பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்/சிறப்பான வாழ்வுக்கு திறப்பு விழா
மனிதர்களைக் கொல்லும் வியாதிகளில், முதன்மையானது இருதய நோய் என்பதுதான் எல்லோரின் கணிப்பாகும்.
முன்பெல்லாம் 40 வயதிலிருந்து 59 வயது வரை உள்ளவர்கள்தான், இருதய நோயால் இறக்கின்றார்கள் என்று கூறிய அறிவியல் புள்ளி விவரம் பொய்யாகி விட்டது.
இப்போதெல்லாம் இந்த இருதய வியாதி, இருபது வயதிலிருந்தே தொடங்கி விடுகிறது.
இதற்குக் காரணம் உழைப்பின்மை. பலக்குறைவு, சக்தியைச் செலவழிப்பதில் ஜெட் வேகம், சக்தியைச் சேர்க்க, சேமிக்கும் முயற்சியில் ஆமை வேகம். அலட்சியப் போக்கு. அக்கறையின்மை. அறிவுரையை ஏற்க மறுக்கும், வெறுத்து ஒதுக்கும் அடாவடித்தனம்.
ஒரு குறிப்பிட்ட மீனவப் பகுதியை 22 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு பேராசிரியர் ஆய்வு செய்தபோது பெற்ற முடிவுகளில் முக்கியமான ஒன்றைப் படியுங்கள்.
உட்கார்ந்து வேலை செய்பவர்கள், ஒரு வேலையும் செய்யாமல் சும்மா உறங்கிக் கழிப்பவர்கள், சோம்பேறித்தனமாக ஊர் சுற்றி வருபவர்களுக்குத்தான் அதிக அளவில் இதய நோய் அதாவது மாரடைப்பு ஏற்படுகிறது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு.
ஆக, அத்தனை நோய்களுக்கும் அடிப்படை காரணமாக விளங்கும் இதய நோயை விரட்ட இதயத்தை வலிமைப் படுத்துவது தானே முக்கியம்.
இதயம் வலிமை பெற்றால், எல்லாமே திறமையானதாகவே தேறிக் கொள்கிறது என்பதே உண்மை.
அதிகமாக உடற்பயிற்சியைச் செய்யச் செய்ய, அதிகமான சக்தியை உடலுக்குள் சேர்த்து வைக்கிறோம். சேமித்து வைப்பது என்றால் சேமம் அடைகிறோம் என்பதுதான் அர்த்தம்.
நெருப்பாக எரிக்கும் நோய்களைக் குறைத்தாலே சிறப்பான வாழ்வு அமைந்துவிடும். அப்படிப்பட்ட சிறப்பான வாழ்வுக்குத் திறப்பு விழா, என்பது உள்ளம் விரும்பிச் செய்கிற உடல் பயிற்சிகள் தாம் என்றால், அது மிகையான வாதமல்ல. மேன்மையான உண்மை.
உடற்பயிற்சி செய்பவர்கள், அதனில் லயித்துப் போகின்றனர். அதனுள் ஆனந்தம் அடைகின்றனர். அதனால் ஏற்படும் அற்புத மாற்றங்களை உணர்கின்றனர். அளவுக் கதிகமான ஆரோக்கியம் கிடைப்பதைப் பார்த்து அளவிலா மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
உயிரிழப்பவர்களில் பலர் நோய்களால்தான் இறக்கிறார்கள் என்பது உண்மையான கணக்கு. யாருமே வயதாகிச் சாவதில்லை.
சத்திழந்து, பலமிழந்து, நலம் குன்றி, நலிந்து மெலிந்து கலங்கித் தான் இறக்கின்றனர்.
சிறப்பான வாழ்வுக்கு உடற்பயிற்சிகள் என்ன செய்கின்றன என்ற கேள்விக்கு, இந்தப் பதிலைப் படியுங்கள் முக்கியமான மூன்று குறிப்புக்கள்தான் பயிற்சியின் பெருமை கூறும் உன்னதமான சிறப்புக்கள் என்று சுருக்கமாக விளக்கியிருக்கிறோம்.
1.உடல் எடையை சம அளவில் வைத்துக் காக்கிறது.
உண்ணும் உணவின் கலோரி அளவைப் பொறுத்தே உடல் சீராக இருக்கிறது. கலோரி அளவை அதிகப்படுத்தி தின்று கொண்டே இருந்தால், கடைசியில் கொழுப்புச் சக்தி சேர்ந்து கொண்டே வந்து, உடல் குண்டாகிப் போகின்றது.
அவ்வாறு குண்டாகிப் போன கொழுப்பு உடலை, ஒரே நாளில் குடைந்தெடுத்தோ, கடைந்தெடுத்தோ கழித்து விட முடியாது. அகற்றி விடவும் முடியாது.
அதற்கான ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தான். நடக்கலாம் என்பார்கள். ஒரு மணிநேரத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரம் நடப்பது போன்றவை எப்போதும் முடியக்கூடிய காரியமல்ல.
ஆனால் வீட்டிலிருந்தபடியே தினம் 10 நிமிடம் கட்டுப்பாடான உணவுப் பழக்கத்துடன், கடுமையாக அல்லாமல், கடமையாக உடல் வியர்த்து விடும்படி செய்கிற பயிற்சிகள், என்றும் உடலை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆகவே, தேவையான உடல் எடையை தேகத்திற்குத் தந்து திறம்பட இயக்க, பலம் பெற, பயிற்சிகள் எல்லாம் பழகிய நண்பனைப் போல உதவுகின்றன.2. சக்தியை சக்தியுடன் சேர்க்க - சேமிக்க:
உடற்பயிற்சிகள் எல்லாம் இதயத்தை, காற்றுப் பணிகளான நுரையீரல்களை, மற்றும் இரத்தத்தை உட்படுத்தியே செய்யப்படுகின்றன.
பள்ளிக்காக கொஞ்சதூரம் ஓடுவது. பல மணிநேரம் பயணத்திற்காக (பேருந்துக்கு) காத்திருப்பது, மாடிப்படிகளில் வேலையின் காரணமாக ஏறி இறங்குவது போன்றவைகள் உடலை இயக்கி, உடல் சக்தியை செலவழித்து வேலைகள் செய்வதாகும்.
மாலையில் வீடு திரும்பும்போது, காலை கூட அசைக்க இயலாத களைப்போடு வருபவர்கள் நிறைய பேர்கள். எஞ்சிய சக்தியுடன் மிஞ்சிய மன உலைச்சலோடு போராடுகிற பிரச்சினைகள் வேறு இருக்கும்.
ஆனால் எஞ்சிய சக்தியை வைத்துக் கொண்டு. கொஞ்ச நேரம் உடலுக்குப் பயிற்சி செய்கிறபோது, உடலுக்கு மசாஜ் செய்தது போல ஒரு மகிழ்ச்சி.
உற்சாகத்தோடு பயிற்சி செய்கிறபோது ஏற்படுகிற வேடிக்கை (Fun) விளையாட்டு மகிழ்ச்சி; சுவையான பொழுதுபோக்கு (Recreation) சுகமான மசாஜ் எல்லாமே. சக்திக்கு சக்தியூட்டுகின்றன.
இதெல்லாம் எழுதுவதும் படிப்பதும் சுகமாக இருந்தாலும், அந்த சுக அனுபவத்தை உணர்ந்து, செய்து, பழகிப் பாருங்களேன், புரியும்.
3.மன அழுத்தத்திற்கு ஒரு மாற்று மருந்தாக
மனிதர்களை வாட்டுவது, வதைப்பது, ஆட்டிப்படைப்பது. அலைக்கழிப்பது, அல்லோலகல்லோலப் படுத்துவது. தவிக்கச் செய்யும் தணலை மூட்டுவது, நெருக்கடியை ஏற்படுத்தி நிதானமிழக்கச் செய்வது போன்றவற்றைச் செய்வது மன அழுத்தமும், இறுக்கமும் தான் (Stress and strain). இத்தகைய பிரச்சினைகள் எல்லோருக்கும் வரும். எப்போதும் வரும். தப்பாது வரும்.
அதிலிருந்து மீளவும் முடியாமல் தாளவும் முடியாமல், தண்ணீரில் விழுந்த நீச்சல் தெரியாதவர்கள் தத்தளிப்பது போல, அவதிப்பட்டு எல்லோரும் வாழ்வது, வழிவது அன்றாடம் நடப்பதுதான்.
இப்படிப்படுவதும், துன்பத்தில் விழுவதும் என்னென்ன செய்கிறது தெரியுமா?
துக்கத்தைத் துரத்தி விடுகிறது. உடற்பயிற்சி செய்வோரின் உடலும் மனமும் உரம் பெற்றுக் கொள்வதால், உறக்கம் என்பது ஓடோடி வந்து விடுகிறது.
நன்றாக உறங்கி விட்டால், நலிவே இல்லை. நாளெல்லாம் திடமான நடமாட்டமே தொடரும்.
உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்கின்றவர்கள் “நன்றாக உண்கிறோம், உறங்குகிறோம்” என்று சான்று பகர்கிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
உங்கள் விருப்பம் அதுவானால், இன்றே பயிற்சிகளைத் தொடங்கி விடலாமே!நல்ல காரியம் செய்ய நாள் பார்க்கக் கூடாது என்பார்கள்.
தொடங்குவதற்கு முன்னர் என்ன பயிற்சி செய்யலாம்? யார் யாருக்கு என்ன மாதிரி வேண்டும் என்று, ஒரு சிறிய அளவில் விவரித்து விட்டு, பயிற்சிகளை விளக்கி எழுதுகிறேன்.
இதுவரை நாம் கூறிவந்த கருத்துக்கள் மூன்று.
1. உடல் எடையைக் காத்தல்
2. சக்தியைப் பெருக்குதல்
3. மன உலைச்சலைச் சமாளித்தல்
முக்கிய மூன்று பிரச்சினைகளின் முகங்களைத் தெரிந்து கொண்டோம். அவற்றைச் சாமர்த்தியமாக சந்திக்கும் விதங்களையும், இதங்களையும் தொடர்ந்து காண்போம்.