பறவைகளைப் பார்/வசிக்கும் இடம்
ஒவ்வொரு பறவை இனமும் வசிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி உண்டு. காடுகளிலும் மைதானங்களிலும் ஏரிகளிலும் சகதி நிலங்களிலும், விளை நிலங்களிலும் என்னென்ன பறவைகளைக் காண முடியும் என்பது அனுபவமுள்ள பறவை ஆராய்ச்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். சில பறவைகள் உலகத்தில் எங்கும் காணப்படுகின்றன. சில பறவைகள் சில பகுதிகளில் மட்டும் வசிக்கின்றன. குளிர் காலத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வெப்பத்தையும் உண்வையும் நாடிச் சில பறவைகள் வலசை
வருகின்றன. பின்னர் வசந்த காலத்தில் அவை திரும்பிவிடுகின்றன.
குளிரும், வெப்பமும் மாறுபடுகின்ற மண்டலங்களுக்கேற்றவாறு. பறவைகளின் தோற்றம் மாறுபடுகின்றது. ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள் இமயமலையில் பெரிதாகவும், கன்னியாகுமரி முனையை அணுக அணுக அளவு குறைந்தும் காணப்படுகின்றன. இமயமலை முதலிய மலைகளில் குளிர் மிகுந்த உயரமான மேல்பகுதிகளில் பறவைகள் பெரிதாக இருக்கின்றன. மலையடிவாரங்களில் சிறிதாக இருக்கின்றன; தட்ப வெப்ப நிலைகள் பறவைகளின் நிறத்திலும் மாறுபாட்டை உண்டாக்குகின்றன.
தட்ப வெப்ப நிலைக்கு அடுத்தபடியாக மரஞ் செடி கொடிகளும் மழையின் அளவும் நாட்டின் நிலப்பகுதியின் அமைப்பும் பறவைகளின் வாழ்க்கையை மாறுபடச் செய்கின்றன. தோட்டங்களிலும், பூங்காக்களிலும், பயிர் நிலங்களிலும் இருக்கும் மரஞ்செடி கொடிகள் காட்டுப் பகுதியில் உள்ளவற்றிலிருந்து வேறுபட்டிருக்கும்.
நமது காடுகளில் மலைமொங்கான் மாங்குயில், வால்குருவி போன்ற அழகிய நிறங்களை உடைய பறவைகள் வசிக்கின்றன. கொம்பு போன்ற வடிவமுள்ள மஞ்சள் நிற அலகை உடையது மலைமொங்கான். மாங்குயில் தங்க நிறமானது. வால் குருவி வெள்ளி போன்ற நிறமும் மிக நீண்ட வாலும் உடையது. ஊதாவும், பச்சையும், சிவப்பும், மஞ்சளும் கொண்ட சிறிய தேன் சிட்டுக்களும் காணப்படும். மயில் போன்ற பிரகாசமான நிறங்கள் கொண்ட பறவைகளும் அங்கு உண்டு.
கிராமங்களிலும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் வசிக்கும் பறவைகள் நமக்கு அதிகமாகத் தெரிந்தவை. சிட்டுக்குருவிகள் நமக்கு அருகிலேயே வசிக்க விரும்புகின்றன, ஏனென்றால் அவைகளுக்கு வேண்டிய உணவுப்பொருள்கள் நாம் வசிக்கும் இடங்களில் மிகுதியாகக் கிடைக்கும் என்பதை அவை தெரிந்து கொண்டுள்ளன, தத்தித் தத்தியும், நடந்தும் செல்லும் மைனாக்கள் பலவற்றைக் கண்டிருப்பீர்கள். பால்காரிக் குருவியும், பட்டாணிக் குருவியும் மரங்களில் கிளைக்குக் கிளை பாய்ந்து செல்வதையும் கண்டிருப்பீர்கள்.
விளை நிலங்கள் மிகுதியாக உள்ள இடங்களில் மரங்கள் குறைவாக இருப்பதால் அங்கு தரையில் வசிக்கும் பறவைகளையே மிகுதியாகப் பார்க்கலாம். வானம்பாடிகள், வேலிக்குருவிகள், வயல் சிட்டுகள் முதலியவை அங்கு வசிக்கின்றன.
சில பறவைகள் மைதானங்களிலும், சதுப்பு நிலங்களிலும், ஏரிகள், ஓடைகள், ஆறுகள் இவற்றின் கரைகளிலும் வசிக்க விரும்புகின்றன, நீரில் வாழும் பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வது தரையில் வாழும் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வதை விடக் கடினமானது.