பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்/பொருள் பொதிந்த புதிர் வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

2. பொருள் பொதிந்த
புதிர் வாழ்க்கை

பணம் பணம் என்று அலைவதே வாழ்க்கையின் இலட்சியம் என்பது எல்லா நிலை மக்களின் உயிர்க் கொள்கையாக மாறிப் போயிருக்கிறது.

‘ணம் ணம்’ என்ற மன அரிப்புடன் மனதைப் பிடுங்கித் தொலைக்கிற பணத்தைக் கட்டிக் கொண்டு அழுகிற அல்லல் படுகிற மக்களைத்தான் எல்லா இடங்களிலும் இன்று காண முடிகின்றது.

இதில் படித்தவர்கள், பாமரர்கள் என்ற பேதமில்லை. அறிஞர்கள் அசடர்கள் என்றும் வித்தியாசமில்லை. எல்லோரும் ஒரே குட்டைதான். ஒரே மட்டைதான்.

இல்லாத பணத்திற்காக ஏங்கி ஏங்கி அலைவது, வந்துவிட்ட பணத்தை எப்படி காத்துக் கொள்வது என்று வீங்கி வீங்கி அழுவது.

வந்த பணம் போய்விடக்கூடாது என்ற ஏக்கத்தோடு தூக்கத்தைத் தொலைத்து விட்டு தொல்லைப்பட்டு சாவது, சரிவது, தொலைவது.

இப்படி பொழுது விடிந்து பொழுது முடிந்து போகிறவரை, பொருளுக்குத்தான் முக்கியத்துவம் தந்து பேசுகிறது இந்தச் சமுதாயம். சமுதாயத்தின் அங்கம்தானே மக்கள் அனைவரும்.

பணம் எதற்கு? சொத்து எதற்கு?
என்ன கேள்வி இது? சுகம் பெறத்தானே.

பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன சுகத்தை அனுபவிக்கப் போகிறோம்?

நல்ல உணவு உண்ண, அழகான உடை உடுத்த, அரண்மனை போன்ற வீட்டில் ஆனந்தமாக வசிக்க, புசிக்க, ரசிக்க, வசிக்க என்பதற்காகத் தானே பணம்!

பணக்காரர்களால் இந்த மூன்றையும் அனுபவிக்க முடிகின்றதா? அருகில் போய்ப் பாருங்கள். அவர்கள் வாழும் வண்டவாளம் தெரியும்.

பணக்காரன் பத்தியச் சாப்பாடுதான் சாப்பிடுகிறான். பசியிருந்தாலும் சாப்பிட முடியாத பயங்கர வியாதிகள்.

ஆடம்பர உடைகளை உடுத்தி, அழகு பார்க்க முடியாத பணக்கார உடம்பு. குண்டாக, தொப்பையாக அல்லது ஒல்லியாக, துள்ளித் துரத்தும் நோய்க் கூடாக உள்ள உடலினால் எந்த உடை போட்டால் எழிலாக இருக்கும்? எடுப்பாக இருக்கும்? எண்ணிப் பார்த்தீர்களா?

படுக்கையில் படுத்தால் ஆயிரம் கவலை. புரட்டி விடும் பிடுங்கல்கள். சுமைகள், சோகங்கள், புரண்டு புரண்டு படுத்து, மிரண்டு மிரண்டு விழித்துக் கழிக்கும் தூக்கமில்லாத இரவுகள். உடல் உறவிலே சிக்கல்கள். திக்கல்கள், விக்கல்கள், இப்படியா வாழ்வது! இதுவா வாழ்கிற லட்சணம்?

இதுதான் சோகச் சதிராடும் புதிரான வாழ்க்கை.

ஆக ஒருவருக்கு என்ன வேண்டும்? எதற்கு முதல் ஸ்தானம் தரவேண்டும். இந்நேரம் புரிந்திருக்குமே!

ஒருவருக்கு எப்போதும் நலம் தான் வேண்டும் (Health) அதிலும் முழுநலம் (Fitness) வேண்டும்.

அதென்ன முழுநலம் ? புரியவில்லையே! உடல் நலம்.(Physical Fitness). மனநலம் (Mental Fitness) இந்த இரண்டும் சேர்ந்தால் அதுதான் முழுநலம் (Total Fitness).

முழுநலம் தான் உங்களுக்கு வேண்டும்.

இந்த முழுநலம் எப்படிக் கிடைக்கும்? எங்கே கிடைக்கும்? யாரிடம் போய் வாங்கலாம்!

உங்களிடம் தான் இருக்கிறது. நீங்களே வாங்கிக் கொள்ளலாம்.

இல்லை, புரியவில்லையே! நீங்கள் குழப்புகிறீர்கள்! குழப்பவில்லை. கொஞ்சம் என் கூட வாருங்கள்.

நீங்கள் நினைப்பதுபோல்தான், உங்கள் எண்ணம் போல்தான், உங்கள் வாழ்க்கை அமைகிறது. நினையுங்கள்.

நீங்கள் வாழ்கிற வாழ்க்கை முறையைப் பொறுத்தே உங்கள் உடல்நலமும், மனநலமும் அமைகிறது. உங்கள் முழுநலம் உங்கள் கையில் தான் இருக்கிறது? வாழுங்கள்.

அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், அது ரொம்ப சுலபம். மிகவும் சுலபம். அதற்கு முன் நாம் வாழும் வாழ்க்கை பற்றி ஒரு Flash Back.

ஓரிடத்திலிருந்து ஓரிடம் போக, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்குப் போக, நாம் நடப்பதை மறந்து விட்டோம். அப்படி அல்ல. நாம் நடப்பதையே கேவலமாக நினைத்து விட்டோம். கேலி செய்யவும் ஆரம்பித்து விட்டோம்.

எப்பொழுதும் உட்கார்ந்திருப்பதையே நாம் விரும்புகிறோம். எழுந்து நின்று. ஏறி இறங்கி உழைக்கின்ற உடல் இயக்கங்களை ஏளனமாக எண்ணி விட்டோம். அப்படி செய்பவர்களையும் அலட்சியப் படுத்துகிறோம். அவமானப்படுத்துகிறோம்.

நாம் எந்திரங்களை நம்புகிறோம். வீட்டிலும் சரி, வேலை பார்க்கும் இடத்திலும் சரி. உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அப்படிப்பட்ட நினைவும் நமக்கு வருவதில்லை. வந்தாலும் விரட்டியடிக்கிறோம். வெறுக்கிறோம்.

நாம் பள்ளிக் கூடத்தில் படிக்கும் பொழுதுதான் ஓடினோம்; தாண்டினோம்; குதித்தோம்; கும்மாளம் போட்டோம்; விளையாட்டுக்களை ஆடினோம்; பாடினோம்; கூடினோம்; கூக்குரலிட்டு சந்தோஷம் அடைந்தோம்.

இப்படிப்பட்ட வாய்ப்புக்களை கூட, வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டு; படிப்பு படிப்பு என்று பட்டறை போட்டுக் கொண்ட பாவப்பட்டவர்களும் ஏராளம் உண்டு.

சந்தோஷத்தைத் தொலைத்து விட்ட ஏமாளிகள்.

பள்ளிகளில் கல்லூரிகளில் தான் அந்த அற்புதமான வாய்ப்புக்கள், வரப் பிரசாதமாக அமைந்திருந்தன. அதையும் ஏமாற்றியவர்கள், பள்ளி கல்லூரி படிப்பை முடித்து பிறகு, விளையாட்டு உடற்பயிற்சியை விட்டு விட்டவர்கள், திட்டி விட்டவர்கள் ஏராளம், ஏராளம்.

அப்புறம் கவலை நிறைந்த வாழ்க்கை, வேலைச் சுமை, குடும்பப் பொறுப்பு, உறவில் ஊடாட்டம், ஓடோடி வரும் நோய்களுடன் போராட்டம். ஆக, எல்லோரும் தமது உடலை தாராளமாகவும் ஏராளமாகவும், தங்கு தடையின்றியும் வாழ்வதற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்கள் இஷ்டம்போல் ஆட்டி வைத்தார்கள். அலைக் கழித்தார்கள்.

தமது நாவின் சுவைக்காக உண்டார்களே தவிர, ஒரு சாண் வயிற்றை விரித்து, சுமையாக்கினார்களே தவிர, உடலுக்கு கென்று என்ன செய்தார்கள்?

வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால், தொலைக்காட்சி, வானொலி, சினிமா, நாடகம். ஓய்வு நேரத்தையும் உட்கார்ந்து தான் கழிக்கிறோம். உடலை இயக்க வேண்டும் என்பதையே எல்லோரும் மறந்து விட்டோம் துறந்து விட்டோம்.

கொஞ்ச நேரம் காலாற நடக்கலாம். வீட்டில் இடம் இருந்தால் தோட்டம் அமைக்கலாம். செடிகள் பயிரிடலாம். பயிற்சி செய்யலாம்.

உடலுக்கு ஒருஇதமான இயக்கங்களைத் தரலாம். உடலுக்கு என்ன தேவை? அவற்றை ஆக்கபூர்வமாக தேடித் தரலாம் என்ற சிந்தனையே இல்லை.

அதனால் என்ன குறை வந்துவிட்டது என்று உங்களுக்குள் கோபமான ஒரு கேள்வி குடைந் தெடுக்கிறது. கூர்மையாகப் பாய்கிறது.

உண்மைதான்.

உடலுக்கு முழு பலம் (Fitness) இல்லாமல் போகிறது. அதன் காரணமாக பலமற்ற நிலைக்கு (unfitness) ஆளாகிறோம். அன்றாட தினசரி தேவைக்கான காரியங்களை செய்ய இயலாமல் ஒதுக்கப்படுகிறோம்.

உடலின் பலமான நிலையையும், பலமற்ற நிலையையும் எப்படித் தெரிந்து கொள்வது?

அதுவும் எளிதுதான்.

தேகத்தின் முழுநலம் எப்படி என்பதை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

1. உறுப்புக்களின் உள்ளார்ந்த பலம் (Organic Fitness)

2. விசை இயக்க பலம் (Dynamic Fitness)

1. உறுப்புக்களின் உள்ளார்ந்த பலம்: உடல் என்றால் உறுப்புக்களின் ஒருங்கிணைந்த ஓர் ஒப்பற்ற அமைப்பு என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே! உறுப்புக்களால் கட்டி, ஆக்கப்பட்ட உடம்புக்கு யாக்கை என்று பெயர்.

உடல் உறுப்புக்கள் எல்லாம். தங்களுக்குரிய வளர்ச்சி எவ்வளவு என்று தெரிந்து கொண்டு, அந்த அளவுவரை வளர்ந்து, உடனே நிறுத்திக் கொள்ளும்.

ஒரு உறுப்பு அளவுக்கதிகமாக வளர்கிறது. வளர்ந்து கொண்டு வருகிறது என்றால், அங்கே எங்கேயோ சில கோளாறுகள் புகுந்து, ‘சில்மிஷம்’ செய்கின்றன என்பது சொல்லாமல் புரிந்து கொள்ளக் கூடிய சூட்சமம் உங்களுக்குத் தெரியும், புரியும்.

உதாரணத்திற்கு ஒன்று, வாய்க்குள் பற்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வளர்ந்து வந்து, குறிப்பிட்ட அளவு வந்ததும் நின்று கொண்டு விடுகின்றது. நிறுத்திக் கொண்டு விடுகிறது.

நான் நாக்கு போல நீளமாகவும், மூக்கு போல பெரிதாகவும் வளர வேண்டும் என்று பற்களானது அடம் பிடித்து வளர ஆரம்பித்து விட்டால் வாயின் கதி என்ன? முகத்தின் லட்சணம் எப்படி இருக்கும்?

ஒரு உடலானது 5 அடி முதல் 6 அடி வரையிலும் இயல்பான உயரம் கொண்டு வளருகிறது. அதுவே எட்டடியாக உயர்ந்தால், அல்லது இரண்டு அடியாகக் குறைந்தால் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?

ஆகவே, உள்ளுறுப்புகளுக்கு ஓர் ஒழுங்கான அமைப்பு இருப்பதோடு, செயல்படுகின்ற சிரத்தையும் உற்சாகமான ஊக்கமும் வளர்ந்து கொள்கிற வலிமைத்திறனும் உண்டு.

அப்படிப்பட்ட உடலானது உவப்போடும் சிறப்போடும் செயல்படுவதற்கு அந்த உடலுக்குச் சொந்தக்காரர்தானே உகந்த காரியங்களைச் செய்ய வேண்டும்? செய்தாக வேண்டும்? நாம் செய்கிறோமா? என்றாவது சிந்தித்தோமா? இல்லையே!

உறுப்புக்களின் உள்ளார்ந்த பலம் என்றால் என்ன? அந்த பலம் பெற என்ன செய்ய வேண்டும்?

நாம் என்னதான் செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய ஒரே காரியம் இப்படித்தான் அமைய வேண்டும். உடலானது நோய்களிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். பலக்குறைவு (Infirmity) நேர்ந்து விடாமல், உடலைப் பாதுகாக்க வேண்டும்.

நோய்கள் நுழைகிறபோது, உறுப்புக்கள் நொந்து போகின்றன. செயலிழந்து போகின்றன. செயலாக்கம் குறையக் குறைய. சீர்குலைவுகள் நேர்கின்றன. சீர்குலைவுகள், உறுப்புக்களை சிதைக்கின்றன. வதைக்கின்றன. அடுத்தக்கட்டமாக, வளர்கின்ற பலம் நின்று போய், குறையத் தொடங்குவதுதானே! தொய்வு தானே ஏற்படும்!

ஆகவேதான் அடிப்படையான உடல் நலத்தைப் பேணிக் காப்பது பிரயாசைப்பட்டு வளர்ப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். உறுப்புகளுக்கு சிறப்பான உதவி செய்வது முதல்படி.

2. விசை இயக்கம் பலம்:

விசை இயக்கம் பலம் என்பதற்கு உடலின் உயிரோட்டம் உள்ள இயக்கம்; உள்ளுரம் வாய்ந்த செயற்பாடு. உறுதி வாய்ந்த நிறைவான ஊக்கம்; விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் நிறைந்த உடல் இயக்கம். திட்பமும் நுட்பமும் சார்ந்த தேர்ந்த திறமையான இயக்கம் தருகின்ற உடல் பலம் என்றுதான் இதற்கு அர்த்தம் கொள்ளலாம்.

அதேபோல், சக்தி மிக்க வாழ்வு வாழக்கூடிய பலம் இது என்று கூட நாம் சந்தோஷமாகக் கூறலாம்.

அப்படிப்பட்ட பலம் நமக்கு எப்படிக் கிடைக்கும்?

நமது உடலில் உள்ள உள்ளுறுப்புக்களின் பயனுறுதியை (Efficiency) பொறுத்தே விசைபலம் அமையும்.

குறிப்பிட்ட பயனை நிறைவேற்றுவதற்காகவும், தேவைக்குப் போதுமான காரியங்களை நிறைவேற்றிவிடத்தகுதி பெற்றதுமான நமது முக்கிய உறுப்புக்களான இதயம், நுரையீரல்கள் போன்றவற்றின் நிறைந்த பலத்தில்தான், தசைகள் பலம், அவற்றின் நீடித்து உழைக்கும் ஆற்றல், உடல் சமநிலை, உடலின் நெகிழுந்தன்மை. ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை மற்றும் செயலாற்றல் எல்லாம் அமைந்திருக்கின்றன. அவையே விசை இயக்கப் பலமாக விளங்குகிறது.

விசை இயக்கப் பலத்தை வளர்த்துக் கொள்வதுதான் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையின் இலட்சியம் மகிழ்ச்சி. அதுவும் ஏதோ ஒரு நாளைக்குக் கிடைத்தால் போதும். மற்ற நாட்களில் நான் வாடத் தயார். வதங்கி வீழத் தயார் என்றெல்லாம் வசனம் பேசுவதை இன்றே நீங்கள் நிறுத்திவிட வேண்டும்.

‘வாழ்கிற நாளெல்லாம் நான் நலத்தோடு வாழ்வேன், முழு பலத்தோடு வாழ்வேன், வற்றாத செல்வமாகிய வளத்தோடு வாழ்வேன்’ என்று சபதம் செய்கின்ற சரித்திர புருஷர்களாக நீங்கள் உறுதி பூணவேண்டும்.

அப்படிப்பட்ட அன்பர்களின் வேகத்திற்கும், விவேகத்திற்கும் வழிகாட்டுகின்ற தன்மையில்தான், இந்த நூலை உங்களுக்காக எழுதியிருக்கிறேன்.

உடலுக்கு முழுப் பலத்தையும், விசையாற்றல் பலத்தையும் பணத்தால் தர முடியாது. பதவியால், அதிகாரத்தால் பெற முடியாது.

நீங்கள் உங்களையே இயக்கிக் கொள்கின்ற உடற்பயிற்சியால்தான் பெற முடியும்.

இங்கே அத்தகைய உடற்பயிற்சிகள் அளிக்கப் போகின்ற விளைவுகளைப் பற்றியும், நாம் தெரிந்து கொள்வோம்.