவற்றைத் தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை.

அவர் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர் அல்லர். ஆகவே சைவ உணவு கிடைக்காவிட்டாலும் கவலைப்படவேண்டியதில்லை.

அவர் அசைவ உணவு இருந்தால்தான் சாப்பாடு செல்லும் என்ற வகையும் அல்லர். ஆகவே, முழுக்க முழுக்கச் சைவமாக உள்ளவர்கள் நடுவிலும் அவர் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு இருக்க முடியும்.

சாதிமத வேற்றுமைகளைக் குழி தோண்டிப் புதைப்பதே இலட்சியமாக வாழ்ந்து கொண்டிருந்த அவர், எங்கும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் யார் மத்தியிலும் அன்புறவு கொண்டாடிக் காலந்தள்ளமுடியும்.

எனவே சமுதாயத்தால் கடைக்கோடியினராக ஒதுக்கப்பட்ட அந்த ஏழைத் தோழர்களின் பராமரிப்பில், பெரியார் வசதிக்குறைவு என்ற எண்ணமேயில்லாமல் - எப்போதும்போல் இயல்பாக அந்த இரண்டு நாட்களைக் கழிக்கமுடிந்தது.

மூன்றாவது நாள் மாலை வானூர்தியில் தன்னந்தனியாக பெரியார் மோல்மேனிலிருந்து இரங்கூன் வந்து சேர்ந்தார்.

விமானத் திடலிலிருந்து அலுவலகத்திற்கு அரசாங்கப் பேருந்திலேயே கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.

அந்தப் பேருந்தை விட்டுக் கீழே இறங்கியவுடன் தன்னைச் சூழ்ந்துகொண்ட டாக்சிக் காரர்களில் ஒருவனுடைய வண்டியில் அவர் ஏறி உட்கார்ந்தவுடன், அவன் எங்கே போகவேண்டும் என்று கேட்காமலே பெரியாரை மவுந்தாலே வீதியில் அவர் தங்கியிருந்த வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டுவிட்டான். பெரியாரையும் அவருடைய கருப்புச் சட்டையையும் பார்த்த பர்மியர்கள், அவர் இந்திய நாட்டின் பெளத்த பிட்சு என்றும், இந்திய நாட்டுப் பெளத்த பிட்சுக்கள் காவிக்குப் பதில் கருப்புடை அணிவது வழக்கம் என்றும் எண்ணிக்கொண்டிருந்தார்கள். பெளத்த பிட்சுக்களைப் பர்மிய மொழியில் பொங்கி என்று அழைப்பது வழக்கம். பொங்கிகளுக்குரிய மரியாதை அனைத்தும் உயரிய முறையில் பெரியாருக்கும் அந்த மக்களால் கொடுக்கப்பட்டது.

பெரும்பாலான பர்மிய டாக்சிக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் வண்டியில் ஏறிவிட்டால் உள்ள வாடகையைப் போல் ஐந்தாறு பங்கு வசூலித்து விடுவது வழக்கம்.

பொங்கி என்று அவர்கள் கருதிய பெரியாரிடம், அவர் கொடுத்த காசை (குறைவாக இருந்தால் கூட) வாங்கிக் கொண்டு கும்பிட்டு விட்டுச் செல்வார்கள், ஒருசில வண்டிக்காரர்கள் வாடகை வாங்க மறுத்ததும் உண்டு.

பெரியார் இரங்கூனில் இல்லாத போதிலும், மோல்மேன் சென்றிருந்த அந்த மூன்று நாட்களிலும் மாலை நேரத்தில் நான் தினந்தோறும் மவுந்தாலே வீதிக்குச் செல்வது வழக்கம். அது போலவே, மற்ற செயற்குழு உறுப்பினர்களும் வருவார்கள். எல்லாரும் கூடி அங்குதான் அடுத்துள்ள நிகழ்ச்சிகளை முடிவு செய்வோம்.

மூன்றாவது நாள் மாலை நான் சென்றபோது பெரியார் வந்திருந்தார். மற்ற தோழர்களிடம் கோபம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார். மோல்மேனில் வரவேற்பு நன்றாக இருந்ததா? என்று கேட்க எண்ணி நான் வாயைத் திறக்குமுன்னே என்மீது பொரிந்து விழுந்தார்.

"என் பேச்சைக் கேட்காமல் - நீயும் கூட வராமல் வற்புறுத்தி அனுப்பிவைத்தாயே, மிக அவமானமாய்ப் போய்விட்டது" என்று ஒரே கோபமாய்ப் பேசினார்.

என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக அத்தனையும் கேட்டுக்கொண்டு கல்லுப்பிள்ளையார் போல் பேசாமல் நின்றேன்.

அவரது கோபம் சிறிது ஆறி, குரல் தணிந்த பிறகு, இராஜாராமும், மணியம்மையாரும் வரவில்லையா என்று கேட்டேன்.

விமானத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் இரயிலில் வருவதாகச் சொன்னார்.

"இரயில் பயணம் மிக மோசமாய் இருக்குமே, பொறுத்திருந்து விமானத்திலேயே வரலாமே" என்றேன்.

"பதினைந்து நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காதென்று சொல்லிவிட்டான். அத்தனை நாட்கள் அந்த ஊரில் எப்படித் தங்கியிருப்பது?"

"அந்த ஆதி திராவிடப் பிள்ளைகள் மட்டும் வராமல் இருந்திருந்தால் எங்கள் நிலை எவ்வளவு மோசமாயிருக்கும்?" என்று பதிலளித்தார் பெரியார்,

"செட்டியார் நண்பர் விமான நிலையத்திற்கு வரவில்லையா?" என்று கேட்டேன்.

"அந்த ஆள் கண்ணிலேயே காணப்படவில்லை. அந்தப் பித்தலாட்டக்காரனை நம்பி எங்களைப் போகச் சொன்னாயே!" என்று மிகப் பெரிய குரலில் தொடர்ந்து பேசத் தொடங்கிவிட்டார் பெரியார்.

நான் மீண்டும் கல்லுப்பிள்ளையார் ஆனேன்.

மூன்றாவது நாள் மதியம் இராஜாராமும் மணியம்மையாரும் வந்து சேர்ந்தார்கள்.

இரயில் பயணத்தைப் பற்றி அவர்கள் பெரியாரிடமும் மற்ற கழகத் தோழர்களிடமும் கூறிக்கொண்டிருந்தார்கள். நான் ஏற்கனவே ஒரு முறை பயணம் சென்றிருக்கிறேன். அந்தத் தொல்லைகள் எனக்குத் தெரிந்தவை தான். இருந்தாலும், ஊருக்கு முற்றிலும் புதியவர்களான அவர்கள், பர்மிய மொழியும் தெரியாமல் அந்தப் பயணத்தை மேற்கொண்டது எவ்வளவு துன்பமாய் இருந்திருக்கும்!

மோல்மேன் நகர் ஆற்றின் அக்கரையில் அமைந்திருந்தது. ரயிலேற கரைகடந்து வரவேண்டும். அக்கரைக்கும் இக்கரைக்கும் சிறிய கப்பல் (Motor Launch) ஒன்று வருவதும் போவதுமாய் இருக்கும். இந்தக் கப்பலில் இருநூறு பேர்வரை வரலாம்.

இக்கரையில் உள்ள மார்ட்டபான் என்ற ஊரிலிருந்து தான் இரங்கூனுக்கு இரயில் புறப்படும்.

வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில், இரவு 8.30 மணிக்கு மார்ட்டபானில் இரயில் ஏறினால் காலை ஆறுமணிக்கு இரங்கூன் வந்துவிடலாம். இரவு இரயிலில் துாங்கிவிட்டுக் காலையில் கண் விழித்தால் இரங்கூனில் இருக்கலாம்.

இவ்வளவு எளிதான இரயில் பயணம், பர்மா விடுதலையடைந்த பிறகு பெருந்துன்பப் பயணமாக மாறிவிட்டது. மூன்றுநாள் பயணம் ஆகிவிட்டது. சூழ்நிலை இந்தக் கொடுமையை உருவாக்கி விட்டது.

பர்மா விடுதலை அடைந்தவுடன், எந்தெந்த ஊரில் இராணுவ முகாம்கள் இருந்தனவோ அந்த நகரங்கள் மட்டுமே பர்மிய அரசாங்கத்தின் கையில் இருந்தன. நாட்டின் பெரும்பகுதி கலகக்காரர்கள் (INSURGENTS) வசமாகிவிட்டது.

பர்மா விடுதலை அடைந்த உடன் பெரும்பாலான பகுதிகளைக் கலகக்காரர்கள் வசப்படுத்திக் கொண்டார்கள்.

இரண்டாவது உலகப்போரின் போது சப்பானியப் படைகளும்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசீய ராணுவமும் மலேயாவை வசப்படுத்தி பர்மா வழியாக இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள். இந்திய தேசிய ராணுவமும் சப்பானியப் படைகளும் ஒவ்வொரு ஊராகப் பிடித்துக்கொண்டு வந்தபோது பிரிட்டிஷாரின் இந்தியப் படை பின்வாங்கிக் கொண்டு வந்தது. பின்வாங்கி ஓடும் படையினர் ஆங்காங்கே இராணுவ முகாம்களில் விட்டு விட்டு வந்த ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும், கம்யூனிஸ்டுகள், கரீன்கள் போன்ற எதிர்க் கட்சிக்காரர்கள் எடுத்துப் பதுக்கி வைத்துக் கொண்டார்கள்.

கடுமையும் கொடுமையும் மிகுந்த சப்பானிய ஆட்சியில் அவர்கள் பதுங்கிப் பதுங்கி வாழ்ந்ததால், இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தமுடியவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் ராணுவம் திருப்பித்தாக்கி சப்பானியர்களை ஒடோட விரட்டி, பர்மாவையும், மலேயாவையும் சப்பானியர் பிடியிலிருந்து மீட்டுவிட்டது.

சப்பானியர் தோற்றோடும் போது மீண்டும் எதிர்க்கட்சிக்காரர்கள், சப்பானியர் விட்டுச்சென்ற ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பதுக்கிக் கொண்டார்கள்.

வெள்ளையரிடமிருந்து நாடு விடுதலையடைந்தபோது, நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிக் (பசபலா) கட்சியிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.

வெள்ளையர்கள் வெளியேறி விட்டார்கள். பர்மிய நாடு விடுதலை பெற்றது. கட்டுப்பாடும், நாட்டு ஒற்றுமையும் இல்லாததால் பலப்பல அரசுகள் தோன்றிவிட்டன.

சட்டப்படியான அரசாங்கத்தின் கையில், நகரங்களும், அவற்றைச் சுற்றியுள்ள ஊர்களும் மட்டுமே இருந்தன. சிற்றுார்களும், மலைப்பகுதிகளும், காடுகளும் நூற்றுக்கணக்கான குழுக்களின் ஆட்சிக்கு ஆட்பட்டன. எதிர்க்கட்சிகள் கையில் ஆயுதம் இருந்ததால், அவை தனித்தனியாக கொரில்லா அரசுகளாகச் செயல்பட்டன.

நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பர்மாவின் தென் பகுதியில் தனி கரீன் நாடு கேட்கும் கரீன்கள் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

பர்மாவின் வட பகுதியில் சீனத் தலைமையில் இயங்கிய வெள்ளைப் பட்டை கம்யூனிஸ்டுகளும், ரஷ்யத் தலைமையில் இயங்கிய சிவப்புப்பட்டை கம்யூனிஸ்டுகளும், தங்கள் ஆதிக்கத்தில் பல பகுதிகளை வைத்துக் கொண்டார்கள், இவர்கள் அன்னியில், ஏகப்பட்ட கொரில்லாக் குழுக்கள், எந்த வித இலட்சியமுற்ற குழுக்கள், தத்தம் அதிகாரத்தில் சில பல ஊர்களை வைத்துக்கொண்டன.

நாடு முழுவதும் தனித்தனி ஆட்சிகள் அமைந்து ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போய் வர முடியாமல் இருந்தது.

நாட்டு விடுதலைக்காகப் போராடி, முதல் அரசு அமைத்த தளபதி அவுங்சான், ஒருநாள் அமைச்சரவையைக் கூட்டியிருந்தபோது, தீவிர கம்யூனிஸ்டுகளால் அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அந்தக் கூட்டத்திற்குத் தாமதமாக வந்த ஊநூ தப்பிப்பிழைத்தார். ஊநூ தலைமையில் புதிய அமைச்சரவை ஏற்பட்டு, தளபதி அவுங்சானின் இலட்சிய வழியில் நாடு நடைபோட்டது.

ஊநூவின் பெரு முயற்சியால், நாட்டின் பல பகுதிகள் கலகக் குழுவினரிடமிருந்து மீட்கப்பட்டு, போக்குவரத்துத் தொடங்கப்பட்டது.

ஆற்றுப் பாதையில் கப்பல்கள் (Motor Launches) போய் வரத் தொடங்கின, சாலைப் போக்குவரத்துகளும் நடக்கலாயின. ஆனால், பயணங்கள் எல்லாம் பாதுகாப்பற்றவையாகவே இருந்தன.

மார்ட்டபான் நகரில் புறப்படும் இரயில் இரங்கூன் வந்து சேர மூன்று நாள் ஆகியது. ரயில் பயணம் நடைபெற்றவிதம் இதுதான். மார்ட்டபான் நகரிலிருந்து இரயில் புறப்படு முன் முதலில் எஞ்சினும் ரயில் பெட்டி ஒன்றும் அடுத்த ஸ்டேஷன் வரைபோகும். அந்த ரயில் பெட்டியில் அரசுப்படை வீரர்கள் இருப்பார்கள்.

பாதை சரியாக இருந்தால், எஞ்சின் திரும்பி வந்து மற்ற ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்லும், மறுபடியும் அந்த ஸ்டேஷனிலிருந்து அடுத்த ஸ்டேஷனுக்கு எஞ்சினும் முதல் பெட்டியும் போய்வரும். பாதை சரியாக இருந்தால் மறுபடி வந்து மீத வண்டிகளை இழுத்துச் செல்லும். பாதையில் ஏதேனும் பழுதுபடுத்தப்பட்டிருந்தால் அதைச் சரி செய்துவிட்டுப் பயணம் தொடரும். இப்படியாக ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் எஞ்சின் வண்டி இரண்டு முறை வந்துபோகும். மாலை 5 அல்லது 6 மணியளவில் எந்த ஸ்டேஷனை அடைகிறதோ அந்த ஸ்டேஷனில் வண்டி நின்றுவிடும். மேற்கொண்டு மறுநாள் காலை ஆறு மணிக்குத்தான் பயணம் தொடரும்.

பயணிகள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து படுத்துக்கொள்வார்கள். படை வீரர்கள் புகைவண்டி நிலையத்தைப் பாதுகாப்பார்கள். மறுநாள் காலை மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் இடந்தேடி அமர்ந்து கொள்ள, முதலில் எஞ்சின் அடுத்த ஊர்போய் வந்து மீண்டும் இழுத்துச்செல்ல இப்படியே ஆமை வேகத்தில் பயணம் நடைபெறும்.

இடையில் ஓர் ஆற்றுப்பாலம், சப்பானியர் தோற்றோடும் போது அவர்களால் தாக்கப்பட்டு, மீண்டும் கட்டப்படாமலே இருக்கிறது. இந்த ஆற்றங்கரை வந்தவுடன் இரயில் நின்றுவிடும். இரயிலில் வந்தவர்கள் மூட்டை முடிச்சுகளோடு இறங்கி ஆற்றில் நிற்கும் தெப்பம் ஒன்றில் ஏறி அக்கரை வரவேண்டும். இந்தத் தெப்பம் இரயிலில் வந்தவர்கள் அனைவரையும் கொண்டு சேர்க்க நான்கைந்து முறை வந்து போகும்.

ஒவ்வொரு முறையும் இக்கரையில் உள்ளவர்களை அக்கரைக்கும், அக்கரையில் உள்ளவர்களை இக்கரைக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். அக்கரையில் மக்களை இறக்கிவிட்டு மற்றொரு ரயில்வண்டி புறப்படத் தயாராக இருக்கும்.

அந்த வண்டியில் எல்லாரும் ஏறிக்கொண்டிருக்கும் நேரத்தில் எஞ்சின், இராணுவ வண்டியுடன் அடுத்த ஊர் போய்த்திரும்பும், மீண்டும் இரங்கூன் வரும் வரை, ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் காத்திருந்து பயணம் செய்யவேண்டும்.

மிகப் பொறுமையுள்ள மக்கள் மட்டுமே இந்த இரயில் பயணம் மேற்கொள்ளமுடியும். இப்படிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு முடித்த தோழர் இராசாராமும் மணியம்மையாரும் பொறுமையின் இலக்கணத்தை அறிந்து கொண்டிருப்பார்கள்.

பயணம் எப்படியிருந்ததென்று மணியம்மையாரைக் கேட்டபொழுது, இரங்கூனில் இருந்தவரை, இந்தியாவின் மற்றோர் ஊரில் இருப்பது போன்ற உணர்வுதான் இருந்ததென்றும், இந்தப் பயணத்தின் போதுதான் பர்மிய மக்களின் இடையே முற்றிலும் புதிதான சூழ்நிலையில் இருக்கநேர்ந்ததென்றும் கூறினார்கள். இந்தியர்கள் பர்மியர் வீடுகளில் உணவு உண்பதில்லை. கொடுமை என்னவென்றால், பர்மியப் பெண்களைத் தங்கள் மனையாட்டிகளாக வைத்திருக்கும் இந்தியர்களே, அவர்கள் சமைத்தவற்றை உண்பதில்லை. இந்தியர்களின் இப்படிப்பட்ட ஆசாரமுறையே பர்மிய மக்கள் இந்தியர்களை முற்றிலும் வெறுக்கக் காரணமாய் அமைந்துவிட்டது.

மணியம்மையார் இரயில் பணத்தின் போது பர்மியர்கள் செய்து விற்ற தின்பண்டங்கள் பலவற்றை வாங்கிச் சாப்பிட்டதாகவும், அவை சுவையாக இருந்ததாகவும் கூறினார்கள்.

நான் பல பர்மியர் உணவுக் கடைகளில் சென்று உணவுண்டிருக்கிறேன். அவர்கள் நம்மைக் காட்டிலும் துாய்மையாகவும், நல்ல தோற்றமும் சுவையும் உடையனவாகவும் அவற்றைத் தயாரிக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த நான் பர்மியர் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதைக் கண்டு அவர்கள் வியப்படைந்திருக்கிறார்கள்.

இந்திய மக்கள் பர்மிய மக்களோடு ஒட்டுறவு இல்லாமல் வாழும் முறையைப் பெரியார் தம்முடைய சொற்பொழிவுகளில் கண்டித்துப் பேசியிருக்கிறார்; அயல் நாட்டில் வாழும் தமிழர்கள், அந்த நாட்டு மக்களோடு ஒன்றிப்பழகவேண்டுமென்றும், கூடுமான வரை அந்த நாட்டையே தங்கள் தாய்நாடாகப் பாவிக்கவேண்டும் என்றும் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். சிங்கப்பூர் செல்லும் நாள் வந்தது. கப்பலடிக்கு பெரியாரை வழியனுப்ப பர்மா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் யாவரும் வந்திருக்கிறார்கள்.

கப்பலடியில் பல தோழர்கள் பெரியாருடன் படம் எடுத்துக்கொண்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு,"முடிந்ததா? நான் உள்ளே போகலாமா?" என்று சோதனைக் கூடத்திற்குள் நுழைய முற்பட்டார் பெரியார்.

திடீரென்று என் பக்கம் திரும்பினார்.

"நானும் பார்க்கிறேன். எவனெவனோ வந்து படம் எடுத்துக்கொள்கிறான். நீ என்னோடு நின்று ஒரு படம் கூட எடுத்துக்கொள்ளவில்லையே! இங்கே வா!" என்று அழைத்தார் பெரியார்.

புகைப்படக் காரரை அழைத்து " எங்களை ஒரு படம் எடு" என்று கட்டளையிட்டார்.

அவர் எடுத்தாயிற்று என்று சொன்னபிறகு சோதனைக் கூடத்திற்குள் நுழைந்தார். நானும் அவருடைய பெட்டியுடன் பின் தொடர்த்தேன். மற்ற தோழர்கள் வெளியில் நின்றுவிட்டார்கள்.

சோதனை முடிந்து கப்பலுக்குள் சென்றோம். பெரியாருக்கென்று பதிவு செய்யப்பட்ட கப்பல் அறை (Cabin) வரை நானும் சென்றேன்.

பெட்டியை அறையின் உள்ளே வைத்துவிட்டு. அறைக்கதவின் அருகில் வந்து நின்றேன். " போய் வாருங்கள் வணக்கம்" என்று கூறினேன்.

பெரியார் தம் இரு கைகளாலும் என் இரு தோள்களையும் பிடித்துக் கொண்டார். "நான்கு நாட்களாக நானும் பார்க்கிறேன். முதலில் இருந்த உற்சாகம் உன் முகத்தில் தெரியவில்லை. என் மோல்மேன் பயணத்தையும், நான் கோபித்துக் கொண்டதையும் நினைத்து நீ வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய். அன்று கோபித்துக்கொண்டதோடு நான் மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு. என் வாழ்க்கையில் இதைக் காட்டிலும் மோசமான நிலைகளை நான் பார்த்திருக்கிறேன்.

"இதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயனில்லை. நீ மறந்துவிடு. மறந்துவிடுவேன் என்று சொல்" என்று வாஞ்சையோடு கூறினார்.

"அய்யா நான் மறந்துவிடுகிறேன். வணக்கம்' என்று கூறியபிறகு தான் தன் கைகளை எடுத்துக்கொண்டார்.

பெரியார் என்னை - என் தவறை மன்னித்துவிட்டார் என்ற உணர்வோடு என்னை யழுத்திக் கொண்டிருந்த, மனத்துயரை இறக்கிவிட்டு நான் கப்பலை விட்டு இறங்கிவந்தேன்.

துறைமுகத்தின் வெளியில் எனக்காகத் தோழர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மனநிறைவோடு வணக்கம் சொல்லிக்கொண்டு அவரவர் வீடுநோக்கிப் புறப்பட்டோம்.

பெரியார் வருகை எல்லாருக்கும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தடுத்து நடந்த கழகக் கொள்கை பரப்புக் கூட்டங்களில் அந்தப் புத்துணர்வின் எழுச்சியைக் காணமுடிந்தது.