உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகளைப் பார்/தொழில் நுட்பம்

விக்கிமூலம் இலிருந்து

III. தொழில் நுட்பம்

கூர்ந்து கவனித்தால் பறவைகளைப் பற்றிச் சுவையான பல உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளலாம். மரத்திற்கு மரம் பறந்து திரியும் பறவைகள் வேலையால்தான் ஈடுபட்டிருக்கின்றன. மக்களைப்போலவே அவை வீடு கட்டித் தம் குஞ்சுகளை வளர்க்கின்றன. அவற்றுக்கென்றே தனித்தனியான பேச்சுமொழியும் உண்டு.

பறவை உலகத்தில் தையலும், மரம் கொத்துதலும், மீன் பிடித்தலும் இன்னும் இப்படிப்பட்ட தொழில் நுட்பம் வாய்ந்த பணிகளைச் செய்கின்ற பறவைகள் உண்டு.

தையல: தையற்சிட்டு மென்மையான நார்களையும் சிலந்திக் கூடுகளையும், பட்டுப்பூச்சிக் கூடுகளில் உள்ள பட்டையும் பயன்படுத்தி இரண்டு மூன்று பெரிய இலைகளை ஒன்றாகச் சேர்த்து வெகு திறமையோடு தன் அலகினாலேயே தைத்துக் கூடு கட்டி விடுகின்றது.

மரம் கொத்தல் : மரங் கொத்திப் பறவை மரத்தின் பட்டைகளைக் கொத்தி உள்ளே யிருக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்கின்றது. அதன் அலகு கொத்தித் துளைபோடுவதற்கு ஏற்றவாறு கூர்மையாக அமைந்திருக்கின்றது. இதன் நாக்கு

வினோதமானது. அது நீளமாகவும் நுனியில் கூரிய முட்கள் உள்ளதாகவும் இருக்கிறது. அந்த நாக்கைத் திடீரென்று நீட்டிப் பூச்சிகளையும் அவற்றின் மூட்டைகளையும் பிடித்துத் தின்கின்றது.

மீன் பிடித்தல் : மீன் பிடிக்கும் பறவை இனங்களில் மீன் கொத்தியே மிக அழகானது. மரங்கள் சூழ்ந்த அமைதியான ஏரிகள், குட்டைகள், ஓடைகள் இவற்றின் அருகே இதைக் காணலாம். நீர் பரப்பிற்கு மேலாக ஒரு மரக்கிளையிலே அமர்ந்து தண்ணீரை இமை கொட்டாது உற்றுப் பார்த்துக்கொண்டேயிருக்கும். திடீரென்று நீருக்குள் பாய்ந்து ஒரு மீனைத் தனது நீண்ட அலகிலே கவ்விக்கொண்டு வெளியில் வரும்.

தோட்டி வேலை; தோட்டி வேலை செய்யும் பறவைகளில் பிணந்தின்னிக் கழுகும் ஒன்றாகும். வழுக்கையான தலையும்

பருத்த உடலும், மொட்டைக் கழுத்தும் கொண்ட இது தோற்றத்தில் அழகாக இராது. ஆனால் பறப்பதிலே பிணந்தின்னிக் கழுகு இது இணையற்றது. இது வானிலே உயரப் பறந்து வட்மிட்டுக் கொண்டே கீழே இருக்கும் இரையை ஆராய்ந்து வரும். பருந்தோடு சேர்ந்து இது வீதிகளையும், கிராமங்களையும், சுடுகாடுகளையும் அலசிப் பார்த்து, செத்த பிராணிகளின் உடல்களையும், அழு

அழுகிப்போனவற்றையும் தின்று சுத்தம் செய்கின்றது.

திருடும் பறவைகள் : எத்தித் திருடுகின்ற காக்கையை நமக்குத் தெரியும், கண்ணிற்கு இனிய கரு நிறக் காக்கை என்று பாரதியார் பாடியிருப்பது போல், காக்கை பளபளப்பான கரிய நிறம் கொண்டது. இதன் கண்கள் அறிவுக் கூர்மையைக் காட்டும். வீடுகளிலும், கடைகளிலும், வயல் நிலங்களிலும் காக்கை தைரியமாகப் புகுந்து திருடும். கூடுகளிலிருந்து முட்டைகளையும் சிறு குஞ்சுகளையும் திருடவும் செய்யும்.

காவல்: காவலுக்குக் கரிச்சான் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. கருமையான சீருடையணிந்ததுபோல அதன் நிறம்

இருக்கும். அது ஒரு காவல் காக்கும் பறவையாக விளங்குகின்றது. அதைவிடப் பெரிய பறவைளென்றாலும் அவற்றை எதிர்த்துப் போராடத் தயங்காது. கரிச்சான் கூடு கட்டுகின்ற பகுதியிலே வலிமையற்ற சிறு பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டிக்கொள்ளும். ஏனென்றால் கரிச்சான் அந்தச் சிறு பறவைகளின் கூடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது. முட்டைகள் திருடும் காக்கையைக் கண்டால் அது மூர்க்கமாகப் போராடித் துரத்திவிடும். அதிகாலையிலேயே அது எழுந்து இனிமையாகக் குரல் கொடுக்கும்.

இரவில் காவல் : ஆந்தை பகலெல்லாம் தூங்கி இரவிலே விழித்திருக்கும். சத்தமே செய்யாமல் சுண்டெலிகளையும், எலிகளையும்

ஆந்தை

தேடி இது எங்கும் பறந்து திரியும். கொக்கி போன்ற இதன் அலகும் உறுதியான வளைந்த நகங்களும் சிறு பிராணிகளைக் கொல்ல உதவுகின்றன.

வேட்டைப் பறவைகள் : பகற்பொழுதிலே வல்லூரும் வைரியும் வேட்டையாடுவதில் மிக வல்லமை உடையன. வளைந்த கூர்மையான அலகும் நகங்களும் கொண்ட இப் பறவைகள் பயிர்களுக்கு மிகவும் சேதம் உண்டாக்கும் எலிகளையும் அணில்களையும் கணக்கில்லாமல் கொன்று விடுகின்றன; தீங்கு விளைக்கும் எண்ணற்ற பூச்சிகளையும் இவை தமக்கு இரையாகக் கொள்கின்றன.

சோம்பேறிப் பறவைகள் : குயில் நமக்குத் தெரிந்த பறவை. கூடு கட்டுவதற்குக்கூட இதற்குச் சோம்பல், இது காக்கையின் கூட்டில் தந்திரமாக முட்டை இடுகின்றது. காக்கை அடை காத்துக் குஞ்சுகளை வளர்க்கும். குஞ்சுகள் பெரிதானதும் மற்ற குயில்களோடு சேர்ந்து விடுகின்றன!

வைரி

பாடும் பறவைகள் : பாடும் பறவைகளிலெல்லாம் பால்காரிக் குருவி முதன்மையானது. குளிர் காலத்தில் இது இனிமையான சீழ்க்கை ஒலி கொடுக்கும். வசந்த காலத்தில் விதவிதமாக இது பாடும். கருப்பும் வெண்மையுமான வாலை மேலே தூக்கித்தூக்கி இது பாடும்.

விசிறிக் குருவி
தூக்கணாங் குருவி

நடனப் பரவைகள் : விசிறிக் குருவியின் நடனத்தைப் பார்ப்பதே ஒரு தனி இன்பம். கிளைகளில் தத்தித் தத்திச் சென்று திடீரென்று நின்று ஒரு பக்கத்திலிருந்து, மறுபக்கம் திரும்பி இது ஆடுகின்றது. இது விசிறி போன்ற தனது வாலை அடிக்கடி குறுக்கியும், விரித்தும் நடனமாடும்.

நெசவாளிப் பறவைகள் : தையற் சிட்டைப் போலவே தூக்கணாங் குருவியும் நன்றாகக் கூடு முடையும். புல்லைக் கொண்டும், நார்களைக் கொண்டும் உறுதியாகக் கூடு கட்டி, கிளைகளின் நுனியிலே பந்து பந்தகத் தனது கூட்டைத் தொங்க விடுகின்றது. உள்ளே நுழையும் பொந்து போன்ற வழியின் ஒரு பக்கமாக முட்டை வைக்கும் அறை இருக்கும். நுழையும் வாயில் கீழ்நோக்கியிருப்பதால் பகைப் பறவைகள் உள்ளே எளிதில் செல்ல முடியாது. பல தூக்கணாங் குருவிகளின் கூடுகள் மரக்கிளைகளின் நுனிகளில் கூட்டமாகத் தொங்குவதைக் காணலாம். சாதாரணமாக நீர்ப்பரப்பிற்கு மேலாக இந்தக் கூடுகள் சிறிதும் பெரிதுமாகக் காட்சியளிக்கும்.

கொன்று வாழும் பறவைகள் : கீச்சான்

காட்டு வாத்து
கீச்சான் குருவி


குருவி தனக்கு வேண்டிய அளவிற்கு மேலேயே கொல்லுவதால் கொலைப் பறவையென்று பெயரெடுத்திருக்கிறது. அப்படிக் கொnr செய்த பிராணிகளை முட்செடிகளில் தொங்கவிடும். இது பூச்சிகளையே தின்று வாழ்ந்தாலும், பல்லிகளையும், சுண்டெலிகளையும் கொல்லத் தயங்குவதில்லை.

வலசை வரும் பறவைகள் : ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வலசைவரும் பல பறவைகளுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டு வாத்தைக் கூறலாம். காட்டு வாத்துகள் ஐரோப்பா, வட ஆசியா, லடாக், திபெத்து முதலிய இடங்களிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வருகின்றன.