பறவைகளைப் பார்/மனிதனுக்குப் பறவைகள் செய்யும் உதவி
II. மனிதனுக்குப் பறவைகள்
செய்யும் உதவி
புழு பூச்சிகளை ஒழிப்பதற்குப் பறவைகளே நமக்குப் பேருதவி செய்கின்றன. அவை இல்லாத உலகம் பாழடைந்தே தோன்றும். நம்முடைய நிலங்களிலும், காடுகளிலும், பழத் தோட்டங்களிலும் பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்காத பூச்சிகள் இருக்கின்றன. இந்தியாவிலேயே 30,000-க்கும் மேற்பட்ட பலவகைப் பூச்சிகள் உள்ளனவாம். இவை பயிர் பச்சைகளை இருந்த இடம் தெரியாமல் தின்று தீர்த்துவிடும். ஆனால் எல்லாப் பூச்சிகளும் நமக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. இவற்றில் பெரும்பாலானவை நமக்கு நன்மையே செய்கின்றன. ஆனால் பூச்சிகள் மிக வேகமாகப் பெருகுவதால்
இவற்றின் எண்ணிக்கையை ஓர் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இவை ஒரு தழையோ புல்லோ இல்லாமல் தின்றுவிடும். உலகம் ஒரு பாலைவனமாக மாறும்.
பறந்து திரியும் பூச்சிகளைப் பிடிப்பதற்கு மாரிக் குருவிகளும், உழவாரக் குருவிகளும் மிக ஏற்றவை. கத்தி போன்ற இறக்கைகளும் கவைப்பட்ட வாலும் உடைய மாரிக்குருவி மிக அழகானது. சிறிய ஒலி எழுப்பிக்கொண்டு எப்பொழுதும் அது வானத்திலே சஞ்சரிக்கும். பறக்கும் பூச்சிகளைப் பாய்ந்து பாய்ந்து பிடிக்கும். நீர்ப்பரப்பை ஒட்டிப் பறந்தபடியே நீர் குடிக்கும். பறப்பதிலே அது வல்லது; ஆனால் தரையின் மீதோ மரக்கிளைகளிலோ அமர்வதில் அது அத்தனை விருப்பம் காட்டுவதில்லை. மற்ற பறவைகளைப்போலத் தத்தித்தத்திச் செல்லவோ தரையில் ஓடவோ அதனால் முடியாது. மிகச் சிறிய கிளையின் மீதோ தந்திக் கம்பிகளின் மீதோ அமரத்தான் அதன் மென்மையான கால்கள் ஏற்றவை.
நகரங்களிலும் கிராமங்களிலும் உழவாரக் குருவி சலிப்பென்பதே இல்லாமல் வானத்தில் வட்டமிடுவதைப் பார்க்கலாம். உருவத்திலே மாரிக் குருவி போலத் தோன்றினாலும் இது வேறொரு இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் நிறம் கரும் பழுப்பு: சிறகு மிக நீண்டு அகலம் குறைந்தும் வளைந்தும் இருக்கும். இதைப்போல வேறெந்தப் பறவையும் வானத்திலேயே நீண்ட நேரம் சஞ்சரிக்காது. தரைக்கு வருவதே அரிது. வானத்திலே வேகமாகப் பறக்கும் போதே பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.
பூச்சிகளைத் தின்னும், பறவைகளில் மரங்கொத்தியும் ஒன்றாகும். மரப்பட்டைகளுக்கு அடியே மறைந்து வாழும் பூச்சிகளை இது உணவாகக் கொள்கிறது.
குறுகிய காலத்திற்குள் பறவைகள் ஏராளமான பூச்சிகளைத் தின்றுவிடும். அரை மணி நேரத்திற்குள் ஒரு சிறிய பறவை 800க்கும் மேற்பட்ட புழுக்களைத் தின்றதைக் கண்டுள்ளார்கள். மற்றொரு சிறு பறவை அதே நேரத்தில் மரத்திலுள்ள சுமார் 3000 தாவரப் பேன்களைப் பிடித்துத் தின்றதாம். ஒரு ஜோடி சிட்டுக் குருவிகள் முன்னும் பின்னுமாக ஒரு மணி நேரத்திற்குமேல் பறந்து ஒவ்வொரு நிமிஷத்திலும் இரண்டு தடவை கூட்டுக்கு வந்து தமது குஞ்சுகளுக்கு அலகு நிறைய பூச்சிகளைக் கொண்டு வந்து தந்தன!
மற்றப் பறவைகளை வேட்டையாடும் கழுகு, பருந்து, வைரி போன்ற பறவைகளை விவசாயிகள் வெறுக்கிறார்கள். ஏனென்றால் இவை பண்ணையிலுள்ள வளர்ப்புப் பறவைகளின் குஞ்சுகளைக் களவாடி.விடுகின்றன, ஆனால் இவை வயலில் வாழும் சுண்டெலிகளையும், எலிகளையும், அணில்களையும் வேட்டையாடுகின்றன. இவ்வாறு பண்ணைப் பயிர்களுக்குச் சேதம் ஏற்படாமல் உதவுகின்றன. இப்பறவைகள் பாம்பு முதலியவற்றைக் கொன்று மற்றப் பறவைகளின் முட்டைகளையும் குஞ்சுகளையும் காப்பாற்றுகின்றன. சில பூச்சிகள் நோய்க் கிருமிகளைத் தாங்கி வருவதால் மனிதனுடைய உயிருக்கே ஆபத்து விளைவிக்கின்றன. இவற்றையும் இப் பறவைகள் கொன்று நோய்களை அடக்குவதில் நமக்கு உதவுகின்றன.
பிணந் தின்னும் மொட்டைக் கழுகுகளும், பேருந்துகளும், காக்கைகளும் தோட்டி வேலை செய்வதsல் வல்லவை, செத்த பிராணிகளையும், அழுதிய பண்டங்களையும் உண்டு நமது சாலைகளையும், கிராமங்களையும் இவை துப்புரவு செய்கின்றன.
பூக்களின் மாற்று இனப் பெருக்கத்திலும் பறவைகள் உதவுகின்றன. மலர்களின் அடியிலுள்ள மதுவை, சில இனப் பறவைகள் குடிக்கும்போது அப் பறவைகளின் அலகுகளிலும், இறகுகளிலும் மலர்களிலுள்ள மகரந்தம் ஒட்டிக்கொள்கிறது, இப் பறவை மற்றொரு மலரை நாடிச் சென்று மதுவுண்ணும்போது இந்த மகரந்தப் பொடி அதில் சேர்ந்து விடுகிறது.
காடை, கவுதாரி, காட்டு வாத்து, வாலாஞ்சிறகி, உள்ளான் முதலிய பறவைகளை ஆயிரக்கணக்கில் வேட்டையாடி எவ்வளவு கொடுமைப் படுத்துகின்றோம்! நமக்கு அவை ஒரு தீங்கும் செய்வதில்லை. அதற்கு மாறாக அவை நன்மையே செய்கின்றன.