பறவைகளைப் பார்/கூடு கட்டப் பெட்டிகளும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

X. கூடு கட்டப் பெட்டிகளும் இரை தூவும்
மனைப் பலகைகளும்

இவ்வளவு தூரம் பறவைகளைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு அவற்றைக் கூர்ந்து கவனிக்கவும், மேற்கொண்டு பல உண்மைகளைக் கண்டறியவும், உங்கள் வீட்டிலோ வீட்டுத் தோட்டத்திலோ அவற்றைக் காணவும் நீங்கள் விரும்புவீர்கள். பறவைகளுக்கு இரை வைத்தாலும், கூடு கட்டப் பெட்டிகளை அமைத்துக் கொடுத்தாலும் அவை உங்களுக்கு அருகிலேயே வந்து தங்குவதோடு முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கவும் செய்யும்.

பறவைகள் கூடு கட்டுவதையும் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதையும் நீங்கள் நேராகப் பார்க்கலாம்; ஆனால் அவற்றிற்கு மிக அருகிலே செல்லக் கூடாது; அசையாமல் இருக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். தமக்கு ஏதாவது தொல்லை ஏற்படுகிறது என்று கருதினால் அவை உங்களுக்குத் தெரியாத வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்று கூடு கட்டத் தொடங்கிவிடும். தாய்ப் பறவைகள் இரை தேடுவதற்காகச் சென்றிருக்கும் சமயத்தில் வேண்டுமானால் இளங்குஞ்சுகளைப் பார்த்துவிட்டு வந்து விடலாம். குஞ்சுகளைக் கூட்டி லிருந்து எடுக்கவே கூடாது. இளங்குஞ்சுகள் மிகவும் மென்மையானவை; அவைகளுக்கு எளிதிலே காயமுண்டாகிவிடும்.

தோட்டத்திலுள்ள ஒரு வசதியான இடத்திலே தானியங்களைத் தூவிவிட்டு விட்டு நீங்கள் ஒளிந்து கொள்ளலாம்; அசையவே கூடாது. சிட்டுக் குருவி தானியத்தைப் பொறுக்க நிச்சயமாக வரும். சுற்றிலும் பார்த்துவிட்டுத்தான் வரும். சில சமயங்களில் தானியங்களைத் தொடாமலேயே பறந் தோடிவிடும்; ஆனால் நீங்கள் பொறுமையிழக்கக் கூடாது. (பறவைகளைக் கவனிப்பதற்குப் பொறுமை மிகமிகத் தேவை) பொறுமையோடிருந்தால் அந்தக் குருவி மற்ற குருவிகளோடு வேகமாக வந்து இரையைப் பொறுக்க தொடங்குத்வதைக் காணலாம்,

ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து ஒவ்வொரு மூடியின் மேற்புறத்திலும் துளைகள் செய்து படத்தில் காட்டியவாறு ஜன்னலுக்கு அருகிலேயே தொங்கவிடலாம். பறவைகளுக்குத் தேங்காய் ஒரு பெரிய விருந்து. பட்டாணிக் குருவிகள் இதை மிகவும் விரும்பி உண்ணும்.

கசாப்புக் கடையிலிருந்து ஒரு பெரிய எலும்பைக் கொண்டு வந்து சுத்தம் செய்து அதிலுள்ள பொந்திலே கொழுப்பையோ, பிசைந்த உருளைக் கிழங்கையோ நிரப்பி ஒரு மாத்தில் தொங்கவிடலாம். அதையும் அடிக்கடி போய்ப் பார்த்து வரலாம். இரை வைப்பதற்கு இரண்டு வகையான மனைப் பலகைகளும் செய்யலாம். பூனை ஏற முடியாத வகையில் குறைந்தது ஒரு மீட்டர் உயரமுள்ள ஒரு கம்பத்தில் பலகையைப் பொருத்தி,

பிறகு அக்கம்பத்தை நிழலுள்ள ஏதாவது ஓரிடத்தில் தரையில் நட்டு வைக்கலாம். ஒரு பலகையைக் கயிற்றின் மூலம் மரத்தில் கட்டித் தொங்க விடுவது இரண்டாவது முறை. மனைப் பலகைகளில் தண்ணீர் வைக்க மறந்துவிடா தீர்கள். தண்ணீர் ஏனம் கவிழ்ந்து விடாதவாறு அசையாமல் பொருத்தி வைக்கவேண்டும். பறவைகள் அடிக்கடி நீர் குடிக்கும். தண்ணீரிலே குளிக்கவும் அவை விரும்பும். கோடைகாலத்தில் குளிப்பதற்கு அவற்றிற்கு விருப்பம் அதிகம்.

உங்கள் தோட்டத்தில் பட்டுப்போன மரமோ கிழட்டு மரமோ ஏதாவது இருந்தால் அதை வெட்டி விடாதீர்கள். அதிலே இயற்கையாகவே ஓட்டைகளும், பொந்துகளும் இருக்கும். பல பறவைகள் அவற்றிலே கூடுகட்ட விரும்பும்.

கிழட்டு மரமோ, பட்டுப்போன மரமோ உங்கள் தோட்டத்தின் அழகைக் குறைக்கிறது என்று நினைத்தால் காகிதப் பூக்கொடி போன்ற ஏதாவது. ஓர் அழகிய கொடியை அதில் படரவிட்டு விடலாம். இது தோட்டத்திற்கு அழகு கொடுக்கும். பறவைகளும் உங்களோடு தங்கும்.

இவ்வாறே கூடு கட்டும் பெட்டிகளையும் செய்யலாம். ஆனால் இதில் சில விஷயங்களை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும். 1. கூடு கட்டப் பறவைகள் விரும்பும் இடங்கள், 2. அவை கட்டும் கூடுகளின் வகை, 3. கூடு கட்டப் பயன்படுத்தும் பொருள்கள், உங்கள் பக்கத்திலே இருக்கும்படியான பறவைகளுக்குப் பொருத்தமான கூடுகள் அமையாவிட்டால் உங்கள் முயற்சி வீணாகிவிடும். ஏனென்றால் வெவ்வேறு இனப் பறவைகளுக்கு வெவ்வேறு வகையான விருப்பங்களும் தேவைகளும் உண்டு. இயற்கையாகப் பறவைகள் கூடு கட்டுகின்ற மரப் பொந்துகளைக் கவனித்தால் அப்பறவைகளுக்கு எந்த உருவத்

தில், எந்த அளவில், எந்த இடத்தில் கூடு தேவைப்படும் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

கூடு கட்டும் பெட்டிகளைச் செய்வதற்கும் வைப்பதற்கும் சில எளிய விதிகளாவன :

(1) பெட்டியின் அடி மட்டத்திலிருந்து பல அங்குலங்கள் உயரத்தில் நுழையம் துவாரம் இருக்கவேண்டும்.

(2) தரையிலிருந்து பத்து முதல் முப்பது அடி வரை உயரமாக இருக்கும் கம்பங்களில் கூட்டுப் பெட்டிகளை அமைக்கவேண்டும். அல்லது மரத்தோடு சேர்த்துக் கட்டலாம்.

(3) கூட்டின் தேவை முடிந்தவுடன் இப்பெட்டிகளை எடுத்து சுத்தம் செய்து அடுத்த பருவத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பெட்டிகளைச் செய்ய அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. ஒட்டுப் பலகையிலோ, ஜாதிக்காய்ப் பலகையிலோ, சாமான்கள் வைத்து அனுப்பப்பட்டுள்ள பெட்டிகளிலோ இவற்றைச்

 செய்யலாம், நீங்களே இவற்றைச் செய்து கொள்ள முடியும்.

கூடு கட்டும் பெட்டிகளைப்பற்றி இன்னும் சில குறிப்புகளாவன : அவை தண்ணீர் ஒழுகாமலும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்கவேண்டும். மரம் செடிகொடிகளோடு இணைந்திருக்குமாறு சாம்பல் நிறத்தலோ, மங்கிய பச்சை நிறத்திலோ வர்ணம் பூசவேண்டும். இப் பெட்டிகள் வெவ்வேறு உருவத்தில் இருக்கலாம். பறவைகளின் உடபருமனுக்குத் தக்கவாறு இவை அமைய வேண்டும். 15 செ.மீ. x 15 செ. மீ. நீள அகலங்களும், 45 செ. மீ. உயரமும் மைனாக் கூட்டிற்கு வேண்டும்; அடிப் பலகையிலிருந்து 15 செ. மீ. உயரத்திலும் 5 செ.மீ. விட்டமுள்ளதாகவும் நுழை

(Upload an image to replace this placeholder.)

யும் துவாரம் இருக்கவேண்டும். சிட்டுக் குருவிக்கு 15 செ. மீ. உயரமுள்ளதாகப் பெட்டி வேண்டும். எல்லாப் பக்கங்களிலும் அது திறந்தும் இருக்க வேண்டும். ஆந்தைக்கு பெட்டியின் நீள அகலம் 25 செ.மீ. x 45 செ.மீ. ஆகவும், உயரம் 45 செ.மீ. ஆகவும் இருக்க, அடிப் பலகையிலிருந்து 10 செ.மீ. உயரத்தில், 20 செ. மீ. விட்டம் உள்ள நுழை துவாரம் இருக்கவேண்டும். மரங்கொத்திக்கு 38 செ. மீ. உயரமுள்ள பெட்டிக் கூடும் அடியிலிருந்து 30 செ. மீ. உயரத்தில் 5 செ. மீ. விட்டம் கொண்டதாக நுழைவு வழியும் இருக்கவேண்டும்.

வெப்பம் மிகுந்த நேரத்தில் நிழல் இருக்கும்படியாகப் பெட்டிக் கூடுகளை அமைத்தல் அவசியம். ஆனால் காலையிலும் மாலையிலும் சிறிது கதிரவன் ஒளி படும்படியாகவும் இருக்கவேண்டும்.

தீனியும் கூடுகட்டப் பெட்டிகளும் கிடைக்கும்படி செய்தால் பலவகையான பறவைகள் உங்கள் அருகில் வந்து தங்குவதைக் காண்பீர்கள். மிகவும் அச்சமுள்ள பறவைகளும் வரும். உங்கள் தோட்டத்திலேயே பறவைகளின் புகலிடம் ஒன்றை நீங்கள் அமைத்தவராவீர்கள். அங்கே அவை வேட்டையாடும் பறவைகளிடத்திலிருந்தும் மக்களிடத்திலிருந்தும் தீங்கு வராமல் பாதுகாப்பாக இருக்கும். பசியும் தாகமும் அவற்றிற்கு இரா. நீங்களே அவற்றைக் காவல் புரிபவர்கள் ஆவீர்கள்.