பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்/உடற்பயிற்சிகள் உருவாக்கும் நீண்டகாலப் பயன்கள்.

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
4. உடற்பயிற்சிகள் உருவாக்கும் நீண்டகாலப் பயன்கள்

இவ்வளவு பயன்களையும் அறிந்து கொண்ட பிறகு உடற்பயிற்சியைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

உடற்பயிற்சி என்பது, உயிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் உயிர்நீர் உயிருக்கு ஆடையாக அழகுற இருக்கும் ஜீவிதம். உடலுக்கு உகந்த அமுதம்.

சகல நோய்களையும் தீர்க்கும் சமய சஞ்சீவி. ஊக்கம் தருகிற உயர் பொருள். ஆவிக்குள்ளும் இனிக்கும் அருமருந்து வாழ்நாளை நீட்டிக்கவல்ல காயகல்பம்.

இப்படியெல்லாம் புகழப்படுகின்ற உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருக்கிறபோதே. கொய்து கொள்கின்ற பலன்கள் அதிகம். அநேகம்.

வங்கியில் பணம் போட்டால், சேமித்து வைத்தால், அது வட்டியோடு வளர்ந்து பெருகிக் கொள்வது போல்தான் உடற்பயிற்சியிலும் பெருகும்.

உடலுக்கு சக்தியை உடனடியாகத் தருவது மட்டுமன்றி, உடலுக்கு அது உதவுகிற பாங்கு, மிகவும் அரியது. பெரியது.

1. உடல் விரைவாக முதிர்ச்சி அடைவது தடுக்கப்படுகிறது. முதுமை அடைவதும் தாமதப் படுத்தப்படுகிறது. உடலில் உலாவரும் இளமையும் எழுச்சியோடு தொடர்ந்து இருக்கும் இனிய சூழ்நிலையும் பராமரிக்கப்படுகிறது.

2. வாழ்நாள் பெருகி வருகிறது. நிம்மதியும் நோய் இன்மையும் சேர்ந்து நீண்டநாள் வாழ வழி வகுக்கிறது.

3. முதுமை வந்து விடுகிறபோதே, முதுகில் வந்து ஏறிக் குந்திக் கொள்கின்ற நோய்களின் வேகம் குறைகிறது. நோய் வருகிற சந்தர்ப்பங்கள் விரட்டியடிக்கப்படுகின்றன.

4. உடலில் முழுபலத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகளால் சக்தி பெருகுகின்றன. உடல்நலம், மனநலம் இரண்டும் பயிற்சி அனுபவங்களால் பக்குவம் பெறுகின்ற காரணத்தால், சக்தியும் சித்தியுடன் உடலில் சேர்ந்து கொள்கின்றன.

5. சின்னச் சின்ன வலிகள், வேதனைகள் சிணுங்கச் செய்யும் உபாதைகள், பிடிப்புகள், இழுப்புகள் போன்றவைகளின் வருகை உடலில் குறைகின்றன.

6. வயதானால் நிமிர்ந்து நிற்க இயலாமல், முதுகும் வளையும். முனகலும் பெருகும். நடையும் தளரும். நாடியும் சுருங்கும் என்கிற பொதுவான நிலைமையில் புரட்சி ஏற்படும். குறைகளை உடற்பயிற்சிகள் களைந்து, கம்பீரமாக வாழ்ந்து கொள்ள கை கொடுக்கும்.

7. பொதுவாக, தோற்றத்திலும் பொலிவு இருக்கும். உடல் நலிவுகள் குறைவதால் முகத்திலும் தெளிவு இருக்கும். தேஜசும் திவ்வியமாய் ஜொலிக்கும்.

8. செய்கிற வேலையிலும் திறமை குறையாத தேர்ச்சி தெரியும். வேலை செய்யும் விருப்பமும் விடாது தொடரும் விறுவிறுப்பும் கூடும்.

9. முதுமைக்கும் மறதிக்கும் நிறைய சம்பந்தம் உண்டு, உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்பவருக்கு நல்ல நினைவாற்றல் வளரும். நினைத்து, திட்டமிட்டு செயல்படும் தன்மையும் மேம்பாடு கொள்ளும்.

10. மனப் படபடப்பு, உலைச்சல் (Tension) போன்றவை குறையும். ஓய்வெடுத்துக் கொள்கிற மனநிலை உருவாகும். கலக்குகிற கவலைகளும் மனதுக்குள் காலடி வைக்கப் பயப்படும்.

11.மூப்பு என்றால் பிணி; மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதல், அசாதாரண களைப்பு, இப்படிப்பட்ட சூழ்நிலைகளை உடற்பயிற்சியின் பலன்கள் எதிர்த்து அழித்து, சுமுகமான சூழ்நிலையைத் தோற்றுவித்து சுகத்தைக் கொடுக்கும்.

12. இவைகளையும் மீறி. மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டால். பூரண குணம் பெறுகிற வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். விரைந்து குணம் அடைகிற சக்தியை உடல் நிறையவே பெற்றிருக்கும்.

ஆக, நீண்ட கால பலன்கள் என்பவை, நீண்ட காலம் வாழ்வது என்பதாகும். அதாவது Live longer என்பதாகும்.

கொஞ்சமாக சாப்பிடுங்கள், நிறையச் சாப்பிடலாம் என்பது ஒரு பழமொழி. அளவோடு சாப்பிட்டால், நோய் வராது. நீண்டநாள் வாழலாம். அதனால், நிறைய சாப்பிடலாம் என்பது அதன் அர்த்தம்.

அதுபோல, நோயில்லாமல் வாழ்கிறபோது, நிம்மதி கிடைக்கும். நிம்மதி நல்ல மனோ சக்தியை வளர்க்கும். இதனால், கவலையில்லாமல் அதிக நேரம் வாழ்வதே நீண்டகாலம் வாழ்வதாகத்தானே அர்த்தம்!

இத்தனையும் உடற்பயிற்சிகளால் உண்டாகிற, உருவாகிற நீண்டகாலப் பயன்களாகும்.