பறவைகளைப் பார்/உடல் அமைப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

IX. உடல் அமைப்பு

பறவையின் உடல் அமைப்பை ஆராய்வதும் ஒவ்வொரு பகுதியின் பயனைத் தெரிந்து கொள்வதும் இன்னும் அதிக சுவை பயப்பதாகும். பறவையின் எலும்புக் கூடு அநேகமாக மனிதனின் எலும்புக் கூட்டை ஒத்து இருக்கிறது. பறவைக்கு இரண்டு சிறகுகளும் இரண்டு கால்களும் ஒரு வாலும் உண்டு. எளிதில் மடக்கி வைத்துக்கொள்ள வசதியாகவும் தோள்பட்டை இயங்குவதற்கு வசதியாகவும் சிறகுகள் அமைந்துள்ளன. பறவையின் சிறகு மனிதனுடைய கரத்தைப் போலவே இருக்கிறது. ஆனால் சிறகின் நுனியிலே உள்ள கையில் ஒரே ஒரு நீளமான பெரிய விரல் தான் இருக்கும். இதில் உள்ள எலும்புகளின் மேல் சிறகுத் தசைகளும் இறகுகளும் வளைவாக அமைந்துள்ளன. திறந்த குடையை வேகமாக மேலும் கீழும் தள்ளினால், மேலே தள்ளுவதே எளிதாக இருக்கும். ஏன்? கீழேதள்ளும் போது காற்று தடை செய்கின்றது. இந்தக் காற்றுத் தடையைப் பயன்படுத்தியே பொதுவாகப் பறவைகள் பறக்கின்றன என்று கூறலாம்.

சிறகில் உள்ள இறகுகள் திட்டவட்டமான சில தொகுதிகளாக அமைந்துள்ளன. கை என்று சொல்லக் கூடிய நீளமான விரலிலே பறப்பதற்குச் சாதகமான முதல் 10 இறகுகள் இருக்கின்றன. திசைமாறுவதற்கு இவை பயன்படும். சிறகின் மேல் பகுதியிலே பறப்பதற்கு சாதகமான 12 அல்லது 14 இறகுகள் இருக்கும்.

இறகுகள் அடுக்கடுக்காக இருப்பதால் பறப்பதற்கு எளிதாகின்றது. சிறது தோளோடு சேரும் பகுதியில் சில இறகுத் தொகுதிகள் உண்டு.

இவை காற்றினால் தடை ஏற்படாதவாறும் நீர்த்துளி உள்ளே புகாதவாறும் தடுக்கின்றன.

பறவைகளின் எலும்புகள் உள்ளே பொந்தானவை; கனமில்லாதவை; ஆனால் வலிமை வாய்ந்தவை. மார்பு எலும்பு அகலமாகவும் கப்பலின் முதுகுபோலவும் அமைந்துள்ளது. இதனோடு வலிமையான மார்புத் தசைகள் இணைந்திருக்கின்றன. இத் தசைகளின் உதவியால் பறவை சிறகுகளை அசைக்கின்றது.

ஒன்றன் மேல் ஒன்று சேர்ந்துள்ள விசிறியைப் போன்ற இறகுகளால் பறவையின் வால் அமைந்துள்ளது. வாலில் சாதாரணமாக 12 அல்லது 16 இறகுகள் உண்டு. மத்திய இறகு வாலின் மேல் பகுதியில் இருக்கும். மற்றவை இதற்குக் கீழாக ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றோடு ஒன்று இணைந்து கீழாக இருக்கும். வால் - மடங்கியுள்ள போது மத்திய இறகே நமக்கு முக்கியமாகத் தெரியும். மற்ற இறகுகள் கீழாகத் தோன்றும்.

வாலை விரிக்கவும் மடக்கவும், உயர்த்தவும் கீழே தாழ்த்தவும் முடியும். இவ்வகையில் கப்பவில் உள்ள சுக்கான் போல வால் உதவுகின்றது. சிட்டுக் குருவியை வேட்டையாடும் வைரியின் சிறகையும் வாலையும் போல அடர்த்தியான இறகுகளையுடைய பறவைகள் எளிதாகவும் ஒய்யாரமாகவும் பறக்கும். உள்ளானைப் போல நீண்ட சிறகுகளும் குறுகிய வாலும் உடைய பறவைகள் வேகமாகவும் உடம்பைக் குலுக்குவது போலவும் பறக்கும், அவரைக் கண்ணியைப் போல வால் நீளமாகவும் சிறகுகள் குறுகி வட்டமாகாகவும்

அமைந்துள்ள பறவைகள் பட் பட வென்ற சிறகுகளை அடித்துக் கொண்டு சிரமப்பட்டுப் பறக்கும்.

பறப்பது மூன்று வகைப்படும். (1) சிறகடித்தல்; பெரும்பாலான பறவைகள் இவ்வாறுதான் பறக்கின்றன. (2) சரிந்து வருதல், வேகமாகப் பறந்து பிறகு சிறகுகளை அடிக்காமல் சருக்கியவாறு வருதல். (3) வானில் மிதந்தவாறுபறத்தல். சிறகுகளை அடிக்காமலேயே சில பறவைகள் வானில் நீண்ட நேரம் வட்டமிடுவதைக் காணலாம்.

திறந்த வெளியில் மட்டும் பறக்கும் பறவைகளுக்கு நீண்டதும் குறுகலானதும் நுனியில் கூர்மையானதுமான சிறகுகள் இருக்கும். இச்சிறகுகளின் நுனியில் எழுகின்ற ஒலியுடன் இப் பறவைகள் மிக வேகமாகப் பறக்கின்றன். காட்டில் வசிக்கும் பறவைகளுக்குக் குறுகிய வட்டமான சிறகுகள் இருக்கும். பறக்கத் தொடங்கும் பொழுது இப்பறவைகளின் சிறகுகளில் ஒலி உண்டாகும். ஆனால் ஆந்தைக்குச் சிறிய சிறகுகள் இருந்தாலும் ஒலியே இல்லாமல் பறக்கின்றது. ஏனென்றால் அதன் சிறகிலுள்ள இறகுகள் பட்டுப் போல இருப்பதால் ஒலி வெளியில் கேட்பதில்லை. இதனால் ஆந்தை கொஞ்சமும் ஒலி எழுப்பாமல் பறந்து சென்று இரையைப் பிடிக்க முடிகின்றது. பறவைகள் தமது இறகுகளைப் பாதுகாப்பதில் தனிப்பட்ட கவனம் செலுத்துகின்றன. சுத்தம் செய்யவும், கோதி ஒழுங்குபடுத்தவும், எண்ணெய் இடவும் அவை எவ்வளவோ நேரம் செலவழிக்கும். தமது உடலிலே வாலின் அடிப்பகுதியில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளிலிருந்து அலகால் எண்ணெயை எடுத்து இறகுகளுக்கிட்டுக் கோதுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை பல பறவைகள் தமது இறகுகளை உதிர்த்துவிடும். இலையுதிர் காலத்திலே இது நடக்கும். எல்லா இறகுகளும் உதிர்ந்து புதிய இறகுகள் தோன்றும். ஆண்டுக்கு இருமுறை சில பறவைகள் இறகுதிர்ப் பதுண்டு. சில பறவைகள் ஆண்டுக்கு மூன்று முறை இறகுதிர்க்கும்.

இரையைப் பிடிக்கவும், உண்ணவும் ஏற்றவாறு பறவைகளுக்கு அலகுகள் அமைந்துள்ளன. இரையை எளிதில் கிழிப்பதற்கு ஏற்றவாறு பருந்து, கழுகு, வைரி இவைகளுக்கு வளைந்த குறுகிய அலகுகள் இருக்கின்றன. மீன்களைக் குத்தி எடுப்பதற்கு ஏற்றவாறு நாரைகளுக்கு நீண்ட அலகுகள் உண்டு. சதுப்பு நிலத்திலுள்ள சேற்றிற்குள் துழாவி இரையை எடுப்பதற்கு ஏற்றவாறு நீரில் நடக்கும் பறவைகளுக்கு அலகுகள் நீண்டு நுட்ப உணர்ச்சியோடு அமைந்திருக்கின்றன. தானியங்களை உமிநீக்கிப் பொடிப்பதற்கு ஏற்றவாறு சிட்டுக்குருவியின் அலகுகள் சின்னக் கூம்பு வடிவில் இருப்பதைக் காணலாம். வாத்தின் தட்டையான அலகிலே பல் வரிசைகள் போலச் சிறு தகடுகள் உண்டு. அவற்றின் வழியே தண்ணீர் வெளி வந்துவிடும்; ஆனால் சிறிய இரைகள் வாயிலேயே தங்கும்.

மாரிக் குருவி, உழவாரக் குருவிகளின் அலகுகள் சிறியவை; ஆனால் இவற்றின் வாய் மிக அகலமாக இருப்பதால் பறக்கும் பூச்சிகளை எளிதில் பிடிக்கின்றன. மலர்களின் அடியிலுள்ள மதுவைக் குடிப்பதற்கு ஏற்றவாறு தேன் சிட்டுக்களின் அலகுகள் மென்மையாகவும் வளைந்தும் உள்ளன.

அலகின் உதவியால் இரையைப் பிடிக்கின்றது; ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளுகிறது; கூடு முடைகிறது; குஞ்சுகளின் தேவைகளை நிறைவேற்றுகிறது. இரையைக் கொல்லுகிறது; தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளுகிறது. அலகே ஒரு கருவியாகவும் பயன்படுகிறது. கத்தி போலவும், இடுக்கி போலவும், கத்தரி, போலவும் பறவை அதைப் பயன்படுத்துகின்றது. இம்மாதிரியான வேலைகளைச் செய்வதற்கு வசதியாகப்

(Upload an image to replace this placeholder.)

பறவையின் கழுத்து அமைந்திருக்கிறது. பறவை தன் தலையை முழுவதுமே திருப்ப முடியும்.

பறவைகளின் அலகுகளைப் போலவே அவற்றின் கால்களும் பல வேறு விதங்களில் அமைந் திருக்கின்றன. ஓடுவதற்கும் கிளைகளில் அமர்வதற்கும், கீறிக்கொள்வதற்கும், நீந்துவதற்கும், பிடித்துக் கொள்ளுவதற்கும் கால்விரல்கள் பயன்படுகின்றன. நமது கட்டைவிரலைப்போல இருப்பதுதான் பறவையின் முதல் விரல், அது பின்புறம் திரும்பி இருக்கும். உள் பக்கத்திலிருக்கும் இரண்டாம் விரலில் இரண்டு எலும்புகள் உள்ளன. மூன்றாம் விரல் மத்தியிலிருக்கும். அதில் மூன்று மூட்டுகள் உண்டு. நாலாவது விரல் வெளிப்புறமாக இருக்கும். அதிலே நான்கு மூட்டுகள் உண்டு. அநேகமாக எல்லாப் பறவையினங்களிலும் இந்த அமைப்பேதான் காணப்படு கின்றது.

கிளைகளில் அமரும் பறவைகளுக்குக் கிளைகளை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுவதற்காகப் பின்புற விரல்கள் நீளமாக இருக்கும். வாத்தின் கால் விரல்கள் நீந்துவதற்கு வசதியாக ஒன்றோடு ஒன்று ஒருவகைத் தோலால் இணைக்கப்பட்டிருக்கும்; பின்புறமுள்ள விரல் மிகச் சிறிது. சேற்றில் அழுந்திப் போகாதவாறு கொக்கின் கால் விரல்கள் மெல்லியனவாகவும் ஒன்றிற்கொன்று அதிக இடைவெளி உள்ளனவாகவும் இருக்கும். நிலத்தில் வாழும் வானம்பாடிக்கும் வயல் சிட்டிற்கும் பின்புற விரலில் உள்ள நகம் மிகப் பெரிதாக இருக்கும். மாரிக் குருவியின் முன்புற விரல்கள் ஒன்றோடொன்று. பிணைக்கப்பட்டிருக்கும்" : மரங் கொத்திக் குருவியின் விரல்கள் ஜோடி ஜோடியாக அமைந்திருக்கும். நெருப்புக் கோழிக்கு இரண்டே விரல்களையுடைய பெரிய கால்கள் உண்டு.

சிறு பறவைகள் 10 முதல் 13 ஆண்டுகள் வரை உயிர் வாழும். கழுகுகள் 20 ஆண்டுகளும் சில பெரிய பறவைகள் 30 ஆண்டுகள் வரையிலும் வாழ்கின்றன.

பறவைகளின் உடல் வெப்ப நிலை 104 முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உடல் வெப்ப நிலை 98.40 பா. ஆகும். மனிதனுக்கு 1060 பா. காய்ச்சல் வந்தால் அவன் பிதற்றத் தொடங்கிவிடுவான்.