பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்/உடற்பயிற்சிகள் உண்டாக்கும் உடனடிப் பயன்கள்.

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
3. உடற் பயிற்சிகள் உண்டாக்கும்
உடனடி பயன்கள்

உடற் பயிற்சிகளால் உண்டாகும் நன்மைகள் எல்லாம் கற்பனையல்ல. கவர்ச்சிகரமான வாசகங்கள் அல்ல. வற்புறுத்திப் பேசப்படுகிற வாதங்களும் அல்ல.

உடற்பயிற்சிகளை செய்து மகிழ்ந்தவர்கள், உரைத்த உண்மைகள், கிடைக்கப் பெற்ற நன்மைகளை கேட்பவர்களும் பெற வேண்டும் என்று வேட்கையுடன் பேசுகிற விசுவாச வசனங்கள். இவை.

தொடர்ந்து செய்கிற பயிற்சியால் தொடரும் நன்மைகள் எத்தனை? எவ்வளவு என்பதை கீழ்வரும் பட்டியல் உங்களுக்கு விளக்கும்.

1. உடற்பயிற்சியானது, அன்றாட வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கத் தகுந்த, அற்புதமான சூழ்நிலைகளை அமைத்துத் தருகிறது.

சந்தோஷத்தைக் கெடுக்க வருகிற சலிப்பினை வெறுப்புணர்வு விளைவிக்கின்ற சோர்வுத் தன்மை தரும் (Boredom), சோம்பலை விலக்கி. ஒவ்வொரு நிமிடத்தையும் உற்சாகமாகக் கழிக்க உதவுகிறது.

2. குடும்பத்துள் ஒருவராக உற்ற நண்பராக, வழிகாட்டும் வல்லவராக, அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் பேணிக் காக்கின்ற பிதாமகராக உடற்பயிற்சி உதவுகிறது.

3. அதிக உயிர்க்காற்றை சுவாசிக்கச் செய்கிறது. அழுக்கடைந்த இரத்தத்தைத் தூய்மைப்படுத்துகிறது. உடல் முழுவதும் பிராணவாயுவும் இரத்தமும் விரைந்து பாய்ந்து செல்ல வைத்துப், புத்துணர்ச்சியைப் படைக்கிறது.

4.மிக அதிகமாகப் பயிற்சிகள் செய்தால்தான், இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும் என்பதில்லை, சிறிதளவு பயிற்சிகள் கூட. இதயத்தை வலிமைப்படுத்தும் இயக்கத்தில் திறமையை வளர்க்கும். தேகத்திற்கும் சக்தியை மிகுவிக்கும்.

5.இதயத்துத் தசைகளுக்கு வேண்டிய இரத்தத்தின் பாய்ச்சல் ஏற்ற அளவு கிடைப்பதால், இயக்கத்தில் ஒரு பரிபூரணம் கிடைக்கிறது. தசைகள் செழித்துக் கொள்வதால், அவற்றில் விளைகின்ற விசைச் சக்திகள் நிறைந்து கொள்கின்றன.

6.இதனால், உடலுக்கு உழைப்பாற்றல் பெருகுகிறது. நெடுநேரம் நீடித்துழைக்கும் ஆற்றல் நிறைகிறது. எதையும் சகித்துக் கொண்டு செயல்படுகிற, துன்பம் தாங்குகின்ற சக்தியையும் வளர்த்து விடுகின்றது.

இப்படி தேகம் திறம் பெறுவதால், மேற்கொள்ளும் முயற்சிகளில் முனை அழியாது, முனைப்பும் குறையாது உழைக்கவும், முன்னேற்றம் பெறவும் கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது.

7.உடற்பயிற்சிகள், தேகத்தின் தசைச் சக்திகளை மட்டும் வளர்க்காமல், எலும்பு மூட்டுகளின் இணைப்பு வலிமையையும் ஏற்றம் பெறச் செய்கிறது.

முட்டுக்கள்தாம். சந்தோஷத்திற்கு வேட்டு வைக்கும் வேலைகளைச் செய்வதாகும். மூட்டுவலி என்பது யாருக்கும் வரும்; எப்போதும் வரும்.

அப்படிப்பட்ட மூட்டுகளுக்கு நெகிழ்ச்சித் தன்மையை, இயக்கத்தில் தடைபடா தன்மையை எலும்புகளை இணைக்கின்ற (மூட்டுகளின்) தசைநார்களின் சிறந்த வலிமையை அதிகப்படுத்தி எலும்புகளுடன் இணைத்து இருக்கின்ற தசைகளுக்கும் வலிமையை வழங்கி வளப்படுத்துகின்றன.

8. மனிதர்களுக்கு முதுகுவலி (Back Pain) என்பது வரக்கூடிய வியாதியே! வராமல் இருந்தால் விந்தைக்குரியதுதான். பொதுவாக அனைவருக்கும் வந்து, ஆட்டிப் படைக்கின்ற ஆவேசம் நிறைந்த முதுகு வலியை அணுகாது நிறுத்தவும், வந்தால் விரட்டவும், ஏற்படுத்தும் இடையூறுகளைத் தடை செய்து காப்பாற்றவும் கூடிய ஒப்பற்ற சக்தியை, உடற்பயிற்சி நமக்கு அளிக்கிறது.

இத்தனை பயன்களும், உடலின் உள்ளுறுப்புக்களை ஒன்றுபட வைத்து, வேலை செய்யும் ஆற்றலை, வலிமையை விரிவுபடுத்தி, அதிகப்படுத்தி விடுகின்றன.

9. உடற்பயிற்சி செய்வதால், உண்ணும் உணவில் உள்ள கலோரி சத்துக்கள், உடலில் தேங்கி கொழுப்பாகி குண்டாகி விடுகின்ற கொடிய தன்மைக்கு விடை கொடுத்து, உடல் சீராக, அழகாக, செழுமையாக இருக்க உதவுகிறது.

10.இரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பைக் குறைத்து, கொலஸ்ட்ரால் தன்மையையும் அழித்து உடலின் சக்தி உலாவரும் சமதன்மையை சீராக்கி விடுகிறது.

11. வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகள். அவற்றால் ஏற்படும் மன உலைச்சல்கள், கவலைகள், கலவரங்கள், கற்பனைத் துன்பங்கள் போன்றவை தூக்கத்தையே துரத்தி விடுகின்றன. தொலைத்து விடுகின்றன.

அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகி, அவதிப்படுகின்றவர்களுக்குக் கூட, ஆனந்தமயமான தூக்கத்தை அளித்துக் காப்பாற்றுவது உடற்பயிற்சிகளாகும்.

12. உடற் பயிற்சியானது தோற்றத்தில், தோரணையில் புதுமை விளைவிக்கிறது.

13. தன்னைப் பற்றிய தன்னம்பிக்கை உணர்வை, தலை தூக்க வைத்து, செம்மாந்து வாழச் செய்கிறது.

இவையெல்லாம் உடனடி பயன்கள் என்றால் உடற்பயிற்சியால் பெறும் நீண்டகாலப் பயன்கள் இருக்கின்றனவே, அவையெல்லாம் நினைத்தால் இனிக்கும். செய்தால் சுகிக்கும்.

வாழ்நாட்கள் வரை, வற்றாத இன்பத்தை சுரக்கும், சொர்க்க லோகமாக உங்களது வாழ்வை அமைக்கும், உருவாக்கும், திருவாக்கும், தேமதுரச் சோலையாக, தெய்வம் வாழும் திருத்தலமாக உடலை மாற்றும் தரம் ஏற்றும், திறம் கூட்டும்.