பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்/வாழ்வது ஒரு கலை

விக்கிமூலம் இலிருந்து

பலம் தரும்
பத்து நிமிடப் பயிற்சிகள்


முதல் பகுதி


விளக்கம்
1. வாழ்வது ஒரு கலை

மனம் போல வாழ்வு என்பது முன்னோர்கள் வாக்கு. இது தெய்வவாக்கு மட்டுமல்ல. தேவாமிர்தமான வாக்கும் கூட.

நாம் எப்படி எண்ணுகிறோமோ, அப்படித்தான் எல்லாம் நடக்கும். நாம் எதை எண்ணுகிறோமோ, அதைச் சுற்றித்தான் எல்லாக் காரியங்களும் நடக்கும், நாளெல்லாம் நிலைக்கும்.

எண்ணங்கள் தாம் ஒருவரைத் திண்மைப் படுத்துகின்றன. நன்மைகளை உண்டாக்குகின்றன. இன்ப துன்பங்களுக்கு உடமையாக்குகின்றன.

நல்ல நினைவுகளையே, நினைத்து வாழ்கிற ஒரு மனிதன் முகத்திலே அருள் இருக்கிறது. தெளிவு இருக்கிறது. பொலிவு இருக்கிறது. பூரண திருப்தியும் ஜொலிக்கிறது.

அதைப்போலவே, கெட்ட செயல்களில் கிறங்கிப் போயிருக்கும் ஒருவரின் நினைவுகள், கெட்ட செயல்களையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருக்கிற ஒருவரின் முகத்திலே, இருள் வந்திருக்கும். கார்மேகம் போல கண்களைச் சுற்றிக் குவளையம் பூத்திருக்கும், காணச் சகிக்காத அளவுக்கு முகம் கன்றாவியாக இருக்கும்.

இதை விளக்கத்தான், இன்னொரு பழமொழியும் வந்திருக்கிறது. ஆமாம். ஒரு வித்தியாசமான முதுமொழி.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்பதுதான் அந்த இனிய மொழி.

அகம் + பை=அகப்பை ஆயிற்று. அகம் என்றால் மனம், உள்ளம், சித்தம் என்றும் கூறப்படும் ஒன்றுதான்.

‘பை’ என்றால் ‘அழகு’ என்று அர்த்தம்.

சட்டி என்பதற்கு இங்கே உடல் என்று அர்த்தம். சட்டி சுட்டதடா, கை விட்டதடா என்ற பாட்டும், உடலைக் குறிக்க வந்த சித்தர் பாடல்களுள் ஒன்று.

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பது - சட்டியான உடலில் வலிமை இருந்தால்தான், வளம் இருந்தால்தான், ஒழுக்கப் பண்புகள் இருந்தால்தான், அகப்பையான மனதிலும் வலிமையும் தெளிவும் வரும் என்பதே அதன் பொருளாகிறது.

வலிமையான உடலில்தான் வலிமையான மனம் இருக்கும் என்பதைத்தான் கிரேக்கப் பழமொழி A sound mind in a sound Body என்று அழகாகக் கூறுகிறது.

ஒருவரின் வாழ்வு அவரது உடல் அமைப்பைப் பொறுத்தே அமைகிறது. அவரது மகிழ்ச்சியும் ஆனந்தமும், வாழ்வும் வழிகளும், அவரது உடல் நிலை எப்படி வலிமை வாய்ந்ததாக விளங்குகிறதோ, அப்படியே தான் அமையும்.

திடமான உடல் கொண்டவர்கள். தீரமாக வாழ்கிறார்கள் செய்கிற செயல்களிலும் செழுமையும் முழுமையும் கொண்டு திகழ்கிறார்கள். பேச்சிலும் செயலிலும் பிரமிப்பு ஊட்டுபவர்களாக விளங்குகிறார்கன்.

அவர்களது உடல் வலிமையினாலேயே, அவர்கள் வாழ்க்கை மீது அவர்களுக்கு ஒரு பற்று மிகுந்திருக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது. மற்றவர்களிலிருந்து மாறுபட்டவர்களாக, அதாவது பூரிப்பும் புத்துணர்ச்சியும் மிக்கவர்களாக வாழ்ந்து, ஒவ்வொரு நாளையும் உவப்புடன் சந்தித்து, உற்சாகமாகக் கொண்டாடி, உன்னதமாக வாழ்கிறார்கள்.

அதேசமயம், நோய்ப்பட்ட நோஞ்சான் மனிதன், சக்தி இழந்தவன் எப்படி வாழ்கிறான்?

சக்தி, இந்தச் சொல்லில் 'க்' என்ற எழுத்தில் உள்ள புள்ளி போனால், சகதி என்று ஆகிவிடுகிறது.

அதுபோலவே, சக்தி இல்லாமல் வாழ்கிற யாருமே சகதிபோல் ஆகிவிடுகிறார்கள்.

பலம் உள்ளவன் நஞ்சை நிலம் போல மதிக்கப்படுகிறான். பாராட்டப்படுகிறான். பயன் தருகிறான். பயன் பெறுகிறான்.

பலமற்றவன் சகதியாக, சேறாக ஆகிவிடுவதால் காண்பவர்களின் பார்வைக்கு, களங்கமாகப்படுகிறான்.

பலமற்றவர்கள் உண்பதில் தடுமாற்றம்; உடுப்பதில் தாடுமாற்றம்; உறக்கத்திலும் கலக்கமான காரியம், நலிந்த தோற்றம். நாளெல்லாம் அவதிமயம்; அலறல் சத்தம், அருவெறுப்பான வாழ்வு, அலங்கோலக் காட்சி.

பிறர் மதிக்காமல் போகட்டும் பரவாயில்லை. அவரின் அன்றாட வாழ்வின் அவலம், ஆயிரக்கணக்கான இழப்பை அல்லவா உண்டாக்குகிறது. இந்த அவலத்திலே சவமாக நடமாடுவது, நடைப்பிணமாய் வாழ்வது அவமானமான காரியம் அல்லவா?

பிறந்து விட்டோம் என்பதற்காக வாழ்வது பேதமை. வாழ்வதற்கு வழியில்லையே என்று ஏங்கிக் கிடப்பதும், முடங்கித் தவிப்பதும் முட்டாள்தனம்.

யாரும் எனக்கு உதவ முன் வரவில்லையே என்று எதிர்பார்ப்பது, ஏக்கத்துடன் பேசுவது, எரிச்சலடைவது எல்லாம் இரண்டாந்தர மனிதனின் கையாலாகாத்தனம்.

அப்படியென்றால், வாழ்வது என்பது வந்து போகிற நாட்களுக்கு வணக்கம் சொல்லி வழியனுப்பிக் கொண்டு நொந்து வாழ்வதல்ல.

வாழ்விலே வாழ்வாங்கு வாழ்வது என்பது ஒரு கலை! உயர்ந்த கலை! உன்னதமான கலை!

அது எப்படி? புரியவில்லையே!

கோடிக் கணக்கான மக்களிடையே நாம் வாழ்கிறோம். கூனிக் குறுகிக் கிடப்பதற்காகவா மனிதப் பிறவி எடுத்தோம். இல்லையே!?

மக்களில் தலை சிறந்தவராக மாறிக் கொள்ள வேண்டாமா? அதுதானே நியாயம்!

நிரம் என்றால் மலை போல; நீர் என்றால் அலை போல; கல் என்றால் சிலை போல; உடல் என்றால் தலை போல, கல் என்றால் சிலை போல சிறந்திருப்பது போல, நாம் உயர்வாக மாறிக் கொள்ள முயற்சிப்பது ஒரு கலை.

கல் + ஐ என்று இந்தச் சொல்லைப், பிரித்து வரும் சொல்லைப் பாருங்கள். கலை என்று ஆகிறது.

ஐ என்றால் உயர்ந்தது. கல் என்றால் தடையாக நிற்கும் மண்ணையும் கல்லையும் அகற்றித் தோண்டு என்பது அர்த்தம் அறியாமை எனும் கற்களை, தற்குறித்தனமான நடைக் கற்களை அகற்றிவிட்டு, அறிவுபெறத் தூண்டுகின்ற தோண்டல் வேலைதான் கல்வி என்று பேசப்படுகிறது.

உயர்ந்ததைக் கற்றுக் கொள்வதற்குத்தான் கலை என்று பெயர். அதை ஒழுங்காகக் கற்கும் முறைக்கு ஆசாரம் என்று பெயர்.

இந்த கலையும் ஆசாரமும் சேர்ந்ததுதான் கலாச்சாரம் என்று பெயர் பெற்றது (Culture) இந்தக் கலாச்சாரம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைப் பழக்கங்கள் எல்லாம், வழிநடத்தும் ஒழுக்கங்களில் இருந்து உருவாகி வந்திருப்பதாகும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் உண்டு. உணவுப் பழக்கம், உடைப் பழக்கம், மனப் பழக்கம் போலப் பலவுண்டு. வித்தியாசமானதும், வேறுபாடானதுமான வெறுக்கத் தகுந்ததுமான கலாசாரங்களும் உலகிலே பல உண்டு.

ஆனால், உலகத்திலே உள்ள ஒரே ஒரு உயர்ந்த கலாசாரம், ஒப்பற்ற கலாச்சாரம், மாற்றுக் கருத்துக்கள் எதுவுமின்றி, மனமுவந்து வாழ்த்தி ஏற்றுக் கொண்ட கலாச்சாரம் ஒன்று உண்டு. அதுதான் உடல் காக்கும் கலாச்சாரம்.

நீங்கள் எப்படி வேண்டுமானாலும், உங்கள் மரபைக் காத்து, மண்ணின் பெருமையை வளர்த்து வாழ்ந்து கொள்ளுங்கள்.

ஆனால், மனதுக்குகந்த ஒரே வேலையான உடலைக் காத்துக் கொண்டு வாழ்கிற, கண்ணியமான, கண் போன்ற, ஒப்பற்றக் கலாச்சாரமான உடல் காக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்றிக் கொண்டு வாழுங்கள் என்பது தான் இன்று அறிவியல் வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கிறது. ஆன்மீகவாதிகளின் அறவுரையாக இருக்கிறது. பேச்சாளர்களின் பிரசங்கமாக இருக்கிறது. பெற்றோர்களின் அன்புக் கட்டளையாக இருக்கிறது.

'பலத்தோடு வாழுங்கள்' என்பதுதான் இன்றைய இயற்கையின் எழுதாக் கட்டளையாக ஒலிக்கிறது.

இன்றைய தலைமுறைக்கு ஏற்ப, நாகரீகத்திற்கு ஏற்ப, ஈடுகொடுத்து இன்பமாக வாழ, உங்களைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்பதை, நினைவூட்டி, நிலைப்படுத்தி, நெறிப்படுத்தி விடத்தான். வாழ்வது ஒரு கலை என்று நாம் கூறினோம்.

அதிலும் வளத்தோடும் பலத்தோடும் வாழ்கிற அற்புதக் கலையில் நீங்கள் வல்லவராகிட வேண்டும் என்று வற்புறுத்தி அழைக்கிறோம்.

அதற்கு முன்னால் ஒரு சிறிய சிந்தனை

இப்போது நாம் எப்படி வாழ்கிறோம் என்று பார்க்கலாமே! இருப்பதைப் பார்த்த பிறகு, தானே சிறப்பதற்கும், செப்பனிடுவதற்கும் சிந்திக்க முடியும். பலப்பல உத்திகளை சந்திக்க முடியும்.

சிந்திப்போம். சிந்தனைகளை, நிதர்சனமான நடைமுறைகளைச் சந்திப்போம்.