பறவைகளைப் பார்/பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

XI. பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு
சில குறிப்புகள்

பறவைகளை இனம் தெரிந்துகொள்வதற்குக் கூர்மையான கண்களும், காதுகளும் வேண்டும். ஒரு நோட்டுப் புத்தகமும், பென்சிலும், பறவைகளைப் பற்றிய படங்களுடன் கூடிய நூலும் முக்கியமாகும். நுட்பமாகக் கவனிக்கும் அற்றலும் கூடவே வேண்டும், பறவை ஆராய்ச்சியில் வெற்றி கொள்வதற்குச் சில வகைகளில் நரியின் தன்மையைப் பின்பற்றக் கற்றுக் கொள்ள வேண்டும். மனிதனால் பறவைகளை அணுகுவது சிரமமாக இருக்கிறது. ஆனால் நரி எப்படியோ அவற்றைப் பிடித்து இரையாக்கிக் கொள்கிறது. இதை எப்படிச் செய்கின்றது? பிறர் எளிதில் காண முடியாதவாறு அதற்கு நிறம் இருக்கிறது. பாதங்கள் மெத்தென்று இருக்கின்றன; : அதனால் நரி நடக்கும்போது சத்தம் உண்டாவதில்லை. மேலும் அது தன்னை எவ்வளவு தூரம் மறைத்துக் கொள்ள முடியுமோ அப்படி மறைத்துக்கொண்டு தரையில் மெதுவாக ஊர்ந்து கொண்டே செல்லும். இந்த வழிகனையெல்லாம் நாமும் பின்பற்றலாம்.

பறவைகளுக்குத் தெரியாமல் இருக்கவேண்டுமானால் கருப்பு வெள்ளை முதலிய சட்டென்று கண்ணில் தைக்கும் நிறங்களையுடைய உடையை அணியக் கூடாது. தழைகளின் மங்கிய பச்சை நிற உடைகளே ஏற்றது ஊதா நிறமும் ஏற்றது தான்: ஏனென்றால் இந்த நிறம் பறவைகளுக்குத் தெரிவதில்லை. சத்தம் கேட்காதவாறு ரப்பரால் செய்த மிதியடியை அணிந்துகொள்ளவும் வேண்டும். சருகுகள் மேலே நடக்கக்கூடாது. அப்படி, நடந்தால் சத்தம் உண்டாகிப் பறவைகளை ஓட்டிவிடும்.

அடுத்தபடியாக ஒரு மரத்தையோ புதரையோ புல் வளர்ந்த இடத்தையோ மறைந்திருப்பதற்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அங்கே அசையாமல் இருக்க வேண்டும். தலையையோ கைகளையோ அசைக்காமல் சிலையைப்போல் அமர்ந்திருந்தால் பறவைகள் அருகிலேயே வரும். அவற்றை நன்றாகக் கவனிப்பதற்கு இது உதவியாக இருக்கும். சில சமயங்களில் முழந்தாளிட்டு மெதுவாக ஊர்ந்து செல்லவும் வேண்டும். திறந்த வெளியில் செல்லுவதானால் நேராகச் செல்லுவதை விட வளைந்து வளைந்து சென்றால் பறவைகளின் அருகில் செல்லுவது எளிதாக இருக்கும்.

நரியிடம் கற்றுக்கொள்ளும் மற்றொரு பாடமும். உண்டு. அது தனியாகவே வேட்டையாடுகின்றது. தனியாக இருந்தால் பேச்சுக்கு இடமில்லை; ஆராய்ச்சியும் தடைப்படாது. பறவைகளை ஆராயும்போது முழுக் கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும். வெகுநேரம் ஆராய்வதென்றால் மனத்தை ஒரு முகப்படுத்தி அதிலேயே ஈடுபட்டிருக்கவேண்டும். பறவைகளைத் தேடிச் சில சமயங்களில் வண்டிகளிலோ, சைக்கிளிலோ, விமானத்திலோ, தோணிகளிலோ செல்லவேண்டியிருக்தம். பாறைகளிலும், மரங்களிலும் ஏற வேண்டியும் நேரும். சினம்கொண்ட பலவகையான பறவைகள் கொத்த வருவதும் உண்டு. குளிரையும், வெப்பத்தையும், ஈரத்தையும் பொருட்படுத்தக்கூடாது. சில சமயங்களில் இரவு முழுதும் செலவழிக்க வேண்டும். ஆகவே பறவை ஆராய்ச்சி ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தாலும் விஞ்ஞான ரீதியில் பார்க்கும் போது சிரமமானதாகவும் இருக்கும்.

பறவைகளை இனம். புரிந்துகொள்வதற்கு இளவேனிற் காலமும் கோடைகாலத் தொடக்கமும் மிக ஏற்றவை. குளிர்காலத்தில் புதிதாக வந்து சேரும் பறவைகளோடு கலந்திருக்கும் குழப்பம் இருக்காது. பறவை உலகத்தில் ஜூலை மாதம் மிகுந்த சுவையானது. ஏனென்றால் அப்பொழுது இளம் பறவைகளும் காணப்படும்.

அதிகாலையிலும் கதிரவன் மறையும் வேளையிலுமே பெரும்பாலான பறவைகளின் நடமாட்டமும் பேச்சும் அதிகமாக இருப்பதால் அந்த வேளைகளே அவற்றைக் கவனிப்பதற்கு மிகப் பொருத்தமாக இருக்கும். பலமாகக் காற்று வீசும் நாட்களில் பறவைகள் வெளிவந்தால் காற்று அடித்துக்கொண்டு போய்விடும். ஆதலால் அந் நாட்களில் பறவைகளின் நடமாட்டம் மிகக் குறைவு. அதனால் அவைகளை ஆராய அந்நாட்கள் ஏற்றவையல்ல. பெருமழை பெய்தால் பறவைகள் எங்கேயாவது ஒளிந்து கொள்ளும். ஆனால் லேசாக மழை தூறும்போது அவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

மிகுந்த தொலைவிலிருந்துதான் நீர்ப் பறவைகளைக் கவனிக்கவேண்டும். எச்சரிக்கையோடு சென்றால் அருகில்கூடப் போய்விட முடியும். பறவைகளின் தந்திரத்தை அறிந்து அதை ஏமாற்றிப் பக்கத்தில் செல்வதில்தான் பறவை ஆராய்ச்சியின் சுவை பாதிக்குமேல் இருக்கின்றது. கரை அருகிலே மறைவிடங்களிலிருந்து நீர்ப்பறவைகளைக் கவனிக்கலாம்.

பறவை ஆராய்ச்சி வல்லுநர் முதலில் பறவைகளின் ஒலியைக் கேட்கிறார்கள். பிறகு அந்த ஒலிவரும் திசையை நோக்கிப் பறவையை அறிந்துகொள்ளுகிறார்கள். நீங்களும் அவர்களைப் பின்பற்றலாம். சில பறவைகள் ஒலி கொடுப்பதில் ஒரு தனித் திறமை காட்டுகின்றன பறவை ஓரிடத்தில் தழைகளில் மறைந்திருக்கும். அதன் ஒலி முதலில் ஒரு மரத்திலிருந்து வருவதுபோலவும் பிறகு வேறு ஒரு மரத்திலிருந்து வருவது போலவும் கேட்கும், சில பறவைகள் மிக மெல்லிய குரலில் பாடும். அதனால் அப் பறவைகள் அருகில் இருந்தாலும் தொலைவில் இருப்பதுபோல நமக்குப்படும்.

உங்களுடைய நோட்டுப் புத்தகத்தில் கீழ்க் கண்ட குறிப்புக்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள், தேதி, நேரம், வானிலை, காற்றின் நிலைமை இவற்றை முதலில் குறித்துக் கொள்ளவேண்டும். இடத்தின் தன்மையும் பெயரும் முக்கியமானவை பறவையின் பருமனை அடுத்தபடியாகக் குறிப்பிடலாம். இத்தனை செ.மீ. என்று முதலில் மதிப்பிடுவது சிரமம். ஆனால் நமக்குத் தெரிந்த பறவையின் அளவோடு ஒத்திட்டுப் பார்த்துக் குறித்துக் கொள்ளலாம். தெரிந்த பறவைகளான சிட்டுக் குருவி, கொண்டைக் குருவி, மைனா, காகம், கழுகு இவற்றை முதல் பக்கத்தில் குறித்துக் கொள்ளலாம். ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட ஒரு பறவை இந்தப் பறவைகளுக்குச் சிறியதாகவோ, பெரியதாகவோ இருந்தால் (-), (+) என்ற குறிகளை இட்டுக் கொள்ளலாம். சிட்டுக் குருவியைவிட ஒரு பறவை சற்று பெரியதாக இருந்தால் அதை சி(+) என்றும், மைனாவைவிட ஒரு பறவை சற்றுச் சிறியதாக இருந்தால் மை(—) என்னும் குறிக்கலாம். இம்மாதிரி நாளாவட்டத்தில் பறவைகளின் பருமனைத் தீர்மானிப்பதில் நல்ல திறமை பெற்றுவிடலாம்.

பிறகு ஒரு பறவை ஒல்லியாகவோ, பருத்தோ இருப்பதைக் குறிக்க வேண்டும். பறவைகள் தமது இறகுகளைச் சிலிர்த்துக் கொள்ளும் தன்மையுடையவை. ஆகையால் அதையும் கவனித்துத் தீர்மானிக்கவேண்டும்.

பிறகு அலகு பெரியதா, நேரானதா, கூர்மையானதா, வளைந்ததா , மென்மையானதா, தட்டையானதா, கனமானதா, கொக்கி போன்றதா, சிறியதா என்று கவனிக்கவேண்டும், அலகின் வடிவத்தை நன்றாகக் கவனித்தால் ஒரு பறவை எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதைக் கூறி விடலாம். சிட்டுக்குருவியைவிட உருவத்தில் சிறியதாக இருந்து, குட்டையாகவும், மென்மையாகவும் சற்று வளைந்தும் உள்ள அலகிருந்தால், அது பெரும்பாலும் பூச்சி பிடிக்கும் இனத்தைச் சேர்ந்த பறவையாக இருக்கும். அலகின் நிறத்தையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாகக் கால்களின் அளவையும் அமைப்பையும் கவனிக்கவேண்டும். ஒரு பறவைக்கு நீளமான கால்கள் இருந்தால் அது தண்ணீரில் நடக்கும் பறவையாக இருக்கும். கால்விரல்கள் ஒருவகைத் தோலால் சேர்க்கப்பட்டிருந்தால் அது வாத்தாக இருக்கும், கால்களின் நிறத்தையும் கவனிக்கவேண்டும்.

வாலின் நீளமும், தோற்றமும் முக்கியமானவை, வால் குட்டையானதா, பிளவுபட்டதா, அதன் நுனியின் வடிவம் சதுரமானதா, வட்டமானதா, கூர்மையானதா என்றும் கவனிக்க வேண்டும். ஒரு பறவை வாலை மேலே தூக்கியவாறு உள்ளதா, அல்லது கீழ் நோக்கியவாறு வைத்துக்கொண்டிருக்கிறதா, வாலை ஆட்டுகிறதா இவற்றையும் கவனிக்கவேண்டும்.

மண் நிறம் கொண்டதும் புள்ளியுள்ளதுமான பறவைக்குக் கொக்கி போன்ற அலகும், சற்றே பிளவுபட்ட வாலுமிருந்தால் அது பருந்தாக இருக்கலாம். நீளமானதும், நேரானதும், கூர்மையானதும், பழுப்பு மஞ்சள் நிறங்கள் கலந்துமான அலகும், குட்டையான வாலும், நீண்ட கால்களும், வெள்ளை இறகுகளும் உள்ள ஒரு பறவை நாரையாக இருக்கலாம்.

ஒரு பறவைக்குக் கொண்டையிருந்தால் அதன் நிறத்தையும், அமைப்பையும் கவனிக்க வேண்டும்.

உடலின் நிறம் முக்கியமானது. இதைத்தான் சாதாரணமாகக் கவனிக்கிறோம். முதலில் பளபளப்பான நிறமுடையதா, மங்கலான நிறமுடையதா, எந்த நிறம் மேலோங்கிக் காணப்படுகிறது என்பதை நோக்கவேண்டும். பிறகு உடம்பின் மேற்புறமாக உள்ள தலை, முதுகு, சிறகுகள், வாலின் மேல்பாகம் ஆகியவற்றின் நிறத்தைக் கவனிக்கவேண்டும். தொண்டை, மார்பு, வயிறு, வாலின் அடிப்பாகம் ஆகிய அடிப்பகுதிகளையும் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு நிறமும் எந்த இடத்தில் இருக்கிறதென்பதைப் பார்க்கவும். ஏதாவது குறிப்பான நிறம் இருக்கிறதா என்பதையும் கவனிக்கவும். (மார்பையே நன்கு நோக்கவேண்டும்.) ஒரு பறவை ஒரே நிறத்திலுள்ளதா, புள்ளியுடையதா, கோடுகளுடையதா என்றும் கவனிக்கவும். வாலில் வெள்ளைப்புள்ளி இருக்கிறதா, பக்கவாட்டில் வெண்மையிருக்கிறதா, சிறகுகள் எப்படியிருக்கின்றன என்றும் ஆராய வேண்டும். ஒரு பறவையின் கண்ணின் மேல் கோடு அல்லது வட்டமிருக்கிறதா, கொண்டையிலே கோடு இருக்கிறதா அல்லது பட்டை இருக்கிறதா என்றெல் கவனிலாம் க்கவேண்டும்.

நீர்ப் பறவைகளின் சிறகுகள் மிக முக்கியமானவை. நுனியில் கருப்பு இருக்கிறதா பட்டை பட்டையாக இருக்கிறதா, கோடுகள் இருக்கின்றனவா, ஆழ்ந்த நிறம் இருக்கிறதா என்று நோக்கவேண்டும். பறவையின் பருமனோடு இப்படி ஒரு நிறக் குறிப்பு இருந்தாலே அந்தப் பறவையை அடையாளம் கண்டு கொள்ளமுடியும் சித்திரம் வரைவதிலே திறமையிருந்தால் அதுவும் பயன்படும்.

பறவையின் ஒலியே அது என்ன பறவை என்று கண்டுபிடிப்பதற்கு மிகச் சிறந்த வழி ஆகும். சில பறவைகள் அழகாகப் பாடுகின்றன; சிலவற்றின் குரல் காதுக்கு இனிமையாக இராது, கொண்டைக்குயிலையும் பக்கியையும் அவற்றின் ஒலியிலிருந்துதான் கண்டுகொள்ள முடியும். 'காகா' என்றும் 'கூகூ' என்றும் 'கீ...கீ' என்றும் இப்படிக் கேட்கும் ஒலிகளைத் தனித்தனியாகப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒவ்வொரு பறவையும் விரும்பி உண்ணும் இரையின் வகைகளைக் கவனிக்க வேண்டும். ஒரு பறவை காணப்படும் இடம் சதுப்பு நிலமா, ஆற்றுப் படுகையா, தோட்டமா, காடா, விளை நிலமா என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஒரு பறவை உட்காருவது மரக்கிளையின் குறுக்காகவா நீளவாட்டிலா என்பதையும் நோக்க வேண்டும். மறைவில்லாத ஓரிடத்தில் அமர்ந்டி ஒரு பூச்சியை நோக்கி ஓடிப் பிடித்துக்கொண்டு வருகிறதா? மரத்தில் படரும் கொடியைப்போலச் சுற்றிச் சுற்றி மேலே ஏறுகின்றதா ? மரங்கொத்தியைப் போல வாலையும் பயன்படுத்தி மேலே ஏறுகின்றதா? பசைஎடு குருவியைப்போலத் தலை கீழாக இறங்குகின்றதா?

தரையில் - ஒரு பறவை நடக்கிறதா? ஓடுகிறதா? சிட்டுக்குருவியைப்போலத் தத்தித் தத்திச் செல்கிறதா? உதிர்ந்த சருகுகளிடையே கிளறிப் பார்க்கின்றதா? கூட்டமாகக் கூடிச் செல்கின்றதா? தனியாகச் செல்கின்றதா? இணையாகச் செல்கின்றதா? வானிலே ஒரு பறவை வேகமாகவோ, மெதுவாகவோ பறக்கிறதா? சிறகடிப்பது வேகமாகவா, அல்லவா? வட்டமிடுகிறதா? மிதந்து செல்கிறதா? உயர்ந்து எழுகின்றதா?

நீரில் என்றால் நன்றாக நீந்துகின்றதா? மூழ்க முடியுமா? நீரிலிருந்து வானிலே சுலபமாக எழுந்து பறக்கின்றதா? 'படபட' என்று நீர்ப்பரப்பிலே அடித்த பிறகுதான் வானத்திலே எழுகின்றதா?

மேலுங் கீழுமாக வானிலே பறக்கின்றதா? அம்பு செல்வதை ஒத்து நேராகப் புறாவைப்போல நேராகப் பறக்கின்றதா? இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஆடியசைந்து ஒழுங்கில்லாமல் பறக்கின்றதா? வைரியைப்போல் வானில் உயர்ந்து எழுகின்றதா? காட்டுவாத்தைப்போல வேகமாகச் சிறகுகளை அடித்துக் கொள்கின்றதா? அல்லது நாரையைப் போலச் சிறகுகளை மெதுவாக அடிக்கின்றதா? ஒழுகங்கான முறையில் சிறகை அடிக்கின்றதா? அல்லது பல தடவை 'படபட' என்று அடிக்கின்றதா? மீன்கொத்தியைப்போல வானில் வட்டமிட்டுப் பிறகு தலைகீழாக நீருக்குள் மூழ்குகின்றதா? நீரில் நடக்கிறதா? நாரையைப்போல நீண்ட கால்களோடு தண்ணீரிலே நெடுநேரம் அசைவில்லாமல் நிற்கிறதா? கொசு உள்ளானைப் போல சேறு நிறைந்த நதிக்கரைமேல் ஓடுகிறதா? சேற்றிலே அலகைவிட்டுத் துழாவி இரை தேடுகிறதா?-இவற்றை யெல்லாம் கவனிக்கவேண்டும்.

பறவைகளை நன்கு இனங் கண்டுகொள்ளுந் திறமை வந்த பிறகு கூடுகளையும், முட்டைகளையும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முயலலாம். அடைகாத்தல், குஞ்சு பொரித்தல், இவற்றை ஆராய்வதும் மிகுந்த சுவை பயப்பதாகும். நுட்பமாக கவனிக்கும் திறன் வளரவளர, பல அரிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். உங்களைச் சுற்றியுள்ள பறவைகள் எந்தெந்த இடங்களில் வாழ்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். எத்தனை பறவைகள் உங்களைச் சுற்றிலும் இருக்கின்றன? எத்தனை கூடுகள் கட்டி யிருக்கின்றன? ஒவ்வொரு பருவ காலத்திலும் வெவ்வேறு இடங்களில் எவ்வகையான தீனிகளைத் தின்கின்றன? என்பனவற்றை யெல்லாம் நீங்களே அறிந்து கொள்வீர்கள். பறவைகளைக் கூர்ந்து பார்க்கிறவர்களுக்கு அவற்றின் பழக்க வழக்கங்கள், நிறங்கள், அவை இணை கூடுவதற்காக நேசம் செய்தல் முதலியவைகளெல்லாம் உள்ளத்தைக் கவர்வனவாக என்றும் இருக்கும்.

இந்நூலில் வந்துள்ள பறவைகளின்
ஆங்கில - தமிழ்ப் பெயர்த் தொகுதி
Badler கள்ளிச்சிட்டு
Baroet கொடுர்வா
Bee-eater பஞ்சுருட்டான்
Bulbul கொண்டைக் குருவி
Crow காக்கை
Cuckoo கொண்டைக் குயில்
Curlew கண்கிலேடி
Dove புறா
Drongo கரிச்சான்
Duck காட்டு வாத்து
Eagle கழுகு
Falcon லகுடு
Fantail flycatcher விசிறிக் குருவி
Paradise flycatcher வால் குருவி
Goose, wild தாரா
Grebe முக்குளிப்பான்
Gull கடற்காக்கை
Pheasant காட்டுக் கோழி
Hawk வைரி
Heron நாரை
Hornbill மலைமொங்கான்
Indian roller பனங்காடை
Jacana தாமரைக்கோழி
Kingfisher மீன்கொத்தி
Kite பருந்து
Koel குயில்
Lapwing ஆள்காட்டி
Lark வானம்பாடி
Magpie robin பால்காரிக் குருவி
Common myna மைனா
Hill myna மலை மைனா
Oriole மாங்குயில்
Ostrich நெருப்புக்கோழி
Owl ஆந்தை
Parakeet சிறு கிளி
Partridge கவுதாரி
Peacock மயில்
Pheasant காட்டுக் கோழி
Pigeon மாடப்புறா
Pipit வயல்சிட்டு
Plover பட்டாணி உள்ளான்
Quail காடை
Sandpiper கொசு உள்ளான்
Shrike கீச்சான் குருவி
Skimmer கத்திரிமூக்கி
Snipe உள்ளான்
Sparrow சிட்டுக்குருவி
Stork கொக்கு
Sun - bird தேன் சிட்டு
Swallow மாரிக் குருவி
Swift உழவாரக் குருவி
Tailor-bird தையற்சிட்டு
Tern ஆலா
Tit பட்டாணிக் குருவி
Tree-pie அவரைக்கண்ணி
Vulture பிணந்தின்னிக் கழுகு
Wagtail வாலாட்டிக் குருவி
Warbler கதிர்க் குருவி
Weaver - bird தூக்கணாங்குருவி
Woodcock கானக்கோழி
Woodpecker மரங்கொத்தி